குறள்:
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்” - 484
பொருள்:
தகுந்த காலத்தை அறிந்து ஆற்றலுடன் தொழிற்பட்டால் உலகத்தை அடைய நினைத்தாலும், அதனை அடையலாம்.
விளக்கம்:
காலம் என்பது எப்பவும் எமக்காகக் காத்திருப்பதில்லை. அது ஓடிக்கொண்டே இருக்கும். எனவே நாம் காலத்தை வீணாக்காக் கூடாது. அதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்களை எம்விருப்பம் போல எமக்கு வேண்டிய நேரங்களில் செய்ய முடியாது.
நாம் நெல் விதைக்கப் போகிறோம் என வைத்துக் கொள்வோம். நெல் விதைக்க வேண்டிய காலத்தில் வீணே காலத்தை போக்கிவிட்டு நல்ல காற்றோடு மழை பொழிந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் காலத்தில் விதைத்தால் நெல்லை அறுவடை செய்ய முடியுமா? நெல் முளைக்க முன்னே மழை வெள்ளம் அடித்துச் சென்று விடாதா? இதனையே ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பார்கள். எனவே நாம் செய்யும் எந்தச் செயலுக்கும் காலம் மிக முக்கியமானது.
இடம், இடன், இடத்து என்பன வலிமை, ஆற்றல் என்ற கருத்துக்களையும் தரும். உலகையே தன் வசப்படுத்த நினைப்பவனுக்கு மிக்க ஆற்றல் இருக்க வேண்டும். பிற ஆற்றல்களை விட ஒருவரின் மன ஆற்றலே எடுத்த செயலை முடிக்கவைக்கும். மன ஆற்றலுடையவராலேயே மற்றைய ஆற்றல்களையும் பெருக்கிக் கொள்ளமுடியும்.
எனவே உலகையே வெல்ல வேண்டும் என்று கருதுகிறீர்களா! அதை அடைய உங்களால் முடியும். மறந்துபோகாமல் அதற்கு ஏற்ற காலம் கனிந்துவரும் பொழுது உங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தொழிற்படுங்கள். நீங்கள் விரும்பியது போல் உலகமே உங்கள் கையில் இருக்கும் என்கிறது இத்திருக்குறள்.
No comments:
Post a Comment