Tuesday 5 March 2024

பண்டைத்தமிழரில் கொடை வள்ளிகள்

ஓதி [இராவணன் மனைவி}

இது என்ன கொடைவள்ளிகள்? என்று அற்புதமாகப் பார்கின்றீர்களா? கொடை வள்ளல்களைத் தெரிந்த எமக்கு கொடைவள்ளிகளைத் தெரியாது. வள்ளல் என்பதற்கு பெண்பாற் சொல் வள்ளி. இன்னொரு வகையில் சொல்வதானால் மனம் மகிழ்ந்து மற்றையோர்க்குக் கொடுப்பதில் சிறந்தவள் வள்ளி. இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தமிழ்ப் பெண்களில் பலர் கொடைவள்ளிகளாக இருந்தனர்.

சங்ககாலத்தில் கொடையிற் சிறந்த வள்ளல்கள் பலர் இருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. அவர்களிலே கடையெழு வள்ளல்களாக பலராலும் அறியப்பட்டவர்கள் பேகன், பாரி, மலையமான் திருமுடி காரி, கண்டீரக் கோப்பெரு நள்ளி, ஆய் அண்டிரன், வல்வில் ஓரி, அதிகமான் நெடுமான் அஞ்சி ஆகிய எழுவருமே. இவர்களைவிட தன் தலையை பெருந்தலைச் சாத்தனாருக்குக் கொடுத்த குமணன், ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதிகமான் போன்ற பல வள்ளல்களும் இருந்தனர்.

இந்த கொடைவள்ளல்கள் வாழ்ந்த காலத்தில் கொடைவள்ளிகள் இருந்தார்களா? ஆம் இருந்தார்கள். கடையெழு வள்ளல்களில் ஒருவனான கண்டீரக் கோப்பெரு நள்ளி பற்றியும் அவன் அரசு புரிந்த நாட்டின் செழுமையையும் சிறுபாணாற்றுப்படை

கரவாது நாட்டோர் உவப்பநடைப் பரிகாரம்

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நனிமலை நாடன் நள்ளி

- (சிறுபாணா: 104 -107)

என மிகமிக உயர்வாகச் சொல்கிறது. 

அவனின் தம்பியின் பெயர் இளங்கண்டீரக்கோ. ஒரு நாள் இளங்கண்டீரக்கோவும் அவனது நண்பன் இளவிஞ்சிக்கோவும் ஓர் இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் இளைஞர்கள். அங்கே சங்ககாலப் புலவரான  பெருந்தலைச் சாத்தனார் சென்றார். இளங்கண்டீரக்கோவை கட்டியணைத்து தழுவினார். ஆனால் அவர் இளவிஞ்சிக்கோவை தழுவவில்லை. ஏன் தன்னைக் கட்டியணைத்து தழுவவில்லை என பெருந்தலைச் சாத்தனாரைக் கேட்டான். அதற்கான காரணத்தை சொல்லும் இடத்தில் கண்டீரக் கோப்பெரு நள்ளியின் நனிமலை நாட்டில் வாழ்ந்த கொடைவள்ளிகள் பற்றிக் கூறியுள்ளார்.

கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து

புன் தலை மடப் பிடி பரிசிலாக

பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண்புகழ்

கண்டீரக்கோன் ஆகலின் நன்றும்

முயங்கல் ஆன்றிசின் யானே…….” - (புறம்: 151: 3 - 7)

தலைவன்/கணவன் [கிழவன்] நெடுந்தூரம் [சேட்புலம்] சென்றிருந்தாலும் பெண்களும்/மனைவியர் [பெண்டிரும்], தத்தம் தரத்திற்கு [தம் பதம்] ஏற்றவாறு சிறிய தலையுள்ள [புன் தலை] பெண்யானைக்கு [மடப்பிடி], நகைகளை [இழை] அணிவித்து பாடிவருவோருக்குப் பரிசாக [பரிசிலாக] கொடுக்கும் கொடையால் வரும் புகழையுடைய [வண்புகழ்] கண்டீரக்கோன் ஆதலின் [ஆகலின்] அவனை நன்றாகத் தழுவினேன் [முயங்கல்] நானேஎன்று கூறியுள்ளார்.

வீட்டில் தலைவன் இல்லாவிட்டாலும் அங்கே இருந்த பெண்டிர்: அம்மா, மனைவி, அக்கா, தங்கை, மாமி, மச்சாள் எவராய் இருந்தாலும் பாடிவருவோருக்கு தமக்கு முடிந்ததைக் கொடுத்தனர். அதனால் கொடை வள்ளிகள் இருந்ததை பெருந்தலைச் சாத்தனார் வரலாறாகச் சொல்லிச் சென்றுள்ளார் எனக் கருதுவது நன்றாகும். விஞ்சிக்கோவின் நாட்டுக்கதவு அடைத்திருந்ததை இதே பாடலின் பத்தாவது அடியில்

பாடுநர்க்கு அடைத்த கதவினை - (புறம்: 151: 10) 

என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


அகநானூற்றில் மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் சங்ககாலப் புலவர் அஃதை தந்தைஎன முற்கால சோழ அரசன் ஒருவனைச் சொல்கிறார். 

"செம்பொற் சிலம்பின் செறிந்த குறங்கின்

அங்கலுழ் மாமை அஃதை தந்தை 

அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் - (அகம்: 96: 10) 

இப்போரில் சேர பாண்டிய அரசர்களை அவன் வென்ற போதிலும் அஃதை தந்தை என அவனது மகளின் பெயரால் போற்றப்பட்டிருப்பது அவளும் புகழுடையவள் என்பதை வெளிச்சம் இட்டு காட்டுகிறது. இந்த சோழ இளவரசியை புறப்பொருள் வெண்பாமாலை உரையில் வரும் தனிப்பாடல் எடுத்துச் சொல்கிறது.

வள்ளி யாயோ அஃதையன்ன வள்ளி யாயோ

- (புறப்பொருள் வெண்பாமலை உரை)

அஃதை போன்ற கொடைவள்ளியா? எனக்கேள்வி எழுப்புகின்றது. அஃதை கொடைவள்ளியாக இருந்ததை நாம் அறியலாம்

இராவணன் மனைவி வண்டோமரோதியை பஞ்சகன்னியருள் ஒருத்தி என்று நூல்கள் சொல்லும். அவளும் கொடையில் சிறந்து விளங்கினாள் என்று மாந்தை மாண்மியம், விஸ்வபுராணம் என்பனவும் சொல்கின்றன.  அதனால் மேலே உள்ள இராவணன் மனைவியின்[ஓதி] படத்தை வரைந்த சேர அரசன் இரவிவர்மா அவள் கேட்போர்க்கு கொடுப்பதை படமாக வரைந்தார் என்பர். திருஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில் 

ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பலமறைகளே

பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே

- (தேவாரம்: 3: 116: 2)

என்று ஓதியை மிக உயர்வாகப் பாடிச்சென்றுள்ளார். அவரே இராவணன் மனைவியை இன்னொரு தேவாரத்திலும் 

வண்ணடமரோதி மடந்தை பேணினஅஞ்செழுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஓதி, வண்டமரோதி நாயன்மார்களால் போற்றப்பட்ட அறச்செல்வியாக, பேரரசியாக மிகப்பெருங் கொடைவள்ளி ஆக, பெருவாழ்வு வாழ்ந்து இயற்கையுடன் கலந்தாள். இப்படி பல நூறு கொடை வள்ளிகளை இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் காட்டினாலும் எம் தமிழ்ச்சாதி ஏனோ அவற்றைக் கண்டு கொள்வதில்லை.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment