இவ்வுலகில் நிலைத்து மகிழ்வோடு வாழ்வதற்கு தேவையானது என்ன? எனும் கேள்விக்கு பண்டைத் தமிழர் கண்ட பதிலே அறம். அதனாலேயே பச்சிளம் குழந்தைக்கு “அறம் செய்ய விரும்பு” என்ற பாடத்தை முதன் முதலில் கற்பித்தனர். அவர்கள் ஏன் அறத்திற்கு முதன்மை கொடுத்தனர்? தமிழர் தம் வாழ்வியலை அறம், பொருள், இன்பம், வீடு என நான்காக வகுத்துக் கொண்டனர். அறவழியில் தேடிய பொருளில் இன்பமாக வாழ்ந்து வீடுபேறு அடைவதே தமிழர் கண்ட நெறி. அதுவே தமிழரின் மதம் அல்லது சமயம் ஆயிற்று.
தமிழரின் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் பற்றிச் சொல்லும். தமிழ்மொழியில் வேதம் எனும் சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. ‘வே’ என்னும் மூலச்சொல்லின் அடியால் பிறந்தது வேர். எந்த மரத்திற்கும் வேர் மூலமாகும். வே + தம் = வேதம். தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப் பொருள் தரும். மூலநூல் அதாவது முதல் நூலாகும். பழந்தமிழ் இலக்கண ஆசிரியரான தொல்காப்பியர் "வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதன் நூலாகும்”
என்றார். வடமொழியில் வேதம், வித்து - அறிவு என்னும் அடியால் பிறந்த அறிவுநூல் என்ற கருத்தை தரும். அவர்களின் அறிவு நூல்களே இருக்கு, யசுர், சாமம், அதர்வணமாகும்.
தெற்கத்தைய கடவுள் என்பதையே தட்சிணாமூர்த்தி என்பர். அன்று கல் ஆலமர நிழலின் கீழ் இருந்து நால்வருக்கு தமிழ் மறையாகிய அறம், பொருள், இன்பம், வீடு பற்றி கூறியவரே தட்சிணாமூர்த்தி. அதனை கலித்தொகையின் கடவுள் வாழ்த்து
“ஆறறி அந்தணர்க்கு அருமறை பல பகன்று”
எனச் சொல்வதால் அறியலாம். இன்றும் நம் கோயில்களில் தட்சிணாமூர்த்தி கையில் ஏட்டுடன் தெற்கு நோக்கியே வீற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதனாலேயே நாம் "தென்னாடுடைய சிவனே போற்றி" என வணங்குகிறோம். தட்சிணாமூர்த்தி இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகிய சதுர்வேதங்கள் நான்கையும் நால்வருக்கு கூறவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் நன்று.
பண்டைத் தமிழரின் மறைகள் அழிந்த போதிலும் இன்று நாம் தமிழ்மறை எனப் போற்றும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் மூன்றையும் கூறுவதோடு
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” - 350
என்று நான்காவது மறை சொல்கின்ற வீடுபேற்றுக்கும் வழிகாட்டுகிறது.
தமிழர் தம் முதல்மறை கூறிய அறங்களைப் போற்றியதால்
“அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லைக் கேடு”
“அறத்தான் வருவதே இன்பம்”
“அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை”
என அறத்தின் இயல்பைக் காட்டி, இன்பமாக வாழ எத்தகைய பொருளைத் தேடவேண்டும் என்பதை
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்”
அதாவது பொருள் வரும் வழியை அறிந்து தீமை செய்யாது வந்த பொருள் அறமும் இன்பமும் தரும் என திருவள்ளுவரும் இடித்துச் சொல்கிறார்.
பிங்கல நிகண்டு ஆயிர வருடங்களுக்கு முந்தியது. அது ஏறக்குறைய 15,000 தமிழ்ச்சொற்களை பட்டியலிடுகிறது. மனிதர் செய்யவேண்டிய முப்பதிரண்டு அறங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
- ஆதுலர் சாலை [வைத்தியசாலை/வறுமை மிக்கோருக்கான இருப்பிடம்]
- ஓதுவார்க்கு உணவு [படிப்போருக்கு உணவு கொடுத்தல்]
- அறு சமயத்தோர்க்கு உண்டி [எந்த சமயத்தவர்க்கும் உணவு கொடுத்தல்]
- பசுவுக்கு வாயுறை [பசுவுக்கு புல்லும் நீரும் கொடுத்தல்]
- சிறைச்சோறு [சிறையில் இருப்போர்க்கு சோறு கொடுத்தல்]
- ஐயம் [பிச்சை இடுதல் - ஐயமிட்டுண்]
- தின் பண்டம் நல்கல் [உணவுப் பொருட்களைக் கொடுத்தல்]
- அறவைச் சோறு [உதவி இல்லாதவர்கட்கு சோறு கொடுத்தல்]
- மகப்பெறுவித்தல் [பிள்ளை பெற்றெடுக்க பொருள் கொடுத்தல்]
- மகவு வளர்த்தல் [பிறர் பிள்ளையை வளர்த்தல்]
- மகப்பால் வார்த்தல் [பிள்ளைகளுக்கு குடிக்கப் பால் கொடுத்தல்]
- அறவைப் பிணம் சுடுதல் [உதவுவார் அற்ற பிணத்தை எரித்தல்]
- அறவைத் தூரியம் [உதவி அற்றோருக்கு உடுக்க உடை கொடுத்தல்]
- சுண்ணம் [வாசனைப் பொடி/சுண்ணாம்பு கொடுத்தல்]
- நோய்மருந்து [நோய்க்கு மருந்து வாங்கிக் கொடுத்தல்]
- வண்ணார் [சலவைத் தொழிலாளிக்கு பணம் கொடுத்தல்]
- நாவிதர் [சிகையலங்காரம் செய்வோரின் பணத்தைக் கொடுத்தல்]
- கண்ணாடி [கண்ணாடி கொடுத்தல்]
- காதோலை [ தோடு வாங்கிக் கொடுத்தல்]
- கண்மருந்து [கண் பார்வை குன்றியோருக்கு மருந்து கொடுத்தல்]
- தலைக்கு எண்ணை [ தலைக்கு வைக்க எண்ணை கொடுத்தல்]
- பெண்போகம்
- பிறர் துயர் காத்தல்
- தண்ணீர்ப் பந்தல்
- மடம் [ வசதியற்றோர் தங்கிச்செல்ல மடம் அமைத்தல்]
- தடம் [குளம் அமைத்தல்]
- காவு [மரம் நட்டு சோலை/ காடு உண்டாக்குதல்]
- ஆவுரஞ்சுதறி [விலங்குகள் உடலை உரஞ்ச தூண் நடுதல்]
- விலங்கிற்கு உணவு
- ஏறு விடுதல் [ஏறு தழுவ எருது வளர்த்தல்]
- விலை கொடுத்து உயிர் காத்தல்
- கன்னிகாதானம் [ திருமணம் செய்து வைத்தல்]
இந்த முப்பத்திரெண்டு அறங்களும் தமிழரின் உலக உயிர் நேயத்தை, மனிதநேயத்தை, இயற்கை நேயத்தை, மரநேயத்தை சொல்கின்றன. தன்னைப்போல் பிற உயிர்களையும் பார், ஈத்து உவந்து வாழ் என்பதை இந்த அறச்செயல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சங்கத் தமிழர் வாழ்வில் அறச்செயல் செழித்து ஓங்கி இருந்ததை சங்க இலக்கியங்களில் காணலாம்.
“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமா பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புன பலவே”
- (புறநானுறூ: 189)
‘உலகம் முழுவதும் பொதுவுடமை இல்லை, என் ஒருவனின் தனி உரிமையே’ எனக்கூறி ஒருகுடைக்கீழ் ஆண்ட அரசர்க்கும் இரவும் பகலும் நித்திரை கொள்ளாது விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடப் பார்த்திருக்கும் கல்லாத ஒருவனுக்கும் உண்ணும் உணவு ஒரு படியே (நாழி), உடுப்பவை மேலாடை கீழாடை என இரண்டே. பிறத்தேவை எல்லாம் ஒத்ததே. அதனால் செல்வம் இருப்பதால் பெறும் பயன் ஈதல். நாமே நம் பொருளைத் துய்ப்போம் என்றால் அப்படி துய்க்கமுடியாது தப்பிப் போனவை பலவாகும், என்று மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எனும் சங்ககாலப் புலவர் கூறியுள்ளார்.
மேலே உள்ள முப்பத்திரெண்டு அறங்களில் ஏதாவது ஓர் அறம் கோயில் கட்டுதல் என்றோ பூசை செய்வித்தல் என்றோ கூறுகிறதா? எந்த நாயன்மாராவது கோயில் கட்டு என்று கட்டளை இட்டனரா? அரசன் கட்டிய கோயிலை விட்டு பூசலநாயனார் மனதில் கட்டிய கோயிலுக்கே இறைவன் சென்றதாக வரலாறு கூறுகிறது. அப்படியிருக்க புங்குடுதீவில் ஏன் ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட கோயில்கள்? சிந்தித்துப் பார்ப்போமா?
காலம் கடந்துவிடவில்லை இப்பொழுது கூட குளம் அமைக்கலாம், மரங்கள் நாட்டு அங்கு காடு என்ற பெயர் உள்ள [பெருங்காடு, குறிச்சிக்காடு, நாயத்தங்காடு….] இடங்களில் எல்லாம் காடு உருவாக்கலாம். பூஞ்சோலை அமைக்கலாம். வைத்திய சாலை கட்டலாம். ஆடு, மாடு போன்றவற்றைக் காக்க பட்டி அமைத்திருக்கலாம். அவற்றை இறைச்சிக்கு விலைபோகாது காத்திருக்கலாம். இப்படி மேலே உள்ள அறங்களில் பலவறை இப்போதும் செய்யலாம். உண்மையான அறத்தைச் செய்து நம் ஊரை வாழவைப்போம்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment