Monday 17 December 2012

தென்கடல் தான் அடங்கிடுமா!

தென்றல் வந்து வீசிடுமா!

தெற்கே இருந்து வீசும் காற்றை பண்டைத்தமிழர் தென்றல் என்று அழைத்தனர். தென்றல் காற்று உடலை வருடிச்செல்லும் போது ஏற்படும் இன்பத்துக்கு ஈடுஇணையே இல்லை எனலாம். எம்மூர் தெற்குக் கடற்கரையில் கண்மூடி நின்று தென்றலை நுகர்ந்தவர்க்கு அதன் இதம் தெரிந்திருக்கும். தென்றல் காற்றை கண்மூடி நுகரக் கற்றுத் தந்தவர் என் தாய். இயற்கையின் சீற்றம் தென்றலைக்கூட நாம் நுகரமுடியாது தடுக்கும்.

உலகவரலாறும் இலக்கியங்களும் தென்கடலால் ஏற்பட்ட அழிவுகளைச் சொல்கின்றன.  கதிர்காமத்தின் நாட்டுப்பாடலான இதுவும் தென்கடலின் சீற்றத்தை “தென்கடல்தான் அடங்கிடுமா?” என்று அங்கு வாழ்ந்த தமிழ்மக்களின் நெஞ்சத்து ஏக்கத்துடன் எடுத்துச் சொல்கிறது. இன்று கதிர்காமத்தில் எத்தனை தமிழர் வாழ்கின்றனர்?

தீக்கோழி தினவெடுக்க 
          தீக்காற்று வீசயில
தூக்கணாம் குருவிக்கூடு
          துடிதுடித்து ஆடயில

கார்மேகம் கருகருக்க
          காகங்கள் கரையயில
ஊர்குருவி சத்தமிட்டு
          ஊரெல்லாம் பதபதைக்க

தேன்குருவி பாடிடுமா?
          தெம்மாங்கு கேட்டிடுமா?
தென்றல்வந்து வீசிடுமா?
          தென்கடல்தான் அடங்கிடுமா?
                             -  நாட்டுப்பாடல் (கதிர்காமம்)
                                       - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment