Thursday, 28 November 2024

சிரித்திலங்கு சிங்கார வேலவா!


சித்தம் அதில் சிரித்திலங்கு சிங்கார வேலவா
            சித்தர் தமைக் கண்டிலேன் சிவன்நாமம் செப்பிலேன்
நித்தம் உனை நினைத்திலேன் நீளுலகில் தேடிலேன்
            நெஞ்சம் நைந் துருகு நிலை அறிந்திலேன்
புத்தம் புது வெள்ளமாய் பாயுமுன் அருள்நதியில்
            பாய்ந்து விளையாடிலேன் பெரு மூடமாய்
வித்தம் ஏதும் இன்றியே விழலுக்கு வீணாகும்
            விந்தை யுருவாய் வாழ எனை வகுத்தாயா
இனிதே,
தமிழரசி. 

சொல்விளக்கம்:
சித்தம் - மனம்
சித்தர் - எண்வகைச் சித்திகளையும் அடைந்தவர்கள்
செப்புதல் - சொல்லுதல்
நீளுலகு - நீண்ட உலகு
நைந்துருகுதல் - கசிந்துருகல்
அருள்நதியில் - அருளாகிய நதிதியில்
பெரு மூடம் - அறியாமையின் மேல் எல்லை
வித்தம் - பேரறிவு
விழலுக்கு வீணாதல் - பயனற்றுப் போதல்
விந்தை உருவாய் - வேடிக்கை உருவமாய்
வகுத்தாயா - வகைப்படுத்தினாயா?/பிரித்தாயா?

Monday, 11 November 2024

நின்று மறைந்தான்

என் தோட்டத்து மயில்

மாதுமையாள் பெற்றமரகத மயில் வாசன்
            மாமயில் விட்டிறங்கி வாசலில் வந்துநின்றான்
ஓதுமெய் ஞானம் ஓதி உணர வைத்து
            ஓங்காரப் பொருள் உரைக்க ஒளியானான்
பேதுமனத்து பேதமை தன்னால் வெதும்பி
            பெதும்பி கண்ணீர் பாய்ந்துகால் நனைக்க
ஏதுமெய் யறியா ஏழையோ நீயென
            எள்ளி நகைத்து என்னெதிர் நின்றுமறைந்தான்
இனிதே,
தமிழரசி. 

சொல்விளக்கம்:
மாதுமை - திருக்கோணேஸ்வரத்து அம்பாள்
மரகதமயில் வாசன் - முருகன்
ஓதுமெய்ஞானம் - ஓதும் மெய்ஞானம்/கற்பதால் வரும் உண்மைஅறிவு
ஓதி உணரவைத்து - கூறி அறியவைத்து
ஓங்கரப் பொருள் - ஓம் என்பதன் கருத்து
உரைக்க - கூற
ஒளியானான் - ஒளிவடிவம் ஆனான்
பேதுமனம் - மயங்கும் மனம்
பேதமை - அறிவின்மை
வெதும்பி - வெந்து
பெதும்பி -விம்மி
ஏதுமெய் - எது உண்மை
அறியா ஏழையோ - அறியாத பெண்ணா
எள்ளி நகைத்து - ஏளனமாகச் சிரித்தல்

Wednesday, 6 November 2024

தினம் அருளாய் கந்தா!


கருவாய் உயிர் சுமந்தே

கழல் தொழுதேன்

வருவாய் என நினைந்தே

வையத்திற் பிறந்தேன்

முருகாய் உனைக் கண்டே

மனம் கொண்டேன்

திருவாய் அகத் திருந்தே

தினம் அருளாய் கந்தா


இனிதே,

தமிழரசி.