Tuesday 2 November 2021

மாலைமாற்று எனும் சித்திரக்கவிதை



திருமணங்களில் மணமகனும் மணமகளும் மாலை மாற்றுவர். அவ்வாறு மாலைமாற்றும் பொழுது ஒருவரின் இடது தோளில் இருக்கும் மாலை மற்றவரின் வலது தோளுக்கும் வலது தோளில் இருப்பது இடது தோளுக்கும் வரும். மணிகளால் ஆன மாலைக்குள் ஏதாவது எழுதியிருப்பின் மாறிப்போட்டபின் அதனைப் படித்து அறிவது மிகக்கடினம். ஏனெனில் நாம் எதனையும் படிக்கும் பொழுதும் இடமிருந்து வலமாகப் படிப்போம். வலமிருந்து இடமாகப் படிப்பதில்லை.

தமிழில் உள்ள சில சொற்களை, சொற்றொடரை  நாம் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படிக்கமுடியும். எடுத்துக் காட்டாக திகதி, விகடகவி, தோடு ஆடுதோ, மேள தாளமே, காவாயோவாகா போன்றவற்றைச் சொல்லலாம். எப்படிப் படித்தாலும் அதன் கருத்தைத் தருவதே மாலைமாற்று. ஒரு சித்திரத்தினுள் அச்சித்திரக்கவிதையின் இலக்கணத்துக்கு அமைய எழுதும் கவிதை சித்திரக்கவிதை ஆகும். சித்திரக் கவிதைகளுக்கு என இலக்கணம் இருக்கிறது. இலக்கணநூல்களும் இருக்கின்றன. 

மாலைமாற்றுசித்திரக் கவிதைகளுள் ஒன்றாகும். அதனை 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த செய்யுள் அணியிலக்கண நூலானதடிண்யலங்காரம்சொல்கிறது. 

ஆனால்மாலைமாற்றுகவிதைகளை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானக்குழந்தையான திருஞானசம்பந்தர் தேவாரமாகப் பாடிப் பதிவு செய்துள்ளார். அவர் அவற்றை மாலைக்குள் எழுதினாரா என்பதை அறிய முடியவில்லை. எனினும் மாலைமாற்றுக் கவிதைகள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை உடையது என்பது தெளிவாகிறது.

திருஞானசம்பந்தர் பாடிய மாலைமாற்று தேவாரத்தில் ஒன்று.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ” 

                                                - (.தி.முறை: 3: 375: 4)

தொடக்கத்தில் இருந்து கடைசிவரையும் கடைசியிலிருந்து தொடக்கம் வரையும் படித்துப் பாருங்கள். நாக்கு சுளுக்குதா? பெரும்பாலும் மாலைமாற்று கவிதைகள் படிக்கக் கடினமானவையே. ‘யாழை வாசிக்கும் உண்மைப் பொருளானவனே பிறவித்துன்பம் வராமல் காத்தருள்வாய். மேருவை வில்லாக்கி வானவரைக் காத்து ஆகாயவடிவாய் சீர்காழியில் இருப்பவனே விரைவாக வாஎன்கிறார்.

நான் எழுதியமாலைமாற்று கவிதைமுத்து மாலையுள் மேலே படத்தில் இருக்கிறது. நான் எழுதிக் கீறிக்கொடுத்த முத்து மாலையை மிக அழகாக வடிவமைத்துத் தந்த சியாமளனுக்கு எனதன்பும் ஆசியும் என்றும் உரியன ஆகுக. 

இன்றைய தமிழருக்காக கொஞ்சம் இலகு தமிழில் மாலைமாற்றுக் கவிதையை எழுதியுள்ளேன். முத்து மாலையுள் எழுதியிருக்கும் கவிதையை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படிக்கலாம்.

தாயே மாயே தாவே தாளே நீதானே

தாநீளே தா வேதாயே மாயே தா

இதன் பொருள்: 

மாயே - மாயை வடிவானவளே

தாநீள் - முத்தி

வேதா - வேதமுதல்வி

மாயே - மாய்த்து 

தா - துன்பம்/வருத்தம்

தாயே! மாயை வடிவானவளே! தாளினைத் தருவாய். வேதமுதல்வியே நீதானே துன்பம் அற மாய்த்து முத்தியைத் தரவேண்டும்.

இக்கவிதையை இடமிருந்தோ வலமிருந்தோ பெரிய முத்துவரை [‘னே’] படிக்கும் போது ஒன்றையே மீண்டும் எழுதியது போலிருக்கும்.

தாயே மாயே தாவே தாளே நீதானே என வரும். தொடர்ந்து படித்தால்

தாநீளே தா வேதாயே மாயே தாஎனும் இரண்டாவது அடியை படிக்கலாம்.

இனிதே,

தமிழரசி. 

No comments:

Post a Comment