Saturday 27 April 2024

வாதில் வென்ற வாதவூரர் - 1



மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தில் ஈழம் முழுவதும் புத்தமதம் பரவி, சைவசமயம் அருகிவந்தது. அங்கு வாழ்ந்த சைவசமயத்துறவி ஒருவர் சிதம்பர நடராசரின் பெயரை மந்திரமாகச் சொல்லித் திரிந்தார். அவரின் செயல் புத்தமதத்துறவிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. சைவத்துறவி புத்த மதத்தை மதிக்காது எந்நேரமும் சிதம்பர நடராசரின் பெயரைச் சொல்லித்திரிவதாக அரசனிடம் போய்ச் சொன்னார்கள். இலங்கையை ஆண்ட அந்தச்சிங்கள அரசனும் சைவத்துறவியை அழைத்துக் காரணம் கேட்டான். சிதம்பர நடராசனே முழுமுதற்கடவுள் அவரை அல்லால் பிறரை வணங்க முடியாது என்றார். அரசனும் அதனை எப்படி அறிவது என்று கேட்டான். சிதம்பரம் நடராசர் கோவிலுக்குப் போனால் அறியலாம் என்றார் சைவசமயத்துறவி. 

புத்தமதத் துறவிகளோ அதனை ஏற்கவில்லை. அந்தச் சிங்களஅரசன், பிறவியிலேயே ஊமையாக இருந்த தன்மகளையும், புத்தமதத்துறவிகளையும் அழைத்துக்கொண்டு சிதம்பரம் வந்தான். தில்லைவாழ் அந்தணர்கள், பிறமதத்தவர்கள் சிதம்பர நடராசர் கோயிலினுள் செல்லமுடியாதெனத் தடுத்தனர். புத்தமதத்துறவிகள் தமது மதமே சிறந்தது என சைவசமயத்தோரை வாதத்திற்கு அழைத்தனர். அந்த புத்தமதத்துறவிகளோடு வாதவூரராகிய மாணிக்கவாசகர் எதிர்வாதம் செய்தார். அரசனும், இளவரசியாகிய ஊமைப்பெண்ணும் அவையில் இருந்தனர். மாணிக்கவாசகரின் வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. விண்வாதமே செய்தனர்.

அவர்களின் வீண்வாதத்தைக் கண்ட மாணிக்கவாசகர், புத்தமதத்தோர் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதிலை விளக்க ஊமைப்பெண்ணைப் பார்த்து கேள்வி கேட்டார். அவள் பிறவி ஊமையாகவும், புத்தமதத்தவளாக இருந்தும் மாணிக்கவாசகரின் அருட்கனிவால் தமிழ்ப்புலமையும், சைவசமயத் தத்துவ நிறைவும் நிரம்பப் பெற்றாள். அவர் கேட்ட சமயதத்துவக் கேள்விகளுக்கு பதில் கூறினாள். அரசனும் அவையோரும் அதிசயித்தனர். அவள் பேச்சுத்திறமை மட்டும் பெறவில்லை. சிவசிந்தையளாகி, சிவதத்துவ விளக்கத்தை எடுத்தியம்பும் ஆற்றலும் பெற்றாள்.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் ‘திருச்சாழல்’ என்னும் பகுதியில் கேள்வி பதிலாக வரும் பாடல்கள் ஊமைப்பெண் கூறிய தத்துவவிளக்கத்தைச் சொல்லும்.

மாணிக்கவாசகர்:
“பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ!"
ஊமைப்பெண்:
"பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ”                 - திருச்சாழல்: 1

மாணிக்கவாசகர்:
"என்னப்பன் என்பிரான் எல்லார்க்கும் தானீசன்
துன்னம்பெய் கோவணமாகக் கொள்ளுவதும் என்னேடீ!"
ஊமைப்பெண்:
"மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ"            - திருச்சாழல்: 2

மாணிக்கவாசகர்:
"கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ!"
ஊமைப்பெண்:
"தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ"                - திருச்சாழல்: 3

மாணிக்கவாசகர்:
"அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ!"
ஊமைப்பெண்:
"நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ!"                - திருச்சாழல்: 4

மாணிக்கவாசகர்:
தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!
ஊமைப்பெண்:
தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகத்தலைமற்று அருளினன்காண் சாழலோ!        - திருச்சாழல்: 5                

அவளின் சிந்தையின் நிறைவை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment