Friday, 29 July 2016

ஓர் உருவம் இல்லாதான்


திருச்சியில் இஸ்லாமிய அரசாட்சி நடந்தகாலத்தில் சைவ, வைணவ சமயத்தவர்க்கு இடையே சண்டை ஏற்பட்டது. ஶ்ரீரங்கம் கோயில் வைணவ சமயத்தவர்க்கு சொந்தம் என்று வைணவர்களும், சைவ சமயத்தவர்க்கு சொந்தம் என்று சைவர்களும் அடிபட்டுக் கொண்டார்கள். அவர்களிடையே மூண்ட கலகத்தை அடக்க இருபகுதியினரையும் அரசன் கூப்பிட்டான். இரு சமயத்தவரின் கடவுள் பற்றியும் கேட்டான். வைணவர்கள் விஷ்ணு, திருமால், நாச்சியார், பெருமாள், திருப்பதி வேங்கடேஸ்வர், இராமர், அநுமன் எனத் தங்கள் கடவுளர் பெயர்களைக் கூறினர். அது போல் சைவ சமயத்தவரும் திருமால், விஷ்ணு, சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் எனத் தமது கடவுளர் பெயர்களை நீட்டி முழங்கினர். 

இரு சமயத்தவரும் சொன்ன கடவுளர் எண்ணிக்கையைக் கேட்ட அரசன் ‘உங்கள் கடவுளரில் யார் முதன்மைக் கடவுளோ அவரின் உருவப்படத்தை நாளைக் காலையில் கொணர்ந்து காட்டுங்கள், தீர்ப்புச் சொல்கிறேன்’ என்றான். இருசமயத்தவரும் எந்தக் கடவுளைக் கொண்டு போவது எனச்சிந்தித்தனர். வைணவர்கள் ‘ஶ்ரீரங்கம் கோயிலுக்காகத் தானே நாம் சண்டை போட்டோம் ஆதலால் ஶ்ரீரங்கநாதரின் உருவப்படத்தைக் கொண்டு செல்வோம் என முடிவெடுத்து நிம்மதியாகப் படுத்துத் தூங்கினர்.

சைவவர்களுக்கு எந்தக் கடவுளின் உருவப்படத்தைக் கொண்டு போவது என்று முடிவெடுக்க முடியவில்லை. திருமாலே பள்ளிகொண்டவன் ஆதலால் திருமால் உருவத்தைக் கொண்டுசெல்வோம் என்று ஒருசிலர் கூற, இல்லை! இல்லை! சைவசமயக் கடவுள் சிவனே! எனவே சிவனைக் கொண்டுபோவோம் என வேறுசிலர் கூறினர். எந்தச் சிவனின் உருவத்தைக் கொண்டுபோய்க் காட்டுவது? நடராசனையா?, சதாசிவனையா?, மகேஸ்வரனையா? என அவர்களுக்குள் குழப்பம். ஒன்றும் வேண்டாம் விநாயகனின் படம் போதும், விக்னவிநாயகன் எல்லாக் குறைகளையும் தீர்த்து வைப்பான் என ஒரு முதியவர் எல்லோரையும் அடக்கினார். நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் முருகனே தமிழ்க் கடவுள், நல்ல அழகன் அவன் படத்தைக் காட்டுவோம் என்றார். எந்த முருகனைக் காட்டுவது? திருச்செந்தூரானா? பழநி ஆண்டியா? தணிகையானா? யாரைக் காட்டுவது? இவர்கள் யாரும் வேண்டாம் அம்பாளைக் காட்டுவோம் எனச் சத்தம் போட்டனர் சிலர். எந்த அம்மனை? மதுரை மீனாட்சியா? காஞ்சி காமாட்சியா? காசி விசாலாட்சியா? நெல்லைக் காந்திமதியா? இப்படிக் கத்திக் கூக்குரல் இட்டு ஒருத்தர் குடுமியை ஒருத்தர் பிடித்து உருண்டு பிரண்டனர். 

காலமும் மெல்லக் கரைந்தது. காலையும் மெல்ல விரிந்தது. விடிவதைக் கண்ட சிலர் வீடுகளுக்குச் செல்லப் புறப்பட்டனர். இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே ஒரு முதியவரின் மடியில் அவரது பேரன் தூங்கிக் கொண்டிருந்தான். அவர் பேரனை ‘வா! வீட்டுச்செல்வோம்’ என எழுப்பினார். தூக்கக் கலக்கத்திலும் ‘அப்புச்சி! ராசாட்ட காட்ட எந்தச் சாமியைக் கொண்டு போகப் போறீங்க?” என்று கேட்டான். ‘இன்னும் முடிவாகவில்லை, நாம் வீட்டுக்குப் போவோம்’ என்றார். முதியவர் அப்படிச் சொன்னதும் அச்சிறுவனுக்கு எரிச்சல் வந்தது. உரத்துக் கத்திச் சொன்னான் ‘அப்புச்சி! அம்மா எதுக்கெடுத்தாலும் ஏட்டில கயிறு சாத்திப் பார்க்குமே, அப்படி திருமுறைகளில் கயிறு சாத்திப் பார்த்தால் எந்த சுவாமியைக் கொண்டு செல்வது என்று சுவாமி சொல்லாதா?’ என்றான். அதைக் கேட்ட எல்லோரும் அச்சிறுவனைத் திகைப்போடு பார்த்தனர்.


பன்னிருதிருமுறைகளின் ஏடுகளை அடுக்கி வைத்து, அந்த ஏடுகளுக்கு இடையே ஒரு மெல்லிய நூலைப் போட்டுஇழுத்தனர். அந்த நூல் எந்த ஏட்டிற்கு மேலாகச் சென்றதோ அந்த ஏட்டில் எழுதி இருந்த தேவாரத்தைப் படித்தனர். ஒருவரோடு ஒருவராய் முட்டி மோதிக்கொண்டவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துத்  துள்ளிக் குதித்தனர். அச்சிறுவனைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தனர். ஒரு சிலர் அதற்கும் உடன்படவில்லை. ‘சிறுவனின் சொல்லைக் கேட்டு நாம் கோயிலை இழக்கப் போகிறோம். அரசன் உருவப்படமல்லவா கேட்டான்? தேவாரமா கேட்டான்? என முணுமுணுத்தபடி சென்றனர். எனினும் எல்லோரும் அரசன் சொன்ன நேரத்துக்கு அரண்மனையில் இருந்தனர்.

கொழுமண்டபத்தில் இருந்த அரசன் இரு சமயத்தவரையும் பார்த்து “கடவுளரின் உருவப்படம் எங்கே?’ என்று கேட்டான். வைணவர்கள் ஶ்ரீரங்கநாதனின் உருவப் படத்தைக் கொடுத்தனர். பார்த்தான். சைவர்கள் ஒரு ஏட்டு மடலை நீட்டினர். ‘உருவப் படமெல்லவா கேட்டேன்? எங்கே உங்கள் கடவுளின் படம்?’ என்றான். ‘இந்த மடலைப் படியுங்கள். எங்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்று அது சொல்லும்’ என்றனர். அரசனும் சிரித்துக்கொண்டு வாங்கிப் படித்தான்.

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
          மயானத்தான் வார்சடையான் எண்ணின் அல்லால்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
          ஓரூரன் அல்லன் ஓருவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ் வண்ணமும்
          அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன்
          இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”
                                                         - (ப.திருமுறை: 6:  97 :10)

அரசன் மீண்டும் மீண்டும் அந்தத் தேவாரத்தை வாசித்தான். அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டான். இஸ்லாமிய கடவுளுக்கும் உருவம் இல்லை. சைவ சமயத்தவர் கடவுளுக்கும் உருவமில்லை. இறைவனின் உருவத்தை இறைவனின் அருளைக் கொண்டே காணமுடியும். ஆனால் கீறிக்காட்ட முடியாது [எழுதிக் காட்டொணாதே]. ஓ! உலகக் கடவுளர் எல்லோருக்கும் இது பொதுவானது என்பதை உணர்ந்ததும் ‘ஶ்ரீரங்கம் கோயில் சைவசமயத்தவர்களுக்கே உரியது எனத் தீர்ப்பளித்தான். இந்நாளில் வாழும் நாம் சமயச்சண்டைகள் போட்டு, போரென்று உலகையே சீரழித்துக் கொண்டு இருகிறோம்.

“ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”
                                                - (ப.திருமுறை: 8: 11 :1)
என மாணிக்கவாசகரும் பாடித் தெள்ளேணம் கொட்டுகின்றார். ஒரு பெயரும் ஒரு உருவமும் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் பெயர் சொல்லி, இறைவனின் வலிமையைப்  பாடி மகிழ்ந்து கைகொட்டி விளையாடுவோம் என்கின்றார். வலிமையை, புகழை, செய்த உதவியைப் பேசி மகிழ்தலை - அல்லது பாடி மகிழ்தலை தெள்ளேணம் என்று சொல்வர். [தெள் + ஏணம் = தெள்ளேணம், தெள் - தெளிந்த/நன்கு அறிந்த; ஏணம் - வலிமை]. தமக்குத் தெரிந்தோரின் வலிமைகளைப் பாடி மகிழ்ந்து பெண்கள் கைகொட்டிச் சிரித்து விளையாடிய விளையாட்டு தெள்ளெணம் ஆகும்].
இனிதே,
தமிழரசி.

Wednesday, 27 July 2016

புங்குடுதீவு எனும் அன்றில் தீவு

அன்றில் [குருகு] - கிரௌஞ்சம்

“கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது…………”
                                                 - (ப.திருமுறை: 8: 20: 3)
என்கின்றார் திருப்பள்ளியெழுச்சியில் மாணிக்கவாசகர். இதிலே வரும் குருகுகள் என்பதற்குப் பலரும் பறவைகள் என்றே பொருள் எழுதியுள்ளனர். குருகுகளைப் பறவைகள் என்றால் குயிலும் கோழியும் பறவையுள் அடங்காதா என்ற கேள்வி எழுகின்றது. நீர்வாழ் உயிர்களை உண்டு வாழும் பறவைகளை குருகுகள் என்பர். குயிலும் கோழியும் [நீர்க்கோழி வேறு] நீர்வாழ் உயிர்களை உண்டு வாழ்வதில்லை. அவற்றைப் பிரித்துக் காட்டவே குருகுகள் என்றார். தமிழர் பெரும்பாலும் குருகுகள் என்று அன்றில் நாரை இரண்டையும் அழைத்தனர் என்பதை கலித்தொகைக்கு நச்சினார்க்கினியார் எழுதிய உரை தருகிறது. [கலித்தொகை - கழகவெளியீடு - 1965; பக்கம் 382]. பண்டைத் தமிழர் அன்றிலை கரிஞ்சம் என்றும் அழைத்தனர். தற்காலத்தில் அரிவாள் மூக்கன் என்று கூறுவர். [Scientific name: Plegadis falcinellus]

அன்றில் தீவைப்பற்றி அறிய முன்பு அன்றில் பறவைகளின் ஒரு சில வகைகளையும் அவை நெய்தல் நிலத்தில் [கடலும் கடல் சேர்ந்த நிலத்தில்] வாழ்வதையும், எம் தமிழ் முன்னோர் குருகு என்றவுடன் அன்றில் என இனங்கடண்டதையும் அவர்கள் கூறியவற்றில் இருந்து அறிவோமா?

‘கடலைத்தாண்டியது போல இருமடங்கு வேகமாகத் தாண்டினாலும்  இலங்கையின் இடைநகரில் இருக்கும் அகழியைக் கடக்கமுடியாது’ என அநுமன் சொல்வதாகச் சுந்தரகாண்டத்தில் கம்பர் சொல்கிறார். இலங்கையில் இருந்த அந்த அகழியில்
“உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல்
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே”
                                                   - (க.இரா: சுந்.கா: 151)
இவ்வளவு பறவைகளும் ஒலிஎழுப்பினவாம். மகன்றில் என்பது அன்றில் பறவைகளில் ஒரு வகை. இவற்றின் கால்கள் கட்டையாக இருக்கும். அதனை ஐங்குறுநூறு
“………………… வார்சிறைக் 
குறுங்கால் மகன்றில்”
                                               - (ஐங்குறுநூறு: 381: 3 - 4)
எனக்கூறுவதால் அறியலாம்.
பகன்றில்

வெள்ளை நிற அன்றில் பகன்றில் என அழைக்கப்படும் [பகல் + அன்றில் = பகன்றில்]. செந்நிற அன்னத்தை சென்னம் என்பர். 
திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில்
“பகரத்தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப் பொழில்சேர் சண்பை நகராரே”
                                                  - (ப.திருமுறை: 1: 66: 3)
எனப் பகன்றிலைக் குறிப்பிடுகிறார். தகரம் [தகரச்செடியல்ல, இதுமரம் - Cassia glauca], புன்னை, தாழை யாவும் நெய்தல் நிலத்தாவரங்கள். சீர்காழியின் இன்னொரு பெயர் சண்பைநகர். அதுவும் நெய்தல் நிலமே. 

நம் முன்னோர்கள் அன்றில் பறவையை அவற்றின் உயரத்தை, நிறத்தைக் கருத்தில் கொண்டு மகன்றில், பகன்றில் என்று பெயரிட்டதோடு அவை எழுப்பும் குரலையும் இமிழல், நரலல், அகவல், உளரல் என்றெல்லாம் அழைத்துள்ளனர். அன்றில் பறவை ஆணும் பெண்ணுமாக இணைந்து வாழும். அப்படி இணைந்து வாழும் போது எழுப்பும் குரலை ‘நரலல்’ என்றும் பெண் அன்றில் கருவுற்றிருக்கும் போது எழுப்பும் குரலை ‘அகவல்’ என்றும் அழைத்தனர் என்பதைக் குறுந்தொகை காட்டுகிறது. 
“நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலும்
                                                 - (குறுந்தொகை: 160: 1 - 4)

செந்தலை அன்றில்

நெருப்பைப் போன்ற சிவந்த தலையுள்ள அன்றில், இறால் போன்ற வளைந்த அலகு [கொடுவாய்] உடைய பெட்டையோடு தடா[தடவு] மரத்தின் உயர்ந்த கிளையின் [ஓங்குசினை] கூட்டில்[கட்சி] சேர்ந்திருந்து துணையைப் பிரிந்தோர் வருந்துமாறு [கையற] சத்தம்[நரலும்] செய்கிறதாம்.

“முழவுமுதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமடல் இழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுங்சூல்
வயவுப்பெடை அகவும்
                                                  - (குறுந்தொகை: 301: 1 - 4)

கருங்கால் அன்றில்

முழவு போன்ற அடியோடு பெரிதாய் நிற்கும்[தடவுநிலை] பனையின்[பெண்ணை] ஒன்றோடொன்று கொழுவிய ஓலையில்[கொழுமடல்] சிறுகுச்சிகளைக்[சிறுகோல்] கொண்டு கட்டிய[இழைத்த] கூட்டில்[குடம்பை] வாழும் கரிய காலையுடைய அன்றில் பெட்டை[பெடை] கருவுற்ற[கடுஞ்சூல்] நோயால் சத்தம்[அகவும்] செய்யுமாம்.

பண்டைத் தமிழர் எந்த அளவுக்கு அன்றிற்பறவைகளை நேசித்திருந்தால் இப்படியெல்லாம் பாகுபடுத்திப் பெயரிட்டு அழைத்திருப்பர்! 

குருகுகளாகிய அன்றில்கள் நெய்தல் நிலப்பறவை என்பதை
 “கழி தேர்ந்து அசைஇய கருங்கால் வெண்குருகு
அடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும்”
                                                   - (குறுந்தொகை: 303 :1 - 3)

கருங்கால் வெண்குருகு 
இன்றும் புங்குடுதீவு கள்ளியாற்றில் இரைதேடுகின்றன

உணவுக்காக கழிநீரை ஆராயும் கரிய கால்களுள்ள வெண்நிறக் குருகுகள் கரையில் இருக்கும் தாழையில் கூடியிருந்து பெரியகடலலை மோதும் சத்தத்தில் தூங்கும் எனவும்

"தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரை மாந்திப்
பெண்ணைமேல் சேக்கும் வணர்வாய் புணர் அன்றில்
                                                      - (ஐந்திணையெழுபது: 55:1 - 2)
தெளிந்த நீருள்ள கடல் கழிமுகத்தே விரும்பிய இரையை உண்டு பனைமரத்தின் மேல் தங்கும் வளைந்த வாயையுடைய இணைபிரியாத அன்றில் என்றும் கூறுவதால் அறியலாம். 

அத்துடன் வளைந்த வாயையுடைய அன்றில் பனையின் மேல் தங்குவதைப் போல் வளைந்த வாயையுடைய குருகும் பனையில் வாழ்வதாக
“புலவுநாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடரைப் பெண்ணை தோடுமடல் ஏறி
கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய
உயிர்செலக் கடைஇப் புணர்துணைப்
பயிர்தல் ஆனா பைதலம் குருகே
                                                   - (நற்றிணை: 338: 8 - 12)
என நற்றிணை சொல்கிறது. புலால் மணம் வீசும் சிறு குடியிருப்பின் மன்றத்தில் வளர்ந்துள்ள பருத்த அடியையுடைய பனை ஓலைமடலில் ஏறியிருந்து வளைந்த வாயையுடைய பேடையை கூட்டிற்கு[குடம்பை] வந்து சேருமாறு உயிர் போகும்படி குருகும் காமமயக்கத்தில்[பைதலம்] கூவிக்கொண்டிருந்ததாம். மன்றத்துப் பனையில் இருந்து அன்றில் கூப்பிடும் என்பதை
“மன்றலம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்
                                                  - (குறுந்தொகை: 177: 3 - 4)
என்கிறார் சங்ககாலப் புலவரான உலோச்சன். இவை அன்றிலைக் குருகு எனவும் அழைத்தனர் என்பதைக் காட்டுகின்றன. மன்றத்துப் பனைகளில் மட்டுமல்ல வீட்டைச்[மனை] சேர்ந்துள்ள பனையில் வளைந்த[மடி] வாயையுடய அன்றில் வாழ்ந்ததை
“மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
                                                  - (பரிபாடல்: 58: 11] 
பரிபாடல் காட்டுகிறது.

அன்றில் பறவையே இராமாயணம் பிறப்பதற்கு முதற்காரணம் என்பதை வால்மீகி இராமாயணத்தின் முதல் சுலோகம் சொல்கிறது. அவர் அந்தச் சுலோகத்தில் ‘கரிஞ்சம்’ என்ற தமிழ்ச் சொல்லால் அன்றில் பறவையைக் குறிப்பிட்டார். இப்போது வரும் நூல்களில் ‘கரிஞ்சம்’ எனும் தமிழ்ச்சொல் ‘க்ரௌஞ்சம்’ ஆக சமஸ்கிருதமாய் மாற்றப்பட்டுள்ளது. 

வால்மீகி முனிவருக்கு இராமரின் கதையை நாரதர் சொன்னார். அந்த எண்ணத்தில் இருந்த வால்மீகி நதிக்குக் குளிக்கச் சென்றார். வழியில் ஒருவேடன் ஆணும் பெண்ணுமாய் இணைந்திருந்த அன்றில் பறவைகளில் ஆண் பறவையை அம்பு எய்தி கொன்றான். இணையின் பிரிவால் பெண்பறவை துடிப்பதைக் கண்ட வால்மீகி வேடனைப் பார்த்து
“மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: ஸமா:|
யத் க்ரௌஞ்ச மிதுனாத் ஏகமவதீ காமமோஹிதம் ||”
‘ஓ வேடனே! சோடியான அன்றில் பறவைகளில் காமமயக்கத்தில் இருந்த ஒன்றைக் கொன்றாய். அதனால் நீ இனி ஒருபோதும் அமைதி அடையமாட்டாய்!’ என்று சாபம் இட்டார்.

வேடனுக்குச் சாபம் கொடுத்தபின்னர் ஏன் அப்படிச் சொன்னேன் என வால்மீகி வருந்தினார். இராமரின் கதையைக் கேட்ட தாக்கமே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார். தான் கொடுத்த சாபத்தில் சிலேடையாக “ஶ்ரீநிவாசா! இராட்சத சோடியில் காமத்தால் புத்தி கெட்ட ஒருவனைக் கொன்றாய். அதனால் நீடித்த புகழை அடைவீராக” என்ற கருத்தும் இருப்பதைக் கண்டு இராமாயணத்தைப் பாடினார். இதிலே க்ரௌஞ்ச மிதுனம் - இராட்சத சோடியைக் [இராவணன், வண்டோதரி] குறிக்கிறது.

ஏன் க்ரௌஞ்ச மிதுனம் என்று இராட்சதச் சோடியை அழைத்தார்? பண்டைய க்ரௌஞ்ச மலையே இன்றைய இலங்கை. க்ரௌஞ்ச மலையில் வாழ்ந்த இராட்சதச் சோடி என்ற கருத்திலேயே க்ரௌஞ்ச மிதுனம் என்றார். அருணகிரிநாதரும் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழில் கந்தன் வேல் எறிந்து க்ரௌஞ்ச மலையைத் துளைத்ததை பாடுமிடத்தில்
“கொட்புற்றெழ நட்பு அற்ற அவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே” 
என அவுணரின் அதாவது அசுர குலத்தின் மலை என்ற பொருளில் ‘குலகிரி’ எனக் கூறுவதால் உணரலாம்.

எல்லாமாகப் பார்த்தோமேயானால் தமிழில் குருகு, அன்றில், கரிஞ்சம் என அழைத்த பறவையையே சமஸ்கிருதத்தில் க்ரௌஞ்சம், கிரௌஞ்சம் என்றும் அழைத்தனர். அன்றில்கள் வாழ்ந்த மலையாதலால் சமஸ்கிருதத்தில் கிரௌஞ்சமலை எனப் பெயர் பெற்றது. அருணகிரிநாதர் திருஎழுகூற்றிருக்கை 
“…………… முத்தலைச் செம் சூட்டு 
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை”
                                                 - (திருஎழுகூற்றிருக்கை)
என ‘அன்றிலங்கிரி’ என்ற பெயரில் அழைக்கிறார்.

சங்ககாலப் புலவர்கள் கிரௌஞ்சமலையை குருகின் பெயரையுடைய மலை என்றே சொல்கின்றனர். சங்கப்புலவரான கடுவன் இளவெயினனார் பரிபாடலில்
“தீயழல் துவைப்பத் திரிய விட்டெரிந்து……
நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடை
குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து
                                                             - (பரிபாடல்: 5: 3,8,9)
முருகன், ‘பேரொலியோடு தீ அழலைக் கக்குகின்ற வேலை விட்டெரிந்து நாவல்மரச்சோலை [நயினாதீவு], வடசோலைகளுக்கு [எழுவதீவு, அனலைதீவு, காரைதீவு] இடையே இருந்த கிரௌஞ்சமலையை உடைத்தார்’ என்கிறார். அந்தக் கிரௌஞ்சவலையே புங்குடுத்திவு.

சிலப்பதிகாரத்தின் குன்றக்குரவையில்
“சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திருமுலைப் பாலுண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே”
                                                  - (சிலம்பு: 1: 9)
சக்கரம் போலச் சுழன்று வரும் அசுரனின் மார்பைப் பிளக்கக் கிரௌஞ்ச மலையை அழித்த நெடியவேல் சரவணப் பாயில் ஆறு தாய்மாரின் முலைப்பால் உண்டவனின் திருக்கை வேலேயாகும் என்கின்றார் இளங்கோவடிகள்.

மணிமேகலை
குருகுபெயர்க் குன்றங் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி”
                                                    - (மணிமேகலை: 5: 13 - 14)
கிரௌஞ்ச மலையை அழித்த முருகனைப் போன்ற உனது இளமை என்கின்றது.

இவ்வாறு பண்டைய இலக்கியங்கள் கூறும் கிரௌஞ்சமலை உடைந்த போது கிரௌஞ்ச மலைச்சிகரம் எழு துண்டுகளாகச் சிதறின. அவை வீழ்ந்து உண்டாகிய ஏழு தீவுகளையும் கந்தபுராணம் நாவலந்தீவு, இறலித்தீவு, குசைத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு, புட்கரத்தீவு  எனச் சொல்கிறது.

எமது புங்குடுதீவை கிரௌஞ்சத்தீவு என கந்தபுராணம் மட்டுமல்ல இராமாயணமும் கூறுகிறது. வால்மீகி இராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பர் தமது கம்பராமாயணத்தில் கிரௌஞ்சத்தீவை அன்றில்தீவு எனத் தமிழில் தந்துள்ளார். எனது சிறுவயதில் படித்த நாடோடிக் கதைகளில் அன்றில்தீவு வரும். அப்போது அது எங்கே இருக்கின்றது என யோசித்திருக்கின்றேன். பின்னர் அன்றைய அன்றில்தீவு நம் புங்குடுதீவு என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

யுத்தகாண்டத்தின் படைக்காட்சிப் படலத்தில் கம்பர்
“அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக்
குன்றைக் கொண்டு போய் குரை கடலிட அறக் குலைந்தோர்
சென்று இத்தன்மையைத் தவிரும் என்று இரந்திடத் தீர்ந்தோர்”
                                                  - (க.இரா: யு.கா: ப.கா.ப: 13)
‘அன்றில் தீவில் வாழ்பவர்கள், தேவர்கள் எப்போதும் இருந்து வாழ்ந்த இடம் இது என்று சொன்னதும் மேருமலையைக் கொண்டுபோய் கடலில் போட முயல, அதனால் நிலைகுலைந்த தேவர்கள் இந்தச் செயலைக் கைவிடுங்கள் என்று கெஞ்ச, அச்செயலைக் கைவிட்ட வீரர்கள்’ ஆவார்கள் என்கிறார்.

அன்றில் பறவைகள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்த தீவாதலால் அந்நாளில் நம் புங்குடுதீவு அன்றில் தீவு என அழைக்கப்பட்டது. அன்றில்கள் இன்றும் புங்குடுதீவில் வாழ்கின்றன. கள்ளி ஆற்றங்கரையில் அன்றில்கள் இரை தேடுவதைப் பார்த்து மகிழலாம். புங்குடுதீவு என்று நாம் அழைக்கும் அன்றில் தீவில் வாழ்ந்த நம் முன்னோர்கள் தேவர்களையே கெஞ்ச வைத்த வீராதிவீரர்கள் என்பதை நினைத்துப் பெருமை கொள்வோம்.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
மேலே குறிப்பிட்ட ஏழு தீவுகளையும் எந்தெந்த தீவுகள் என்பதை அறிய கீழேயுள்ள linkஐ அழுத்திப் பார்க்கவும். https://inithal.blogspot.co.uk/2016/02/blog-post.html

Monday, 25 July 2016

அடைவேன் உன்னை


முயற்சி ஆலே
          முறையாய் முயன்று
நயற்சி கொண்டு
          நயப்பேன் நின்னை
பயிற்சி செய்தேன்
         பயிலப் படுவாய்
அயற்சி இன்றி
         அடைவேன் உன்னை

சொல்விளக்கம்
நயற்சி - ஆர்வம்
நயப்பேன் - மகிழ்வேன்
பயிற்சி - பலமுறை நினைத்தல்
பயில்தல் - நெருங்குதல்
அயற்சி - சோர்வு

Saturday, 23 July 2016

கோணி நிற்கிறேன் பாரீரோ!


பார் என்று பேர் சூட்டி உலகை 
          பார்த்து இரசித்த மானுடரே
வேர்ஓடு மரம் வெட்டிப் புவியை
         வேரறுத்து நாடாக்கி நகைப்பீரே
நீர் அற்று நிலம் வாட்டித் தாரணியை
         நோயாக்கி நோயில் கிடப்பீரோ
கார் மேகம் காணாதே நாணிக்
         கோணி நிற்கிறேன் பாரீரோ!
                                           - சிட்டு எழுதும் சீட்டு 121

Thursday, 21 July 2016

குறள் அமுது - (119)


குறள்:
“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு”                     - (குறள்: 106)

பொருள்:
நெஞ்சில் வஞ்சனை அற்றவர் நட்பை மறக்கக் கூடாது. துன்பம் வந்த காலத்தில் துணையாக நின்றவர் நட்பைக் கைவிடவும் கூடாது.

விளக்கம்:
யார் யாருடைய நட்பை நாம் மறவாதும் துறவாதும் இருக்க வேண்டும் என்பதை கூறும் இந்தத் திருக்குறள் ‘செய்நன்றி அறிதல்’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. ஒருவர் எமக்குச் செய்த நன்மையை மறவாமல் இருத்தலே செய்நன்றி அறிதலாகும். இன்னொரு வகையில சொல்வதானால் ஒருவர் நமக்குச் செய்த நன்மையை அறிந்து வைத்திருத்தல் என்றும் சொல்லலாம்.

மனதைச் சுத்தமாய் வைத்திருப்போர்கள் ஒருவரின் வாழ்வை எப்படிக் கெடுப்பது, பிறர் வருந்தி உழைத்த பொருளை வஞ்சனையால் தமதாக்கிக் கொள்வது, களவெடுப்பது, பொய்பேசுவது, உண்டவீட்டிற்கே இரண்டகம் செய்வது, தமக்குத் தெரிந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவது, காரணமின்றி சண்டை பிடிப்பது போன்ற செயல்களச் செய்யமாட்டார்கள். அத்தகையோர் நெஞ்சம் குற்றம்[மாசு] அற்றதாய் அன்பும் பரிவும் பாசமும் எந்நேரமும் நிறைந்திருக்கும் என்பதால் அவர்களை மாசற்றோர் என்கிறார். மனமாசு அற்றோர் நட்பை என்றும் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

ஒன்றைக் கண்டறிய துப்புக் கிடைத்தது என்றதும் வலிமையான, துணையான, உதவக்கூடிய ஆதாரம் கிடைத்தது என்று அறிந்து கொள்கிறோம் அல்லவா? ஆதலால் எமக்கு வலிமை சேர்ப்போரை, துணையாய் நிற்போரை, உதவி செய்வோரை துப்பாயர் என்பர். எமக்கு ஒரு துன்பம் வந்த நேரத்தில் துணையாய், உதவியாய் இருந்தவர்களின் நட்பை எப்போதும் விட்டுவிடாது காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.


உறவைவிட நட்பின் வலிமை மிகவும் இறுக்கமானது. மனித வாழ்வு தரும் படிப்பினையில் ஒன்று உறவை மறந்தாலும் நட்பை மறக்கமுடியாது என்பதே. நாம் பல ஆண்டுகள் பேசாது பாழகாது இருந்தாலும் நட்பின் தன்மையை நண்பர்கள் உணர்வர். அந்த நட்பிலும் உள்ளத்தில் கலங்கம் இல்லாதவர் நட்பை மறவாமலும் எமது துன்பத்தில் உதவியோரின் நட்பை கைகழுவி விடாமலும் நாம் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் எம்மையெல்லம் பார்த்து ‘மறவற்க!’ என விளித்துச் சொல்வதில் இருந்து இத்திருக்குறளின் மேன்மையை நாம் புரிந்து கொள்வது நன்று.

Wednesday, 20 July 2016

அடிசில் 103

கொடித்தோடம் பழச்சாறு [Passion Fruit Juice]
- நீரா -
  

தேவையான பொருட்கள்: 
கொடித்தோடம் பழம்  -  3
சீனி  -  தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
1. கொடித்தோடம் பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்க.
2. உள்ளே இருக்கும் பழத்தை கரண்டியால் எடுத்து Blenderல் போடவும்.
3. அதைப்போல் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு உள்ளே இருக்கம் விதைகள் உடையாதிருக்க அடிக்கவும்.
4. ஒரு பாத்திரத்தின் மேல் வடிகட்டியை வைத்து Blenderல் அடித்த சாற்றை ஊற்றி வடிக்கவும்.
5. வடிகட்டியில் தங்கியிருக்கும் பழத்தை ஒருகரண்டியால் அழுத்த அடிபடாதிருக்கும் பழச்சாறும் வடியும்.
6. வடித்த சாற்றுடன் உங்கள் சுவைக்கு ஏற்றவாறு சீனியும் தண்ணீரும் கலந்து எடுக்கவும்.

குறிப்பு:

பழத்தின் அளவையும் சுவையின் [இனிப்பு/புளிப்பு] தன்மையையும் பொறுத்து சீனியும் தண்ணீரும் சேர்ப்பதால் அவற்றின் அளவைக் கூறமுடியாது. ஏறக்குறைய மூன்று பழத்தில் இருந்து 750மிலீ - 1250மிலீ வரை பழச்சாறு எடுக்கலாம்.

Friday, 15 July 2016

பண்டைத் தமிழரின் அணுக்கொள்கை

மணிமேகலையில்…

எமது முன்னோர்களான பண்டைத்தமிழர் அறிவியலை அறிந்திருக்கவில்லை என நம்மில் பலர் நினைக்கிறோம். அதுமட்டுமல்லாமல்  சங்கஇலக்கியங்களையும்  காப்பிய இலக்கியங்களையும் படித்துப்பார்க்காமலே அவை காதலையும் வீரத்தையும் மட்டுமே சொல்வதாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அதற்கு நுனிப்புல் மேய்ந்த மேடைப் பேச்சாளர்களும் பட்டிமன்றங்களை நடத்துவோருமே காரணமாவர். பண்டைத் தமிழரின் அறிவியல் கொள்கையை - விஞ்ஞானக் கருத்தைப்பற்றி எத்தனை பட்டிமன்றங்கள் நடந்ததைப் பார்த்தீர்கள்? கேட்டீர்கள்?


இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தைப் படிக்கும் அளவுக்கு நம்மவர்கள் சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலையைப் படிப்பதில்லை. ‘கணிகையான மாதவியின் மகள் மணிமேகலை’ என்ற காழ்ப்பு உணர்ச்சியே எம்மை மணிமேகலையைப் படிக்காது தடுக்கின்றது எனலாம். அதனால் மனித இனத்துக்குச் சாத்தனார் எடுத்துச் சொன்ன சமய தத்துவங்களையும் அறிவியற் கருத்துக்களையும் நாம் இழக்கின்றோம். அந்தக் காழ்ப்புணர்ச்சியைக் கழற்றிவிட்டு மணிமேகலையை எடுத்துப் படித்துப் பாருங்கள் அதன் அருமை புரியும். எமது கண்டுகொள்ளாத் தன்மையால் எவற்றை இழக்கிறோம் என்பதைக் காட்டவே சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் சொல்லிய அணுக்கொள்கையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
Democritus

அணுவைப்பற்றி கிரேக்கத்தில் கி மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Democritus என்ற தத்துவஞானி சொன்னார். அவரது அணுக்கொள்கையானது தத்துவத்ததை விளக்கும் நியதிக்கொள்கையாகப் [Determinism] பயன்பட்டது. அணுவைப்பற்றிய அவரது கொள்கைக்கு  மாறுபட்ட கருத்தை அவருக்கு பின் வாழ்ந்த Aristotle கூறினார். எனினும் அவ்விருவரது கருத்துக்களும் கி பி19ம் நூற்றாண்டுவரை தூங்கியே கிடந்தன. இன்றைய அணுக்கொள்கையை 1803ம் ஆண்டு John Dalton என்பவரே  எடுத்துரைத்தார். நம் முன்னோர் சொன்னவற்றையும்  Dalton  கூறியிருப்பதில்  காணமுடிகிறது.
பண்டைத் தமிழரின் அணுக்கொள்கையும் கிரேக்கர்களின் கொள்கைபோல் எடுத்துப் பார்ப்பார் இன்றி ஆழ்ந்த தூக்கதில் கிடக்கிறது. நம் முன்னோர் சொன்ன அணுக்கொள்கையின் விரிவான விளக்கத்தை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் காணலாம். எமது பண்டைத்தமிழ் முன்னோர் அணுக்கொள்கை மட்டும் உடையவர்களாக இருக்கவில்லை. அதற்கும் மேலாக அணுவைப்பற்றிய நூலும் வைத்திருந்தார்கள். அதனை ‘இறை நூல்’ என அழைத்தனர். அதில் அணுவைப்பற்றி இன்றைய ‘நனோ தொழில் நுட்பத்தையும்’ விட மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கும் பாங்கு போற்றுதற்குரியது. பண்டைத் தமிழர்கள் ‘அணு’ என்றும் ‘பரமாவணு’ என்றும் சொன்னதை ‘இறை’ என்றும் அழைத்தனர். ‘இறை நூற்பொருள்’ என்றால் ‘அணு நூல் பொருள்’ ஆகும். அந்த இறை நூலில் - அணு நூலில் சொல்லப்பட்ட கருத்தையே சாத்தனார் மணிமேகலையில் கூறியுள்ளார். 
காற்று                                      தீ
நீர்                                           நிலம்
மணிமேகலையிலுள்ள சமயக்கணக்கர் தம்திறம் கேட்ட காதையில்
நால்வகை அணுக்களும் உயிரும்
“எல்லையில் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்பில் அறிவன் இறைநூற் பொருள்கள் ஐந்து
உரந்தரும் உயிரொடு ஒருநால்வகை அணு
அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நில நீர் தீ காற்று எனநால் வகையின
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறாகி விரிவதும் செய்யும்
அவ்வகை அறிவது உயிர் எனப்படுமே”
                                            - [மணிமேகலை: 27: 110 - 119]
உலகில் உள்ள எல்லையில்லா பொருட்களில் எவ்விடத்திலும் எப்பொழுதும் சேர்ந்து [புல்லி] கிடந்து விளங்குகின்ற முடிவற்ற [வரம்பில்] அறிவனின் அணு நூற்பொருட்கள் [இறை நூல் பொருட்கள்] ஐந்தாகும். அவை வலிமையைக் கொடுக்கும் [உரந்தரும்] உயிரோடு நால்வகை அணுக்களுமாகும். அவ்வணுக்கள் தம்மைத் தாம் உற்றும் கண்டும் உணர்ந்திட ஒன்றோடு ஒன்று கூடியும் ஒன்றாகாவகையில் பிரியும். [ஓர் அணு மற்றோர் அணுவில் அடங்கும் ஆனால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒன்றாகாது என்பதை ‘பெய்வகை’  எனும் சொல் காட்டுகிறது]. நில அணு, நீர் அணு, தீ அணு, காற்று அணு என நால் வகையினவாகிய அவை மலையாக, மரமாக, உடம்பாகத் திரண்டு உருவாகும். அவை வெவ்வேறாகப் பிரிந்து பலவாக விரிவதும் உண்டு. இவ்வாறு திரள்வதும் விரிவதுமாகிய கூறுபாடுகளை அறிவது உயிர் என்று சொல்லப்படும்.

இவைமட்டும் அல்ல அண்டவெளியில் ஏற்படும் தாக்கங்கள் அணுக்களைத் தாக்குமா? அணுக்கள் எப்படியானவை? அவற்றின் இயல்பு என்ன? என்றெல்லாம் ஆராய்ந்து கண்டறிந்திருந்ததைச் சொல்கிறார்.
நால்வகை அணுக்களின் இயல்புகள்
"வற்பம் ஆகி உறுநிலந் தாழ்ந்து
சொற்படு சீதத் தொடுசுவை உடைத்தாய்
இழின் என நிலன் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்
தெறுதலும் மேற் சேர் இயல்பும் உடைத்தாம்
காற்று விலங்கி அசைத்தல் கடன்”
                                           - [மணிமேகலை: 27: 120 - 124]
வன்மை[வற்பம்] உடையது நிலவணு. கீழே வீழ்ந்து[தாழ்ந்து] குளிர்மை [சீதம்] என்று சொல்லப்படும்[சொற்படு] தன்மையோடு சுவை உடையதாய் இழின் என்ற ஒலியோடு நிலத்தைச் சேர்ந்து நிலத்தினுள் ஆழ்ந்து போவது நீரணு. தீயணு எரிப்பதும்[தெறுதலும்] மேல் நோக்கி எழுகின்ற இயல்பும் உடையதாகும். காற்றணு குறுக்காக[விலங்கி] அசையும் முறைமையை[கடன்] உடையது.

பரமா அணுக்கள் எத்தகையன?
                           “……. இவை
“வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால்
ஆதி யில்லாப் பரமா அணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யாய்ப்
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றிற் புகுதா
முதுநீர் அணுநில அணுவாய்த் திரியா
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யாந்து
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும்ஆம்
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதிபோல் செழுநில வரைப்புஆம்”
                                           - [மணிமேகலை: 27: 125 - 137]
அண்டவெளியில் வேற்று இயல்புகளால் ஏற்படும்[எய்தும்] மாறுபாட்டால்[விபரீதத்தால்] எப்போது உண்டானது என்று சொல்லமுடியாத[ஆதியில்லா] பரமா அணுக்கள் [நிலவணு, நீரணு, தீயணு, காற்றணு] கேடுற்று[தீதுற்று] சிறிதுமில்லாமல்[யாவதும்] அழிந்து[சிதைவது] போவதில்லை[செய்யா]. புதியதாய் ஓர் அணு தோன்றி [பிறந்து] இன்னொன்றில் புகுவதும் இல்லை[புகுதா]. பழமையான நீரணு[முதுநீரணு] நில அணுவாக மாறாது[திரியா]. தாமாக ஓர் அணு இரண்டாகப் பிளப்பதில்லை[பிளப்பதும் செய்யா]. அரிசி அவலாய்ப் பரந்து விரிவது போல அணு பரந்து விரியாது[பரப்பதும் செய்யா]. அணுக்கள் உலாவித் திரியும். தாழ்வதும் உயர்வதும் உண்டு [செய்யும்]. நிலவணுக்களால் பொருந்திய[குலாம்] மலை கல்லாக மண்ணாகக் மணலாகக்[பிறவாகக் கூடும்] கூடும். அப்படிப் பிரிந்த பலவும் பின்பும் பிரிந்து பிரிந்து மீண்டும் தனித்தனி அணுவாகும் [தம் தன்மையவாகும்]. மரமாய் பொருந்தியிருக்கும் [மன்னிய] அணுக்கள் வயிரமாய் செறிவுற்று வன்மையுள்ள மரமாகும். மூங்கிலாகத் துளைபட்டும் இருக்கும். வித்தாகி முளைக்கும். தேய்வடையாத சந்திரனைப் போல[மதிபோல] உருண்டையாய் செழுமையான நிலப் பரப்பாகும்[வரைப்பாம்]. 

இவ்வணுக்கள் பூதங்களாகும் போது அவற்றின் அளவும் பெயரும் தொழிலும்:
நிறைந்த இவ்வணுக்கள்பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை காலாய் உறும்
துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படுமே
இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச்
சிக்கென்பதும் நீராய் இழிவதும்
தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திட மாட்டா ”
                                           - [மணிமேகலை: 27: 125 - 145]

எல்லாப் பொருட்களிலும் நிறைந்து இருக்கும் இவ்வணுக்கள் பூதமாய் [ஐம்பூதமாய்] தொழிற்படும்போது[நிகழின்] ஒவ்வொரு பூதத்துக்கும் வேண்டிய அணுத்திரள் தத்தமக்கு உள்ள அளவில் குறைந்தும் சமமாகவும்[ஒத்தும்] சேராது[கூடாது]. நிலம், நீர், தீ, காற்று என்று சொல்லப்படுகின்ற வரிசையில் நிலவணு ஒன்று, நீரணு முக்கால், தீயணு அரை, காற்றணு கால் எனச்சேரும்[உறும்]. இப்படிப் பொருந்தும் [துன்றும்] அணுக்களுள் எந்தப் பூத அணுக்கள் கூடுதலாக இருக்கின்றனவோ அவற்றால் [மிக்கவற்றால்] பெயரிட்டு அழைக்கப்படும் [பெயர் சொல்லப்படும்]. இத்தன்மையை [இக்குணத்து] அடைந்தால் அல்லாமல் நிலமாய் வன்மையுடன் இருப்பதும் [சிக்கென்பதும்] நீராய் பள்ளம் நோக்கி ஓடுவதும் [இழிவதும்] தீயாய் சுடுவதும் காற்றாய் வீசுவதும் ஆகிய தொழில்களைச் செய்யா. [The four States of Matter].

நம் பண்டைத்தமிழ் முன்னோர்களின் அணுநூல் [இறைநூல்] சொன்னதையே சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் கூறினார் என்பதை “அவ்வகை அறிவது உயிர் எனப்படுமே என்று 119வது அடியில் “எனப்படுமே” என அழுத்திக் கூறியுள்ளதால் அறியலாம்.

என்னவே ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த சீத்தலைச் சாத்தனார் காலத்துக்கு முன்பே அணுவையும் அணுவின் இயல்புகளையும் ஆராய்ந்து இவ்வளவு விரிவாக ‘அணு நூல்’ எழுதிய நம் முன்னோர்களின் ஆற்றலை என்னென்பது! நாமோ உள்ளங்கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அழைகிறோம். இன்றைய தமிழர்களாகிய நம் நிலைகண்டால் அவர்கள் நகைப்பார்களோ!
இனிதே,
தமிழரசி.

'பொருநை இலக்கிய வட்டம்' மலருக்காக 2002ல் எழுதியது.
இன்று அணுவைப்பற்றிய அறிவு பலமடங்காக வளர்ச்சி அடைந்திருப்பினும் இரண்டாயிர வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழரும் அணுவை ஆராய்ந்து அறிந்திருந்தனர் என்பதை இவை காட்டவில்லையா?

Thursday, 14 July 2016

மானுடத் துன்பங்கள் தீர்த்தருளே!

சங்ககால கந்தகோட்டம் [மாமல்லபுரம்]

நல்லைநகர் மேவிவளர் நாயகனே
         நாளும் நயப்பேன் நானுனையே
கல்லைக்கனி யாக்குநல் காரணனே
         காயும் மனதை கனியாக்குதியே
முல்லைநகை காட்டும் மோகனனே
         மோகம் தவிர்த்து எனையாளுதியே
மல்லைவாழ் என் கந்தையனே
         மானுடத் துன்பங்கள் தீர்த்தருளே!
இனிதே,
தமிழரசி.

Saturday, 9 July 2016

திருவோட்டு மரம் எங்கே?


திருவோட்டு மரம் எங்கே
          திருநீலகண்டர் வாழ்வில்
திருவருள் செய்ய என்றே
          திருநீலகண்டத் திறைவன்

திருவோடு கொடுத்தார் என்பர்
         திருவோடு தூக்கும் சுவாமியர்
திருப்பாதம் கழுவும் பக்தர்
         திருவோட்டு மரம் வளர்க்கும்
திருப்பணி செய்யா விடின்
         திருவோட்டு சுவாமி மார்கள்
திருவோடு இன்றி நாளும்
         திருவருள் செய்யா திருப்பர்
திருவோட்டு மரம் வளர்த்தித்
         தரையைக் காத்தல் நன்றே!
இனிதே,
தமிழரசி.
                            திருவோடு                             

குறிப்பு:
திருவோடு என்பது ஒரு மரத்தின் விதையில் உள்ள ஓடாகும். தேங்காய்ச் சிரட்டையைப் போன்றது. நல்ல நிழலைக் கொடுக்கும் அந்த மரத்தை திருவோட்டு மரம் என்பர். இந்த மரத்தை வளர்ப்பார் இல்லாததால் அழிந்து வருகிறது. இம்மரத்தை வளர்த்து ஓட்டில் கோயில்களுக்கு பூ எடுத்துச் செல்லலாம், மலர்ச்செடிகளை வளர்க்ககலாம், மரக்கறிகளை, பொருட்களை போட்டு வைக்கலாம். திருவோட்டுக் காய் 50 செ.மீ நீளம் உடையது. உங்கள் கற்பனைக்கு ஏற்ப அழகுப் பொருட்கள் செய்யலாம். மரத்தை வெட்டிக் கப்பல் கட்டப் பயன்படுத்தலாம். 

Friday, 8 July 2016

குறள் அமுது - (118)

குறள்: 
"நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு"                               - 336

பொருள்:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் போய்விட்டான் எனச் சொல்லும் பெருமை உள்ளது இவ்வுலகம்.

விளக்கம்:
மனிதவாழ்வின் நிலைஇல்லாத தன்மையைக் கூறும் இத்திருக்குறள் ‘நிலையாமை’ என்னும் அதிகாரத்தில் வருகிறது. தோன்றுவது யாவும் அழியும் என்பது உலக நியதியே. இந்த நியதிக்கு அளவுகோல் கிடையாது. மானுடப் பிறப்பின் தோற்றத்தில் தாய் வயிற்றினுள் கருவாய் இருக்கும் போதே எத்தனை வகையான அழிவுகளில் இருந்து தப்பிப்பிழைத்து பிறவி எடுக்கிறோம் என்பதை மணிவாசகர் தமது போற்றித் திருஅகவலில்
“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்” 
                                              - (ப.திருமுறை: 8: 4: 13 - 25)
எனக் கூறியுள்ளதால் அறியலாம்.

அப்படித் தப்பிப் பிழைத்த குழந்தை, பாலர், சிறுவர், இளைஞர், முதியோர் என எந்த வயது எல்லையும் இன்றி பிறந்தோர் யாவரும் இறப்பது உண்மையே. நேற்று என்பதை நெருநல் என்பர். ‘என்னிடம் உள்ளது’ என்றால் ‘என்னிடம் இருக்கிறது’ என்று பொருள் கொள்கிறோம் அல்லவா! அதுபோல் உளன் என்பது இருந்தவன் என்ற கருத்தைத் தரும். இந்த உலகில் நேற்று இருந்தவன் இன்று இருக்கமாட்டான் எனத் திருவள்ளுவர் சொன்னதையே முன்பின்னாக மாற்றி ‘இன்று இருந்தவன் நாளை இருக்கமாட்டான்' என்பதை உணராது திரிகின்ற[உழிதரும்] ஊமர்காள்! என எம்மை அழைத்து 
“இன்றுளார் நாளை இல்லையெனும் பொருள்
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க்காக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்மினே”           
                                            - (ப.திருமுறை: 5: 84: 9)
என திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத்தில் கூறிச் சென்றுள்ளார்.

திருவள்ளுவரின் கருத்தை பட்டினத்தாரும் தன் தாய்க்குக் கொள்ளி வைத்தபோது பாடிய கடைசிப்பாடலில்
“வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்”
என ‘நேற்று இருந்த தன் அன்னை இன்று எரிந்து சாம்பலாகிப் போனாள்’ என்கிறார்.

இந்த உலகத்தில் எவரும் நிலைத்து வாழ்ந்தோம் என்று மார்தட்ட முடியாது. ஏனெனில் நேற்று இருந்தவன் இன்று இருக்கமாட்டான் என்ற தற்பெருமையோடு மார்தட்டி வாழ்கிறதாம் இவ்வுலகு என்கின்றார் திருவள்ளுவர்.