Saturday, 23 July 2022

இதழ் தித்திக்கத் தித்திக்கத் தந்தான்

 

வள்ளி மணவாளன் வந்தான் என் எதிர்

வண்ணமயில் அதனில் வடி வேலுடன்

எள்ளி நின்றுநகைக்கும் ஏதிலார் போல் யானும்

எட்டிநடை போட்டு என்வழி சென்றேன்

தள்ளித் தள்ளிச் செல்லும் பான்மை கண்டு

தாவிவந் தணைத்து நகைத்து நின்றே

தெள்ளித் தெளிந்த தமிழ்ச் சுவை இதழ்

தித்திக்கத் தித்திக்கத் தந்து மறைந்தான்

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்

எள்ளி - இழிவாக, ஏழனம்

ஏதிலார் - அயலவர்

தித்திக்க - இனிக்க

Wednesday, 20 July 2022

சங்கத் தமிழ்ச்சொற்களுக்கு ஏற்ற ஆங்கிலச்சொற்கள் - 2




1.  புட்டகம் ·  swimwear


             


பரிபாடல்: 12

“புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்”

என சங்ககால பெண்கள் அணிந்த நீச்சல் உடையை பரிபாடல் சொல்கிறது. அது புட்டகம் என்ற நீச்சல் உடையை அணிய பொருத்தமான உடல் இருக்க வேண்டும் என்பதையும் மெல்லக் கோடிட்டுக் காட்டுகிறது.










2.  நாட்புரத்தல்  ·  day care



குறள்: 780

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து" எம்மைக் காத்து வளர்த்தோரே புரந்தார். புரத்தல் - காத்தல். தமிழில் நாள் என்னும் சொல் ஒரு நாளையும் பகலையும் குறிப்பதால் நாட்புரத்தல் என்ற சொல்லை உருவாக்கினேன்.







3. அற்றது  ·  digest




குறள்: 942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

அருந்தியது அற்றது போற்றி உணின்                                           

நாம் உண்ட உணவு குடலினுள் அற்றுப்போனதை உணர்ந்து மீண்டும் உண்டால் எம் உடலுக்கு மருந்தே வேண்டியதில்லை. அற்றது என்பது இக்குறளின்படி உணவு அற்று போதலைக் குறிக்கிறது.








4.  ஈரணி  ·  bikini (two piece swimwear)




பரிபாடல்: 7

“தையல் மகளிர் ஈரணி புலர்தர”


இளம் பெண்கள் உடுத்திருந்த நீச்சல் உடையான 'ஈரணி' காய்ந்தது என இப்பரிபாடல் அடி சொல்கிறது.









5.  வம்பு  ·  bra




அகநானூறு: 11

வம்பு விரித்தன்ன பொங்குமணல் கான்யாற்று”       - ஔவையார்

காட்டு ஆற்றங்கரை மணற் திட்டுக்கள் பெண்கள் அணிந்த வம்பு விரித்து வைத்தது போல் இருந்தனவாம். அதாவது bra வைக் கழட்டி வைத்தது போல் இருந்தன. பண்டைத் தமிழ்ப் பெண்களின் உடையின்  வரலாற்றை ஔவையாரே கூறியிருப்பது போற்றுதலுக்கு உரியதாகும்.





6.  வட்டுடை  ·  tunic




சீவகதசிந்தாமணி:

வட்டுடைப் பொலிந்த தானை வள்ளல்”

பண்டைய போர்வீரர்கள் முழங்கால் வரை உடுத்த உடை வட்டுடையாகும்.  அது போன்ற உடையை உறோமரும் உடுத்தனர். இடையில் வாரால் கட்டிக்கொள்வர். பசுநிரைகளைச் சீவகன் மீட்டுக்கொடுத்ததால் “வட்டுடைப் பொலிந்த தானை வள்ளல்” எனப் போற்றப்பட்டான். 












7. மிதியல்  ·  clogs




பதிற்றுப்பத்து: 3

மிதியல் செருப்பில் பூழியர் கோவே”


மரத்தால் செய்த காலணியே மிதியல் செருப்பு.

















8.  தொடுதோல்  ·  sandals



அகநானூறு: 368

தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்"

தோலை தொடுத்துக் கட்டி காலில் அணிவதால் தொடுதோல் என்று பெயர்.












9.  அடிபுதை அரணம்  · boots



 பெரும்பாணாற்றுப்படை: 69

அடிபுதை அரணம் எய்தி படம் புக்கு”

கால்அடி புதையும்படி காலை அரண் செய்வதால் அடிபுதை அரணம் என்றனர்.












10.  அரணம்  ·  shoes


 களவழி நாற்பது: 9

“................................... குறைத்திட்ட

காலார் சோடு அற்ற கழற்கால்"என்பதற்கு உரையாசிரியர் ‘வெட்டுப்பட்ட காலுக்கு இட்ட அரணத்தோடு அறுபட்ட வீரக்கழல் அணிந்த கால்கள்' என எழுதியுள்ளார்.

இனிதே,

தமிழரசி.

Sunday, 3 July 2022

எத்தனை மொழிகளில் திருக்குறளின் பொழிபெயர்ப்பு?

திருக்குறள் பிரெஞ் மொழிபெயர்ப்பு பிரான்ஸ் தொடர்வண்டியில் காட்சி தருகிறது.
Thirukkural displayed in French in the train in France

இவ்வுலகம் முழுவதும் வாழும் எம்தமிழ் அன்பர்கள் அனைவர்க்கும் எனது இனிய வேண்டுகோள்!

இன்று உலகின் பேசு பொருளாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இருக்கிறது. திருக்குறள் ஈராயிர ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. ஈராயிர ஆண்டுகள் கடந்தும் தமிழ் அன்னையின் இளமையையும் இனிமையையும் பொன்போல் காத்து வைத்திருக்கிறது. மனிதவாழ்வியலை நெறிப்படுத்தும் ஒரேயோர் உலகநூல் திருக்குறள் எனின் அது மிகையாகாது. உலக மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்பு எத்தனை மொழிகளில் உள்ளனவோ அவற்றை மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்தில் வைப்பதற்கு உள்ளனர். அதற்காக உங்கள் உதவியை நாடி நிற்கிறேன்.

ஈராயிர ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்து பிரான்ஸின் தொடர்வண்டியில் காட்சிப் படுத்தியுள்ளதை மேலேயுள்ள படம் காட்டுகிறது. எந்த அளவிற்கு French மொழிபெயர்ப்பு சரி என்பது எனக்குத் தெரியாது. அக்குறள் காதலன் ஒருவனின் மனநிலையை எடுத்துச் சொல்கிறது.

மாதர் முகம்போல ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி - (குறள்: 112: 8)

ஒரு காதலன் நிலவைப் பார்த்து, ‘காதலியின் முகம் போல அழகுமிளிர நீயும் இருந்தால் என் காதலை அடைவாய் எனக் கேலி செய்கிறான். சந்திரனை விடவும் காதலியின்[வாசுகியின்] முகம் மிகவும் ஒளியுள்ளது என்பது அவனது [திருவள்ளுவரின்] எண்ணம் போலும்.

வலைத் தளங்களில் தேடியதில்உலகில் உள்ள 120 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளனஎன ஒரு வலைத்தளம் சொல்கிறது. அவை என்னென்ன மொழிகள் என்பதை அது சொல்லவில்லை. 


திருவள்ளுவரின் ஈராயிரமாண்டு விழாவை பண்டிதர் கா போ இரத்தினம் எம் ஏ, பி.ஒ.எல்,         பண்டிதர் மு ஆறுமுகன் இருவரும் முன்னின்று கிளிநொச்சியில் 1969ல் நடத்தினர்.


திருவள்ளுவரின் ஈராயிர ஆண்டு விழா 1969ல் கிளிநொச்சியில் நடந்தது. அதற்காக நடைபெற்ற வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான பேச்சுப் போட்டியில் மத்திய பிரிவில் இராமநாதன் கல்லூரிக்காகக் கலந்து கொண்டேன். எனக்கு முதற்பரிசு கிடைத்தது. ஈராயிர ஆண்டு விழாவில் திருக்குறள் புத்தகம் ஒன்றைப் பரிசாகப் பெற்றேன். அது அந்நாளைய ஆங்கில - தமிழ் Lifco dictionary போல நீல நிறத்தில் ஆனால் அதைவிடத் தடிப்பாக இருந்தது. அப்புத்தகத்தில் ஐந்து மொழிகளில் திருக்குறளும் விளக்கமும் இருந்தன.1969ம் ஆண்டுகளுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நூல்கள் இன்றைய உலகில் தேவையற்ற குப்பையே. இந்நூல் இந்தியாவில் அன்றேல் மலேசியாவில் அச்சிடப்பட்டிருக்கலாம்.

அதில் 84 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இருப்பதாக எழுதியிருந்தது. அம்மொழிபெயர்ப்புகள் எந்தெந்த மொழிகள்? திருக்குறள் முழுவதுமா? அன்றேல் சிலபகுதியா? என்பவற்றையும் சொல்லவில்லை. எனவே 84 மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் 1969ல் இருந்திருந்தால் இன்று கூடுதலாக இருக்க வேண்டும். ஆனால் நான் தேடியதில் 2021 ஆண்டுவரை பகுதியாகவும் முழுவதுமாகச் சேர்த்து திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் 47 மொழிகளில் இருப்பதை அறிந்தேன். அதனைக் கீழே இணைத்துள்ளேன். 


திருக்குறளை உலகமொழிகளில் முதலில் மொழிபெயர்த்தோர்

எண்

மொழி

மொழிபெயர்த்தவர்

மொழிபெயர்த்த ஆண்டு

1

Malayalam

————

1595

2

Sanskrit

Sri Chakrapani Iyer

18th century

3

Latin

Constanzo Beschi 

(veeramaamunivar)

1730

4

French

Jacolliot Louis

1767

5

English

Nathaniel Edward Kindersley

1794

6

German

August Friederich Caemmerer

1803

7

Telugu

Sri Vidyananda Swami

1877

8

Kannada

R Narasimhachar

1910

9

Arabic

A M Ashame D Zubair

1917

10

Hindi

Khenand Rakar

1924

10

Marathi

Sane Guruji

1930

11

Gujarati

Najuklal Choksi

1931

12

Bengali

Nalini Mohan, Sanjal

1939

13

Czeech

Kamil V, Zvelebil

1952 - 1954

14

Polish

Umadevi, Wandy Dynowskiej

1958

15

Sinhalise

Govokgado Misihamy

1961

16

Russian

J J Glazov and A Krishnamurthi

1963

17

Burmese

U Myo Thant

1964

18

Dutch

D Kat

1964

19

Fijian

S L Berwick

1964

20

Malay

Ramily Bin Thakir

1964

21

Urdu

Muhamad Yusuf Kohan

1966

22

Chinese

Cheng xi

1967

23

Spanish

G Arul

1968

24

Swedish

Frykholm Yngve

1971

25

Finnish

Penthi Aalto

1972

26

Vaagri Booli

Kittu Sironmani

1976

27

Odia

Chittaranjan Das

1978

28

Saurashtra

Sankhu Ram

1980

29

Japanese

Shuzo Matsunaga

1981

30

Korean

Shuzo Matsunaga

1981

31

Rajasthani

Kamala Gurg

1982

32

Panjabi

Ram Murti DSharma

1983

33

Italian

Antonio Sorrentino

1986

34

Garo

A Antoni Selvadoss

2000

35

Konkani

Narayana Purushothama Mallaya

2002

36

Creole

Rama Valayden

2007

37

Thai

M Rajaram

2009

38

Indonesian

A S Kobalan

2012

39

Manipuri

Soibam Rebika Devi

2014

40

Mandarin ( Chinese)

Yu Hsi 

2014

41

Norwegian

Kevin Raja, Kowsihaa

2017

42

Danish

Marianne Steen Isak

2021

43

Santali

Rev. Fr. Richard V Joe

————

44

Greek

—————

————

45

Potuguese

—————

————

46

Hungarian (Magyar)

—————-

————

47

Khmer (Cambodian)

——————

————


மதக்கொள்கைகளை கூறும் இந்துமத கீதை - 75 மொழிகளில், புத்தமத திரிபீடகம் - 70 மொழிகளில், கிறிஸ்தவமத பைபில் - 704 மொழிகளில், இஸ்லாமியமத குரான் - 114 மொழிகளில் இன்று மொழிபெயர்ப்புகள் உள்ளன. இவையாவும் பகுதியாகவும் முழுவதுமாகச் சேர்த்தே மொழிகளைக் கூறுகின்றன. 

ஆனால் திருக்குறள் இன மொழி மதங்கடந்த நூல். தமிழர் வாழ்வியலை வளப்படுத்தும் பேராறு. மனிதப் பண்பை, ஒழுக்கத்தை, கல்வியை, செல்வத்தை, காதலை, இன்பத்தை, கோபத்தை, நீதியை, அறத்தை, நாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, உழவை, மருந்தை மிகமிகக் குறுக்கிச் சொல்லி விளங்க வைக்கிறது. மனிதரை நனி சிறந்த மனிதராக வாழச்செய்யும் தன்னேரில்லாத் தமிழ் நூலுக்கு எத்தனை எத்தனை மொழிகளில் மொழிபெயர்ப்புகள் இருந்தன, இருக்கின்றன என்பவற்றை அறியவேண்டிய கடமை எமக்கு இருக்கிறது அல்லவா? 

எனவே உலகம் தழுவி வாழும் தமிழ் நெஞ்சங்களே! நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் இருந்தனவா? இருக்கின்றனவா? எங்கே வாங்கலாம்? யார் மொழிபெயர்த்தது? எப்போது? என்பவற்றை அறியத் தாருங்கள். மேலே உள்ள பட்டியல் நீண்டு செல்ல அவை உதவும். திருக்குறள் மேல் பற்றுள்ள தமிழ் அன்பர்கள் இவற்றை தந்து உதவுவார்கள் என நம்புகிறேன்.

இனிதே,

தமிழரசி.

குறிப்பு:

இதன் கீழே உள்ள Commentsல் உங்கள் பதிலைத் தாருங்கள்.