Thursday, 26 December 2024

திருக்கேதீச்சரத் திருவாசகமட நடேசரே


திருவாசகத் தேனுந்து மாநடம்
        தித்திக்கத் தித்திக்க ஆடிய
                திருவாசக மட நடேசரே

பெருவாசகம் பெருந்துறை நாதர்க்கு
        பாடிய மணிவாசகங் கேட்க
                பாலாவியில் மார்கழி நீராடி

திருக்கேதீச் சரத்திரு வாசகமடந்
        தேடியே வந்தமர் சிவனடியார்
                திருக்கூட்டத்திற் கருள் கௌரிபாகனே

ஒருவாசகம் சொல் எம்கல்மனம் 
        உருகிப்பெருகி அருவிநீர் சொரிந்து
                உலெகெலாம் மகிழ்ந்து வாழவே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
தேனுந்து - பேரின்பத் தேனை பிலிற்றும்/சிந்தும்
மாநடம் - பேரனந்தக் கூத்து
பெருவாசகம் - திருவாசகம் [பெருவாசகம் என்றும் சொல்வர்]
பெருந்துறை நாதர் - திருப்பெருந்துறைச் சிவன்
மணிவாசகம் - மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம்
பாலாவி - திருக்கேதீச்சரத்தில் உள்ள தீர்த்தம்
மார்கழி நீராடி - மார்கழி மாதத்தில் அதிகாலை 3;30 மணிக்கு பாலாவியில் குளித்தல்
ஒருவாசகம் - திருவாசகம் [மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிவன் "சிவாயநம" என ஒருவாசகத்தில் ஐந்தெழுத்து மந்திரமாக எழுதினார் என்றும் சொல்வர்,]    
[நமசிவாய - சிவாயநம]
கௌரி பாகன் - திருக்கேதீச்சர அம்பாளின் பெயர் கௌரியம்பாள். கௌரியின் பாகத்தில் இருப்பவன்.

Thursday, 12 December 2024

வடிவேற்கு மூத்தோனே!

                                                

ஓங்கரனே யென்றும் எமதன்பனே
            ஓயாதே எம்மிதையத் துடிப்பானாயே
வாங்காரும் கலையுடுக்கும் வடிவேற்கு மூத்தோனே
            வேண்டியவை வேண்டமுன் வழங்கும் கரத்தோனே
தாங்காரும் துன்பங்கள் தகர்த்து எறிவோனே
            தண்ணளியுந் தன்னிறைவும் பெருக்கும் தகையோனே
பாங்காரும் மோனநிலைப் பக்குவம் பகர்வாய்
            பைந்தமிழை பண்ணோடு பாடுவோர்க்கே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஓங்காரன் - ஓங்கார வடிவுவான பிள்ளையார்
ஓயாதே - இடைவிடாது
வாங்காரும் - விலைமதிக்க முடியாத
கலை - உடை
வடிவேல் - முருகன்
வேண்டியவை - தேவையானவற்றை
வேண்டமுன் - கேட்கமுன்
வழங்கும் - கொடுக்கும்
கரம் - கை
தாங்காரும் - தாங்கமுடியாத
தகர்த்து - உடைத்து
தண்ணளி - கருணை
தன்னிறைவு - மனநிறைவு/எல்லாவற்றுக்கும் ஆசைப்படாத தன்மை
தகையோன் - தன்னையுள்ளவன்/இயல்புடையவன்
பாங்காரும் - பக்குவம் நிறைந்த
மோனநிலை - மௌனநிலை
பக்குவம் - ஆற்றல்
பகர்வாய் - சொல்வாய்

Monday, 2 December 2024

வளர் நயினைப்பதியுறை நாகேஸ்வரியே!


                            பல்லவி
வருக வருகவே வரந்தர விரைந்தே
வளர் நயினைப்பதி உறை நாகேஸ்வரியே
                                                                        - வருக
                            அனுபல்லவி
இருகரம் குவித்து இறைஞ்சிடும் எமையாள
திருவிழி மலர்ந்திட திருநகை பொலிய
                                                                        - வருக
                            சரணம்
விற்பிடித்த விசயற்கு வேண்டி அருள்செய்ய
புற்றரவம் பூண்ட புயங்கனும் நீயும்
வற்கலையின் உடையோடு வனத்தின் இடையே
பொற்பதம் நோவ போந்த வடிவுடனே
                                                                        - வருக
திருமகள் மார்பனும் திசைமுக நாதனும்
இருவரும் காண்பரிய எரியழலாய் நின்ற
உருவிலானை உன்பாகத்து உகந்த உமையே
இருநிலம் வாழ்த்திட இணையடி சூட்டிட
                                                                        - வருக
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
வளர் - வளர்ச்சி/மூலசக்தி
நயினைப்பதி - நயினாதீவு
உறை - வாழும்
இறைஞ்சிடும் - தாழ்ந்து வணங்கும்
திருநகை - புன்னகை
பொலிய - துலங்க
விசயன் - அர்ச்சுனன்
வேண்டி - விரும்பி
புற்றரவம் - பாம்பு
பூண்ட - அணிந்த
புயங்கன் - பாம்பை அணியும் சிவன்
வற்கலையின் உடை - மரவுரி/மரநாரால் ஆன உடை
வனதத்தின் இடையே - காட்டின் இடையே
பொற்பதம் - பொன் போன்ற பாதம்
போந்த - போன
திருமகள் மார்பன் - திருமால்
திசைமுக நாதன் - நான்முகன்/ பிரமா
இருவரும் - திருமால், நான்முகன் ஆகிய இருவரும்
காண்பரிய - காணமுடியாதபடி
எரியழலாய் - தீப்பிழம்பு
உருவிலான் - உருவம் அற்றவன் [சிவன்]
உன்பாகம் - உனது பகுதி [வலப்பாகம்]
உகந்த - ஏற்ற
இருநிலம் - நிலம், நீர் இரண்டாலும் ஆன பூமி
இணையடி - இரண்டு திருவடிகளும் சேர்ந்து