Friday 21 December 2012

அழியாப் பெருஞ்சீர் தருமே!


தனது தாயின் மடியில் பிறந்து வளர்ந்த மனிதன் தான் கண்ட அனுபவத்தால் தன்னிலும் பெரிய சக்தி ஒன்று இவ்வுலகை இயக்குகின்றது என்பதை உணர்ந்தான். தம்மை இயக்கும் சக்தியை இயக்கி என அழைத்தான். அந்த இயக்கியே மழையை, வெய்யிலை, சூட்டை, குளிரை தருகிறாள் என நம்பினான். தன்னைப் பெற்ற தாயைப்போல  இயக்கியும் தம்மைக் காப்பாள் என எண்ணி வணங்கினான். அந்த வணக்கமே தமிழரின் கொற்றவை வழிபாடாக உருவெடுத்தது. 

மனிதவாழ்க்கையின் தொடக்கத்தில் இயற்கையின் சீற்றத்துடனும், கொடிய விலங்குகளுடனும் மனிதன் செய்த போர்களில் வெற்றியைக் கொடுதவளை, கொற்கையாய் - வீரத்திருவுருவாய் படைத்தான். எனவே அவள் கையில் ஆயுதங்களை அள்ளி வழங்கி சயமங்கை ஆக்கினான். மனிதன் தன் வாழ்க்கையில் சிறிது பண்பட்ட போது தமக்கென செல்வத்தை சேர்க்கத் தொடங்கினான். அப்படி சேர்த்து வைக்கப்பட்ட செல்வம் நெருப்பாலும், வெள்ளத்தாலும் கள்வராலும் அழிந்தது. தமது செல்வத்தை பாதுகாத்து மேலும் மேலும் செல்வங்களை கொட்டித்தருவாள் என திருமகளைப் படைத்தான். அவள் கரங்களில் இருந்து பொன்னும் மணியும் சொரிய பெருந்திருவாய் ஆக்கினான்.

ஆதிமனிதன் வாழ்வு வீரமும் செல்வமும் சேர்ந்தது நன்கு பண்படப் பண்பட அறிவும் ஆற்றலும் வளர கல்வியின் தேவையை உணர்ந்தான். இயற்கையிடம் (இயக்கியிடம்) இருந்து தான் கற்ற கலைகளை தந்தவளை கலைமகளாகப் படைத்தான். அவள் கையில் வீணையும் ஏடும் கொடுத்து இசை, இயல் உணர்த்தும் செஞ்சொல் வஞ்சியாய்ப் போற்றினான். இயக்கியிடம் இருந்து தன் நல்வாழ்வுக்காக வீரம், செல்வம், கல்வி எனும் மூன்று சக்திகளையும் மனிதன் பெற்றான். அந்த மூன்று சக்திகளும் ஒன்றே என்பதை கம்பர் சரசுவதி அந்தாதியில் சொல்வதைப் பாருங்கள்.
பெருந்திருவும் சயமங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றின் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளும் தரும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ்சீர் தருமே

ஆதலால் நாமும் மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரையும் போற்றி வணங்கி இன்பவாழ்வு வாழ்வோம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment