Wednesday 14 February 2024

சங்ககாலத் தமிழர் கண்ட காதல் வாழ்வு

 இலக்கியங்களிலே சிறந்தது சங்கத்தமிழ் இலக்கியங்கள். சங்கத்தமிழ் இலக்கியங்களை எழுதிய புலவர்களிலே சிறந்து விளங்கியவர் கபிலர். ஏனெனில் சங்க இலக்கியங்களில் இப்போது இருக்கும் பாடல்களில் 10%க்கு அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர். அவை சங்கத் தமிழரின் வாழ்வியலை நன்கு எடுத்துக் காட்டும் பளிங்குகளாகும். புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று இவரை சங்ககாலப் பெண்புலவரான மாறோகத்து நப்பசலையார் புகழ்ந்துள்ளார். இவரை அந்தணாளன் என்கிறாரே அல்லாமல் அந்தணர் என்று சொல்லவில்லை. கபிலர் அந்தணர் இல்லை என்பதற்கு புறநானூற்றில்[புறம்:14] அவர் எழுதிய பாடலே சாட்சியாகும்.

அத்தகைய கபிலரின் முதன் மாணவன் இயற்கைக் காவலனான கொடை வள்ளல் பாரி. பாரியை தன் மாணவனாக மட்டுமல்ல தன் நண்பனாக மதித்தவர் கபிலர். பாரியின் மக்களான அங்கவை சங்கவை இருவர்க்கும் கபிலரே குருவாக இருந்து தமிழைக் கற்பித்தார். பாரி இறந்த பொழுது அங்கவை சங்கவை எழுதிய அற்றறைத் திங்கள் அவ்வெண் நிலவில் பாடல் குருவின் புகழை எடுத்துச் சொல்வதுடன் அங்கவை சங்கவை இருவரின் பெயரும் சங்ககாலப் பெண்புலவர்கள் வரிசையில் இன்றும் நிலைத்து நிற்கவும் உதவியுள்ளது.

அவர்கள் கபிலரிடம் கல்வி கற்ற நாளில் தம்மை ஒருவன் விரும்புவதாக அறிந்தனர். அவர்களில் யாரை அவன் விரும்புகிறான் என்பதும் அவர்கட்குத் தெரியாது. அதனை தம் குருவான கபிலருக்குச் சொன்னார்கள். அதற்கு அவர்

மாயோன் அன்ன மால்வரைக் கவான்

வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி

அம்மலைக் கிழவோன் நம்நயந்து என்றும்

வருந்தினன் என்பது ஓர் வாய்ச்சொல் தேறாய்

நீயும் கண்டு நுமரொடும் எண்ணி

அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு

அரிய வாழி! தோழி! பெரியோர்

நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே - (நற்றிணை: 32)

திருமால்[மாயோன்] போன்ற கரிய பெரிய மலைப் பக்கத்தே[கவான்] பலராமன்[வாலியோன்] போல வெள்ளை நிற அருவிவீழும் மலையின் தலைவன் எம்மை விரும்பி எப்போதும் வருந்துகிறான் என்ற வாய்ச்சொல்லை மட்டும் நம்பித் தெளிவடையாதே! நீயும் அவனைக் கண்டு [உனக்கு பிடித்திருந்தால்], உம்மைச் சேர்ந்தோருடன்[நுமர்] ஆராய்ந்து [எண்ணி], அறிவால் தக்கவனா தகாதவனா என்பதை அறிந்து பழக [அளவல் - அளவளாவுதல்] வேண்டும். அவன் கூறுவது மறுத்துக் கூறமுடியாது[மறுத்ததற்கு அரிய] இருக்குமானால் தோழியே! பெரியோர்கள் தம்மோடு நட்புச் செய்வோரது திறமையை - ஆற்றலை ஒருவருடன் நட்புச் செய்யும் பொழுது ஆராய்ந்து பார்த்து[நாடி] நட்புச் செய்வர். அல்லது ஏதோவோர் காரணத்தால் நட்புச் செய்தபின்[நட்டு] ஆராய மாட்டார்கள்[நாடார்]. எனப் பாரி மகளிற்குக் கூறினார்என்பர்.

ஓர் இளம் பெண் காதலிப்பவனை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை குருவாக இருந்துஉம்மை விருப்புபவனை ஆராய்ந்து பார்த்துப் பழகு. விரும்பி நட்புச் செய்தபின் அவனை ஆராய்ந்து பார்க்காதே.” என சிறு கட்டளையும் இட்டு புத்தி புகட்டியுள்ளார்.

பெரும் வீரனான சங்ககால இளைஞன் ஒருவன் மிகவும் சோர்வுடன் இருந்தான். அவனை அப்படிப் பார்த்திராத நண்பன்என்ன நடந்தது? எனக் கேட்கிறான். இளைஞன் சொன்ன பதிலைக் குறுந்தொகை

மால்வரை இழிதரும் தூவெள் அருவி

கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்

சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்

நீரோ அன்ன சாயல்

தீயோ அன்ன என் உரன்  அவித்தன்றே - (குறுந்தொ: 95)

தோழனே! பெரிய மலையில் இருந்து வீழும் அருவி கற்குகைகளில் [கல்முகை] ஒலிக்கும் [ததும்பும்], பல மலர்களையுடைய சாரலின் சிற்றூரில் உள்ள குறவனின் சின்ன மகள் அகன்ற தோள்களை உடையவள். நீரைப் போல மென்மையானவள். ஆனால் தீயைப் போன்ற எனது வலிமையைப்[உரன்] போக்கிவிட்டதுஎனக் கபிலர் சொல்வதாய்க் காட்டும். ஓர் இளம் பெண் மேல் கொண்ட காதல் தன் வலிமையை - ஆண்மையை நிலை தளரவைத்ததைச் சொல்லும் பாங்கு சிந்திக்கத்தக்கது.

குறுந்தொகையின் இன்னோர் பாடல் தோழி ஒருத்தி காதலியிடம் காதலனைப் பழித்துக் கூறுகிறாள். அதற்குக் காதலி தமது காதல் எத்தகையது என்பதை 

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு

பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு

யாத்தேம் யாத்தன்று நட்பே

அவிழ்த்தற்கு அரிது முடிந்து அமைந்தன்றே - (குறுந்தொ: 313)

பெரிய கடற்கரையில் சிறிய வெண்மை சேர்ந்த காக்கையானது வெள்ளமாய் நீர் தேங்கி நிற்கும் கரியகழியில் இரையை தேடி உண்டு, பூ மணம் கமழும் சோலையில்[பொதும்பில்] தங்கும். அந்தத் துறைவனுடன் நட்பைக் கட்டினோம்[யாத்தேம்]. அந்த நட்பானது ஒன்றாய்ப் பொருந்தி உள்ளது[யாத்தன்று]. அது அவிழ்ப்பதற்கு அரியது. இறுக்கி முடிந்திருக்கிறது[முடிந்து அமைந்தன்றே]. அவனுடன் கொண்ட காதலை எவராலும் பிரிக்க முடியாது என்பதை இவ்வாறு சொல்லி மகிழ்கிறாள்.

இருதலைப் புள்[பறவை]


இத்தகைய
அவிழ்க்க முடியாத காதலை உடைய இருவரைக் கபிலர் அகநானூற்றில்

இருதலைப் புள்ளின் ஓருயிர் அம்மே - (அகம்: 12: 5)

இரண்டு தலைப் பறவையின் ஓர் உயிர்போல காதலால் கட்டுண்டனர் என்கிறார். 

காதலியைத் தேடிச்சென்ற காதலனுக்கு 'காதலியை பார்க்கமுடியாது என்று தோழி கூறுகிறாள். அவன், தாமிருவரும் திருமணம் செய்யப் போவதை காதலியின் தோழிக்கு

"அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த

வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்

பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு

அறிகதில் அம்ம இவ்வூரே மறுகில்

நல்லோள் கணவன் இவன் எனப்

பல்லோர் கூறயாம் நாணுகம் சிறிதே" - (குறுந்தொ: 14)

அமிழ்து ஊறும் சிவந்த நாவையும் அச்சம் தரும் [அஞ்சவந்த] கூர்மையான வெண்மையான பற்களும் சில சொற்களைப் பேசும் காதலியை [அரிவையை] நானே பெறுவேனாக. பெற்றபின் இவ்வூர் அறிய பலரும் தெருவில் இந்த நல்லவளுடைய கணவன் இவன் எனச் சொல்லும் போது நானும் கொஞ்சம் நாணம் அடைவேன். நல்லவளுடைய கணவன் என ஊரார் சொல்வதைக் கேட்க பெரிய வீரனான அவனுக்கும் வெட்கம் வருமாம்.

சங்ககாலத் தமிழர் காதலுடன் இணைந்து வாழ்ந்து கண்ட காதல் வாழ்வு எத்தகையது என்பதை சங்ககால இலக்கியங்கள் நன்றாகவே பொதிந்து வைத்துள்ளன.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment