Saturday, 31 December 2016

குறள் அமுது - (127)


குறள்:
“வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று”                   - 273

பொருள்:
மனதை அடக்கும் வலிமையில்லாக் குணமுடையவனின் தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்துக்கொண்டு வயலை மேய்ந்தது போலாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் கூடாஒழுக்கம் என்னும் அதிகாரத்தின் மூன்றாவது குறளாகும். திருவள்ளுவர் கூடாஒழுக்கம் எனும் இந்த அதிகாரத்தில் தவம் செய்பவர்களுக்குப் பொருந்தாத ஒழுக்கம் பற்றியே கூறுகிறார். இரண்டாயிர வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் இக்குகுறளில் தவவேடதாரிகளை, கள்ளச் சுவாமிமார்களை எமக்குக் காட்டித் தருவதற்காக  பசு, புலியின் தோலைப் போர்த்து பயிர் மேய்ந்த கதையைக் கூறியுள்ளார். அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டியும் இன்னும் நாம் திருந்தவில்லையே. அது ஏன்?

தவம் செய்வோர் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தமது மனதை அடக்கி ஆளும் வலிமை இருக்கவேண்டும். அப்படி தனது மனதை அடக்கி ஆளும் தன்மை அற்றவனையே ‘வலிஇல் நிலைமையான்’ என்று வள்ளுவர் அழைக்கிறார். நோயுற்ற ஒருவரைப்பற்றி விசாரிக்கும் பொழுது அவரின் நோயின் தன்மை, உடல்நிலை எப்படி இருக்கிறது, என்பதை அறிய ‘நிலைமை எப்படி இருக்கிறது?’ என்று கேட்பது எமது வழக்கமல்லவா! இக்குறளிலும் ‘நிலைமை’ தவம் செய்வோரின் தன்மையை, குணத்தைச்சுட்டி நிற்கிறது. 

உண்மையாகத் தவத்தை மேற்கொள்வோர் விருப்பு வெறுப்பு அற்றவராய் உலகப் பற்றுக்களை நீக்கி கருணை நிறைந்த நெஞ்சத்துடன் இருப்பர். தமக்குவரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே தவத்தின் உருவம்[தவத்திற்கு உரு] என்று திருவள்ளுவரே ‘தவம்’ என்னும் அதிகாரத்தில் சொல்கிறார். இத்தகைய குணங்கொண்ட தவவடிவை ‘வல்லுருவம்’ என இக்குறளில் குறிப்பிடுகிறார். தவத்தோருக்கு இருக்க வேண்டிய இந்த வலிய குணங்கள் இல்லாது தவவேடமிட்டுப் போலியாக வாழும் தவவேட தாரிகளை திருவள்ளுவர் ‘வலிஇல் நிலைமையான்’ எனச் சாடுகிறார். 

பசுவைப் ‘பெற்றம்’ என்றும் சொல்வர். பிறரது வயலிலுள்ள பயிரை மேய்வதற்கு தம் பசுவை விடுவோர் புலித்தோலைப் போர்த்தி அனுப்புவர். பசு புலித்தோல் போர்த்தி நிற்பதை அறியாத வயலின் சொந்தக்காரர் புலி பயிரை மேயாது என நினைப்பர். அத்துடன் புலி தம்மைக் கொன்றுவிடும் என்ற பயத்திலும் இருப்பர். தவவடிவத்தில் இருப்போரை நம்பி பெண்களை அனுப்புவோரும் சுவாமியார் தானே பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார் என நினைத்தும் அவர் சாபம் இட்டுவிடுவார் என்ற பயத்திலும் இருக்கின்றனர்.

பசு புலியின் தோலை போர்த்துக் கொண்டு பயிரை மேய்வது போல மன அடக்கமற்ற போலிச் சுவாமிமார் மேலான தவவடிவத்தில் புகுந்திருந்து பிறரது பெண்களை இன்ப நுகர்ச்சிக்காகத் துன்புறுத்துவர்.

Tuesday, 27 December 2016

சொக்கலிங்கம் இருக்கார்


சோழநாட்டில் ஆலந்துறை என்ற ஊரில் முதுசூரியர், இளஞ்சூரியர் என்ற இருவர் வாழ்ந்தனர். அண்ணனின் மகன் முதுசூரியர். தங்கையின் மகன் இளஞ்சூரியர். அதாவது அம்மான் மகனும் அத்தை மகனும் ஆவர். முதுசூரியர் காலில்லாத முடவர். இளஞ்சூரியர் கண்ணில்லாத குருடர். காலில்லா முடவரான முதுசூரியரை இளஞ்சூரியர் தன் தோளில் சுமந்து கொள்வார். இளஞ்சூரியருக்குக் கண்ணில்லாத காரணத்தால் முதுசூரியர் வழிகாட்ட இருவரும் ஒருவராய் எல்லா இடங்களுக்கும் சென்றுவருவர். பாலகராய் பள்ளி சென்ற காலத்தில் இருந்து ஒருவர் போலவே வாழ்ந்தனர். அதனால் இருவரும் இரட்டையர் என அழைக்கப்பட்டனர்.

கல்விகற்றுப் பெரும் புலவராய் மாறினர். ஒரு பாட்டின் முதல் இரு அடியை ஒருவரும் பின்னிரு அடியை மற்றவரும் பாடுவர். இருவரும் சேர்ந்து பலவகையான பாடல்களைப் பாடியுள்ளனர். அதனால்
“கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்”
என்று போற்றப்பட்டனர். பெருமை மிக்கது என்பதைக் கண்பாய என்பர். பலவகைப் பூக்களாலான பூச்சரத்தைக் கதம்பம் என்போம். அதுபோல் பலவைப் பாக்களாலும் பாவகைகளாலும் இயற்றப்படும் இலக்கியம் கலம்பகம் என அழைக்கப்படும். இரட்டையர் இருவரும் 
1. கச்சிக் கலம்பகம்
2. தில்லைக் கலம்பலகம்
3. திரு ஆமாத்தூர்க் கலம்பகம்
எனப்பல கலம்பகங்களைப் பாடியிருக்கின்றனர்.

ஒருமுறை இரட்டைப் புலவர் இருவரும் சோழநாட்டில் இருந்து மதுரைக்குச் சென்றனர். அங்கே வைகை ஆற்றில் குளிக்கச் சென்றனர். வைகை ஆற்றங்கரைப் படித்துறையில் குளிப்பதற்கு முடவரை இறக்கி வைத்துவிட்டு குருடர் தமது துணிகளைத் தண்ணியில் தோய்த்து எடுத்து தப்பித்தப்பி துவைத்துக் கொண்டிருந்தார். ஆற்றுவெள்ளம் ஒரு துணியை இழுத்துச் சென்றது. அதைக் கண்டார் முடவர். அவரால் நீரில் நீந்தமுடியாது. வெள்ளம் எடுத்துச் செல்லும் துணியை குருடரால் பார்க்க முடியாது. ஆதலால் வெள்ளத்தோடு போனதுணி கிடைக்கப்போவதில்லை.

‘தண்ணியில் நனைத்து நாம் அதை அடுத்தடுத்து அடித்தால் அது எம்மிடம் இருந்து தப்பியோடாதோ’ என ஆற்றுவெள்ளத்தில் துணி போய்விட்டது என்பதை 
“அப்பிலே[தண்ணீர்] தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ[தப்பிஓடாதோ]”
எனக் குருடருக்குச் சொன்னார். 

குருடரும் அதற்குக் கவலைப்படாமல் இந்தத் துணி போனால் என்ன? எமக்கு மாமதுரைச் சொக்கலிங்கம் இருக்கார்’ என்பதை
                                                            "- இப்புவியில்
இக்கலிங்கம்[துணி] போனாலென் ஏகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை” 
என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ஒருவகைத் துணியைக் கலிங்கம் என்பர்.

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வள்ளுவரின் சொற்களுக்கு இணங்க இரட்டைப் புலவர் பாடிய அந்த வெண்பா
“அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ - இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை”
இனிதே,
தமிழரசி.

Saturday, 17 December 2016

புதுமை என்ன சொல்லுவீர்!



மாற்றாந் தோட்ட மல்லிகையின்
         மணம் நுகரும் மானுடரே
காற்றும் மழையும் வந்தாலும்
         குடிலே எங்கள் சொந்தமாம்
நேற்று முளைத்த காளானும்
         நாளை இருப்ப தில்லையாம்
போற்றும் மானுட வாழ்க்கையின்
         புதுமை என்ன சொல்லுவீர்!
இனிதே,
தமிழரசி.

Friday, 16 December 2016

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்


கோடையிலே கொடுவேயிற் காயும் போதும்
          கொழுந்தமிழ் பாமழையிற் தோயவேண்டும்
வாடையிலே வெற்றுடல் நடுங்கும் போதும்
          வண்டமிழின் கதகதப்பிற் காயவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்
          பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்
ஓடையிலே ஒண்சாம்பர் கரையும் போதும்
          ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும் 
                                                        - மட்டக்களப்பு புலவர்

என்கின்ற இந்தப்பாடலுக்கு சொந்தக்காரர் விபுலானந்தர் காலத்தில் வாழ்ந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்புலவரே. அப்புலவரின் பெயர்  ஞாபகமில்லை. ஆனால் அவர் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது தெரியும். அவரின் பெயர் என்ன என்பதை மட்டக்களப்பு மக்களே உலகிற்கு அறியத்தர வேண்டும்.

இப்பாடலில் ஓர் இடத்திலும் என், என்னை, என்றன் போன்ற சொற்களை இப்பாடலை எழுதியபுலவர் எழுதவில்லை. சிறுவயதில் நான் பாடித்திரிந்த பாடல் இது. அத்துடன் என் தந்தை பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் மேடைகளில் எடுத்துச் சொன்ன பாடல்களில் இதுவும் ஒன்று. அதனாலேயே மிக்க துணிவுடன் இதனை இங்கு பதிவு செய்கிறேன்.

இப்பாடல் எப்படியெல்லாம் நிறம்மாறி வருகிறது என்பதை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன். சிலர் இப்பாடலை வலைத்தளங்களில்
“கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும்
           கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேண்டும்
வாடை தருமூதலிலே நடுங்கும் போதும்
           வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும்
பாடையிலே படுத்தூரை சுற்றும் போதும்
           பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும்
           ஒண் தமிழே சலசலத்து ஓடவேண்டும்” 
என எழுதுகின்றனர்.

தமிழ் விக்கிபீடியா ‘தமிழ்ப் பற்று’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பாடல்களில் இப்பாடலும் ஒன்று. அதில்
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்” 
என்று எழுதி அதனை மலையாளத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் எழுதியதாகக் குறித்துள்ளது. அந்தக் கவிஞரின் படத்தையும் தமிழ்விக்கிப்பீடியாவில் சச்சிதானந்தம் என்று அடித்துப் பார்க்கலாம்.  

வல்லமை வலைத்தளத்தில் “செம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்” என்ற தலைப்பில் மறவன்புலவு ச சச்சிதானந்தன் அவர்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன். அதில் 
“சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போது
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்”
என்ற வரிகளைப் பாரதிதாசன் இயற்றிய வரிகளாகத் தமிழ்நாட்டு மேடைகளில் ஓங்கி உரத்துச் சொல்வோர் சிலர் இருந்தனர். அந்த வரிகள் பாரதிதாசனுடையவை அல்ல, தவறாகச் சொல்கிறார்கள். ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க சச்சிதானந்தன் எழுதிய வரிகள் என அடிக்கடி முழங்குபவர் சிலம்பொலி செல்லப்பனார்’ என்று மறவன்புலவு ச சச்சிதானந்தன் எழுதியிருந்தார். சிலம்பொலி செல்லப்பனார் முழங்கும் பாடல் என மறவன்புலவு ச சச்சிதானந்தன் குறிப்பிட்ட  பாடலின் முதல் இரு வரிகளின் தன்மையும் கடைசி இருவரிகளின் தன்மையும் (எதுகை, மோனை) மாறுபடுகிறதே. அந்த மாறுபாடே அப்பாடல் ஒரு பண்டிதரின் பாடல் இல்லை என்பதைக் காட்டும். 

எண்பது வருடங்களுக்கு முன்வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப்பற்றாளரின் அற்புதவரிகளை இராஜபாரதி, காசியானந்தன், பாரதிதாசன், மலையாளத்து சச்சிதானந்தம் போன்ற பல கவிஞர்களின் பெயரில் பலவித மாற்றங்களுடன் எழுதுகின்றனர். அவை தவறு என்பதை இன்றைய ஈழத்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு அப்பாடலைப் பாடித்திரிந்த எனக்கு இருக்கிறது என்பதனால் எழுதுகிறேன்.
இனிதே,
தமிழரசி.

Wednesday, 14 December 2016

நேர்நின்று கேட்டனன்!


வண்டாடும் மலர்ச்சோலை வயலூரின் பதிவாழும்
கொண்டாடும் அடியவரின் குலம்வாழ அருள்செய்யும்
தண்டாடும் பாணியவன் தண்டமிற் சுவையதனை
நண்டாடும் குளக்கரையில் நேர்நின்று கேட்டனன்.