Wednesday 29 March 2023

புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்



1. ஓங்கார கணபதியான் கோலோச்ச வந்திருந்து

  உலகுவாழ் தமிழரை உவந்தென்றும் புரக்க

வாங்கரும் கலையுடுத்த வாணுதலாள் பெற்றெடுத்த

  வயங்குவடி வேலன் வேண்டுவன தந்தருள

ஈங்கார அமர்ந்த இராஜ இராஜேஸ்வரியை

  இதயமலர்த் தாமரையில் இருத்தி நிதம்

பாங்காரும் வண்ணம் பகலிரவாய் வணங்கி

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்


2. கற்பனையின் காவியமாய் கற்றவர் மனத்திருந்து

  கற்பிக்கும் கற்பகமே கவினெழிலே கன்னிகையே

பொற்பரையாய் பொன்கொடு தீவுவந் தமர்ந்து

  புன்னகைக்கும் புதுமலரே புலவோர் நாவில்

நற்பரையாய் நாராயணியாய் இராஜ இராஜேஸ்வரியாய்

  நித்தமுமே வீற்றிருந்தருளு நித்தியமே யுனை

பற்பலரும் பாடிப்பரவ பத்தினியாய் கொழுவிருக்கும்

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்

 

3. எங்கள் குலநாயகியாய் எம்மனதில் இருப்பவளாம்

 எம்மண்ணின் பெருமையெலாம் மண்மணக்கச் செய்பவளாம்

திங்கள் பிறைசூடும் பெம்மானைப் பாகம்வைத்து

  தங்கள் குறைகூறும் அடியவயர் மகிழ

இங்கெழுந் தருளு இராஜ இராஜேஸ்வரியை

  இனியமன மேடையில் இயக்கி நாளும்

           பங்கமில் பைந்தமிழ்ப் பாமாலை சூடி

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்


4. திலகவொளி நெற்றியும் திகழொளி வதனமும்

  தவள நல்நகையெழ தருமருட் கையுடன்

உலகமுழுதும் உடையவளே ஓதுதற் கரியவளே

  உமையெனும் பெண்ணெழிலே உன்னடியர் மனயிருள்

விலகவினை யகற்றும் இராஜ இராஜேஸ்வரியாய்

  வெற்றித்திருவாய் விளங்கும் விமலியை வாழ்த்தி

பலகலையும் தந்திடுவாய் யெனயிரஞ்சி பொழுதும்

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்


5. செங்கயற் கண்ணியவள் சேர்ந்தோரை வாழவைப்பாள்

  செல்வங்கள் தந்திடுவாள் செய்பிழை பொறுத்திடுவாள்

அங்கயல் விழியினால் அனைத்தையும் காத்திடுவாள்

  அன்னையென அருகனைந்து அன்பினைப் பொழியும்

இங்கயல் அமர்ந்த இராஜ இராஜேஸ்வரியை

  இயங்கு மனமன்றில் நிறுத்தி யென்றும்

பங்கய முகத்தைப் பார்த்து மகிழ்ந்து

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்


6. ஆன்றோரின்  நெஞ்சமதில் ஆளுமையாய் குடியிருந்து

  ஆண்டருளும் ஆனந்த வெள்ளமே அம்மையே

சான்றோரின் உளத்திருந்து சால்பளிக்கும் சக்தியே

  சாமளையே சங்கரன் தேவியே எம்மை

ஈன்றாளாய் ஈந்துவக்கும் இராஜ இராஜேஸ்வரியாய்

  ஈடிலாப் புகழ்தந்து ஈழமதை வாழ்வித்தெம்

போன்றோர்க்கு பைந்தமிழைப் பரிந்து தா

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுதற்கே


7. எங்கெலாம் நீநிறைந்தாய் என்றரற்றும் அடியவர்க்கு

  எப்போதுமு டனுறைந்து உன்னருட் கண்ணினால்

தங்குதடை இன்றியே தண்ணளியைத் தருபவளே

  தவள நகையழகே தாயென இரங்கி

இங்கிதமாய் உலகாளும் இராஜ இராஜேஸ்வரியை

  இன்பமுற உள்ளத்து ளிருத்தி எந்நேரமும்

பொங்கியெழு கடலலை பரவியடி வணங்க

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்


8. வஞ்சியே வாழ்வாய் வந்தமர்ந்தவளே வடிவழகே

  வையத்தோர் வாழ வரமீய்வாய் தாயே

கெஞ்சியே கேட்போர்க்கு கேட்டதைக் கொடுப்பவளாய்

  கேளாதே கொடுத்தணைக்கும் கொற்றவை நீயாய்

நெஞ்சிலே நிலைநிற்கும் இராஜ இராஜேஸ்வரியை

  நோற்றிடும் அன்பர்க்கு நோய் யில்லையால்

பஞ்சின்மெல் சீரடியாள் வஞ்சிநிழல் அமர்ந்தநம்

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்.


9. ஓங்காரத் துறுபொருளே ஓய்வின்றி உழைப்பவளே

  ஒண்தமிழின் சாரமெல்லாம் ஓதி யுணர்ந்தவளே

ஆங்காரம் தீய்த்தழிக்கும் ஆதிசக்தி தாயே

  ஆடலான் தேவியே ஆடல் அணங்கே

தீங்காரும் செய்யவொண்ணா இராஜ இராஜேஸ்வரியை

  தீந்தமிழில் பண்ணமைத்து பாடித்தொழுது

பாங்காரும் மோனநிலை பரிந்துவக்கும் பத்தினியாம்  

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்.

   

10. ஆரணியாய் அம்பிகையாய் அகிலம் புரந்தளித்து

  ஆனந்தமாய் அற்புதமாய் ஆனநற் சோதியே

நாரணியாய் நாமகளாய் நானிலத்தோர் வாழ்வதற்கு

  நற்கருணைத் தன்மையால் நன்மைகள் தரவே

காரணியாய் காரணமான இராஜ இராஜேஸ்வரியாய்

  காதலால் கசிந்துருகிக் களித்திருபோர் நெஞ்சமரும்

பூரணியாள் பொற்பாதம் புகழ்ந் தேத்தி

  புங்குடுதீவுக் கண்ணகிதன் பூவடி போற்றுவோம்.

இனிதே,

தமிழரசி.   

No comments:

Post a Comment