Saturday 31 December 2016

குறள் அமுது - (127)


குறள்:
“வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று”                   - 273

பொருள்:
மனதை அடக்கும் வலிமையில்லாக் குணமுடையவனின் தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்துக்கொண்டு வயலை மேய்ந்தது போலாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் கூடாஒழுக்கம் என்னும் அதிகாரத்தின் மூன்றாவது குறளாகும். திருவள்ளுவர் கூடாஒழுக்கம் எனும் இந்த அதிகாரத்தில் தவம் செய்பவர்களுக்குப் பொருந்தாத ஒழுக்கம் பற்றியே கூறுகிறார். இரண்டாயிர வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் இக்குகுறளில் தவவேடதாரிகளை, கள்ளச் சுவாமிமார்களை எமக்குக் காட்டித் தருவதற்காக  பசு, புலியின் தோலைப் போர்த்து பயிர் மேய்ந்த கதையைக் கூறியுள்ளார். அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டியும் இன்னும் நாம் திருந்தவில்லையே. அது ஏன்?

தவம் செய்வோர் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தமது மனதை அடக்கி ஆளும் வலிமை இருக்கவேண்டும். அப்படி தனது மனதை அடக்கி ஆளும் தன்மை அற்றவனையே ‘வலிஇல் நிலைமையான்’ என்று வள்ளுவர் அழைக்கிறார். நோயுற்ற ஒருவரைப்பற்றி விசாரிக்கும் பொழுது அவரின் நோயின் தன்மை, உடல்நிலை எப்படி இருக்கிறது, என்பதை அறிய ‘நிலைமை எப்படி இருக்கிறது?’ என்று கேட்பது எமது வழக்கமல்லவா! இக்குறளிலும் ‘நிலைமை’ தவம் செய்வோரின் தன்மையை, குணத்தைச்சுட்டி நிற்கிறது. 

உண்மையாகத் தவத்தை மேற்கொள்வோர் விருப்பு வெறுப்பு அற்றவராய் உலகப் பற்றுக்களை நீக்கி கருணை நிறைந்த நெஞ்சத்துடன் இருப்பர். தமக்குவரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே தவத்தின் உருவம்[தவத்திற்கு உரு] என்று திருவள்ளுவரே ‘தவம்’ என்னும் அதிகாரத்தில் சொல்கிறார். இத்தகைய குணங்கொண்ட தவவடிவை ‘வல்லுருவம்’ என இக்குறளில் குறிப்பிடுகிறார். தவத்தோருக்கு இருக்க வேண்டிய இந்த வலிய குணங்கள் இல்லாது தவவேடமிட்டுப் போலியாக வாழும் தவவேட தாரிகளை திருவள்ளுவர் ‘வலிஇல் நிலைமையான்’ எனச் சாடுகிறார். 

பசுவைப் ‘பெற்றம்’ என்றும் சொல்வர். பிறரது வயலிலுள்ள பயிரை மேய்வதற்கு தம் பசுவை விடுவோர் புலித்தோலைப் போர்த்தி அனுப்புவர். பசு புலித்தோல் போர்த்தி நிற்பதை அறியாத வயலின் சொந்தக்காரர் புலி பயிரை மேயாது என நினைப்பர். அத்துடன் புலி தம்மைக் கொன்றுவிடும் என்ற பயத்திலும் இருப்பர். தவவடிவத்தில் இருப்போரை நம்பி பெண்களை அனுப்புவோரும் சுவாமியார் தானே பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார் என நினைத்தும் அவர் சாபம் இட்டுவிடுவார் என்ற பயத்திலும் இருக்கின்றனர்.

பசு புலியின் தோலை போர்த்துக் கொண்டு பயிரை மேய்வது போல மன அடக்கமற்ற போலிச் சுவாமிமார் மேலான தவவடிவத்தில் புகுந்திருந்து பிறரது பெண்களை இன்ப நுகர்ச்சிக்காகத் துன்புறுத்துவர்.

3 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. பெற்றம் புல்லை மேய்தலை
    போலித் துறவி பெண்ணை மேய்தலோடு
    ஒப்பிட்டுக் காட்டியிருப்பது அருமை

    ReplyDelete
    Replies
    1. திருவள்ளுவர் சொன்னதை எழுதினேன். மகிழ்ச்சி.

      Delete