Tuesday 28 July 2020

ஞானமா! அறிவா! எது சிறந்தது?


ஞானமும் அறிவும் வேறு வேறானவை. இயல்பாக ஒவ்வொரு உயிரிடமும் இருப்பது ஞானமாகும். அது பிறவி தோறும் வரும். அறிவு கற்பதாலும் கேட்பதாலும், காண்பதாலும், உணர்வதாலும் நீட்சியடையும். கற்காது பெற்ற அறிவை பட்டறிவு என்றும் சொல்வர். சிறுவயதில் கற்க முடியாது துன்பப்பட்டு, இடிபட்டு, அடிபட்டு, வறுமைப்பட்டு, நோய்வாய்ப்பட்டு, பெறுகின்ற அதாவது வாழ்க்கைப் போராட்டம் தருகின்ற அறிவு பட்டறி

மனிதனுக்கு மனிதன் ஞானம் வேறுபடும். ஒரு வகுப்பில் உள்ள எல்லா மாணவர்க்கும் ஆசிரியர் ஒன்றையே கற்பிப்பார். ஆனால் அதனை உள்வாங்கும் தன்மை மாணவர்க்கு மாணவர் மாறுபடுகின்றது. அதற்குக் காரணம் ஞானமே. சிலருக்கு இசை இயல்பாகவே வரும். அதனை இசைஞானம் என்பர். அதுபோல் ஆடல், பாடல், கணிதம், விஞ்ஞானம், விளையாட்டு என ஒவ்வொன்றையும்  நுண்ணிதின் உணரும் தன்மை வேறுபடுகின்றதல்லவா! அதுவே ஞானம்.

ஞானத்திற்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டவே ஞானப் பழத்தை பெற முருகன் உலகை வலம் வந்த கதையைக் கூறுவர்.

சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் நால்வரும் கைலாயமலையில் வாழ்ந்தனர்அங்கே நாரத முனிவர் வந்தார். அவர் ஒரு ஞானப்பழத்தைக் கொண்டுவந்தார். அப்பழத்தை சிவனிடம் கொடுத்துஇது ஒரு ஞனப்பழம். இதை உண்பவர் உலகிலே ஞானம் மிகுந்தவராக இருப்பார். எனவே இப்பழத்தை வெட்டாது முழுவதும் உண்ண வேண்டும்" என்றார். 

சிவன் பார்வதியிடம் பழத்தைக் கொடுத்தார். பழத்தைக் கண்ட முருகனும் பிள்ளையாரும்  பார்வதியிடம் ஓடிவந்து தங்களுக்கு தரும்படி அழுதனர். ‘இது ஞானப்பழம். இதனை ஒருவர் தான் உண்ண வேண்டும். எனவேஉங்கள் இருவரில் இவ்வுலகை சுற்றி முதலில் வருபவருக்கு இந்த ஞானப்பழம் கிடைக்கும்என்றார். உடனே முருகன் மகிழ்வுடன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றிவரப் பறந்து சென்றார்.

பிள்ளையாரின் வாகனமான எலியில் ஏறி உலகைச் சுற்றி முதலில் வரமுடியுமா? என்ன செய்யலாம் என பிள்ளையார் சிந்தித்தார். தான் முதலில் கண்ட உலகம் தாய், தந்தையர் அல்லவா! என எண்ணி சிவனையும் பார்வதியையும் சுற்றி வந்து வணங்கி நின்றார். அவர்களும் பிள்ளையாரின் செயலைக் கண்டு மகிழ்ந்து அவருக்கு ஞானக்கனியைக் கொடுத்தனர். அவர் அக்கனியை உண்டதால் ஞானத்திற்கு தெய்வம் ஆனார்.

மயில் வாகனத்தில் ஏறி உலகை சுற்றி வந்த முருகன் பிள்ளையார் ஞானப்பழம் உண்பதைக் கண்டு மிகக்கோபம் கொண்டார். தனது உடைகளைக் கழற்றி எறிந்தார். ஒரு சிறு துண்டைக் கோவணமாகக் கட்டிக் கொண்டு மலையின் மேல் ஏறி ஆண்டியாக நின்றார். [உலக இன்பங்களை துறந்து பிச்சை எடுத்து உண்போரை ஆண்டி என்றும் கூறுவர்]. அதைக் கண்ட சிவனும் பார்வதியும் முருகனிடம் சென்றுஎங்கள் பழம்நீ அல்லவா!”, “தந்தைக்கு ஓம் என்ற மந்திரப் பொருளை உரைத்த ஞானப் பழம்நீ அல்லவா! உனக்கு எதற்கு ஞானப்பழம் எனக்கூறி முருகனின் கோபத்தை நீக்கினர். முருகனைப் பழம்நீ என்று அழைத்ததால் அந்த மலையை பழனிமலை என்கிறோம். 

முருகன் அறிவுள்ளவன். உலகத்தை படித்தவன். உலகத்தைப் படைத்தவன். உலகத்தை சுற்றிவர அவனால் முடிந்தது. பிள்ளையார் ஞானம் உடையவர். அவரால் தன் தாய் தந்தையரே உலகம் என்பதை நுண்ணிதின் உணர முடிந்தது. இதில் எது சிறந்தது? ஞானமா? அறிவா? அறிவு நீளும். ஞானம் நாம் கொண்டுவந்த அளவே இருக்கும். அதன் கொள்ளளவு ஆளுக்காள் வேறுபடும். நம் அறிவின் ஆற்றலையும் மாற்றும் ஆற்றல் ஞானத்திற்கு இருக்கிறது.

சிவனிடம் நாரதர் ஞானப்பழத்தைக் கொடுத்தார் என்பதே நம்பிக்கை. அந்தக் கதையை நாடகமாக நடித்தவர்கள் ஞானப்பழத்திற்கு எங்கே போவார்கள்? அப்படி ஒரு பழம் எங்கேயும் காய்க்கின்றதா? ஆதலால் நாடகங்களுளில் மாங்கனியைக் கொடுத்து நடித்தனர். சினிமாப்படம் எடுத்தோரும் நாரதர் மாம்பழத்தைக் கொடுப்பதாக படமெடுத்தனர். அதனால் ஞானப்பழமான பிள்ளையார் மாம்பழம் உண்டதாகக் கதை சொல்கிறோம். 

இனிதே,

தமிழரசி

3 comments:


  1. ஞானம் என்பது வடமொழி
    அறிவு என்பது தமிழ்
    என்ற கருத்து உலாவுகிறது...

    கேள்வி ஞானம் - கேட்டல் அறிவு
    தேறிய ஞானம் - கற்ற அறிவு
    புரிந்த ஞானம் - பட்ட அறிவு
    என்றும் சொல்லலாம்...

    தங்கள் பதிவு சிறப்பு - இருப்பினும்
    என் காதில் விழுந்ததைப் பகிர்ந்தேன்.

    நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பர். ஆங்கே சுட்டிய அறிவைப் பகிர்ந்து உள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கே சுட்டிய அறிவு என்றால் என்ன? புரியல்லை.

      Delete
    2. எனக்கு இரண்டுதுளி தமிழ்மொழி தெரியும். அந்த அறிவை வைத்தே எழுதுகிறேன். அது போல் அரைத்துளி வடமொழி தெரியும். நான் அறிந்து வடமொழியில் 'னகர' எழுத்துக்களே இல்லை. அப்படி இருக்க னகர எழுத்து வரும் 'ஞானம்' எனும் சொல் எப்படி வடமொழியாகும்? தற்காலத்தில் வலைத்தளங்களில் வரும் பிழையான கருத்துக்களால் இப்படியான நிலைக்கு தமிழும் தமிழரும் தள்ளப்படுவது நன்றன்று.
      இனிதே,
      தமிழரசி.

      Delete