Saturday 15 May 2021

குறள் அமுது - (147)


குறள்: மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படும் சொல்   - 453


பொருள்: ஒருவரின் மனநிலைக்குத் ஏற்றவாறு அவரது உணர்ச்சி இருக்கும். அவர் வாழும் அல்லது சேரும் இனத்தைப் பொறுத்து இன்னார் எனப்பேசும் சொல் இருக்கும்.


விளக்கம்: இத்திருக்குறள் சிற்றினம் சேராமை எனும் அதிகாரத்தில் உள்ள மூன்றாவது குறளாகும். உலக உயிர்கள் அனைத்திற்கும் உணர்ச்சி இருக்கிறது. உணர்ச்சிகளின் அடிப்படையை வைத்தே மனிதர் ஆறறி உடையவர் எனக் கணிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தொல்காப்பியமும்

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

- (தொல்:பொரு: 571)

ஐம்புல உணர்வுகளுடன் மனவுணர்வையும் சேர்த்து ஆறறிவாகச் சொல்கிறதுஐம்புல உணர்ச்சிகளால் வரும் ஆசைகளைத் தூண்டுவதும் கட்டுக்குள் வைத்திருப்பதும் எமது மனமே. அதனாலேயே திருவள்ளுவர்மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி என்றார். 


அறிவிற் சிறந்து விளங்கிய ஔவையாரும் அன்பில்லாமல் ஒருத்தி கொடுத்த உணவைப் பார்த்து

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே

மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்

என்பெல்லாம் பற்றி எறிகின்ற தையையோ

அன்பில்லாள் இட்ட அமுது                

                                                - ஔவையார் தனிப்பாடல்

என மனதின் வெறுப்புணர்ச்சியின் மிகுதியால் தன் எலும்பெல்லாம் பற்றி எரிவதாகப் பாடியுள்ளார். மனிதரின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு மனம் எவ்வாறு தூண்டு கோலாக இருக்கிறதோ அவ்வாறு ஒருவன் எப்படிப்பட்டவன் என்பது அவனது இனத்தைப் பொறுத்தே அறியப்படுகிறது. 


உலகில் வாழும் மனிதர் யாவரும் மனிதத் தன்மையால் ஒன்றுபடினும் இனங்களின் தன்மையால் வேறுபடுகின்றனர். மனித இனத்தின் தன்மையின் வேறுபாடு வேறு. இனப்பகை வேறு. மனித இனங்களின் தன்மைகளின் வேறுபாட்டிற்குக் காரணங்கள் எவை? ஒவ்வொரு மனித இனக்குழுக்களும் பரம்பரைக் காரணிகளாலும் பழக்க வழக்கங்களாலும் உண்ணும் உணவுகளாலும் பண்பாடுகளாலும் வேறுபடுகின்றன. இவை யாவும் அவ்வவ் இனங்களுக்கென ஒரு கட்டுக்கோப்பை உருவாக்கி வைத்திருக்கின்றது. 


அதனை நாலடியார்

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது

- (நாலடியார்: 243)

"வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்

தீஞ்சுவை யாதும் திரியாதாம் - (நாலடியார்: 244) 

எனச் சொல்வதால் அறியலாம்.


எந்த நிலத்தில் விதைத்தாலும் காஞ்சிரங்காய் தென்னையாகாது. வேப்பிலையில் சுற்றி வாழைக்காயை பழுக்க வைத்தாலும் அதன் இனிமையான சுவையில் இருந்து அது மாறாது. இவைபோல  மனித இனங்களிடையேயும்  காலங்காலமாக வேறுபாடு இருக்கின்றது. அந்த உண்மையை உண்மையாக உணர்ந்து அதனை இனப்பகை எனக்ககருதாது மனிதன் என்று வாழக்கற்கிறானோ அன்றே உலகில் போர் என்பது இல்லாது ஒழியும். 


திருவள்ளுவர் இக்குறளில்இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்எனக் கூறியது போல மனிதர்களிலே ஈழத்தமிழர் என்று ஓர் இனமுண்டு, அந்த இனத்திற்கென பண்டைய வரலாறும் அறிவும் ஆற்றலும் திறமையும் உண்டு,

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment