Sunday, 11 September 2022

மரணத்தை வென்ற மாகவி


இயற்கையில் பிறந்தவை யாவும் மரணம் எய்தும். ஆனால் மரணத்தை வென்ற பலர் இன்றும் நிலைத்து உலகில் வாழ்கிறார்கள். தொடர்ந்தும் வாழ்வார்கள். அப்படி மரணத்தை வென்ற சுப்பிரமணிய பாரதியார் தன் உடலில் இருந்து உயிரை நீக்கி புகழுடம்பில் புகுந்த நாள் புரட்டாதி 11.

பாயக் காண்பது சுதந்திர வெள்ளம்

பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் 

                                                                - (வ உ சிதம்பரனார் பேச்சு)

என்று பேசி, சுதந்தர தீயை பாரத நாட்டில் மூட்டிய கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் அவர்கள் பாரதியின் அருமை நண்பன். பாரதியார், வீரசுதந்திரமே வாழ்வாகக் கொண்ட . . சி போன்ற பலர் மதிக்க வாழ்ந்தவர். அதற்கு

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

  வேறொன்று கொள்வாரோ - என்றும்

ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்

  அறிவைச் செலுத்துவரோ?”

                                                                - (பாரதியார் பாடல்)

எனத் தன்மான வீரசுதந்திரத்தின் தேவையை உணர்த்த பாரதியார் எழுதிய பாடல்களே வழிவகுத்துக் கொடுத்தன. பாரதியின் பாடல்கள் யாவும் எமக்குக் கிடைத்திருக்கின்றன எனச் சொல்ல முடியாதது.

மேலே படத்தில் உள்ளபாரதியார் பாடல்புத்தகம் 1941ல் வெளிவந்தது. அதில் 

வந்தே மாதர மென்போம் -எங்கள்

மாநிலத் தாயை வணங்குது என்போம் 

என்னும் வந்தே மாதரப்பாடல் முதற்பாடலாக இருக்கிறது. இரண்டாவது பாடலும் வந்தே மாதரப் பாடலே.

அதன்பின்னர் வந்த வாரஇதழ் ஒன்றில் பாரதியார் எழுதியவந்தே மாதரப் பாடல்ஒன்று நாற்பதுகளில் வெளிவந்திருக்கிறது. அதனை எனது தந்தை தனது பாரதியார் பாடற்புத்தகத்தில் வந்தே மாதரப் பாடலுடன் ஒட்டி வைத்திருந்தார். அந்த வந்தே மாதரப்பாடல் 

பாரதியாரின் பாடல்களில் பிற்சேர்க்கையாக வந்தவற்றுள் எனக்குப் பிடித்த பாடல்


சாதி

மனிதரில் ஆயிரம் சாதி - என்ற

வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை

கனிதரும் மாமரம் ஒன்று - அதில்

காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு 1

பூவினில் உதிர்வதும் உண்டு - பிஞ்சைப்

பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு

நாவிற் கினியதைத் தின்பார் - அதில்

நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார் 2

ஒன்றுண்டு மானிட சாதி - பயின்று

உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்

இன்று படுத்தது நாளை - உயிர்த்

தேற்றம் அடையும் உயர்ந்த திழியும் 3

நந்தனைப்போல் ஒரு பார்ப்பான் - இந்த

நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின்

எந்தக் குலத்தின ரேனும் - உணர்

வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம் 4


இன்பத்திற்கு வழி

ஐந்து புலனை அடக்கி - அரசு

ஆண்டு மதியைப் பழக்கித் தெளிந்து

நொந்து சலிக்கும் மனதை - மதி

நோக்கத்திற் செல்ல விடும்வகை கண்டோம் 5


புராணங்கள்

உண்மையின் பேர்தெய்வம் என்போம் - அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது

உள்ள மறைகள் கதையெனக் கண்டோம் 6

கடலினைத் தாவும் குரங்கும் - வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலே - தெற்கில்

வந்து சமன் செய்யும் குட்டை முனியும் 7

நதியி னுள்ளேமுழு கிப்போய் - அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த - திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம் 8

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் - ஒன்றில்

உண்மையென் றோதிமற் றொன்று பொய்யென்னும்

நன்று புராணங்கள் செய்தார் - அதில்

நல்ல கவிதை பலப்பல தந்தார் 9

கவிதை மிகநல்ல தேனும் - அக்

கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்

புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை

போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம் 10


ஸ்மிருதிகள்

பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் - அவை

பேணும் மனிதர் உலகினில் இல்லை

மன்னும் இயல்பில் வல்ல - இவை

மாறிப் பயிலும் இயல்பின ஆகும் 11

காலத்திற் கேற்ற வகைகள் - அவ்வக்

காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்

ஞால முழுமைக்கும் ஒன்றாய் - எந்த

நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை 12

சூர னுக்கொரு நீதி - தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொறு நீதி

சாத்திரம் சொல்லிடு மாயின் - அது

சாத்திரம் அன்று சதியென்று கண்டோம் 13


மேற்குலத்தவர் எவர்?

வையகம் காப்பவ ரேனும் - சிறு

வாழைப் பழக்கடை வைப்பரேனும்

பொய்யக லத்தொழில் செய்தே - பிறர்

போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் 14


தவமும் யோகமும்

உற்றவர் நாட்டவர் ஊரார் - இவர்க்கு

உண்மைகள் கூறி இனியன செய்தல்

நற்றவம் ஆவது கண்டோம் - இதில்

நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை 15

பக்கத் திருப்பவர் துன்பம் - தன்னைப்

பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி

ஒக்கத் திருத்தி உலகோர் - நலம்

உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி 16


யோகம், யாகம், ஞானம்

ஊருக் குழைத்திடல் யோகம் - நலம்

ஓங்குடு மாறு வருந்துதல் யாகம்

போருக்கு நின்றிடும் போதும் - உளம்

பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞானம் 17


பரம்பொருள்

எல்லை இல்லாத உலகில் - இருந்த

எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்

எல்லையில் லாதன வாகும் - இவை

யாவையுமாய் இவற் றுள்ளு யிராகி 18

எல்லை இல்லாப் பொருளொன்று - தான்

இயல்பறி வாகி இருப்பதுண் டென்றே

சொல்லுவர் உண்மை தெளிந்தார் - இதைத்தூ

வெளியென்று தொழுபவர் பெரியோர் 19

நீயும் அதனுடைய தோற்றம் - இந்த

நீல நிறங்கொண்ட வானமும் ஆங்கே

ஓயுதல் இன்றிச் சுழலும் -  ஒளி

ஓங்கு பல் கோடிக் கதிர்களும் ஆங்கே 20

சக்திகள் யாவும் அதுவே - பல்

சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே

நித்தியமாம் இவ் உலகில் - கடல்

நீரில் சிறுதுளி போலும் இப்புவி 21

இன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்கு

இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்

துன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்கு

தோல்வி முதுமை ஒருகணத்தோற்றம் 22


முத்தி

தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்

துன்பத்தோடு இன்பம் வெறுமை என்றோதும்

மூன்றில் எது வரு மேனும் - களி

மூழ்கி நடத்தல் பரசிவ முத்தி. 23

இதில் பல உண்மைகளை உள்ளபடி தந்திருக்கிறார்.


வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற

பாரதி தன்னைப் பாரினுக்கே - தந்து

பார்புகழ் தாங்கிய தமிழ்நாடு ஆக்கி, மரணத்தை வென்ற மாகவி பாரதியாய் நிலைக்கிறார்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment