Thursday, 8 September 2022

அணையா விளக்கு அணைந்தது


                கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே

சேக்கை மரன் ஒழியச் சேண்நீங்கு புள்போல

யாக்கை தமர்க்கொழிய நீத்து

- (நாலடியார்: 3: 10)

இவ்வுலகில் வாழும் உயிர் அனைத்தும்நாம் இங்கு பிறக்கப் போகிறோம்என்று கேட்காது வந்து பிறந்து, பின்னர் தாம் வாழ்ந்த கூடு மரத்தில் இருக்க அதனை அங்கே விட்டுவிட்டுப் பறந்து செல்லும் பறவை போல உடலை ஈங்கு விட்டுவிட்டு இறந்து போகும்.

பிரிட்டினின் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எலிசபெத்II மகாராணி அவர்களின் வாழ்வும் இத்தகையதே. இது எவருக்கும் விதிவிலக்கு அல்ல. ஒரு காலத்தில் கிழக்கே தோன்றிய சூரியன் மேற்கே மறையும் வரை இருந்த நாடுகளை ஆட்சி செய்த நாடு பிரிட்டின். 1952ல் தந்தை இறந்த பின் பிரிட்டினின் மகாராணியாக முடிசூட்டிக் கொண்டவர். வெளி உலகிற்கு தனது தனிப்பட்ட வாழ்விலும் அரசியலிலும் ஊடகவியலாளரிடமும் மலர்ந்த முகத்துடன் தனித்தன்மையைப் பேணியவர். 

இரண்டாம் உலகமகா யுத்தத்தின் தொடக்கத்தின் போது அவர் 13 வயது சிறுமியாக இருந்தவர்.  விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு அமைய சிறுவர்களுக்காக இளமையிலேயே வானொலியில் குரல் எழுப்பியவர் என்ற பெருமை உடையவர். பாடசாலை சென்று கற்கவில்லை எனினும் அரச குடும்ப வழக்கத்தின்படி வீட்டிலேயே மிக ஆழமான அகன்ற கல்வியைக் கற்றுக்கொண்டவர். அவரது 18வயதில் [1945] தனது விருப்பத்தின் பேரில் Auxiliary Territorial Service [ATS] இணைந்து பயிற்சி பெற்றவர்.

இலங்கையில் எலிசபெத்II மகாராணியும் கணவரும் 1954

டென்மார்க் இளவரசர் பிலிப்பை 1947ல் திருமணம் செய்தபின் இருவரும் 1954ல் இலங்கைக்கும் சென்றனர். மகாராணியாக இருந்தும் திருமண வாழ்வில் கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளுடன் தனது அன்பைப் பேணியவர். பிரிட்டினின் முடிசூடிய மாகாராணி என்னும் தன் பெருமைக்கும் புகழுக்கும்  மெருகூட்டி அதன் பண்டைய புகழை தங்கவைத்துக் கொண்டவர். 

ஐரோப்பிய அரச குடும்பத்தினரின் 1000  வருட வரலாற்றில் 70  வருடங்களாகத் தொடர்ந்து அரசியாக இருந்தவர் என்னும் பெருமதிப்பை தன் புகழுடம்பில் நிலைநிறுத்தியுள்ளார். இத்தகைய எலிசபெத்II மகாராணி என்னும் அணையா விளக்கு அணைந்து இயற்கையுடன் இசைந்ததுவும் பொலிவு தானே!

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment