Tuesday 27 December 2016

சொக்கலிங்கம் இருக்கார்


சோழநாட்டில் ஆலந்துறை என்ற ஊரில் முதுசூரியர், இளஞ்சூரியர் என்ற இருவர் வாழ்ந்தனர். அண்ணனின் மகன் முதுசூரியர். தங்கையின் மகன் இளஞ்சூரியர். அதாவது அம்மான் மகனும் அத்தை மகனும் ஆவர். முதுசூரியர் காலில்லாத முடவர். இளஞ்சூரியர் கண்ணில்லாத குருடர். காலில்லா முடவரான முதுசூரியரை இளஞ்சூரியர் தன் தோளில் சுமந்து கொள்வார். இளஞ்சூரியருக்குக் கண்ணில்லாத காரணத்தால் முதுசூரியர் வழிகாட்ட இருவரும் ஒருவராய் எல்லா இடங்களுக்கும் சென்றுவருவர். பாலகராய் பள்ளி சென்ற காலத்தில் இருந்து ஒருவர் போலவே வாழ்ந்தனர். அதனால் இருவரும் இரட்டையர் என அழைக்கப்பட்டனர்.

கல்விகற்றுப் பெரும் புலவராய் மாறினர். ஒரு பாட்டின் முதல் இரு அடியை ஒருவரும் பின்னிரு அடியை மற்றவரும் பாடுவர். இருவரும் சேர்ந்து பலவகையான பாடல்களைப் பாடியுள்ளனர். அதனால்
“கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்”
என்று போற்றப்பட்டனர். பெருமை மிக்கது என்பதைக் கண்பாய என்பர். பலவகைப் பூக்களாலான பூச்சரத்தைக் கதம்பம் என்போம். அதுபோல் பலவைப் பாக்களாலும் பாவகைகளாலும் இயற்றப்படும் இலக்கியம் கலம்பகம் என அழைக்கப்படும். இரட்டையர் இருவரும் 
1. கச்சிக் கலம்பகம்
2. தில்லைக் கலம்பலகம்
3. திரு ஆமாத்தூர்க் கலம்பகம்
எனப்பல கலம்பகங்களைப் பாடியிருக்கின்றனர்.

ஒருமுறை இரட்டைப் புலவர் இருவரும் சோழநாட்டில் இருந்து மதுரைக்குச் சென்றனர். அங்கே வைகை ஆற்றில் குளிக்கச் சென்றனர். வைகை ஆற்றங்கரைப் படித்துறையில் குளிப்பதற்கு முடவரை இறக்கி வைத்துவிட்டு குருடர் தமது துணிகளைத் தண்ணியில் தோய்த்து எடுத்து தப்பித்தப்பி துவைத்துக் கொண்டிருந்தார். ஆற்றுவெள்ளம் ஒரு துணியை இழுத்துச் சென்றது. அதைக் கண்டார் முடவர். அவரால் நீரில் நீந்தமுடியாது. வெள்ளம் எடுத்துச் செல்லும் துணியை குருடரால் பார்க்க முடியாது. ஆதலால் வெள்ளத்தோடு போனதுணி கிடைக்கப்போவதில்லை.

‘தண்ணியில் நனைத்து நாம் அதை அடுத்தடுத்து அடித்தால் அது எம்மிடம் இருந்து தப்பியோடாதோ’ என ஆற்றுவெள்ளத்தில் துணி போய்விட்டது என்பதை 
“அப்பிலே[தண்ணீர்] தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ[தப்பிஓடாதோ]”
எனக் குருடருக்குச் சொன்னார். 

குருடரும் அதற்குக் கவலைப்படாமல் இந்தத் துணி போனால் என்ன? எமக்கு மாமதுரைச் சொக்கலிங்கம் இருக்கார்’ என்பதை
                                                            "- இப்புவியில்
இக்கலிங்கம்[துணி] போனாலென் ஏகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை” 
என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ஒருவகைத் துணியைக் கலிங்கம் என்பர்.

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வள்ளுவரின் சொற்களுக்கு இணங்க இரட்டைப் புலவர் பாடிய அந்த வெண்பா
“அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ - இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை”
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. மிக அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete