Monday, 7 September 2020

முருகா என்று ஒருமுறை சொன்னேன்

 

முருகா என்று ஒருமுறை சொன்னேன்

            உருகிடும் உள்ளத் துணர்வுடன் ஒன்றி

பருகிடத் தந்தாய் பைந்தமிழ் இன்பம்

            பழமுதிர் சோலைக் காட்டகம் தன்னில்

திருநிறை முதுமையும் திகழொளிர் மேனியும்

            துலங்கிட வந்த பழமையை எண்ணி

வருவாய் என்றே வயலூர் வந்தேன்

            வந்தருள் தருவாய் வயலூர் மன்னி!

இனிதே,

தமிழரசி.

Sunday, 6 September 2020

நானிலம் எங்கும் நோயறவே!



பூமகள் தேவி பதந்தனைப் போற்றி

பண்ணினில் பாடல் பழகி வாரீர்

காமகள் காளி களத்திடை நின்று 

காட்டிய வீரம் கற்றிட வாரீர்

பாமகள் வாணி பயின்றநல் வீணை

பக்குவம் தன்னைப் படித்திட வாரீர்

நாமகள் தாளிணை நயந்திட வாரீர்

நானிலம் எங்கும் நோய் அறவே!

இனிதே,

தமிழரசி.