Thursday 1 February 2024

மயன் மகள் - 1.6(சரித்திரத் தொடர்கதை)

நான் 'நச்செள்ளை' என்ற பெயரில் ஆம்பல் இதழில் 2009ல் எழுதியது 

சென்றது
நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதிக்காக மாசுணத்திடமிருந்து மனோமயமாணியை எடுக்கச் சென்ற மயனும் நண்பர்களும் மாசுணங்களிடையே அகப்பட்டுக்கொண்டனர். அவர்கள் தமது இசைத் திறமையால் மாசுணங்களை தம்வசப்படுத்த அரசமாசுணம் மனோமயமாமணியை மயனின் காலடியில் உமிழ்ந்தது.
இனி.....

மனோமய மாமணி

சுடலைப்பொடி சுண்ண மாசுணச் சூளாமணி கிடந்து
படரச் சுடர்மகுடா எம்மைஆளும் பசுபதியே

                                                                -
திருநாவுக்கரசு நாயனார்[தேவாரம்]

அரசமாசுணம் உமிழ்ந்த மனோமயமாமணி அவ்விடம் எங்கும் நிறைந்திருந்த காரிருளைப் போக்கி செந்தணல் போல் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. பிரமிக்க வைக்கும் அதன் பேரழகும், அதனுள் நீரோட்டமாகச் சுழன்ற செம்மஞ்சள் நிற ஒளிர்வும், தொட்டால் சுடுமோ எனப் பார்ப்பவரை எண்ண வைப்பதாக இருந்தது. ‘‘இவ்வளவு பிரகாசமான ஒளியைக் கொடுக்கும் மணியும் உண்டோ!’’ என ஆச்சரியப்பட்ட நத்தத்தன் தனது இன்கிணையை வாசித்தபடி, ‘‘இயற்கையின் படைப்பில் எத்தனை! எத்தனை! அற்புதங்கள். மலையில் மண்ணில், கல்லில், கடலில் மட்டுமல்லாமல் உயிர்களின் உள்ளும் ஒளித்தாரையை அள்ளி வழங்கும் மாமணிகளா? இவற்றை எல்லாம் தேடியும், பறித்தும் எடுக்கும் மனிதனின் தேவைதான் என்னவோ? மனித ஆசைக்கு முடிவே இல்லையா?’’

‘‘தான் மயங்கிய இசைக்கு, மற்ற உயிர்களையும் மயங்கவைத்து அவற்றை அடிமைப்படுத்தும் தந்திரத்தை மனிதன் எங்கு கற்றான்…?’’ எனச் சிந்தித்தபடி விழுந்து கிடந்த முகிலனையும், சுற்றுச்சூழலையும் நோட்டம் விட்டான்.

‘‘ஒற்றை ஒளிக்கீற்றுக் கூட தென்படாத அந்த அமாவாசை நள்ளிருளில் எந்தவொரு வைர வெட்டுக்கும் உட்படாது இயற்கையாகவே ஒளிவீசிக் கொண்டிருந்த மனோமயமாமணியைப் பார்த்த மயனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மாமணியின் ஒளியிலே அரசமாசுணத்தின் முகத்தில் விரவிக்கிடந்த அமைதியைக் கண்டு, இசையானது கொடியசக்தியையே அடிமை கொண்டுவிட்டதுஎன மகிழ்ந்தான்.

அவன் இசை பயின்ற காலத்தில் ‘‘நள்ளிரவில் வாசிக்கும் ஆம்பல் பண்ணின் சுத்த இன்ப இசை எந்தவொரு கொடிய சக்தியையும் தன் வசப்படுத்தும்’’ என்று அவனின் குரு பண்ணாகனார் சொன்ன சொற்களின் உண்மைத் தன்மையை அரசமாசுணத்தின் முகத்தில் கண்டான்.

இசையின் உக்கிரத்தால் ஆடிக் களைத்த மாசுணங்கள் ஒவ்வொன்றாக மயங்கிச் சாய்வதைப் பார்த்த மயன், தான் கண்டதை நத்தத்தனுக்கு புரிய வைத்தான். நேரமும் மெல்லக் கரைந்தது.

அரசமாசுணமும் மனோமயமாமணியை மயனின்காலடியில் போட்டுவிட்டு விநோத ஒலியை எழுப்பியபடி அமைதியடைந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென முகிலனை நோக்கிப் பாய்ந்து சென்ற மாசுணங்களும், அரசமாசுணத்துடன் இருந்த மாசுணமும் விரைந்து வந்து அரசமாசுணத்தை சூழ்ந்து கொண்டு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன. அரசமாசுணம் அவற்றிற்கு இடையே சிறைப்பட்டது.

அவற்றின் செயலின் காரணத்தை அறிய மயனின் கண்கள் சுற்றுச் சூழலை ஊடுருவியது. நத்தத்தன் தன் கண்களால் மயனுக்கு ஜாடை காட்டினான். அவன் காட்டிய திசையில் அவர்களுக்கு எதிரே இருந்த குன்றிலிருந்து இரண்டு பெரிய செந்தணல்கள் மின்னுவதைக் கண்டான். சிறிது நேரத்தில் அவை தணல்கள் அல்ல இரண்டு பெரிய வட்டக் கண்கள் என்பதை உணர்ந்தான். அந்தக் கண்களோ மாசுணச் சபையோரைப் பார்த்துக் கொண்டிருந்தன. அது மட்டுமல்லாமல் அந்தக் கண்களுக்குரிய புதிய விருந்தாளி க்கூம்’, ‘க்கூகூம்என்று அவர்களின் இசைக்கு பக்க வாத்தியமாக பெரிய முரட்டொலியும் எழுப்பத் தொடங்க, அந்தக் கும்மிருட்டிலும் அது எழுப்பிய ஒலியும், அதன் கண்களும் அது சகோரப்பறவை என்பதை மயனுக்கு சொல்லாமல் சொல்லின.

முகிலனை அரசமாசுணம் கவ்வி எடுத்து உமிழ்ந்ததிலிருந்து இருண்டு கிடந்த அவர்களிருவரின் மனஇருளும் சகோரப்பறவையைக் கண்டதும் மெல்ல அகன்றது. அக்கணத்திலே அவர்களைச் சூழ்ந்திருந்த அபாயம் அவர்களை விட்டு நீங்கப் போவதை உள்ளுணர்வு உணர்த்திற்று. மூன்று மூன்றரையடி உயரமும், பெரிய கொள்ளிக் கண்களையும் உடைய சகோரப் பறவைகள் மாசுணங்களின் முட்டைகளைக் குடிப்பதும், மாசுணக் குட்டிகளை வேட்டையாடி உண்பதும் வழக்கம். அதனால் அந்த சகோரப் பறவையின் வருகை மாசுணங்களிடையே சலசலப்பை உண்டாக்கியது. அவை ஒன்றுடன் ஒன்று பிணைந்தும் முறுகியும் குமைந்தன.

மரத்திலிருந்து தொங்கியவை மரங்களோடு மரங்களாக ஒன்றின. அவர்களின் இசையைக் கேட்டு வாலையாட்டி தலையை இடைஇடையே நிலத்தில் அடித்துக் கொண்டிருந்த குட்டிமாசுணத்தை சகோரப் பறவை அதன் இருகால் விரல்களால் தூக்கிக் கொண்டு பறந்தது. அதனால் மாசுணங்கள் ஏற்படுத்திய அமளி விண்ணைத் தொட்டது. அதுவே தக்க சமயமென நத்தத்தன் பேரண்டப் புகையை திறக்க, மயன் தன் காலடியில் கிடந்த மனோமயமாமணியை எடுத்தான். நத்தத்தன் ஓடிச்சென்று முகிலனைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு பணிலத்தை நோக்கி விரைந்தான். மயனும் வேகமாக வந்து பணிலத்தில் ஏறி அதனை இயக்கத் தொடங்கினான். பணிலம் இருளைக் கிழித்துக் கொண்டு வானில் பறக்கத் தொடங்கியது. அதுவரை இருவரும் ஒருவரோடொருவர் ஒன்றும் பேசவில்லை.

உலகில் சிவன் ஒருவனே அரசமாசுண மனோமயமாமணியை சூளாமணியாக மகுடத்தில் தரித்தவன். அவனின் அருட்கருணை இல்லாவிட்டால் அசரமாசுணத்தை எவரும் நெருங்க முடியாது. சிவனைத் தவிர எவருமே அணிந்திராத அரிய மாமணியை அரசமாசுணத்திடம் இருந்தெடுத்து, பெருஞ்சாதனை செய்திருந்தும் அவர்களால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. இருவர் மனமும் முகிலனின் நிலையை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. பணிலத்தை இயக்கிக் கொண்டிருந்த மயன் நீண்டதொரு பெருமூச்செறிந்தபடி, ‘‘நத்தத்தா! முகிலனின் நிலை எப்படி இருக்கிறது?’’ என முதன் முதல் வாய் திறந்தான். ‘‘உடனடியாக ஏதும் சொல்வதற்கில்லை. அதிகளவு இரத்தத்தை இழந்துள்ளான். உயிர் இருக்கின்றது. வைத்தியம் செய்வதற்கு தேவையான மருந்துகளும் எம்மிடம் இருக்கின்றன.”

முகிலனை படுக்க வைத்து வைத்தியம் செய்யக்கூடிய இடத்திற்கு கொண்டு சென்றால் காப்பாற்ற முடியும்’’ என்று நத்தத்தன் நிதானமாகப் பதில் சொன்னான்.

‘‘இன்னும் எவ்வளவு நாளிகைக்குள் இவனுக்கு வைத்தியம் செய்தாக வேண்டும்?’’ என மயன் கேட்டான். 

‘‘மாயா! இறந்தவர்களைக்கூட உயிர்த்தெழ வைக்கும் சஞ்சீவகாரணி இதோ இருக்கின்றது. இருப்பினும் முகிலனின் தலைக்காயத்திற்கு நெடிய வெள்ளூசி கொண்டு அறுவைவைத்தியம் செய்ய வேண்டும். பெருவள நாட்டிற்குள் தானே நாம் இருக்கின்றோம். அறுவைவைத்தியம் செய்வதற்கு ஏற்ற இடத்திற்கு விரைவாக போ’’ என்றான் நத்தத்தன்.

‘‘பெருவள நாட்டிற்குள் தானே இருக்கின்றோம்’’ என நத்தத்தன் கூறியதும், தன்னை வழியனுப்பிய போது தந்தை விசுவகர்மா சொன்னவையும் கூடவே மயனுக்கு ஞாபகம் வந்தது. “நாக நாட்டின் இளவரசனான நீ நாடு நாடாக அலையும் நாடோடியாக உலக நாடுகளை சுற்றிவரப் போகின்றாய். எந்த ஒரு நேரத்திலும் பெருவள நாட்டிற்கூட உன்னை நீ வெளிக்காட்டிக் கொள்ளளக் கூடாது. இது ஓர் அரசதந்திர சுற்றுப் பயணம் என்பதை நீ மறந்துவிடவும் கூடாது. நாடு, காடு, மலை, நதி, கடல் என எங்கும் நீ போகலாம். மனிதரை விட இயற்கையிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.”

இயற்கை பார்வைக்கு மிக அழகாக மென்மையானதாக இருந்தாலும் அதைப்போல் கொடூரமானதும் பயங்கரமாதும் உலகில் வேறு எதுவுமேயில்லை. இயற்கையின் சீற்றத்தை எப்படி எப்படி எல்லாம் கட்டுப்படுத்தி, அதனை நம் வசப்படுத்துவது என்பதிலேயே ஓர் அரசகுமாரனின் எண்ணம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவனால் அவனின் குடிமக்களை இயற்கையின் சீற்றத்திலிருந்து காத்து இன்பமாக வாழ வைக்க முடியும். இவ்வளவு நாளும் நீ குருவிடம் கற்ற கல்வி வேறு. நீ இப்போ பெறப்போகும் அநுபவம் வேறு. பல இடங்களுக்கு அலைந்து கிடைப்பதே அநுபவம். அதாவது எவற்றை எல்லாம் நீ அநுபவித்து அறிகின்றாயோ அதுவே அநுபவமாகும். பல நாடுகளுக்கு நாடோடிபோல செெல்வதால் அதை நீ அறிந்து கொள்வாய். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் இயற்கை கோலம் போட்டிருந்தாலும் அவை தரும் அழிவுகளும் நாடுகளுக்கு நாடுகள் வேறுபடுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இயற்கையால் ஏற்படும் அழிவுகளை எப்படியெல்லாம்  தடுக்கிறார்கள் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறியும் போது மிக்க அரசதந்திரத்துடன் நீ நடந்துகொள். நீ ஓர் அரசகுமாரன் என்பதை மற்றவர்கள் உய்த்துணர என்றுமே இடம் கொடுக்கக் கூடாது. உன் பயணத்தின் வெற்றி அதில் தங்கிஇருக்கின்றது.”

அவர் சொற்படியே இவ்வளவு நாளும் என்னை யாரென வெளிக்காட்டிக் கொள்ளாது இருந்தேன். இப்போது முகிலனின் உயிரைக் காப்பாற்றுவதா? தந்தையின் சொல்லைக் காப்பதா? பெருவள நாட்டில் நீலமலைச்சாரலும், நாகமலைச் சாரலும் சேரும் இடத்தில் இருக்கும் நாககடமே தந்தையின் சொல்லையும் முகிலனின் உயிரையும் காப்பாற்ற ஏற்ற இடம் என முடிவு செய்தான். 

அதிகாலைச் செக்கர் வானம் கீழ்த்திசையில் வண்ணக் கோலங்கள் இட்டுக் கொண்டிருக்க நீலமலைக்கும் நாகமலைக்கும் இடையே இருந்த பள்ளத்தாக்கினூடாக பணிலம் நாககடம் நோக்கி விரைந்தது. கீழே கருநீல நிறத்தில் பெரிய சமுத்திரம் போல் நாகநளினி இருந்தது. 

பணிலம் ஏற்படுத்திய சத்தமும், அது பறந்த வேகத்தால் அவ்விடமெங்கும் ஏற்பட்ட அதிர்வும் நாகநளினியில் நீந்தித் திரிந்த பறக்கும் மீன்களையும், நாகமலைக்காட்டு பறக்கும் யானைகளையும் பயமடையச் செய்தன. அவை பணிலத்தை, தம்மை தாக்க வந்த மிருகமென நினைத்து துரத்தின. அவற்றைக்கண்ட மயனும் நத்தத்தனும் எழுந்து, திரும்பிநின்று வேடிக்கை பார்த்தனர்.

நாகமலைக் காட்டிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பறந்து வரும் பறக்கும் யானைகளையும் நாகநளினியிலிருந்து புற்றீசல் போல் எழுந்து வரும் மீன்களையும் மயன் பார்த்துக்கொண்டு இருந்தான். கண்கள் பார்த்துக் கொண்டு இருந்தனவே ஒழிய அவனது மனதின் கவலையைச் சொல்லமுடியவில்லை. முகிலனின் உயிர் ஊசலாடுவதற்கு தான் மனோமயமாமணியை எடுக்கச் சென்றதே காரணம் என்பதை உணர்ந்தான். ‘அவனின் உயிரை தன்னுயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியாக வேண்டும். இல்லையேல் முகிலனின் காதலி பதுமாவுக்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும்? சிரிப்பும் குறும்புமாக சிறுவயது முதல் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தவள் ஆயிற்றே. இதுநாள் வரை பதுமாவின் விழிகளில் கண்ணீரை அவன் கண்டதில்லை. இவ்வுலகம் ஓர் இன்பச்சுரங்கம் என நினைத்துக் கொண்டு இருப்பவள். முகிலனை இழந்து, அவளின் முன்  எப்படிப் போய் நிற்பது?’ என நினைத்தபடி முகிலனைப் பார்த்தான். 

மாயா! மாயா!” என நத்தத்தன் தன்னை அழைப்பதைக்கேட்டு, “என்ன நத்தத்தா! நான் உன் அருகினில் தானே நிற்கிறேன்என்றான். 

நீ அருகில் இருக்கிறாய். ஆனால் நான் கேட்பவை எவையுமே உன் காதில் விழவில்லை. உன் எண்ணம் இளமதியிடம் சென்றுவிட்டது.” என்றான்.

இளமதிஎன்ற பெயரைக் கேட்டதுமே மயனின் உள்ளத்தில் மகிழ்ச்சி திரும்பியது. புன்சிரிப்போடுநீ என்ன கேட்டாய்என்றான். 

நாங்கள் எங்கே போகிறோம்? இந்த இடம் என்ன? யானைகளும் மீன்களும் இங்கு பறக்கின்றனவேஎன்றான்.

நாங்கள்நாககடம்போகிறோம். அது நாகமலைக் காடு. கீழே நீரால் நீலமயமாக இருப்பதே நாகநளினி

! இதுவோ நாகமலை! அப்படியானால் இங்கு பெருவாரி யானைகள் வாழ்கின்றனவா?

ஆம் நாகமலைக்காட்டில் இந்தப் பறக்கும் யானைகள் மட்டுமல்ல, நான்கு தந்தமுள்ள யானைகள், சடையானைகள் எல்லாம் இருக்கின்றனஎன்றான் மயன்.

மாயா! அங்கே பார்! அந்தப்பறக்கும் யானை, நமது பணிலத்தை மிகநெருங்கி வந்து கொண்டிருக்கிறதுஎன்ற நத்தத்தனின் குரலில் பயம் தெரிந்தது.  

மிளிரும்.......

இனிதே,

தமிழரசி.

சொல், சொற்றொடர் விளக்கம்:

சுடலைப்பொடி சுண்ண மாசுணச் சூளாமணி கிடந்து       படரச் சுடர்மகுடா எம்மைஆளும் பசுபதியே”    - சுடலைப்பொடியின் சுண்ணமும்  மாசுணத்தின் சூளாமணியும் கிடந்து ஒளி வீச ஒளிரும் சடாமுடியை உடையவர் எம்மை ஆளும் பசுபதி.

சகோரப்பறவை - ஒருவகைப் பேராந்தை [அந்நாளில் வாழ்ந்தது]

பேரண்டப்புகை - மருந்துப்புகை

பணிலம் - சங்குவடிவான விமானம்

வெள்ளூசி - வெள்ளியால் செய்த ஊசி

அறுவைவைத்தியம் - சத்திரசிகிச்சை

நாககடம் - பெருவளநாட்டில் இருந்த ஓர் இடம்

நாகநளினி - நாககடத்தில் இருந்த பெரிய குளம்

No comments:

Post a Comment