Saturday, 7 October 2017
Thursday, 31 August 2017
Friday, 14 July 2017
புங்குடுதீவின் கள்ளிக்காட்டு மாண்மியம்
அன்று உலக நாடுகளில் உலக மொழிகளில் எல்லாம் தனது பெயரை - தன் மணத்தைப் பரப்பி, உலகை அகிலம் ஆக்கிய அகில் தமிழரைப் போல் தன் நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்ல எவருமற்று இருக்கிறது. தமிழராகிய எமக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகையே மணமுள்ளது. அதனால் கள்ளி தந்த அகிலை மறந்து, சமஸ்கிருத நூல்கள் கூறும் அகரு மரத்தை அகில் எனக் கொண்டாடுகிறோம். அகரு ஒரு மரம். அகில் - கள்ளிச்செடியின் வைரம் என்பதையும் அறியாது சித்த மருத்துவர்களும் ஆயுள் வேத மருத்துவர்களும் அகில் என்று அகருக் கட்டைகளை மருந்துகளுக்குப் பாவிக்கிறார்கள். அகில் புகை நீக்கிய நோய்களை அகருப் புகை நீக்குமா? என்ற சிந்தனையும் இல்லாது தொழிற்படுவது மருத்துவத் துறைக்கே கேடாகும். மருந்துக் கடைகளில் அகிற்கட்டை கேட்டால் அகருக்கட்டை கிடைக்கிறது.
சூரிய வெப்பத்தில் காய்ந்து எரிந்த கள்ளிக்காட்டின் அகிற்புகை நறுமணம் உள்ளதாகவும், உடலில் ஏற்பட்ட காயங்களை மாற்றுவதையும் கண்ட நம் தமிழ் முன்னோர் அகில் புகையை மருந்தாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அகிற்புகை வயது போகப் போக வரும் உடற்சுருக்கத்தை நீக்கி, வீரியத்தைக் கூட்டும், அதன் மணம் காய்ச்சல்களைப் போக்கும் என்கின்றது அகத்தியர் குணவாகடம். மருத்துவ ஏடுகளை ‘வாகடம்’ என்பர். ஒரு புத்தகம் எழுதக்கூடிய அளவிற்கு சங்க இலக்கியம் அகிற்புகை பற்றிய செய்திகளை புதைத்து வைத்திருக்கிறது.
மருத்துவத் தேவைக்காக பண்டைய உலகிற்கு அகில் பிளவுகளை தமிழர் ஏற்றுமதி செய்தனர். இஸ்ரேலின் பேரரசனான சொலமன் கி மு 931ல் இலங்கையிலிருந்து அகில் பெற்றதை ‘Ceylon an account of the Island’ என்னும் நூல் (1860) சொல்கிறது. தமிழரிடமிருந்து சென்ற அகில், எபிரேய [Hebrew] மொழியில் [இஸ்ரேல் மொழியில்] ahalim ஆகி, கிரீக் மொழியில் alóē எனவும் லத்தின் மொழியில் aloē எனவும் அழைக்கப்பட்டது. பழைய ஆங்கிலத்தில் alwe என்றனர். உச்சரிக்கும் ஒலி வேறுபடினும் பொருள் ஒன்றே. இப்படி அகிலின் பெயரை உலக மொழிக்கு வழங்கிய தமிழ், கள்ளிக்காட்டின் மாண்பை உலகறியச் செய்தது. ஆனால் அகில் கட்டையின் பெயர், இன்று கள்ளி இலையின் சதைப்பற்றைச் சுட்டி நிற்கிறது.
ஆயிரக்கணக்காக கள்ளி இனங்கள் இருப்பது போல அவை தரும் அகிலும் பலவகையாக இருக்கின்றன. அதனை அடியார்க்குநல்லார், “அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் என்று சொல்லப்பட்ட பல்வகைத்தாகிய தொகுதியும்” என சிலப்பதிகார உரையில் சொல்வதால் அறியலாம். திரிகோணமலையில் காரகிலும் தீவுப்பகுதியில் அருமணவனும் கேரளத்தில் வெள்ளகிலும் கிடைத்து இருக்கின்றன. இப்போது கிடைக்கின்றனவா?
பழம்
நான் 2015ல் நம் நாட்டிற்குச் சென்றிருந்த பொழுது கள்ளிப்பழத்தை விலைக்கு வாங்கி உண்டேன். 600 கிராம் நிறையுள்ள ஒரு பழத்தை 700 ரூபாவுக்கு வாங்கினேன். முருங்கனில் பயிரிடுகிறார்கள். எனது காணி ஒன்றில் பயிரிடுவதற்காக அதனைச் சென்று பார்த்தேன். அவர்கள் சொட்டுத் தண்ணீரில் சிக்கனமாக பயிரிடும் பாங்கு பாராட்டத்தக்கது. புங்குடுதீவு மண்ணில் இயற்கையாகவே நன்கு வளர்ந்து நிற்கின்றன. எனவே கள்ளி இனங்களை புங்குடுதீவில் வளர்த்தால் என்ன? கேரதீவு, ஊரதீவு, கள்ளிக்காடு, நடுவுத்துருத்தி பகுதிகளில் வாழ்வோர் இதனை கருத்தில் கொள்வது நன்று.
மூவாயிர வருடங்களுக்கு முன்பே அகில் கட்டையை மேற்கத்தைய நாடுகளுக்கு அனுப்பியதில் புங்குடுதீவுக் கள்ளிக்காடும் தன் பங்கைச் செய்திருக்கிறது. ஏனெனில் புங்குடுதீவின் ஊடாகவே உலகின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான கடல் வாணிபம் நடந்திருக்கிறது. அதுமட்டுமல்ல கி பி 1311ல் புங்குடுதீவில் கோட்டை கட்டி[கோட்டைக் காட்டில்] வாழ்ந்த வீரமாதேவி
“கத்துகடல் ஓதம்கரைமோத கள்ளியாற்றில் அகில் மணக்கும்
பத்துதிசையும் புகழ்மணக்க பாய்மரங்கள் அதில் மிதக்கும்
நத்துநிலமும் நீர்நனைக்க நித்திலமங்கு பாய் விரிக்கும்
முத்துடை மன்னவன் முறுவல் கண்டே”
என்று தன் தந்தையான மாறவர்மன் குலசேகர பாண்டியனின் பெருமை பேசுகிறாள்.
முதலாம் புவனேகபாகு மன்னார்க் கடலில் முத்துக்குளிக்கும் உரிமைக்காக யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தியுடன் போர் தொடுத்தான். அவன் எகிப்திய மன்னனான மம்லூக்கிய[Mamluk] சுல்தானின் உதவி கேட்டு தூதுவரை கைரோவுக்கு அனுப்பினான். அதனை அறிந்த மதுரை மன்னனான மாறவர்மன் குலசேகர பாண்டியன் இலங்கைமேல் போர் தொடுத்து புவனேகபாகுவை முறியடித்து, கி பி 1284ல் இலங்கையைக் கைப்பற்றினான். கி பி 1284ல் இருந்து கி பி 1311ல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இறக்கும் வரை இலங்கை அவன் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் பாண்டியர்களின் அரசப் பிரதானிகளே.
மாறவர்மன் குலசேகர பாண்டியன் புங்குடுதீவில் கி பி 1311ல் இறந்தான். அந்த மாமன்னனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் ‘குலசேகரன் வளவு’ என அழைக்கப்பட்டது. புரெக்டர் கதிரவேல் அவர்கள் புங்குடுதீவுக் காணி உறுதி ஒன்றில் ‘குலசேகரன் வளவு’ என்ற பெயர் இருப்பதாகச் சொன்னார். தான் கொழும்பில் இருப்பதால் அவ்வுறுதியைத் தேடித் தரமுடியாதிருக்கிறது எனவும் கூறினார். அப்போதிருந்த நம் நாட்டின் நிலைமையே அவர் அப்படிக் கூறக்காரணம். புங்குடுதீவைச் சேர்ந்த எவரிடமாவது அந்தக் காணி உறுதி இருப்பின் எனக்கு அதன் பிரதியைத் தாருங்கள். அது மாறவர்மன் குலசேகர பாண்டியன் புங்குடுதீவில் இறந்தான் என்ற உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்ல உதவும். அது ஈழத்தமிழரின் வரலாற்றைச் சற்று விரிவுபடுத்தும்.
இவர்களைப் போலவே நம் முன்னோர் கள்ளியாற்றில் அகில்கட்டைகளைத் தள்ளினர்
புங்குடுதீவில் வாழ்ந்த நம் முன்னோர் கள்ளிமரத்தால் கிடைத்த அகில் கட்டைகளை கள்ளியாற்றில் போட்டு கழைகளால் தள்ளி, முகத்துவாரத்துக்கு (கேரதீவுப்பக்கம்) எடுத்துவந்து, பாய்மரங்களில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பினர். அதனாலேயே வீரமாதேவி
“கத்துகடல் ஓதம்கரைமோத கள்ளியாற்றில் அகில் மணக்கும்
பத்துதிசையும் புகழ்மணக்க பாய்மரங்கள் அதில் மிதக்கும்”
என்று சொன்னாள். கள்ளியாற்றில் போடப்பட்ட அகில் கட்டைகளே கள்ளியாற்றில் அகில் மணக்க வைத்தன.
கோழி கூவும் பொழுதே எழுந்து, கள்ளிக்காட்டில் வாழ்ந்த மக்கள் கள்ளி ஆற்றில் போட்ட அகிற்கட்டைகளைத் தள்ளவும், ஓடங்களை, பாய்மரக்கப்பல்களைத் தள்ளவும் கழைகளை எடுத்துச் சென்றதை
“பெட்டக் கோழி முட்டையிட
பேணுகின்ற பெருங்காடு
கட்டக் கோழி கூவயில
கழை எடுக்கும் கள்ளிக்காடு”
- நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
எனும் புங்குடுதீவின் நாட்டுப்பாடலும் சொல்கின்றது. வேர்களால் கற்களை மண்ணாக்கி, தண்டாலும் இலைகளாலும் கடும் வெப்பத்தைத் தாங்கி, இலைகளையும் மடல்களையும் அகிலையும் மனிதர்க்கு மருந்தாகத் தந்த அகிலால் அகிலம் எங்கும் தமிழின் பெருமை பேசும் புங்குடுதீவின் கள்ளிக் காட்டின் மாண்பை மாண்மியத்தைக் காப்பது நம் கடமை அல்லவா!
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
Monday, 10 July 2017
ஈழத்தின் நந்தீஸ்வரர் கோயில்
இலங்கையில் பழம்பெருமை வாய்ந்த ‘நந்தீஸ்வரர்’ கோயில் இருந்தது, இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அக்கோயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையாவது அறிந்திருக்கிறோமா? அக்கோயில் இருந்த வெட்சியூரை எமக்குத் தெரியுமா? வெட்சிப்பூ சங்ககாலப் பழமை வாய்ந்தது. அது பல நிறங்களில் இருந்ததை சங்க இலக்கியங்கள் சொல்வதால் அறியலாம். வெட்சிப்பூவை சிங்களத்தில் ரத்மல் என்பர். நாம் மேலைநாட்டு மோகத்தில் மயங்கி வெட்சியையும் ரத்மல்லையும் மறந்து Ixora என்கிறோம்.
இராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் நந்தியைப் பார்த்து மலைத்து நிற்கும் எமக்கு இலங்கையில் அதைவிடப் பழமை வாய்ந்த நந்தீஸ்வரர் கோயிலில் இருந்த நந்தியைத் தெரியாது. அக்கோயிலில் பெரிய ‘நந்திக் கிணறு’ ஒன்று இருந்ததையும் அறிந்தோமில்லை. அக்கோயிலைக் கட்டியவன் கீழைத்தேச நாடுகள் பலவற்றை ஆட்சிசெய்தான் என்பதையும் கண்டும் காணாதவராய் வாழ்கிறோம்.
நம் முன்னோர் போத்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஐந்நூறு ஆண்டுகள் முடங்கிக் கிடந்ததால் இந்நிலை வந்தது என்பது புரிகிறது. எனினும் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் கூட நம் வரலாற்றை ஒன்றாக எடுத்துத் தருகின்றனவே! அவற்றிலிருந்து எமது வரலாற்றை அறிந்து கொள்வது தவறா?
புலம்பெயர் தேசத்து சைவத்திருக் கோயில் ஒன்றியங்களும் சைவ மகாநாடு நடாத்தி வருவோரும் இக்கோயிலைக் கண்டுகொள்ளாது இருப்பது பெருவியப்பே! ஏனெனில் அவர்களால் போற்றப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கழற்சிங்க நாயனாரால் கட்டப்பட்ட கோயில் வெட்சியூர் நந்தீஸ்வரர் கோயில்.
பல்லவப் பேரரசனாக வாழ்ந்த கழற்சிங்க நாயனாரைப் புறக்கணிப்பதும் ஏனோ? நந்தீஸ்வரர் கோயிலின் கோயில் மரமான ஆலமரம் அதன் பழமையை பறைசாற்றிக் கொண்டு ஆயிரவருடங்களுக்கு மேலாக இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது. அதன் அடியில் ஆலடிப் பிள்ளையாரும் அமர்ந்து இருக்கிறார்.
ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள பிள்ளையார்
ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு வருடப் பழமையான அக்கோயில் மறந்த சொத்து மக்களுக்கும் இல்லை என்பதற்கு அமைய இன்று ‘கொனா கோவில [Gona Kowila]’ என்ற சிங்களப் பெயரோடு இருக்கிறது. நந்திக் கோயில் என்பதையே சிங்களத்தில் கொனா கோவில என்றழைக்கின்றனர். நந்தீஸ்வரர் கோயில் நந்திக் கோயிலாக மாறியதற்கும் காரணம் இருக்கிறது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகளான வீரமாதேவி, நந்தீஸ்வரர் கோயிலை ‘கங்கா மணாளனுக்கு சங்கா மணாளன்’ கட்டினான் என்கின்றாள். அவள் புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தாள் என்பதை முன்னரும் பலமுறை எழுதியிருக்கிறேன்.
கங்கையை தலையில் வைத்திருப்பதால் சிவனை கங்கை மணாளன் என்பர். அவள் குறிப்பிடும் 'சங்கா மணாளன்' யார்? அவனே தமிழுக்காக தன் இன்னுயிரைக் கொடுத்தான் என்று சொல்லப்படும் ‘நந்திக்கலம்பகதின்’ நாயகன். கழற்சிங்க நாயனாரும் அவனே. அவன் அப்படி இறந்ததற்கான எந்தவொரு கல்வெட்டு ஆதாரமும் இல்லை. அவனை மூன்றாம் நந்திவர்மன் என அழைப்பர். சுந்தரமூர்த்தி நாயனாரால்
“கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”
- (ப.திருமுறை: 7: 39: 9)
எனப் போற்றப்பட்டனும் அவனே என்பதை ‘பல்லவர் வரலாறு’ என்னும் நூலில் மா இராசமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.
எனப் போற்றப்பட்டனும் அவனே என்பதை ‘பல்லவர் வரலாறு’ என்னும் நூலில் மா இராசமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.
மயிலைத்துறைமுகமும் மாமல்லைத் துறைமுகமும் அவனது ஆட்சிக்குள் இருந்ததைச் சொல்லும் நந்திக்கலம்பகம் அவனை
“ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்”
- (நந்திக்கலம்பகம்: 22)
என்றும் புகழ்கிறது. அதனால் அவனிடம் பெரிய கடற்படை இருந்ததையும் அறியலாம்.
அவனது கடற்படை சியாம்[Siam] தீபகற்பத்தையும் வெற்றி கொண்டிருக்கிறது. தாய்லாந்தையே அந்நாளில் சியாம் என அழைத்தனர். அங்கு கிடைத்த கல்வெட்டு, "தமிழ்நாட்டின் ‘மணிக்கிராமம்’ எனும் வணிக குழுவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தாய்லாந்தில் குளம் ஒன்றை வெட்டி, அதற்கு மூன்றாம் நந்திவர்மனின் விருதுப் பெயரான ‘அவனி நாராயணன்’ என்ற பெயரை அக்குளத்திற்கு வைத்தான்" என்கிறது.
முதலாம் இராஜ ராஜ சோழன் ஆட்சிக்கு நூற்றம்பது வருடங்களுக்கு முன்பே மூன்றாம் நந்திவர்மனின் கடற்படை கீழைத்தேச நாடுகள் சிலவற்றை வெற்றி கொண்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
பல்லவ அரசனான மூன்றாம் நந்திவர்மன் கி பி 830ல் தெள்ளாறு [தற்கால வந்தவாசி] என்னும் இடத்தில் நடந்த போரில் சீமாற சீவல்லபன் எனும் பாண்டிய அரசனைத் தோற்கடித்து அவனை வைகையாற்றங்கரை வரை துரத்தினான். அதனை அவனது லால்குடி, திருவெற்றியூர் கல்வெட்டுக்களால் அறியலாம். எனினும் சீமாறன் மீண்டும் போர்புரிந்து இழந்த தன் நாட்டின் சில பகுதிகளை மீட்டுக்கொண்டான். [Dictionary of Battles and Sieges, Tony Jaques]. மூன்றாம் நந்திவரமன் பாண்டிய அரசை வெற்றி கொண்டதன் அடையாளமாக சீமாற சீவல்லபனின் மகள் 'மாறம்பாவை' என்பவளையும் மணந்தான். இந்த சீமாற சீவல்லபனின் மகன் இரண்டாம் வரகுண பாண்டியனையே சிவனை பிரம்பால் அடித்ததாக மாணிக்க வாசகர் வரலாறும் கூறுகிறது என்பர்.
சீமாற சீவல்லபனும் மனைவியும் - சித்தன்னவாசல்
பாண்டிய நாட்டில் கலகம் செய்த சிற்றரசன் ஒருவனை சீமாற சீவல்லபன் தோற்கடித்தான். அவன் ஈழத்து அரசனிடம் சரணடைந்தான். ஈழத்தரசன் பாண்டிநாட்டின் மேல் படையெடுத்து வர இருப்பதை சீமாற சீவல்லபன் அறிந்தான். அதனால் அவன் எதிரியும் தன் மகளின் கணவனுமான மூன்றாம் நந்திவர்மனின் உதவியை நாடினான். மூன்றாம் நந்திவர்மன் தன் மகன் நிருபதுங்கவர்மன் தலைமையில் கடற்படையை அனுப்பி வைத்தான். மூன்றாம் நந்திவர்மனின் தாயும் சீமாறனின் மனைவியும் கதம்ப குலத்தவர்கள். அதனால் இளைமையிலேயே நிருபதுங்கவர்மனும் இரண்டாம் வரகுணனும் மிகநெருங்கிய நண்பர்களாயினர் போலும். இருவரையும் திருவதிகை வீரட்டானக் கல்வெட்டும் நண்பர்களெனக் காட்டுகிறது.
இருவரும் சீமாற சீவல்லபனுடன் இலங்கைக்கு படையெடுத்துச் சென்றனர். அவர்களின் கடற்படை புங்குடுதீவில் நிலைகொண்டதாக வீரமாதேவி கூறுகிறாள். சீமாற சீவல்லபன் [கிபி 835ல்] வட இலங்கையில் வந்து இறங்கிய போது அங்கிருந்த தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து அநுராதபுர அரசை வெற்றிகொண்டதால் சிங்கள அரசனான முதலாம் சேனன் மலைப்பகுதிக்கு சென்றான் என சூளவம்சம் சொல்கிறது. சீமாறன் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று அநுராதபுர அரசைக் கைப்பற்றி பல நகரங்களையும் புத்தவிகாரைகளில் இருந்த பொன் படிமங்களையும் பொருட்களையும் சூரையாடினான் என்று சின்னமனூர் செப்பேடும் செப்புகிறது.
அநுராதபுர வெற்றிக்குப்பின் நந்திவர்மனின் கடற்படை இலங்கையின் மேற்குக்கடற்கரை ஓரம் வாழ்ந்த தமிழரின் துணையோடு பாணந்துறை சென்று பாடியிட்டது. களுகங்கை, களனி கங்கை வழியாய் பொல்கொட ஆறு ஊடாகப் பொருட்களை ஏற்றி இறக்க கடற்படைக்கு அது உதவியிருக்கலாம். கடற்கழி அல்லது காயல் [lagoon] இடையே இருக்கும் மண்திட்டு ‘பூசலம்’ என்று சொல்லப்படும். அதாவது நிலத்திற்குள் [பூமிக்குள்] நீர் [சலம்] வந்தது என்ற கருத்தில் பூசலம் என்பர். வீரமாதேவி நந்தீஸ்வரர் கோயிலை பூசலக் கோயில் எனக்கூறுகிறாள்.
பழைய நந்தீஸ்வரர் கோயில் போத்துக்கீசர்களால் அழிக்கப்பட்ட காட்சி - கி பி1518
இக்கோயிலுக்கு என் தந்தையுடன் எழுபதுகளின் தொடக்கத்தில் இரத்மலானை புகையிரத நிலையத்தில் இறங்கி புகையிரதவீதியூடாகச் சென்றிருக்கிறேன். நான் சென்றபொழுது தற்போது இருக்கும் கோயில் இருக்கவில்லை. அதைப் பராமரித்து வந்த சிங்களக்குடும்பத்தாருடன் கதைத்து புகைப்படம் எடுத்து வந்தோம். நந்தீஸ்வரர் கோயில் போத்துக்கீசர்களால் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கி பி 1518ல் இடித்து அழிக்கப்பட்டது. அப்போதிருந்து பதினெட்டாம் நூற்றாண்டில் கிடைத்த வேல் ஒன்றையும் அக்குடும்பதின் முன்னோரே பாதுகாத்து வந்துள்ளனர். கொழும்பிலிருந்து மேற்குக்கடற்கரையோர புகையிரதப்பாதை 1870களில் போடப்பட்ட காலத்திற்கூட நந்தீஸ்வரர் கோயில் கற்களும் அதற்குள் சங்கமமாயின என்றும் சொன்னார்கள்.
நந்திப்பீடம் கம்போடியாவில் உள்ள இக்கட்டிடம் போன்றது
2012ல் நான் கம்போடியா சென்றபோது
சோழர்களை முறியடித்த கோப்பெருஞ்சிங்கனின் பேரன் பல்லவ நரசிம்மன் நந்திஸ்வரர் கோயில் கட்டப்பட்டு நானுற்றி அறுபது வருடங்களின் பின்னர் நந்திக்கிணற்றின் மேலே மூன்றடுக்குப் பீடத்தின் உச்சியின் மேல் 4கோல் உயரமான நந்தி ஒன்றை அமைத்தான். 1கோல் = 5.5அடியாகும். அந்தப்பீடத்தைப் போன்ற கட்டிடங்கள் கம்போடியாவில் இருக்கின்றன. நந்தீஸ்வரர் கோயிலை போர்த்துக்கீசப் படை உடைத்தழிக்கும் படத்திலும் பல்லவ நரசிம்மன் அமைத்த நந்தியைப் பார்க்கலாம். வீரமாதேவி, 'உடலில் இருந்து ஐம்புல ஆசைகள் வருவது போல அந்த நந்தியின் முகத்திலிருந்து செவ்வொளி பரவியது' என்கின்றாள். நந்தியின் புகழ் நந்தீஸ்வரர் கோயிலை நந்திக் கோயிலாக மாற்றியது.
இன்று நாம் கம்போடியா சென்று கோயில்களைப் பார்த்து அதிசயித்து நிற்கிறோம் அல்லவா! அதுபோல் ஈழத்து நந்தீஸ்வரர் கோயிலைப் பார்க்க அந்நாளில் கம்பூசியா [கம்போடியா], சியாம் [தாய்லாந்து], பாலி போன்ற கீழைத்தேய நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்தார்களாம். அவர்கள் புங்குடுதீவுத் துறையில் இறங்கி பூநகரியூடாக மன்னார், புத்தளம் வழியாக அக்கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். புங்குடுதீவின் அமைவிடமே அதன் பெருமைக்குக் காரணமாகும்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
1. இவ்வாக்கத்தை முதலில் 'சப்ததீவுகள்' என்ற நூலுக்காக 1978ல் எழுதினேன். இரத்மலானை நந்தீஸ்வரர் கோயிலை இப்போது தெரிந்த அளவு அப்போது பலருக்குத் தெரியாததால் 'பொன்கை நகர்' பற்றி எழுதியதைக் கொடுத்தேன். முன்பு எழுதியதுடன் சில தரவுகளும் சேர்த்துத் தருகிறேன்.
2. நந்திவர்மன் கடற்படையும் தென்கிழக்காசிய மக்களும் எதற்காகப் புங்குடுதீவுத் துறையைத் தேர்ந்தெடுத்தார்கள்? நந்தியின் புகழ் பரவக் காரணம் என்ன? இரத்மலானையின் பண்டைத் தமிழ்ப் பெயர் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகளை இவ்வருடம் வெளியிட இருக்கும் நூலில் பார்க்கலாம்.
Thursday, 6 July 2017
கள்ளியாற்றின் மிசை படகுவிட்டு....
நாயகியாம் கண்ணகி அருள்பாய
துள்ளிவரும் அலையும் துதிபாட
தெண்டனிட்டு அடியார் கவிபாட
தெள்ளுதமிழ் இசையை செவிமடுத்து
தேந்தோம் என்று நடமாடி
கள்ளியாற்றின் மிசை படகுவிட்டு
கலைபல பயின்றே களித்திருப்போம்
குறிப்பு:
இவ்வருடம் வெளியிட இருக்கும் புங்குடுதீவு பற்றிய நூலில் 'கள்ளி ஆற்றங்கரைக் கலையரங்கு' என்னும் தலைப்பின் கீழ் புங்குடுதீவின் பண்டைய கலையரங்கம் எப்படி இருந்தது என்பதைப் பார்க்கலாம்.
இனிதே,
தமிழரசி.
Wednesday, 5 July 2017
கற்பகத்தின் பூங்கொம்போ!
சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையை அவரது தேவாரத்தின் துணை கொண்டு நோக்குவோர் இறை என்ற பயம் அற்று நினைத்ததையெல்லாம் இறைவனிடம் கேட்டுப் பெறலாம். எந்த நிலையில் நின்று கேட்டால் கேட்டது கேட்டபடி கிடைக்கும் எனும் மாபெரும் இரகசியத்தை
“புலன்களோடு கரணமும் ஆவியும்
போந்து நின்ற விருப்புடன் மானுடன்
நலன்களேது விரும்புவன் அங்கவை
நண்ணுறப் பெறல் திண்ணம் தாமென
இலங்குநூலுணர் ஞானியர் கூறுவர்”
எனப் போட்டுடைத்தார் பாரதியார்.
பாரதிகூறிய நிலையில் நின்று தாம் விரும்பியவற்றை விரும்பியவாறு பெற்றவர்கள் தாம் பெற்றவற்றை சுந்தரமூர்த்திநாயனார் போல் சொன்னதில்லை. பார்ப்பவர் மனம் மகிழும் அழகனாகப் பிறந்து, அரசபோகத்தில் வளர்ந்து, பகட்டான வாழ்வையே விரும்பி, ஒன்ருக்கு இரண்டு பெண்களை மணந்து, தனக்குத் தேவையான பொருட்களை இறைவனிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையின் இன்பத்தை நன்கு சுவைத்தவர் சுந்தரர்.
ஆசைகளை அறுக்க முடியவில்லை. அதனால் உண்டாகும் கோபத்தால் எல்லோரையும் பகைத்துக் கொள்கிறேன். பொய்யே பேசுகிறேன் என்றாலும் புகழையும் பொருளையுமே பெரிதும் விரும்புகிறேன். பிறரை வருத்துவதும் பிரித்து வைப்பதுவும் என்வேலை. துன்பப்படுபவர்க்கு உதவி அறியேன். உறவினர்க்கும் துணை செய்யமாட்டேன். எந்த ஒரு நற்குணமும் என்னிடம் இல்லை எனத் தன்னைப்பற்றிக் கூறி ‘திருவாரூர் இறைவன் தன்னை ஆள்வரோ கேளீர்!’ என ஏழாம் திருமுறையின் 73ம் பதிகத்தில் கேட்பவர் 100ம் பதிகத்தில்
“வாழ்வை உகந்து நெஞ்சே
மடவார் தங்கள் வல்வினைப்பட்டு
ஆழ முகந்த என்னை
அது மாற்றி அமரரெலாம்
சூழ அருள் புரிந்து”
- (ப.திருமுறை: 7: 100: 4)
என்று பாடி இறைவன் தன்னை ஆட்கொண்டு அருள் செய்த திறத்தை வியக்கிறார்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் என்ன கேட்கவேண்டும் என்ற ஒரு வரையறை இல்லாது எந்த இடத்திலும் எந்நேரத்திலும் கேட்டுப் பெற்றவர். அதனாற்றான் என்னவோ திருக்குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூடராசப்ப கவிராயர்
“ஆதிநாட் சுந்தரருக்குத் தூது போனவர் முன்னே
தூது நீ சொல்லி வாராய்”
எனப் பாடினார். இறைவனையே தன் மனைவியிடம் தூது அனுப்பிய சுந்தரரின் செயலை என்ன என்று சொல்வது? இறைவன் சுந்தரருக்காக தூது சென்றது உண்மை என்பதை திருவாரூர் கோயிலிலுள்ள கல்வெட்டில் இரண்டாம் குலோத்துங்கன் “தூது நடந்த தெரு” என ஒரு தெருவைக் குறித்துள்ளமை காட்டுகிறது.
தனக்குத் தோழனாகி, தான் செய்த குற்றங்களைப் பொறுத்து, எளியவனாய் இறைவன் தனக்கு தூது போனார் என்று சுந்தரர் தமது தேவாரத்தில் பாடியுள்ளார்.
“……. விமலனை அடியேற்கு எளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை அருளித்
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை நள்ளாறானை அமுதை
நாயினேன் மறந்தென் நினைக்கேனே”
- (ப.திருமுறை: 7: 68: 8)
யாரிடம் எதற்காக இறைவனை சுந்தரர் தூது அனுப்பினார்? சுந்தரர் செய்த குற்றம் என்ன? சுந்தரர் திவாரூர் கோயிலுக்குச் சென்றார். அங்கே தோழியரிடையே நின்ற பரவையாரைக் கண்டார். பரவையாரின் அழகு சுந்தரரின் மனதைக் கொள்ளை கொண்டது. அதனால் பரவையாரைப் பார்த்து “கற்பகத்தின் பூங்கொம்போ” என வியக்கின்றார். திருவாரூர் இறைவன் திருவருளால் இருவருக்கும் திருமணம் முடிந்தது. இல்வாழ்வும் தொடர்ந்தது.
சுந்தரர் முற்பிறவியில் செய்த வினை - விதியாகச் சதி செய்ய திருவொற்றியூர் சென்ற சுந்தரர் சங்கிலியாரைக் கண்டு மோகித்தார். அங்கும் இறைவனின் துணையால் சங்கிலியாருடன் கூடி வாழ்கிறார். சங்கிலியாரின் மோகத்தில் பரவையாரையும் பரவையாரை திருமணம் செது வைத்த ஆரூர் இறைவனையும் மறந்தார். மோகம் தணிந்ததும் அவர்களது ஞாபகம் வர
“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு இடனாகி
மாழை ஒண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே”
- (ப.திருமுறை: 7: 51: 10)
எனப்பாடி வருந்தினார்.
பின்னர் சங்கிலியாரை திருவொற்றியூரில் விட்டுவிட்டு பரவையாரை நாடி வந்தார். ஆனால் சங்கிலியாருடன் கூடி வாழ்ந்ததை அறிந்த பரவையார் சுந்தரரை ஏற்க மறுத்துவிட்டார். சுந்தரர், பரவையாரிடம் இறைவனைத் தூதாக அனுப்பினார். சிவனும் தன் தூது வேலையை மிகச் சிறப்பாகச் செய்து அவர்கள் இருவரையும் மறுபடியும் இணைத்து வைத்தார்.
அதனை “தூதனை என்றனையாள் தோழனை” எனும் தேவார அடி எமக்கு எழுத்துக் காட்டுகிறது. இறைவனே தூதுவனாகப் போக பரவை என்ன புண்ணியம் செய்தாளோ! பரவையாருக்காக சுந்தரர் எத்தனை தேவாரங்களைப் பாடி இறைவனிடம் பரிசுகள் கேட்டுப் பெற்றிருக்கிறார் தெரியுமா?
குண்டையூரில் பெற்ற நெல்லு மூட்டைகளைத் தூக்கிவர ஆட்கள் கேட்டுப் பாடிய கோளிலிப் பதிகத்தில்
“நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்மெருமான் அவை அட்டித்தர பணியே”
- (ப.திருமுறை: 7: 20: 1)
வாள் போன்ற கண்களையுடைய பரவையார் பசியாள் வாடி வருந்தாதிருக்க குண்டையூரில் கிடைத்த நெல்லைக் கொணர்ந்து சேர்க்க ஆளில்லையே என்றவர்
“பாதியோர் பெண்ணை வைத்தாய்
படருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது
நீயும் அறிதி அன்றே”
- (ப.திருமுறை: 7: 20: 3)
உமையம்மையை உனது உடலில் பாதியில் வைத்து, கங்கையை சடையில் வைத்திருக்கிறாய். ஆதலால் நற்பெண்களின் மனவருத்தம் நீயும் அறிவாய் என்கிறார்.
“குரவமருங் குழலாள் உமை
நங்கை ஓர் பங்குடையாய்
பரவை பசிவருத்தம் அது
நீயும் அறிதியன்றே”
- (ப.திருமுறை: 7: 20: 6)
என்றும்
“பரவை அவள் வாடுகிறாள்” - (ப.திருமுறை: 7: 20: 8)
எனவும் பாடி பரவையாருக்காக நெல்லை வீட்டிற்கு எடுத்துவர இறைவனிடம் ஆள் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திருமுதுகுன்றத்து இறைவனிடம் வாங்கிய பசும்பொன் முழுவதையும் மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார். வேறொரு நாள் அப்பொன்னின் ஞாபகம் வர, பரவையாரிடம் ‘நான் முதுகுன்றத்து இறைவனிடம் பெற்ற பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு வந்தேன். அதனை இங்குள்ள[திருவாரூர்] கமலாலயக் குளத்தில் எடுப்போம் வா” எனக்கூறி அழைத்துச் சென்றார். சுந்தரர் குளத்தில் இறங்கித் தேடினார், தேடினார், தேடிக் கொண்டே இருந்தார்.
சுந்தரரை பரவையார் நம்புவதாக இல்லை. ஆற்றில் போட்ட பொன்னை யாராவது குளத்தில் தேடுவானா? அதுவும் மணிமுத்தாற்றில் போட்டதை திருவாரூர் குளத்தில் தேடுவது என்ன வேடிக்கையான செயல். பரவையார் வேதனையுடன் சிரித்தார். பரைவையின் நமட்டுச் சிரிப்பு சுந்தரருக்குப் பிடிக்கவில்லை.
“மின்செய்த நுண்ணிடை பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்…..”
- (ப.திருமுறை: 7: 25: 1)
அடிகளே! மின்னல் போன்ற இடையுள்ள பரவைக்கு முன் என்ன செய்கிறாய் எனக் கேட்டவர்
“உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்
செம்பொன்னைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளங்கெடவே”
- (ப.திருமுறை: 7: 25: 2)
என இறைவனுக்கும் பரவையாருக்கும் சேர்த்தே சொல்கிறார். ‘எனக்குச் சாட்சியாக உம்பரும் வானவரும் நிற்கவே செம்பொன்னை எனக்குத் தந்து திருமுதுகுன்றில் அமர்ந்தாய். மணங்கமழும் கூந்தலையுடைய பரவை இவள் கவலைப்படுகிறாள். ஆதலால் எனக்கு அருள் செய்!' என்கிறார். இப்பதிகத்தில் பரவையாரின் மனவாட்டத்தை மூன்று தேவாரத்தில் கூறி பொன்னைத் தரும்படி கேட்கிறார். ஆறு தேவாரத்தில் பரவையின் முன்னிலையில் தந்தருளுமாறு வேண்டுகிறார்.
“கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டிருந்தாள் முகப்பே
அங்கனனே அருளாய்”
- (ப.திருமுறை: 7: 25: 4)
“படியாரும் இயலாள் பரவை இவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளீர்”
- (ப.திருமுறை: 7: 25: 6)
“பந்தணவும் விரலாள் பரவை இவள் தன்முகப்பே
அந்தணனே அருளாய்”
- (ப.திருமுறை: 7: 25: 7)
“விரை சேருங் குழலாள் பரவை இவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்”
- (ப.திருமுறை: 7: 25: 8)
என எட்டுத் தேவாரம் பாடியும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குப் பொன் கிடைக்கவில்லை. ஒன்பதாவதில்
“பூந்தாருங் குழலாள் பரவை இவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளங்கெடவே”
- (ப.திருமுறை: 7: 25: 9)
என்று தன்னைக் ‘கொடியேன்’ எனப்பாடி இறைஞ்சி பரவையாருக்குப் பொன் பெற்றுக் கொடுத்திருக்கிறார். கற்பகத்துப் பூங்கொம்பும் பொன்னை விரும்பி இருக்கிறதே!
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
1. இதனை கலசம் இதழுக்கு 1999ல் எழுதினேன்.
2. சுந்தர மூர்த்தி நாயனாரது தேவாரப் பதிகங்களில் பல அவர் இறைவனிடம் எதையாவது கேட்டுப் பெற்றவையாகவும் உதவிகேட்பவையாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு மேலே குறிப்பிட்டவற்றைப் பாருங்கள். அவற்றில் நம்மவர்களால் எல்லா நிகழ்வுகளிலும் பூசைகளிலும் பெரும்பாலும் பாடப்படும் தேவாரம் ‘நீளநினைந்தடியேன்’. அதில் ஒருவன் [சுந்தரர்], தனது நண்பன் ஒருவனிடம் [சிவனிடம்] “டேய் மச்சான்! என்மனைவி வருத்தப்படாதிருக்க குண்டையூரில் கொஞ்சம் நெல்லை வாங்கி வைத்திருக்கிறேன். எடுத்து வர ஆளில்லையெடா. யாரையாவது அனுப்பி எடுத்துத் தாடா. உன்னைத்தாண்டா நம்பி இருக்கிறேன்” என்று சொல்வது போலவே சுந்தரரும் இறைவனிடம் கூறியிருக்கிறார். அத்தேவாரத்தை நாம் ஏன் இலண்டன், ஜேர்மன், கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இலங்கை என உலகநாடுகளில் இருந்து பாடுகிறோம். அதிலும் பெண்கள் பாடுவது வேடிக்கையாகத் தோன்றவில்லையா? எல்லோரும் மனைவிமாருக்காக குண்டையூரில் நெல்லுப் பெற்றோமா? அதுவும் கோயில்களில் ஐயர்மாரும் சேர்ந்து பாடுகிறார்கள். ஏன் பாடுகிறார்கள்? அவர்களாவது சொல்ல வேண்டாமா! வருங்காலத்தில் நம் இளஞ்சந்ததி இத்தேவாரக் கருத்தைப் தெரிந்து கொண்டு நம்மைப் பார்த்து நகைக்காதா? கொஞ்சம் சிந்தித்தால் என்ன?
Saturday, 1 July 2017
சங்க இலக்கியத்தில் சக்தி வழிபாடு
இயக்கி
இயற்கை என்றால் என்ன? பிறிதொன்றால் உருவாக்கப்படாது, தனது இயல்பில் மாறாது இருப்பது எதுவோ, அதுவே இயற்கையாகும். இயற்கை எனும் சக்தியை ‘ஏது’ என்றும் கூறுவர். ஒன்றன் தோற்றத்திற்கு இயற்கை மூலகாரணமாக இருப்பதால் அதன் சக்தி ஏது எனச் சுட்டப்படும். இயற்கையின் தொழிற்பாடுகள் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கும். எனவே அது அழிவில்லாதது. அதன் ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றமுடியுமே அல்லாமல் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆதலால் பௌதிக விஞ்ஞானம் இயற்கையின் சக்திக்கு அழிவில்லை [Conservation of energy] என்கிறது.
இயற்கையின் சக்தியே உலகை இயக்குகிறது. அது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர்
“நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
என இந்த உலகம் ஐம்பூதங்களின் கலவை’1 என்கிறார்.
புறநானூறும்
‘மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇ தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை’2
என ஐம்பூதத்து இயற்கையைத் தெளிவுபடுத்துகிறது.
அ. இயற்கைத் தெய்வவழிபாடு
ஆதிமனிதன் ஐம்பூதங்களாலும் ஏற்பட்ட அழிவுகளால் தன்னைவிட அவற்றுக்குச் சக்தி அதிகம் என்பதை உணர்ந்தான். எனவே நிலநடுக்கம், எரிமலை, கடற்காற்று, மழைவெள்ளம், சூரியவெப்பம், இடிமுழக்கம் போன்றவற்றின் சக்தியைக் கண்டு பயந்தான். அந்தப் பயமே பக்திக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அதனாலேயே பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று இன்றும் சொல்கிறோம். பண்டைத் தமிழரின் எரிமலை வணக்கத்திற்கு திருவண்ணாமலைக் கார்த்திகத்தீப வழிபாடே சான்றாகும்.
சங்க காலமக்கள் நிலத்தின் - மலையின் சக்தியை மலைமகளாயும் தீயின் சக்தியை காடு கிழாளாயும் நீரின் சக்தியை கடல் கெழு செல்வியாயும், சூரைக்காற்றின் சக்தியை சூராமகளிராயும் ஆகாயத்தின் சக்தியை கொல்லிப்பாவையாயும் வழிபட்டனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அதனாலேயே பெண் தெய்வங்கள் இன்றும் கூட சக்தி என்ற பெயரால் போற்றப்படுகின்றனர். தொல்காப்பியம்
“வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே”3
எனச் சொல்வதால் தெய்வவழிபாடும் தெய்வத்தை வழிபட்டால் அது தம்மைக்காக்கும் என்ற நம்பிக்கையும் சங்ககாலத் தமிழரிடம் வேரூன்றி இருந்ததை அறியலாம்.
1. கொல்லிப்பாவை வழிபாடு:
இயற்கையின் வெவ்வேறு சக்திகளின் சீற்றங்களால் அழிவுகள் உண்டானாலும் அது தன் தன்மையில் இருந்து மாறது. அதனை
‘செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது நிர் நெடுங்கோட்டு
அவ்வெள் அருவிக் குடவரை அகத்துக்
கால்பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எரியினும் ஊறுபல தோன்றினும்
பெருநிலம் கிளரினும் திருநல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்….’4
எனப் பரணர் கூறியதால் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது ‘கொல்லித் தெய்வம் காக்கின்ற செவ்விய வேர்ப்பலா மரங்களையுடைய தீமையில்லாத உயர்ந்த மலையிலிருந்து வீழும் வெள்ளருவியின் மேற்குப் பக்க மலையில் காற்று மோதி இடித்தாலும் அதிக மழை பொழிந்தாலும் இடி இடித்து எரிந்தாலும் கேடு பல உண்டானாலும் பெருநிலப்பகுதியே மேலெழுந்தாலும் தனது அழகிய உருவம் அழியாத இயற்கைப்பாவை’ என்கிறார். ஆதலால் இயற்கையின் சீற்றங்களே கொல்லிப்பாவை வழிபாட்டிற்கு காரணம் என்பதையும் இந்த நற்றிணைப்பாடல் எடுத்துக் காட்டுகிறது.
2. வையை ஆற்று வழிபாடு:
சங்க காலமக்கள் வையை ஆற்றைப் போற்றி வழிபட்டதைக்5 காட்டும் பரிபாடல் எதற்காக வணங்கினர் என்பதையும் சொல்கிறது. மையோடக் கோடனார் ‘உறுமி இடிக்கும் இடிமுழக்கம் போன்ற ஒலியோடு கரைகளை மோதிச்செல்லும் வையைப் பேராறே! திருமருதமுன்றுறையில் இன்று போல் நின்னிடத்தில் மூழ்கிப் பெறும் இன்பம் என்றும் நீங்காது நிலைக்கட்டும். உன்னால் பெறும் பயன்களைப் பாடி விடிவு பெற்று, இன்புற்று மகிழ்வோம்’ என்கிறார்’.6 எனவே சங்ககால மக்கள் வையையாற்றுப் பெருவெள்ளம் தம்மை அழிக்காது காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வையையை வழிபட்டதை இவை எடுத்தியம்புகின்றன.
3. சூரிய வழிபாடு:
மழையற்றுப் போக சூரியனின் வெப்ப சக்தியால் காடுகளும் அழிந்து நிலம் காய்ந்து வெடித்துப் பாலை நிலமாய் மாற உலகம் துன்புற்றது.7 அது சூரிய வழிபாட்டிற்குக் காரணமாயிற்று.
“………………………… ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்”8
என மதுரை மருதன் இளநாகனார் சூரியனும் பழந்தமிழர் வழிபட்ட தெய்வமாக இருந்ததைக் கூறுகிறார்.
இசக்கியம்மன்
4. இயக்கி வழிபாடு:
இயற்கையின் எல்லாச் சக்திகளையும் இயக்குபவள் எனும் கருத்தில் ‘இயக்கி’ எனும் சக்தியை பண்டைத் தமிழர் வழிபட்டனர். இயக்கிக்குப் பாற்சோறு படைத்தாள் ‘மாதரி’ என்ற செய்தியை
“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் வெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்”9
எனச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அவ்வழிபாடு இன்றும் இசக்கி வழிபாடாய்த் தொடர்கிறது.
ஆ. கன்னித் தெய்வவழிபாடு
1. அணங்கு வழிபாடு:
அணங்கு என்னும் சொல்லிற்கு வருத்துதல் என்ற கருத்தை கலித்தொகை10 தருகிறது. அதனால் இயற்கையாகத் தமக்குத் துன்பத்தைக் கொடுத்தனவற்றை ‘அணங்கு’ எனும் அடைமொழி சேர்த்து சங்கத்தமிழர் அழைத்ததைக் காணமுடிகிறது. உலாவித் திரிந்து வருத்தம் செய்யும் மழைமேகம் அமைந்த மலைத்தொடர் என்பதை “ஆடு மழை அணங்கு சால் அடுக்கம்”11 என்றும் வருத்துகின்ற மலை என்பதை “அணங்குடை நெடுங்கோடு”12 எனவும் புறநானூறு சொல்கிறது. அணங்கு இடி இடித்து மின்னல் மின்னி மழையாக, எரிமலையாக, புகையாக, அனற் குழம்பாக வெடித்துச் சிதறி பல உருவம் எடுத்து வரும் என்பதை
“சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டுவ உருவில் அணங்குமார் வருமே”13
என்கின்றது அகநானூறு. இன்றும் தீ மிதிப்பதை பூ மிதித்தல் என்றே சொல்கிறோம். எனவே அன்றைய சுடர்ப்பூ என்பதே இன்றைய நெருப்பூ ஆனது.
இவ்வாறெல்லாம் தம்மை வருத்திய அணங்கைக் கண்டு பயந்ததால் அதனை வழிபடத் தொடங்கினர். அதனால் எதிரி அரசர்களின் பட்டத்து யானைகள் கதற அவற்றின் தந்தங்களை அறுத்துச் செய்த கட்டிலைக் கூட ‘அணங்குடை மரபிற் கட்டில்’ என தெய்வத்தன்மை பொருந்திய கட்டிலாக
“அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபிற் கட்டின் மேலிருந்து”14
எனப் பதிற்றுப்பத்து சொல்கிறது. தொடர்ந்து ‘விழுப்புண்பட்ட மறவர் தமது புண்ணிலிருந்து ஒழுகும் குருதியைத் தெளித்து மடை கொடுத்தால் அல்லாது அயிரை மலைக் கடவுள், பலியை ஏற்காது’15 எனவும் கூறுகிறது.
‘காட்டுப்பசுவின் மேல் குறவன் எய்த அம்பு தப்பிப்போனதற்கு மலைக் கடவுளான அணங்கிற்கு குறையுண்டென்று நினைத்துப் பலிகொடுத்து மகிழ்ந்ததை’16 நற்றிணை காட்டுகிறது.
2. செல்வி வழிபாடு:
அணங்கு வழிபாடாக மாறிய இயற்கைச் சக்தியின் வழிபாடு செல்வி வழிபாடாக மலர்ச்சி அடைந்ததையும் சங்க இலக்கியம் பேசுகிறது. சங்க இலக்கியம் பேசும் செல்வி வழிபாட்டை கன்னித் தெய்வவழிபாடு என்றும் கூறலாம். முல்லை நிலக் காட்டில் இருந்த கன்னித் தெய்வம்
“ஓங்கு புகழ் கானமர் செல்வி”17 ஆனாள். காடமர் செல்விக்கு கோட்டம்[கோயில்] இருந்ததை மணிமேகலை செப்புகிறது.18
நெய்தல் நிலத்து கடற்கரைக் கன்னித் தெய்வத்தை
“கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு”19 என அகநானூறு சுட்டுகிறது. அந்தச் செல்வியே குமரியாய், கன்னியாய், கன்னியாகுமரிக் கடற்கரையில் இன்றும் மோனத் தவம் செய்கிறாள் போலும்! செல்வி வழிபாடே நாட்டுப்புறங்களில் செல்லியம்மன் வழிபாடு என்ற பெயரில் இப்போதும் நடைபெறுகிறது.
இ. தாய்த்தெய்வ வழிபாடு
செல்வியாய் நின்றவள் மெல்லத் தாயாய் உருவெடுக்கிறாள். அதனை
“வெண்டிரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு”20
எனக் கூறும் பெரும்பாணாற்றுபடை முருகனின் தாயாக ‘துணங்கையஞ் செல்வியைக்’ காட்டுகிறது. இதற்கு விளக்கம் தந்த நச்சினார்க்கினியார் மோடு என்பதற்கு எல்லோரையும் பெற்ற வயிறு என்கிறார்.
“போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்”21
எனத் தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனாரும் மோடியை சிவனின் சக்தியாகப் பாடியிருக்கிறார்.
மகன் நந்திகேசுவரர், தவ்வை[சேட்டை], மகள் அக்னிமாதா
1. தவ்வை வழிபாடு:
சங்க இலக்கியங்கள் காட்டும் தாய்த்தெய்வங்களிலே குழந்தைகளை ஈன்றெடுத்த பெருவயிறும் பரந்த சரிந்த கொங்கைகளுடன் இன்றைய சிற்பங்களில் காட்சிதருபவள் தவ்வையே. சங்கத்தமிழரின் நனிசிறந்த நாகரீகத்தை உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டிருப்பது திருக்குறள். அத்திருக்குறளே தவ்வை என்னும் சக்தி வழிபாட்டை எமக்கு எடுத்துச் சொல்கிறது. திருக்குறளுக்கு உரையெழுதியோர் திருமகளின் தமக்கையாகத் தவ்வையைக் கூறுகின்றனர்.
‘அழுக்காறாமை’ என்னும் அதிகாரத்தில்
“அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்”22
எனத் ‘தவ்வை’ எனக்கூறும் திருக்குறள் அச்சக்தியை ‘ஆள்வினை உடைமை’ என்ற அதிகாரத்தில் ‘மாமுகடி’23 என்ற பெயரால் அழைக்கிறது.
தவ்வையை பல்லவர் காலத்தில் பயிர்த்தொழிலின் தெய்வமாகவும் நந்திவர்மன் தன் குலதெய்வமாகவும் வழிபட்டதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. இவ்வம்மையே திருமுருகாற்றுப்படையில் மூத்தவள் எனும் கருத்தில் ‘பழையோள்’24 என்று அழைக்கப்படுகிறாள் என்பர். மூத்த தேவியை மூதேவி என்றும் ஜேஷ்டை எனவும் சொல்கிறோம். ‘வடதிருப்பரங்குன்றத்து குடவரைக் கருவறையில் இளமை எழிற்கோலத்தில் ஜேஷ்டையும் வலப்புறம் மகன் நந்திகேசுவரனும் இடப்புறம் மகள் அக்கினி மாதாவும் மேடை ஒன்றில் அமர்ந்திருப்பதாக’ டாக்டர் இரா கலைக்கோவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.25
2. கொற்றவை வழிபாடு:
வையை ஆற்றில் நீராடி கொற்றவை போலக் கோலம்புனைந்த பெண்னொருத்தி கொற்றவையின் நெற்றிக்கண் போன்ற திலகம் இட்டதை பரிபாடல் சொல்வதால்26 அந்நாளில் கொற்றவைக்கு இருந்த மாண்பை அறியமுடிகிறது. ‘பெருங்காட்டுக் கொற்றி’ எனக் கலித்தொகை கூறுகிறது.27
தொல்காப்பியம் கொற்றவையின் வடிவத்தை ‘கொற்றவை நிலை’28 என சிறப்பித்துச் சொல்கிறது. கொற்றவை நிலையைப் போற்றி வழிபட்டவர்கள் வெட்சிப்போர் மறவர்கள். நச்சினார்க்கினியார் ‘வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோருக்கு கொற்றம் வேண்டியும் வென்றோருக்கு மேற்செல்லுங்கால் கொற்றம் வேண்டியும் வழிபடுவார் ஆதலின் வெட்சிக்கும் வஞ்சிக்கும் கொற்றவை நிலை உரியதாகும். ஆதலால் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் கொற்றவை நிலை உரியதாகும்’ எனக் கூறியுள்ளார்.
சிலப்பதிகாரம்
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’29
என்கிறது. எனவே சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, பாலை ஆகிய மூன்று நிலத்திலும் வாழ்ந்த மக்கள் கொற்றவையை வழிபட்டனர் என்பது தெளிவாகிறது.
பண்டைத்தமிழர் கொற்றவையை வெவ்வேறு பெயர்களால் அழைத்ததையும் அவள் குமரிக்கோலத்தில் இருந்ததையும் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.30 இளங்குமரியாய் அமர்ந்திருந்த கொற்றவையின் உருவத்தை
“மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூலமேந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி”31
எனக் கூறும் இளங்கோவடிகள் இன்றைய சிவனின் தோற்றத்தில் கொற்றவையைப் படம்பிடித்துக் காட்டுவது அன்றைய சக்திவழிபாட்டின் முதன்மையைச் சொல்கிறது.
கொற்றவையை வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகக் கருதி வழிபட்டனர் என்பதை
“வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை” எனச் சிலப்பதிகாரமும்
“வெற்றிவேல் போர்க் கொற்றவை” என்று திருமுருகாற்றுப்படையும் உறுதி செய்கின்றன.32
3. துர்க்கை வழிபாடு:
எருமைத் தலையும் மனித உடலுமான இருவேறு உருவில் திரண்ட தோள்களுடைய மகிடாசுரனைக் கொன்று அவனின் தலைமேல் நின்றவள் கொற்றவை என்பதை
“இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்”33
எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. எனவே கொற்றவையை மகிடாசுரனின் கதையோடு இணைத்து துர்க்கையாகவும் வழிபட்டதைக் காணமுடிகிறது.
4: காளி வழிபாடு:
சிலப்பதிகாரத்தில் கண்ணகி வரவுபற்றி மன்னனுக்கு
“அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி”34
எனச் சொல்லும் வாயிற்காப்போன் வாயிலாகவே காளி முதன் முதல் அறிமுகம் ஆகிறாள் எனலாம். அன்னையர் எழுவர் வழிபாட்டில் காளி ஏழாவது தெய்வமாக இருந்ததை ‘அறுவர்க்கு இளைய நங்கை’ எனச் சொல்வதால் உணரலாம்.
5. உமை[மலைமகள்] வழிபாடு:
“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தானாக……”35
என இராவணன் கைலை மலையை அசைக்கும் காட்சியோடு உமையம்மையை எமக்குக் கலித்தொகை காட்டுகிறது. முருகனை ‘மலைமகள் மகனே!’ என்றும் ‘கொற்றவை சிறுவ! எனவும் திருமுருகாற்றுப்படை கூறுவதால் கொற்றவையையே மலைமகளாயும் வழிபட்டனர்.36
6. சிவசக்தி வழிபாடு:
உலகை இயக்கும் மாபெரும் சக்தியை தாம் வாழ்ந்த காலத்தோடு பலபடி நிலைகளில் காட்டும் சங்க இலக்கியங்கள் அவற்றை சக்திவழிபாடாக இயம்புகின்றன. அவை சிவனுடன் சக்தியை இணைத்த போதும் சக்தியின் ஆற்றலைப் போற்றின. அதனை
“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்ந்தன முறையே”37
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து மிக உறுதியாகச் சொல்கிறது.
கலித்தொகை கடவுள் வாழ்த்தும் சிவனை விளித்து
“படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்கால் கோடுயர் அகலல்குல்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ” என்றும்
“பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணை மென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ” எனவும்
“தலையங்கை கொண்டுநீ காபாலம் ஆடுங்கால்
முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ”38
எனப்பல கேள்வி கேட்கிறது. இக்கேள்விகள் ஊழிக்கூத்தின் ஆடல் நாயகனான இறைவனை ஆட்டுவது சக்தியே என்பதையும் சிவசக்தியின் ஆற்றலையும் மெல்லக் கோடிட்டுக் காட்டுகிறன்றன.
ஆதிச்சநல்லூர் நாகரிககாலத் தாய்த்தெய்வம் - கி மு 1700
இயற்கையின் சீற்றங்களின் தாக்கத்தால் அவற்றின் சக்திகளைக் கண்டு பயந்த சங்கத் தமிழர் அவற்றை வழிபடத் தொடங்கினர். இயற்கை அணங்கைத் தணிவிக்க அணங்கிற்கு பலி கொடுத்து வழிபட்டனர். சங்க இலக்கியம் காட்டும் சக்கி வழிபாடானது இயற்கை, இயக்கி, அணங்கு, செல்வி, தவ்வை, கொற்றவை, துர்க்கை, காளி, உமை எனப் பலபல உருவோடும் பெயரோடும் கூர்ப்புப்போல் சிறந்து செல்கிறது.
தொல்லியலாளர் ஆதிச்சநல்லூர் நாகரீகத்தின் காலத்தை தொல்லியல் சான்று கொண்டு கி மு 1700 எனக்கருதுகின்றனர். அங்கு நடந்த அகழ்வாராச்சியில் பறவையும், நெற்கதிரும் தாய்த்தெய்வமும் மானும் பொறிக்கப்பட்ட சுடுமண் பானை ஓடு ஒன்று 2004ல் கிடைத்தது. அப்பானை ஓட்டிலிருக்கும் இயற்கைக்காட்சி சங்க இலக்கியகால சக்தி வழிபாட்டின் நோக்கத்தை எடுத்தோதுகிறது. இதனால் சங்க இலக்கியம் சொல்லும் தமிழரின் சக்தி வழிபாடு 3700 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதைக் காணலாம்.
குறிப்புகள்:
தொல்காப்பியம், பொருளதிகாரம், நூபா: 635: 1 - 2.
புறநானூறு 2: 1 - 6.
தொல்காப்பியம், பொருளதிகாரம், நூபா: 415: 1 - 3.
நற்றிணை 201: 5 - 11.
பரிபாடல் 10: 129 - 131.
மேற்படி 7: 85 - 86.
நற்றிணை 164: 1 - 3.
மேற்படி 283: 5 - 7.
சிலப்பதிகாரம் 15: 115 - 118.
கலித்தொகை 50: 6.
புறநானூறு 151: 10 - 11.
மேற்படி 52: 1.
அகநானூறு 158: 8 - 9.
பதிற்றுப்பத்து 79: 13 - 14.
மேற்படி 79 15 - 18.
நற்றிணை 165: 1 - 5.
அகநானூறு 345: 4.
மணிமேகலை 6: 52 - 53.
அகநானூறு 370: 12.
பெரும்பாணாற்றுப்படை 457 - 459.
பன்னிருதிருமுறை: 4: 66: 8: 1.
திருக்குறள் 17: 7.
மேற்படி 62: 7.
திருமுருகாற்றுப்படை 265.
வரலாறு இதழ்: 86.
பரிபாடல் 11: 99 - 100.
கலித்தொகை 89: 8.
தொல்காப்பியம், பொருளதிகாரம், நூபா: 62: 2.
சிலப்பதிகாரம் 11: 64 - 66.
மேற்படி 12: 66 - 73.
மேற்படி 12: 54 - 63.
மேற்படி 12: 64; திருமுருகாற்றுப்படை 258.
சிலப்பதிகாரம் 12: 65 - 66.
மேற்படி 20: 36 - 38.
கலித்தொகை 38: 1 - 5.
திருமுருகாற்றுப்படை 263 - 264.
ஐங்குறுநூறு 1.
கலித்த்தொகை 1: 5 - 13
இனிதே,
தமிழரசி.
பின்குறிப்பு:
என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிசேகம் நடைபெற்ற அன்று[04.06.2017], இந்து தமிழ் கலாச்சார சங்கம் வெளியிட்ட 'சௌந்தர்யம்' என்னும் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலுக்கு எழுதியது. அந்நூலில் இலங்கை, இந்திய அறிஞர்கள் எழுதிய எழுபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன. விரும்பியோர் படித்துப் பயன்பெறலாம்.
பின்குறிப்பு:
என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிசேகம் நடைபெற்ற அன்று[04.06.2017], இந்து தமிழ் கலாச்சார சங்கம் வெளியிட்ட 'சௌந்தர்யம்' என்னும் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலுக்கு எழுதியது. அந்நூலில் இலங்கை, இந்திய அறிஞர்கள் எழுதிய எழுபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன. விரும்பியோர் படித்துப் பயன்பெறலாம்.
Subscribe to:
Posts (Atom)