உள்ளமே கோயில் கொண்டாய்
உணர்வினில் கலந்து நின்றாய்
கள்ளமாய் மறைந்து வாழ்வாய்
கனவிலும் காட்சி தாராய்
பள்ளமே பாயும் நீராய்
பரிந்து வருதல் கண்டால்
துள்ளுமே எனது ஆவி
தொடர்வாய் எனும் உண்மையாலே
இனிதே,
தமிழரசி.
உள்ளமே கோயில் கொண்டாய்
உணர்வினில் கலந்து நின்றாய்
கள்ளமாய் மறைந்து வாழ்வாய்
கனவிலும் காட்சி தாராய்
பள்ளமே பாயும் நீராய்
பரிந்து வருதல் கண்டால்
துள்ளுமே எனது ஆவி
தொடர்வாய் எனும் உண்மையாலே
இனிதே,
தமிழரசி.
இன்னான் எனப்படும் சொல்” - 453
பொருள்: ஒருவரின் மனநிலைக்குத் ஏற்றவாறு அவரது உணர்ச்சி இருக்கும். அவர் வாழும் அல்லது சேரும் இனத்தைப் பொறுத்து இன்னார் எனப்பேசும் சொல் இருக்கும்.
விளக்கம்: இத்திருக்குறள் சிற்றினம் சேராமை எனும் அதிகாரத்தில் உள்ள மூன்றாவது குறளாகும். உலக உயிர்கள் அனைத்திற்கும் உணர்ச்சி இருக்கிறது. உணர்ச்சிகளின் அடிப்படையை வைத்தே மனிதர் ஆறறி உடையவர் எனக் கணிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தொல்காப்பியமும்
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
- (தொல்:பொரு: 571)
ஐம்புல உணர்வுகளுடன் மனவுணர்வையும் சேர்த்து ஆறறிவாகச் சொல்கிறது. ஐம்புல உணர்ச்சிகளால் வரும் ஆசைகளைத் தூண்டுவதும் கட்டுக்குள் வைத்திருப்பதும் எமது மனமே. அதனாலேயே திருவள்ளுவர் ‘மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி என்றார்.
அறிவிற் சிறந்து விளங்கிய ஔவையாரும் அன்பில்லாமல் ஒருத்தி கொடுத்த உணவைப் பார்த்து
“காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எறிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது”
- ஔவையார் தனிப்பாடல்
என மனதின் வெறுப்புணர்ச்சியின் மிகுதியால் தன் எலும்பெல்லாம் பற்றி எரிவதாகப் பாடியுள்ளார். மனிதரின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு மனம் எவ்வாறு தூண்டு கோலாக இருக்கிறதோ அவ்வாறு ஒருவன் எப்படிப்பட்டவன் என்பது அவனது இனத்தைப் பொறுத்தே அறியப்படுகிறது.
உலகில் வாழும் மனிதர் யாவரும் மனிதத் தன்மையால் ஒன்றுபடினும் இனங்களின் தன்மையால் வேறுபடுகின்றனர். மனித இனத்தின் தன்மையின் வேறுபாடு வேறு. இனப்பகை வேறு. மனித இனங்களின் தன்மைகளின் வேறுபாட்டிற்குக் காரணங்கள் எவை? ஒவ்வொரு மனித இனக்குழுக்களும் பரம்பரைக் காரணிகளாலும் பழக்க வழக்கங்களாலும் உண்ணும் உணவுகளாலும் பண்பாடுகளாலும் வேறுபடுகின்றன. இவை யாவும் சேர்ந்து அவ்வவ் இனங்களுக்கென ஒரு கட்டுக்கோப்பை உருவாக்கி வைத்திருக்கின்றது.
அதனை நாலடியார்
“எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது”
- (நாலடியார்: 243)
"வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம்” - (நாலடியார்: 244)
எனச் சொல்வதால் அறியலாம்.
‘எந்த நிலத்தில் விதைத்தாலும் காஞ்சிரங்காய் தென்னையாகாது. வேப்பிலையில் சுற்றி வாழைக்காயை பழுக்க வைத்தாலும் அதன் இனிமையான சுவையில் இருந்து அது மாறாது. இவைபோல மனித இனங்களிடையேயும் காலங்காலமாக வேறுபாடு இருக்கின்றது. அந்த உண்மையை உண்மையாக உணர்ந்து அதனை இனப்பகை எனக்ககருதாது மனிதன் என்று வாழக்கற்கிறானோ அன்றே உலகில் போர் என்பது இல்லாது ஒழியும்.
திருவள்ளுவர் இக்குறளில் “இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்” எனக் கூறியது போல மனிதர்களிலே ஈழத்தமிழர் என்று ஓர் இனமுண்டு, அந்த இனத்திற்கென பண்டைய வரலாறும் அறிவும் ஆற்றலும் திறமையும் உண்டு, என்பதைக் கருத்தில் கொண்டு தலைநிமிர்ந்து வாழுவோம்.
இனிதே,
தமிழரசி.
பாராயோ கண்திறந்து பாராயோ
பழவினை போக்குதற்கு பாராயோ
வாராயோ வண்ணமயிலில் வாராயோ
வாழுநர் வாழ்த்தவே வாராயோ
ஓராயோ ஒண்தமிழை ஓராயோ
ஓமினை ஒருமுறை ஓதாயோ
தாராயோ தவஞானம் தாராயோ
தரணிக்கே தண்ணருள் தாராயோ
இனிதே,
தமிழரசி.
குறள்: மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும் - 884
பொருள்: மனவேறுபாட்டால் உட்பகை தோன்றினால் அது இனவேறுற்றுமையை உண்டாக்கும் பல தீமைகளைத் தரும்.
விளக்கம்: உட்பகை என்னும் அதிகாரத்தில் உள்ள நான்காவது குறள் இது. மாணுதல் என்றால் நன்மை தருவது. மாணா என்பது அதற்கு எதிர்க் கருத்தில் வருகிறது. திருவள்ளுவர் எமது மனதில் உண்டாகும் தீமைகளையே மனம்மாணா எனக்குறிப்பிடுகிறார்.
மனிதரின் மனத்தைப் பொறுத்து எத்தனையோ வகைகளில் தீமைகள் பிறக்கின்றன. பொய் பேசுதல், கடுங்கோபம் கொள்ளுதல், மற்றவர் நன்றாக வாழ்வதைப் பார்த்துப் பொறாமைப்படுதல், அடுத்துக் கெடுத்தல், பிறரைத் துன்புறுத்தி இன்பங்கொள்ளல், தெருட்டுதல், பொருளுக்காகப் பணத்துக்காகப் பிறரைக் கொலை செய்தல், பிறர் பொருளைக் கொள்ளையடித்தல் போன்றவை யாவும் மனங்கோணுவதால் உண்டாகின்றன.
மனமாறுபாடு தோற்றுவிக்கும் தீச்செயல்கள் பலவகைத் தீமைகளை உருவாக்குகின்றன. தீமைகளால் துன்பப்படுவோர் தீமை செய்தோரை வெறுப்பர். அதுவே உட்பகையாய் மாறி மனிதரின் இன்பவாழ்க்கையை சீரழிக்கிறது. அப்படி உண்டாகும் உட்பகை உறவுகள் இடையேயும், அயலவரிடமும், ஊர்களுக்குள்ளும், இனங்களுக்கு இடையேயும், நாட்டிலுமாக பரந்து விரிந்து எங்கும் கணப்படுகிறது.
மனிதன் தோன்றிய காலந்தொட்டு உட்பகையும் இருக்கிறது. அது நிறம் என்றும் சாதி என்றும் சமயம் என்றும் கடவுள் என்றும் இனம் என்றும் மொழி என்றும் பல்வகைபட்ட காரணங்களால் வெடிக்கிறது. இந்த உட்பூசல்களே சதிச்சண்டை, சமயச்சண்டை மொழிச்சண்டை என மெல்ல மெல்ல வளர்ந்து இனச்சண்டையாய் பெரும் போர்களாக மாறி பல்லாயிரக் கணக்காணோரின் உயிர்களை, உடைமைகளைப் பறிக்கிறது. அப்போர்களால் ஊனமுற்றோரும் உற்றாரும் பெற்றோரும் இன்றித் தவிப்போருமாக உலகம் மெல்ல நடை போடுகிறது. அதனையே திருவள்ளுவரும் இத்திருக்குறளில் ‘இனம்மாண ஏதம் பலவும் தரும்’ என பொறித்துக் காட்டியுள்ளார்.
இந்த திருக்குறளை விளங்கிக் கொள்ள நம் நாட்டையே எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் 1915 ஆம் ஆண்டு கேகாலையில் இனங்களிடையே முகிழ்ந்த மனமாறுபாடு இனச்சண்டையானது. 1956ல் உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள மசோதாவால் பெரும்பான்மை இனத்துக்கும் சிறுபான்மை இனத்துக்கும் இடையே உண்டான மனவேறுபாடு 1958ல் அநுராதபுரம், பொலநறுவை, கொழும்பு போன்ற இடங்களில் இனக்கலவரமாகியது. மீண்டும் அநுராதபுரத்தில் 1977ல் இனக்கலவரம் உண்டாகி 19 பேரூந்துகளில் சிறுபான்மையினர் யாழ் நகர் வந்து சேர்ந்தனர். 1983ல் கொழும்பில் உண்டான இனக்கலவரமே எல்லா இனக்கலவரங்களினதும் உச்சத்தைத் தொட்டது எனலாம்.
இவற்றின் விளைவே தமிழீழத் தோற்றத்திற்கு வித்திட்டது. அது 30 வருடப் போராய் இலங்கை, இந்திய இராணுவம் மட்டுமல்ல பின்னர் உலக நாடுகளின் துணையோடு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் உயிர்களைக் காவு கொண்டது.
மனவேற்றுமை இனவேற்றுமையை எழச்செய்யும் அழிவுகளை ஏற்படுத்தும் எனும் உண்மையை எடுக்காட்டிய பேரறிஞனாக உலகத் தமிழர் வரலாற்றில் திருவள்ளுவர் நிலைத்து நிற்கிறார். மனநலம் இன்மையால் ஏற்பட்ட போர்கள் பல இனங்களைச் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கியதைக் கண்டே சிற்றினம் சேராமை எனும் அதிகாரத்திலும்
“மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்” - 457
எனக்கூறிச் சென்றுள்ளார்.
இனிதே,
தமிழரசி.