Sunday, 8 May 2016

அன்னை


ம்மா என்ற போது
சையோடு வந்து
ன்பம் பொங்க அணைத்து
ன்ற பொழுது போல
வகை கொண்டு சொன்னாள்
“ஊரும் உலகும் மெச்ச
ன்றன் குழந்தை நன்றாய்
ற்றமுடனே படித்து
யம் ஏதும் இன்றி
ட்பம் பெற்றுப் புகழில்
ங்கி நாளும் வளர்ந்து
வியம் அகற்றி உலகின்
கல் நீக்கி வைப்பான்
                                              - சிட்டு எழுதும் சீட்டு 

சொல்விளக்கம்:
1. மெச்ச - மதிக்க
2. ஐயம் - சந்தேகம்
3. ஒட்பம் - அறிவு
4. ஔவியம் - பொறாமை
5. அஃகல் - வறுமை
குறிப்பு:
1985ம் ஆண்டு August 15ம் திகதி என் மகனுக்கு எழுதியது.

Saturday, 7 May 2016

அடிசில் 99

குரக்கன்மா அடை 
- நீரா -


தேவையான பொருட்கள்: 
குரக்கன்மா  -  1 கப்
தேன்  -  ½ கப்
மென்மையான தேங்காய்ப்பூ  -  2  மே.கரண்டி
உப்பு  -  ½  சிட்டிகை
பூவரசம் இலை  -  20

செய்முறை: 
1.  ஒரு பாத்திரத்துள் தேனை ஊற்றி இளநெருப்பில் சூடாக்கவும்.
2.  தேன் இளகி தண்ணீர் போல மாறும் போது [குமிழ் தோன்றமுன்] தேங்காய்ப்பூவைச் சேர்த்துக் கலந்து கொள்க.
3.  அடுப்பில் இருந்து இறக்கி குரக்கன்மா சேர்த்து நன்றாக்க குழைத்து இருபது சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க.
4.  ஒவ்வொரு உருண்டையையும் ஒவ்வொரு இலையினுள் வைத்து, பாதியாக மடித்து அழுத்தி வைக்கவும். [அரை இலை வடிவில்]
5.  மாவுடன் இருக்கும் அழுத்திய இலைகளை ஆவியில் 10 - 15 நிமிடம் அவித்து எடுக்கவும்.

குறிப்பு:
பூவரசம் இலைக்குப் பதிலாக வாழை இலை, foil பயன்படுத்தலாம்.

Friday, 6 May 2016

பூவரசமரமும் புங்குடுதீவும்

புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் மரம்[காவல்மரம்]
(இப்படத்தை அனுப்பிய நல்ல உள்ளத்திற்கு என் வாழ்த்து)

வான்புகழ் கொண்ட புங்குடுதீவின் புகழில் பெரும்பங்கு அங்கு வளர்ந்த மரங்களைச் சேரும். ஒவ்வொரு இன மரமும் ஒவ்வொரு வகையில் புங்குடுதீவின் பொருளாதார மேம்பாட்டிற்கு துணையாயின. அப்படி உதவிய மரத்தில் ஒன்று பூவரசு. புங்குடுதீவில் கோவிற்காடு என்று ஓர் இடம் இருந்தது. அதனை இப்போது வீராமலை என்கிறோம். அன்றைய கோவிற்காடு பூவரசமரக் காடாய் இருந்தை எத்தனை பேர் அறிவர்? இன்று ‘அங்கே எத்தனை பூவரசமரங்கள் இருக்கின்றன?’ Thespesia populnea என்பதே பூவரசமரத்தின் தாவரவியற் பெயராகும்.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை என்றார் கம்பர். ‘நல்ல தண்ணீர் இல்லாமல் போனதது நதியின் குற்றம் அல்ல’ என்கிறார். நல்ல தண்ணீர் இல்லாது இருப்பதற்கு யார் காரணம்? நல்ல நீரை உலகிற்கு சுரந்து அளிப்பன பசுமை போத்திய காடுகள் அல்லவா! நம் முன்னோரை சும்மா எடை போட்டுவிட முடியாது. புங்குடுதீவில் மட்டும் எத்தனை விதமான காடுகள்? பெருங்காடு, கள்ளிக்காடு, குறிச்சிக்காடு, நாயத்தங்காடு, விளாத்திக்காடு, கோயிற்காடு, கண்டல்காடு, பருத்திக்காடு, மணற்காடு என அந்தச் சின்னத்தீவினுள் காத்து வைத்திருந்தனர். நாம் என்ன செய்தோம்? அத்தனை காட்டையும் அழித்து அவற்றை பெயரில் மட்டும் வைத்திருக்கிறோம். என்னே எமது தொலை நோக்கு!

பூவரசமரம் பன்னெடுங்காலமாக புங்குடுதீவுக்கு எழில் தரும் மரமாக விளங்குகிறது. ஒருகாலத்தில் புங்குடுதீவின் கடற்கரை மணலில் கால்பதித்து நடந்த போது கண்ணுக்கு இதமாக காட்சி அளித்தது பூவரசு. புங்குடுதீவைச் சூழவுள்ள கடற்கரை மேட்டில் அணிவகுத்து நின்று கடல் அலையே வா!’ ‘என்னைத்தாண்டி ஊருக்குள் புக உன்னால் முடியுமா? எனக் கேட்டபடி மிக ஒய்யாரமாய் நிற்குமே. அந்த அழகே தனியானது. பூவரசு என்ற பெயருக்கு ஏற்றாற்போல் பூத்துக் குழுங்குமே! அதுவும் மங்கலமான மஞ்சள் நிறத்தில் பூவைப் பூத்து உதிர்ந்து வீழமுன் செம்மையாய் மாறி உதிருமே. முதுமையில் மனிதர் செம்மை அடையவேண்டும் எனும் இரகசியத்தை தன் பூவைச் செம்மையாக்கிக் காட்டி எம்மை வழிநடுடத்துமே!  

கடந்த வருடம் நான் புங்குடுதீவு சென்ற போது அந்த கடற்கரையோர மரங்களைக் காணவில்லை. நூற்றுக்கணக்கான வருடம் வாழக்கூடிய பூவரச மரங்கள் எங்கே போயின? ஒரேயடியாக போர்க்காலச் சூழலே அதற்குக் காரணம் என்று கூறி தட்டிக் கழித்துவிட முடியாது. நயினாதீவுக்கு போவோர் வருவோரை வெய்யில் வாட்டி எடுக்கிறது. இப்போது சீமெந்துச்சாந்து பூசிய தரையும் கட்டாந்தரையுமாய் காட்சிதருகிறது கடற்கரை. கானல் நீரைத்தேடி ஓடும் மான் போல மக்கள் நிழல் தேடி ஓட வேண்டிய நிலை. இருக்கும் மரங்களுக்குக் கீழும் வாகனங்களை நிறுத்தி வைத்து சீட்டு ஆடுகிறார்கள். பச்சிளம் குழந்தைகள் வெய்யிலில் வதங்குவதும் அவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. ஏன் இந்த நிலை. பூவரச மரங்கள் எமக்கு என்ன கேடு செய்தன?

பணத்தைக் கொட்டித்தரும் மரங்களென நாம் நினைக்கும் தேக்கமரம், முதிரைமரம், தென்னைமரம் யாவும் பெரும் சூறாவளி அடித்தால் முறிந்து வீழும். வீழ்ந்தாலும் மீண்டும் வளராது. பூவரசமரம்  சரிந்து வீழ்ந்தாலும் சரிந்து கிடந்தபடியே தளிர்த்து நல்ல காற்றையும் நிழலையும் தரும். நீங்கள் பிடுங்கி எறிந்தாலும் வேர் நன்றாக இருப்பின் மீண்டும் அந்த இடத்தில் வளரும் ஆற்றல் பூவரசமரத்திற்கு உண்டு. அதனாலேயே சேர அரசர்கள் அதனைப் போற்றி வளர்த்தார்கள். அதன் பூமாலையைச் சூடிமகிழ்ந்தனர்.

கண்ணகிப் பெண்ணரசிக்கு எடுத்த சிலப்பதிகார விழாவால் புங்குதீவின் பெருமை இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று சேர்ந்தது. நம் முன்னோர் சிலப்பதிகார விழா தொடங்குவதற்கு முன்பு பூவரசமரத்தை வழுத்தியது தெரியுமா? அதனை ஏன் செய்தார்கள் என்பதாவது தெரியுமா? சிலப்பதிகார விழாவை நாம் செய்தோம் என்று மார்தட்டுவோர் எவராவது பூவரசமரத்தின் பெருமையை ஏன் புங்குடுதீவு மான்மியத்தில் எழுதி வைக்கவில்லை என்பது வியப்புக்குரியது ஒன்றே! விழா நடத்தியவர்கட்குத் தெரியாமலா இருக்கும்?

எனது தாய் எழுதிய ‘வஞ்சியவள் வெஞ்சினம்’ என்ற ஒரு நாடகத்தில் சேரன் செங்குட்டுவனாக நடித்தேன். அது சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கண்ணகியின் கதையைத் தழுவிய நாடகம். சேரன் செங்குட்டுவன் தன் வாளுக்கு வஞ்சி மாலையைச்  சூட்டி, வஞ்சிப்பூ மாலையை பனம்பூ மாலையுடன் தொடுத்து தன் கழுத்தில் சூடி, வஞ்சிப்பூவை தன்முடிமேல் அணிந்து கண்ணகிக்கு சிலை வடிக்க கல் கொண்டு வர இமயமலைக்குப் புறப்படும் காட்சி. அந்த வஞ்சிப்பூ என்ன பூ தெரியுமா? பூவரசம் பூவே! வஞ்சிப்பூ.

சங்கத் தமிழர் வஞ்சிமரம் என்று சொன்ன மரத்தையே இன்று நாம் பூவரசமரம் என்கின்றோம். சேரன் செங்குட்டுவனின் வஞ்சிமாநகர் எங்கனும் வஞ்சிமரங்கள் - பூவரசமரங்கள் நிறைந்தே நின்றன. அதனாலே சேர இளவலான இளங்கோ அடிகளும் வஞ்சியின் பெருமை பேச வஞ்சிக்காண்டத்தை சிலப்பதிகாரத்தில் வைத்து வஞ்சியின் புகழ் பாடினார். [சிலர் பூவரசமரத்தை குடசம் என்று கூற சிலர் புரசம் என்பர். குடசம் என்பது வெட்பாலை; புரசம் என்பது முள்முருக்கு]

‘சேரன் செங்குட்டுவன்
“பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்து, என்
வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும்”           
                                                   - (சிலம்பு: 25: 148 - 149)
வஞ்சிமாநகரின் [பூவாவஞ்சி வஞ்சிமாநகர் பூக்காது] புறத்தே, என் வாளிற்கு பூவரசமாலை[வஞ்சிமாலை] சூட்டுவோம்’ என்கிறான், எனவும்

“புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்”   
                                                    - (சிலம்பு: 26: 46)
குற்றமற்ற பூவரசம் பூமலையை பனம்பூமாலையுடன்[போந்தை] தொடுத்து அணிந்த சேரன் செங்குட்டுவன்

“பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து”   
                                                    - (சிலம்பு: 26: 50 - 51)
வஞ்சி நகரில் பூத்த பூவரசம்பூவை[பூத்த வஞ்சி] தனது மணிமுடியில் அணிந்தான்’ எனவும் இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

சேரன் செங்குட்டுவன் போர் வெற்றிக்காக பூவரசமாலையைச் சூடிச்சென்று கனகவிசயரை வென்று, இமயமலையில் வெட்டிய கல்லை அவர்கள் தலையில் ஏற்றிவந்து கண்ணகிக்கு சிலை வடித்தான். இமயமலை வரை சென்று பகையரசரை வெற்றி கொண்ட சேரமாமன்னனின் மணிமுடிக்கு மேல் இருந்த பெருமை பூவரசம் பூவுக்கு உண்டு. 

ஹவாய் பூவரசமரம் - Hawaii Milo Tree

புங்குடுதீவில் கால்கொண்ட கண்ணகி அம்மனுக்கும் காவல் மரமாய் - கோயில் மரமாய் நிற்பதுவும் பூவரச மரமே. சேரனைக் கருத்திற் கொண்டே பூவரச மரத்தை வழுத்தி சிலப்பதிகார விழாவைத் தொடங்கினர். சேரனின் வஞ்சி நகரத்திற்கு எப்படி காவல் மரமாக பூவரசமரம் இருந்ததோ அப்படி புங்குடுதீவுக்கும் பூவரசமரம் காவல் மரமாக இருக்கும் என்று நம் முன்னோர் நம்பினர். ஹவாய்[Hawaii] நாட்டு  மக்கள் பூவரசு மரத்தை தமது உயிராய்க் காதலிக்கின்றனர். சேரன் செங்குட்டுவன் போல அதன் பூவைச் சூடிக்கொள்கின்றனர். அவர்களால் Milo என அழைக்கப்படும் பூவரசமரம் கடற்கரை ஓரங்களில் மிக செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.

சூளுக்குச் சென்று பிடித்து வந்த மீனை பூவரசம் சுள்ளி விறகை எரித்து சுட்டு உண்ணும் பழக்கம்  புங்குடுதீவு மக்களிடம் இன்றும் இருக்கிறது. அதுபோல் சங்ககால மக்களும் பூவரசம் விறகை எரித்து மீனைச் சுட்டு உண்டனர். சங்ககால பாண்மகள் ஒருத்தி தூண்டில் போட்டு மீன் பிடித்து பூவரசம்[வஞ்சி] விறகு கொண்டு சுட்ட வரால் மீனை, கள் குடித்த தந்தைக்குக் வாயினுள் ஊட்டுவதை
“நாண்கொள் நுண்கோலின் மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்” - (அகம்: 216: 1 - 4)
என ஐயூர் முடவனார் அகநானூற்றில் காட்டுகிறார்.

புங்குடுதீவைக் குறிக்கும் வல்லிபுரப் பொன்னேடு -  An inscription on gold plate found at Vallipuram, near Point Pedro, is dated in the reign of Vasabha (67-111) and records that Piyaguka Tisa built a vihara at Badakara (presumably, present Vallipuram), while the Minister, Isigiraya, was governor of Nakadiva (Nagadipa). Piyaguka, which is identical with Piyahgudipa or Puvangudiva where 12,000 monks are said to have resided, is modern Pungudutivu. (‘Journal of the CEYLON BRANCH OF THE ROYAL ASIATIC SOCIETY HISTORICAL TOPOGRAPHY OF ANCIENT AND MEDIEVAL CEYLON’ by C. W. NICHOLAS) கி பி இரண்டாம் நூற்றாண்டில் 12,000 பௌத்த பிக்குகள் [சிங்களவர்கள் அல்ல] புங்குடுதீவில் வாழ்ந்ததைச் சொல்கிறது. இந்தப் பௌத்த பிக்குகள் உடுத்த காவியுடைக்கு வேண்டிய பருத்தியையும் காவி நிறத்துக்கு வேண்டிய காவியையும் புங்குடுதீவே கொடுத்தது. துறவிகளின் ஆடைகளுக்கு காவி நிறத்தைக் கொடுத்த பெருமை பூவரசமரத்தையே சாரும்.

பூவரசமரத்தின் பட்டையை அவித்து துணிக்கு, தோலுக்கு சாயம் ஏற்றினர். மரத்தின் வயதிற்கு ஏற்ப மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறங்கள் கிடைத்தன. முப்பது வயதிற்கு கூடிய மரப்பட்டை சிவப்பு நிறத்தைக் கொடுத்தது. நூறு வயதிற்குக் கூடிய பூவரச மரப்பட்டை காயகல்பமாக மருந்துக்கு உதவியது. இலை, பூ, காய், பட்டை யாவும் மருந்தையும் சிகிரியா ஓவியத்தின் மஞ்சள், சிவப்பு நிறங்களுக்கான மையையும் நல்கி அன்றைய மக்களை வாழ்வித்தன. பூவரசமரங் காயிலிருந்தும் பட்டையில் இருந்தும் எண்ணெய் எடுத்தனர். அவை யும் மருந்தாயின. பூவரச மரத்தின் மருத்துவக் குணத்தை எழுதுவதானால் ஒரு புத்தகம் எழுதலாம்.

நம் கோயில்களில் நாதசுரத்துடன் வாசிக்கப்படும் தவில் அந்நாளில் புங்குடுதீவில் செய்யப்பட்டது என்பதை நம்புவீர்களா? என் தந்தை எனக்கு யாழ் நூலைக் கற்பித்த காலத்தில் எனது தாயர் இருபது பக்கங்களுடைய ‘தவில் வாத்தியம்’ என்ற புத்தகத்தை தந்தார். அதில் புங்குடுதீவில் வாழ்ந்த நீலாத்தையார் என்பவர் பூவரசமர வைரத்தில் தவிலின் பானையைக் குடைந்து தவில் செய்து வேதாரணியத்திற்கு எடுத்துச் சென்று விற்று வந்தார் என்ற செய்தி இருந்தது. புங்குடுதீவில் வாழ்ந்த அந்த நீலாத்தையார் சந்ததியினர் இதனை அறிந்திருப்பர். 

பூவரசமர வைரத்தில் கோடிக்கலப்பை என்று ஒருவகை கலப்பை செய்து வயல் உழுதனர். அம்மரப் பலகையில் நீர் ஊறாது என்பதைக் கண்டு படகு செய்யப் பயன்படுத்தினர்.  நூறு வயதான பூவரசமரப் பலகையில் செய்த கட்டிலில் படுப்பதால் வெண்குஷ்டம், தொழுநோய், கரும்படை, செம்படை போன்ற நோய்கள் மாறுவதையும் மலட்டுத் தன்மை நீங்குவதையும் நம்முன்னோர் அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் பூவரச மரத்தை நாட்டுத் தேக்கு என அழைத்து அதில் கதிரை, மேசை, யன்னல், கதவு என்பன செய்தனர். பூவரசமரம் மரச்சிற்பங்கள் செதுக்க நல்ல வாய்ப்பான மரமாகும். உணவுண்ணும் பாதிரங்களும் நீர் அள்ளும் பாத்திரங்களும் செய்தனர். ஆனால் பூவரசமரக் கட்டையில் இடியப்ப உரல் செய்வது மட்டுமே எமக்குத் தெரியும்.

இன்று நாம் பார்க்கும் பூவரசமரங்களில் பெரும்பாலானவை போறையாக இருப்பதே அதற்குக் காரணம் எனலாம். முறையற்ற முறையில் நாம் பூவரசமரத்தை வளர்க்கிறோம். அதனாலேயே அதில் போறை உண்டாகிறது. ஏழடி நீளமான தடியை வெட்டி, அரை அடியாழக் குழியில் நிலையாக நடுகிறோம். மழை பெய்யும் பொழுது அதன் காழுக்குள் நீர் போவதால் தாய்த்தடியில் போறை உண்டாகிறது. அதிலிருந்து உண்டாகும் மரமும் வைரமற்றுப்போகிறது. மெல்லத் தட்டினால் வீழ்ந்து விடுவேன் என்றபடி இன்றைய பூவரசமரங்கள் நிற்கின்றன. செழிப்பான பூவரசமரம் 30 அடி உயரமாக வளரக்கூடியது.

பூவரச மரங்களை கரும்பு நடுவது போல நடவேண்டும். கரும்பு நடுவது எப்படி என்று தெரியுமா? மண்ணில் மூடிவிட வேண்டும். பூவரசம் தடிகளை 15” - 20” நீளமான துண்டுகளாக வெட்டி, இரண்டடி அடி நீள, அரையடி ஆழக்குழியில் தளிர் நுனை மேலே இருக்க கிடையாக வைத்து,  3:1 என்ற விகிதத்தில் மண்ணையும் எருவையும் கலந்த மண்ணால் நன்றாக மூடிப் புதைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். நீங்கள் நடும் நிலத்தைப் பொறுத்து கிழமைக்கு ஒன்று அல்லது இரண்டுமுறை நீர் விட்டால் போதும். அதற்கு புங்குடுதீவுக் கிணற்று நீரே போதுமானது. தடியிலிருந்து இரண்டு, மூன்று  கிழமையில் துளிர்கள் வரத்தொடங்கும். அவற்றுள் நல்ல செழிப்பானதை வைத்துக் கொண்டு [ஒருகுழிக்கு ஒன்று] ஏனையவற்றை கிள்ளி எடுத்துவிட வேண்டும். பின்னர் இரண்டு கிழமைக்கு ஒருமுறை நீர் விட்டால் போதும். ஐந்து ஆறு மாதத்தின் பின் தண்ணீர் தேவையில்லை. இயற்கை தன் வேலையைச் செய்து கொள்ளும். இப்படி மண்ணினுள் புதைத்து வளர்த்தெடுக்கும் மரங்களில் போறை வருவதில்லை.
கமலை ஏற்றம்[மாடுகளால் நீர் இறைத்தல்]

நம்முன்னோர் பிராணவாயுவை[ஒட்சிசனை] கூடுதலாக வெளிவிடும் மரங்களில் பூவரசமரமும் ஒன்று என்பதை அறிந்திருந்தனர். அதனால் மாடு கொண்டு நீர் இறைக்கும் போதும், செக்கில் எண்ணெய் ஆட்டும் போதும் மாடுகள் சோர்ந்து போகாது இருக்க பூவரசமரங்களை அருகே நட்டு வைத்தனர். வீட்டிலும் மாட்டுத் தொழுவத்திலும் நட்டு நல்ல காற்றை சுவாசித்தனர். பூவரச இலையினுள் வைத்து கொழுக்கட்டை, அடை, என்பவற்றை அவித்து உண்டனர். கோயில்களில் அதன் இலையில் பொங்கல், சுண்டல் போன்றவற்றைக் கொடுத்தனர். ஈரத்தன்மை உள்ள மரமானதால் காட்டுதீயைக் கட்டுப்படுத்தியது. வேர் பரவி வளர்வதால் கடற்கரை ஓர மணல் அரிப்பை தடுத்து நிறுத்தியது.

பூவரசமரத்தின் அடிப்பகுதி எந்தக் கோடையிலும் வறண்டு போகாது ஈரத்தன்மை உடையதாக இருக்கும். வேண்டுமானால் பூவரசமரத்தைடியைக் கிண்டிப்பாருங்கள் அதன் உண்மைபுரியும். மண்புழுக்கள் உள்ள மண் வளமான மண்ணாய் இருக்கும். அதனால் உழவர்களின் தோழன் என்று மண்புழுவைச் சொல்வார்கள். உங்களுக்கு மண்புழு வேண்டுமா? பூவரசமரத்தின் பழுத்த இலைகளை பிடுங்கி பூவரச மரத்தடியில் தாட்டு தண்ணீர்விட்டு நான்கு நாட்களின் பின் கிண்டிப்பாருங்கள் அதில் மண்புழு இருக்கும். (வன்னிப்பகுதி மண்ணில் நான்கு ஐந்து நாட்களில் உண்டாகும் மண்புழு தீவுப்பகுதி மண்ணிற்கு சிறிது நாட்கள் கூடுதலாக எடுக்கலாம்). பூவரசின் பசுந்தழை தாவரங்களுக்கு நல்ல உரமாகும். மரங்கள் நன்கு காய்க்க வேண்டுமா? நெல் நன்கு விளைய வேண்டுமா? எருவை விட ஆவாரை, பூவரசு, வாதமடக்கி, எருக்கலை போன்றவற்றின் பசுந்தழை சிறந்தது.
அரக்கு

நம்மூர்களில் அரக்கைத் தரும் மரமாக பூவரசமரம், முள் முருக்க மரம் [கல்யாண முருங்கை], இலந்தை என்பன இருந்தன. ஒரு மரத்தில் அரக்குப் பூச்சிகள் இருந்தால் அவை இருக்கும் ஒரு கொப்பை வெட்டி இல்லாத மரத்தில் கட்டி, அரக்குப் பூச்சிகளை குடியேறச் செய்து அவை உண்டாக்கும் அரக்கை கொப்புகளில் இருந்து சுரண்டிச் சேகரித்தனர். அப்படி சேகரித்த அரக்கை கொம்பரக்கு என்பர். அவை மரத்தின் தன்மைக்கு ஏற்ப பல நிறங்களில் கிடைத்தன. இந்த அரக்கை நம் முன்னோர்கள் நெடுங்காலமாக  பட்டு, பருத்தி, தோல் போன்றவற்றை  சாயமிட; மரத்தளவாடங்கள், வீட்டு வளைகள், தரைகள் போன்றவற்றை மெருகேற்ற பயன்படுத்தியதோடு எமது தோலை வரட்சியில் இருந்து காக்கவும், உள்ளங்கையை பாதத்தை மென்மையாக்கவும் மருந்தாக்கினர். மேல் நாட்டு அழகு சாதனப் பொருட்களின் நிறத்துக்கும் மிருதுத் தன்மைக்கும் கூட அரக்கே பயன்படுகின்றது. அதனால் இன்று உலகெங்கும் இந்த அரக்கின் தேவை பல்கிப் பெருகியுள்ளது. 

புங்குடுதீவின் கோயில்காட்டு மக்களாவது அன்றேல்  பூவரசம் விருந்து வைப்போராவது பூவரசமரங்களை நட்டு சோலையாக்கி புங்குடுதீவின் நறும்புனல் இன்மையை நீக்குவார்கள் என நம்புகிறேன். புங்குடுதீவின் காவல் மரமான பூவரச மரத்தை பொன்போல் காத்து வளர்த்து, நம் ஊரின் வெப்பத்தை தணிவித்து, தண்ணீரைக் கனிவித்து, நல்ல காற்றை சுவாசிப்பதோடு பொருளாதாரத்தையும் பெருக்குவோமா?
இனிதே,
தமிழரசி.

Thursday, 5 May 2016

வாழ்த்துவது எப்படியோ!



மனித உள்ளத்தை இயற்கையின் இன்பங்கள் கவர்ந்தன. உண்மையான இன்பங்கள் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. அந்த இன்பக்கொடை அவனை மிருக நிலையிலிருந்து தனித்தன்மையுடைய மனிதநிலைக்கு உயர்த்தியது. மானுடத்தின் அந்தத் தனித்தன்மையை உணர்ந்தவன் தமிழன். அவன் அநுபவத்தால் கண்டு ஆராய்ந்து அறிந்த உண்மைகள் பல கோடி. அதில் ஒன்று ‘இன்பமாக வாழ்க’ எனப் பிறரை மனமகிழ்ச்சியுடன் இனிமையாக வழ்த்துதலாகும். வாழ்த்துவதையும் இனிமையாக மகிழ்ச்சியோடு வாழ்த்த வேண்டும் என வாழ்த்துவதற்கு இலக்கணம் வகுத்தவனும் தமிழனே!

வாழ்த்துவதையும் நான்கு வகையாகப் பிரித்து இலக்கணம் வகுத்தான் தமிழன் என்பதை தொல்காப்பியம்  காட்டுகிறது. தொல்காப்பியர் வாழ்த்தணி பற்றிச் சொல்லுமிடத்தில் இயன்மொழி வாழ்த்து, புறநிலை வாழ்த்து, செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து என நால்வகை வாழ்த்துக்களைக் காட்டித் தந்துள்ளார். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் இயன்மொழி வாழ்த்து மூன்று என்கின்றார். ‘இயன்மொழி’ என்றும் ‘வாழ்த்து’ எனவும் ‘இயன்மொழி வாழ்த்து’ என்றும் பிரித்துச் சொல்கிறார். இவற்றுள் வாழ்த்து - வாழ்த்தியல் என்ற பெயரில் மிக அழகாக எடுத்து ஆராயப்பட்ட ஒன்று.

வாழ்த்தியலில் எப்படி வாழ்த்துவது என்பதைக் காட்ட சங்க இலக்கியச் செய்யுள்களில் இருந்து சில செய்யுள்களை எடுத்துக்காட்டியுள்ளனர். பிறரை வாழ்த்தும் போது எப்படி வாழ்த்துவது என்பதை அறிய புறநானூற்றில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை இரு வேறு சங்ககாலப் புலவர்கள் எப்படி வாழ்த்தினார்கள் என்பதைப் பார்ப்போம்
நெட்டிமையார் என்னும் சங்ககாலப்புலவர்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே
                                                    - (புறம்: 9: 11)
‘நல்ல நீரையுடைய பஃறுளி ஆற்று மணலினும் பல ஆண்டுகள் வாழ்வாயாக!’ என வாழ்த்த

காரிகிழார் எனும் சங்ககாலப்புலவர் 
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும! நீ நிலமிசையானே
என வாழ்த்தியுள்ளார். இவ்விரு புலவர்களில் ஒருவரேனும் மனதிற்கு நெருடலைத் தரும் எந்தச் சொல்லையாவது வைத்து வாழ்த்தி இருக்கிறார்களா? இல்லையே. இவர்கள் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்தி இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேலே ஓடிவிட்டது. சங்ககாலத் தமிழர் காட்டுவாசிகள் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். நாகரீக உச்சியில் வாழ்கிறோம் என நினைக்கும் நாம் பிறரை எப்படி வாழ்த்துவது எனத் தெரியாது வாழ்கிறோம். நாம் எப்படி வாழ்த்துகிறோம் என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா?

பிறந்த நாள் வாழ்த்து வாழ்த்தும் போது நோய்,நொடி இல்லாமல் வாழ்! என்றும் துன்பம் இல்லாமல் வாழ்!’ எனவும் வாழ்த்துகிறோம். புதுமனை புகுவிழாவிற்கு வறுமையின்றி வாழ்க! என வாழ்த்துகிறோம்’ அரங்கேற்ற மேடைகளில் ஏறி அரங்கேற்றம் செய்த பிள்ளைகளை வாழ்த்தும் பெரிய அறிஞர்களும் அரங்கேற்றம் என்பது முடிவல்ல,” “அரங்கு ஏறிவிட்டோம் என்று கலையை மூட்டை கட்டி வைக்க வேண்டாம் என்றெல்லாம் புத்திமதி கூறுவதாக எண்ணி வாழ்த்துகின்றனர். 

இவற்றைவிட திருமண மேடைகளில் வாழ்த்துவார்களே அவற்றை என்னென்று சொல்வது? திருமணவிழாவில் பாடும் தேவாரங்களை யாரும் செவிமடுப்பதில்லையா? உண்மையில் எனக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதில்லை. சாஸ்திர சம்பிரதாயம் தெரியும் என நம்மவர் நம்பும் ஐயர்மாரே 
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை
எனப்பாடுவது மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று.

ஒருவரை நாம் நோய், நொடி இல்லாமல் வாழ்!’ என்று வாழ்த்தும் போது நம்மை அறியாமலேயே நோய், இல்லை என்ற இரு மங்கலம் இல்லாத சொற்களைக் கூறுகிறோம். அதுபோல் துன்பம் இல்லாமல் வாழ்என வாழ்த்தும் போதும் துன்பம், இல்லை என இரு மங்கலம் அற்ற சொற்களைச் சொல்கிறோம். நம் வாழ்த்தைக் கேட்டு, நாம் வாழ்த்தியவரே ‘எனக்கு நோயா? துன்பப்படுகிறேனா? எனக் கவலைப்படக் கூடும். அரங்கேற்றம் என்பது முடிவல்ல என்று சொல்லும் போது முடிவு என்ற செல்லையும் அரங்கு ஏறிவிட்டோம் என்று கலையை மூட்டை கட்டி வைக்க வேண்டாம் எனும் போது மூட்டை கட்டி, வேண்டாம் போன்ற மனதிற்கு இன்பம் தராத சொற்களையும் அவை கூடாத சொற்கள் என்பதை உணராது சொல்கிறோம். இப்படி வாழ்த்துவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றோகும்.

திருமணவிழாவில் “மண்ணில் நல்லவண்ணம் வாழ்க!” என வாழ்த்தலாம். ஆனால் ‘நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை’ என்ற அடுத்த அடியில் வரும் குறை, இல்லை இவ்விரு சொற்களும் மங்கலச் சொற்கள் அல்ல. ‘நம் வாழ்த்து ஒருவரை மகிழ்விக்க வேண்டும். அதுவே எரிச்சலை மூட்டுவதாகவும் மனவருத்தத்தைத் தருவதாகவும் இருக்கக் கூடாது. அதனால் நம் முன்னோர் வாழ்த்தும் போது மங்கலச் சொற்களால் நல்ல மனதோடு வாழ்த்துங்கள் என்றனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? எவராவது அவற்றைக் கண்டு கொள்கிறார்களா? அல்லது எப்படியும் வாழ்த்தலாம் என்ற எண்ணமா? நம்மவர் நிலையைப் பார்க்கும் போது நாம் தமிழரா? எங்கே? எப்போது தொலைத்தோம் எம் தொன்மைகளை? எனக் உரக்கத் குரல் எழுப்பிக் கேட்கத் தோன்றுகிறது. எமது வருங்கால இளம்பிள்ளைகள் பண்டைத்தமிழர் பண்பாட்டை அறிந்து கொள்வதற்காக இதனை எழுதுகிறேன். நானும் இதனைப் பதிவு செய்யாதுவிடின் யார் செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நம் முன்னோரிடம் இருந்த தலைசிறந்த பண்பில் சிலவற்றை இவ்விடத்தில் சொல்லாம் என நினைக்கிறேன். நாம் உண்ட உணவின் மிச்சத்தைக் கொட்டச் சென்றால்  சாப்பாட்டைக் கொட்டாதே என்று சொல்லாது அங்க வையுங்க, நான் எடுத்து வைக்கிறேன் என்பார்கள். வீணாய் நாம் கொட்டுவதையும் வைப்பது என்று நிறைவாய் சொன்ன நம் முன்னோர் எங்கே? நாம் எங்கே? சிந்திப்போமா? 

அதுமட்டுமா விளக்கை அணைத்து விடு என்று கூறாது அந்த விளக்கை அமர்த்திவிடு என்பார்கள். தாலாட்டுப் பாடும் போது கூட இப்போது பாடுவது போல் 
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே” எனப் பாடமாட்டார்கள்.
கண்ணே நீ கண்வளராய்
கண்மணி நீ கண்வளராய்என்றே பாடுவர். கண்ணுறங்கு என்று பாடும் போது எங்கே தன்குழந்தை நீள் உறக்கத்தில் ஆழ்ந்து விடுமோ என்ற தாயின் உள்ளத் தவிப்பு கண் வளராய் எனப்பண்பாய் வளர்ந்துள்ளது. குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது நிறைவாக சுகம் சுகம் வளர் வளர்’ என மூன்று முறை கூறி நீர் வார்ப்பதும் இந்தப் பண்பின் ஒரு பகுதியே. இதனையே நம்மில் பலர் 'சோஞ்சோங் வளர் வளர்' எனச் கூறி குளிப்பாட்டுகின்றனர். ஏன்? எதற்கு? எதைச் சொல்கிறோம் என்ற தெளிவற்று சுகம் சுகம் என்பதை சோஞ்சோங் என்று கூறுகிறோம். இனிமேலாவது அப்படிக் கூறுவதைத் தவிர்ப்பது நன்று.

பக்கத்துவீட்டார் கைமாற்றாகக் கேட்ட பொருள், வீட்டில் இல்லை எனில் இல்லை என்று சொல்லமாட்டார்கள். அதனை வாங்கவேண்டும் எனக் கூறி, தங்களிடம் அது இல்லை என்பதை உணர்த்துவர். சின்னமுத்து, பொக்களிப்பான் போன்ற நோய்களை அம்மைஎனக்கூறுதலும் இவை போன்றதே. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மதிப்புக் கொடுத்து வாழ்ந்தனர். ‘என்னப்பு படிக்கிறீங்க?’ ‘என்னடா கண்ணு வேணும்?’ ‘சாப்பிட்டாயா செல்லம்?’ ‘என் மாணிக்கம் அல்லவா சாப்பிடு கண்ணா’ என்று கொஞ்சிக் கெஞ்சி குழந்தைகளை வளர்த்தனர். நம் முன்னோர் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நேர்த்தியாகச் செய்தனர்.

இப்படிப்பட்டோர் பிறரை வாழ்த்தும் போது எப்படி வாழ்த்தி இருப்பர்? அதனாலேயே திருமண விழாக்களில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!” என வாழ்த்தினர். கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, சுகம், வாழ்நாள் என்ற பதினாறும் இல்லறவாழ்வுக்குத் தேவை என்பது அவர்கள் கண்ட உண்மை.

நம் முன்னோர் இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன்பே எப்படி ஒருவரை வாழ்த்த வேண்டும் என்று இலக்கணம் வகுத்துத் தந்தும் நாம் தடுமாறுவது ஏன்? மனிதரை மட்டுமல்ல கல்லூரியை, ஊரை, நாட்டை, இந்த உலகை வாழ்த்துவதாக இருந்தாலும் மங்கலச் சொற்களால் வாழ்த்த வேண்டும். பாடசாலையின் கீதம், ஊரின் கீதம், நாட்டின் கீதம் [national anthem] பாடுவதாக இருந்தால் அமங்கலச் சொற்களை [வறுமை, வேதனை, கவலை, துன்பம், துயரம், அழுகை, இழிவு, நோய், மறத்தல், புலம்பல், முடியாது, சிறு]  வைத்து பாடல் எழுதி வாழ்த்துவது மரபல்ல. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்று பண்பட்டிருந்த தமிழினம் இன்று உருக்குழைந்து போதல் அழகா?

வாழ்த்துவதற்கு என்று ஒரு மரபு இருக்கிறது. அதுவும் பாடல்களாக - திரும்பத் திரும்பப் படிக்கும் பாடல்களாக [கல்லூரி கீதம்] எழுதும் போது வாழ்த்து, மந்திரமாக வலிமை பெறும். அத்தகைய கீதங்களை மரபு மாறாது எழுத வேண்டும். அதனால் தொல்காப்பியர் மரபியலில்
“மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லினான”              - (தொல்: மரபியல்: 92)

“மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” - (தொல்: மரபியல்: 93)

என்கின்றார். மரபு மாறும் போது ஒவ்வொன்றும் பிறிந்து பிறிந்து சிதைந்து போகும் என மிக நுணுக்கமாக எச்சரிக்கை இட்டிருக்கிறார். நாம் சொல்லும் சொல்லின் மரபுகள் மாறினால் அவற்றின் பொருள் மாறும். எமது தமிழ்ப்பண்பாடு இனம் சார்ந்தது மட்டுமல்ல நம் மொழி சார்ந்தது, நம் மண் சார்ந்தது. பல ஆயிரவருடங்களாகக் கட்டிக் காத்த மிகவுயர்ந்த உலகப்பண்பாடு அது. 

‘சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, நீர், திங்கள், சொல், கார்[மேகம்], பரிதி, யானை, கடல், உலகம்,  தேர், மலை, மா, கங்கை, நிலம் போன்ற பிற சொற்களும் மங்கலச் சொற்கள் என வெண்பாப் பாட்டியல் என்ற நூல் எனப்பட்டியல் இடுகிறது. மங்கலச் சொற்கள் மிகுந்த இரண்டு வாழ்த்துக்களைப் பார்ப்போமா? இவற்றுள் இருக்கும் அமங்கலச் சொற்களை நீங்களே கண்டுபிடியுங்கள்

மனோன்மணீயம் பெ சுந்தரம்பிள்ளை அவர்களின் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதிற்சிற்ந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”


நான் படித்த ‘இராமநாதன் கல்லூரி கீதம்’
இராகம்: இராகமாலிகை                             தாளம்: ஆதி
இராகம்: காம்போதி
“மணிபரந்த மாகடலே மாலுருவ மாயிடினல்
அணிகிளரு மவனிதயத் தாமரைகா ணம்மானை
அணிகிளரு மவனிதயத் தாமரையிற் றிருவெழுந்து
பணிகொள்ளும் பொன்னிலங்கை பண்பிதுகா ணம்மானை
பொன்னிலங்கை திருநுதலாய் பொலிவதுசீர் யாழ்பாணம்
என்றுபல ரேத்துவது மியல்பேகா ணம்மானை
என்றுபல ரேத்துநுதற் கெழிற்திலக மாய்விளங்கும்
பொன்றாத பொன்ராம நாதனிட மம்மானை
பொன்ராம நாதன்றன் கல்லூரி யம்மானை

இராகம்: பூபாளம்
அரிபடர்ந்த மதர்க்கண்ணா ரரிய யனுங்காணாத
விமலர்ச்சே வடிகாணும் வியப்புடையத்திக் கல்லூரி

இராகம்: பௌலி
பண்மிழற்றும் பாவையர்கள் பரமனது பதம்பாடி
விண்களிக்கச் செயும்கீர்த்தி விரகுடைத்திக் கல்லூரி

இராகம்: கல்யாணி
திங்கள்சேர் வான்முகத்தார் திருந்நீற்றுத் தேசுடனே
மங்கலஞ்சேர் வாழ்புவியில் மாண்புடைத்திக் கல்லூரி

இராகம்: ஆனந்த பைரவி
பொன்பூத்த மேனியர்கள் பூக்கொய்து பரமனுக்குப்
பண்மாலை யணிவிக்கும் பாங்குடைத்திக் கல்லூரி

இராகம்: பேஹக்
தித்தித்த தேன்மொழியர் தீங்கரும்பிற் சுவைமிகுந்த
முத்தமிழின் பயன்திளைக்கும் மகிழ்வுடைத்திக் கல்லூரி

இராகம்: கேதாரகௌள
கிஞ்சுகவாய் கன்னியர்சங் கீதநயம் பலவிசைத்து
விஞ்சையர்போல் வீணைபயில் வியப்புடைத்திக் கல்லூரி

இராகம்: சிந்துபைரவி
நித்திலத்தை யொத்தநகை நாண்மடவார் நிரைநிரையாய்ச்
சித்திரத்தைப் போலியங்கும் சீருடைத்திக் கல்லூரி

இராகம்: காபி
வன்னமணிப் பூவாடை வனிதையர்கள் பன்மொழியிற்
சொன்னகலை பலபயிலுஞ் சதுருடைத்திக் கல்லூரி

இராகம்: தோடி
பால்போன்ற நிலவொளியிற் பந்தாடிப் பூவையர்கள்
நூல்நூற்று நலம்புரியும் நோன்புடைத்திக் கல்லூரி
ஈழத்தழகைக் காத்திவ் விருநிலத்தை தன்புகழாற்
சூழ்ராம நாதன்ரன் கல்லூரி வாழியவே
தாவி லூழித் தண் ணளிக
மாவலி கங்கை மணலினும் மிகவே”

இராமநாதன் கல்லூரி கீதத்தில் பண்ணும், முத்தமிழும், சங்கீதமும், வீணையும், கலையும் பயில்வதால் ஈழத்து அழகைக் காத்து  தன்புகழால் உலகத்தை சூழச்செய்யும் கல்லூரி என வாழ்த்தப்பட்டுள்ளது. மந்திரமாய் சொன்ன அந்த வாழ்த்தால் இராமநாதன் நுண்கலைக்கல்லூரி; யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப்பீடமாகத் திகழ்கின்றது எனலாம். எந்த வாழ்த்தாயினும் நிறைந்த மனதுடன் மங்கலச் சொற்களால் வாழ்த்தி மகிழ்வோம். உலகெங்கும் இன்பம் சூழட்டும்.
இனிதே, 
தமிழரசி.

Wednesday, 4 May 2016

இன்புற்றிருக்க வழி என்ன?


ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன் ஐயனாரிதனார் என்னும் புலவர் வாழ்ந்தார். அவர் இயற்றிய நூல் புறப்பொருள் வெண்பாமாலை. இந்த நூலுக்கு உரை எழுதிய அந்நாளைய இலக்கண உரை ஆசிரியர்கள் ‘ஓம்படை’ இன்னது என்று எடுத்துக்காட்ட பழமையான பாடல் ஒன்றைத் தந்திருக்கிறார்கள். அது மன்னன் இன்புற்று இருப்பதற்கான வழியைச் சொல்கிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தாமே. எனவே நாமும் அந்த வழியைப் பின்பற்றி இன்புற்று இருப்போமே.

“ஒன்றினால் இரண்டு ஆய்ந்து மூன்று அடக்கி நான்கினால்
வென்று களம் கொண்ட வெல் வேந்தே - சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி
ஏழ்கடிந்து இன்புற்று இரு”                  
                                              - (பு.வெ.மா - எ.கா: 225)

ஒன்றினால் இரண்டை ஆராய்ந்து, மூன்றை அடக்கி, நான்கினால் ஆழ்கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் ஐந்தையும்  வென்று, ஆறையும்  பெருக்கி, ஏழையும் நீக்கினால் இன்புற்றிருக்கலாம் என்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு என்ற இந்த எண்களால் இன்புற்றிரு என்றால் எப்படி இன்புறலாம்? இந்தப் பாடல் சொல்லும் ஏழும் எவை எனத்தெரிந்தால் தானே நாம் இன்புற்றிருக்க முடியும்?

ஒன்று என்பது இங்கே அறிவைக் குறிக்கிறது. ஒன்றாகிய எமது அறிவினால் நன்மை, தீமை என்னும் இரண்டையும் ஆராய்ந்து; நட்பாய், பகையாய், நொதுமலாய் இருக்கும் மூன்று வகையானோரையும் சேர்த்து[அடக்கி]; சாம, பேத, தான, தண்டம் என்ற நான்கையும் பாவித்து உலகோரை வென்று; ஐம்புலங்களால் வரும் விருப்பங்கள் ஐந்தையும் வென்று; படை, குடிமக்கள், உணவு, ஆலோசகர், நட்பு, பாதுகாப்பு ஆகிய ஆறையும் பெருக்கி[அகற்றி]; பேராசை, கடுஞ்சொல், தண்டனை கொடுத்தல், சூதாட்டம், பெரும் பொருள் சேர்த்தல், மது அருந்துதல், அதிக காமம் என்ற ஏழையும் நீக்கினால் இன்பமாக வாழலாம் என இன்புற்றிருக்க வழி சொல்கிறது இந்த புறப்பொருள் வெண்பாமாலை உரைப்பாடல்.

Monday, 2 May 2016

மனைவி எனும் அருளமுதம் 4

காதல் மனையாள் கலங்குகினாள். தன் கருத்துக்கினிய கணவன் கருத்தழிந்து தந்திரங்களில் சிறந்து விளங்கும் சமண சமயத்தைத் தழுவி ஆதரிப்பதை எண்ணி. அவன் ஒரு தனிமனிதனா? இல்லையே ஒரு நாட்டின் தலைவன். சமுதாயத்தை நடத்திச் செல்ல வேண்டிய அரசன் அவன். ‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி அல்லவா?’ தன் கணவன் குடிமக்களை சமணர்களாக மாற்றுவதை பார்த்து இரத்தக் கண்ணீர் சொரிந்தாள். சோழப் பேரரசனின் மகளாகப்பிறந்த மங்கையற்கரசியார் பாண்டியன் மாமன்னனின் மனைவியாக வந்தவள்.
“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
          வரிவளைக் கைமட மானி
பங்கையற் செல்வி பாண்டிமாதேவி”
                                                 - (ப.தி.முறை: 3: 120: 1)
தான் பிறந்த குடியாகிய சோழப் பேரரசின் குடிப்பெருமையும் புகுந்த குடியாகிய பாண்டியப் பேரரசின் குடிப்பெருமையும் வாழ வழி செய்ய வேண்டியது அவள் கடமை. எனவே பாண்டியப் பேரரசின் மந்திரியாகிய குலச்சிறையாரை அழைத்து என்ன செய்வது என வினவினாள்.

அதற்கு குலச்சிறையார் சீர்காழியில் பிறந்து மூன்றுவயதில் தேவாரம் பாடி பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த திருஞானசம்பந்தரின் பெருமைகளைக் கூறினார். சமணர்களின் மந்திர தந்திரங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியவர் சம்பந்தரே என உணர்ந்த மங்கையர்க்கரசியார் அவரை அழைத்து வரப்பணித்தார். 

குலச்சிறையாரும் திருமறைக்காட்டில் [வேதாரணியம்] இருந்த சம்பந்தரை அழைத்து வர ஏற்பாடு செய்தார். மதுரைக்கு சம்பந்தர் வந்ததை அறிந்த சமணர்கள் அரசனிடம் முறையிட்டார்கள். அவனும் நீங்கள் செய்வதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டான். அதனால் மகிழ்ச்சி அடைந்த சமணர்கள்; சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தார்கள். மடம் தீப்பிடித்துப் பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தரும்

“செய்யனே திருவாலவாய் மேவிய அத்தனே
            எனை அஞ்சல் என்று அருள்செய்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
            பையவே சென்று பாண்டியற்காகவே”
                                                  - (ப.தி.முறை: 3: 51: 1)
 எனத் தேவாரம் பாட மடத்தின் தீ அணைந்தது. சம்பந்தர் இத்தேவாரத்தில் 
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” என இறைவனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அத்தீயின் வெம்மை பாண்டியனிடம் சென்று புகுந்தது. அவன் வெப்பு நோயால் அவதிப்பட்டான். சமணர்கள் வந்து மந்திரங்கள் சொல்லி மயிற்பீலியால் தடவியும் அவனின் நோய் மாறவில்லை. 

மங்கையற்கரசியாரும் குலச்சிறையாரும் பாண்டியன் நெடுமாறனுக்கு சம்பந்தரைப் பற்றிக்கூறினார்கள். பாண்டியனும் சம்பந்தரை அழைத்து வரச்சொன்னான். சம்பந்தரும் வந்தார். அவர் சிறுபிள்ளையாக இருப்பதைக் கண்ட மங்கையற்கரசியார் வருந்தினார். அதனை உணர்ந்த சம்பந்தரும் அரசிமாதேவியைப் பார்த்து

“மானினேர்விழி மதராய் வழுதிக்கு மாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலன் ஈங்கிவன் என்றுநீ பரிவெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அல்லேன் திருவாலவாய் அரனிற்கவே”
                                                  - (ப.தி.முறை: 3: 39: 1)
எனப் பதில் கூறினார்.  அரசி மகிழ்ந்தாள். பின்னர் அரசனின் விருப்பப்படி, வலப்பக்க நோயை சம்பந்தரும் இடப்பக்க நோயை சமணர்களும் நீக்குவதென்றும் யார் முதலில் நோயை நீக்குகிறார்களோ அவர்களது சமயத்தை அரசன் தழுவுவதாகவும் முடிவாயிற்று. 

சம்பந்தர் “மந்திரமாவது நீறு” எனத் தேவாரம் பாடி அரசனின் வலப்பக்கத்திற்கு திருநீறு இட்டார். வலப்பக்கம் குளிர இடப்பக்க வெம்மை கூடியது. பாண்டியன், தனது இடப்பக்கத்து வெப்பு நோயையும் சம்பந்தரையே நீக்கச் சொன்னான். பாண்டியனின் வெப்பு நோய் நீங்கிற்று.

பாண்டியனும் சம்பந்தர் சிறு குழந்தை என்பதையும் பொருட்படுத்தாது திருஞானசம்பந்தரைத் தொழுது எழுந்தான். நெல்வேலி செருக்களத்து வென்ற பாண்டியனாக - கூன் பாண்டியனாக இருந்த நெடுமாறன்  நிமிர்ந்து எழுந்தான். தன் கணவனின் மனக்கூனுடன் உடற்கூனும் நிமிர்ந்ததைப் பார்த்து வியந்தாள் பாண்டிமாதேவி. திருஞானசம்பந்தரின் ஆன்ம சக்தியால் வெப்பு நோயுடன் கூனும் போய் நின்ற சீர்நெடுமாறனாக அரசன் மாறியதைக் கண்டு மகிழ்ந்தார் மந்திரி குலச்சிறையார்.

பாண்டிய அரசனோ
“மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு
    மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவி”
                                                      - (ப.தி.முறை: 3: 120: 1)
எனத் தமிழ் விரகரால் [திருஞானசம்பந்தரால்] போற்றப்பட்ட மங்கையர்க்கரசியாரை மனைவியாகப் பெற்று அந்த அருளமுதத்தை மாந்தியதால் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவராக வரும் பெருமையும் பெற்றான்.  
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இக்கட்டுரை 1995ம் ஆண்டு 'கலசம்'இதழுக்காக 'சாலினி' என்ற பெயரில் எழுதியது.

Sunday, 1 May 2016

மக்களே மகிழ்ந்து கேண்மின்!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

வாழ்வின் பயன்பெரும் பணமென்று சாதிக்கும்
           மக்களே மகிழ்ந்து கேண்மின்
வாழப் பெரும்பணம் வேண்டுமோ அன்றியே
           வளர்பண்பு வேண்டுமோ சொல்
ஏழேழு தலைமுறை இழிவைத் தரும்வசை
           இயற்றும் பெரும் பணங்காண்
ஏதேனும் மற்றவர்க் கீயா திருப்பினும்
           இகழா திருத்தல் நன்று
பாழான பணமுளார் பலரையுந் தூஷிப்பர்
           பசித்தவர் முகங்கள் பாரார்
பணமென்ற மமதையில் தம்நிலை மறந்திடுவர்
           பரம்பொருள் தனயு மெண்ணார்
வாழ்வாங்கு வாழவே வளர்கல்வி அன்புடன்
           வண்மையுள மனது வேண்டும்
வடிவாம்பிகை கேழ்வ மாதுமை மணாளனே
           வழங்குகோ ணாசல வள்ளலே
இனிதே,
தமிழரசி.