குறள்: “யாதனின் யாதனின் நீங்கினான் நோதல்
அதனின் அதனின் இலன்” - 341
பொருள்: எதிலிருந்து எதிலிருந்து விலகி வாழ்கிறோமோ அதிலிருந்து அதிலிருந்து எமக்கு துன்பம் வருவதில்லை.
விளக்கம்: அன்பாகப் பேசுவது எப்படி என்பதை அறியாதோர் மற்றோருக்கு துன்பத்தைக் கொடுத்து தாமும் துன்பப்படுவர். வாய்ச்சுவைக்கு முதன்மை கொடுப்போர் அதனால் பல நோய்களுக்கு அடிமைப்படுவர். எனவே மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களாலும் வரும் ஆசையே எம்மை துன்பத்தில் தள்ளி வீழ்த்துகின்றன. இவற்றால் வரும் துன்பங்களுக்குள் நாம் வீழாது இருக்க, தாமரை இலைத் தண்ணீர் போல் எதிலும் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் நோதல் இல்லாது வாழலாம். துன்பம் இல்லா வாழ்வுக்கு அதுவே வழி.
எதனோடும் எவரோடும் ஒட்டாமல் வாழவேண்டும் என்பதைக் காட்டவே திருவள்ளுவர் இக்குறளை மேல் உதட்டோடு கீழ் உதடு ஒட்டாது சொல்லக்கூடியதாக இயற்றி இருக்கிறார். இக்குறளை ஒருமுறை சொல்லிப்பாருங்கள்.
“யாதனின் யாதனின் நீங்கினான் நோதல்
அதனின் அதனின் இலன்”
உங்கள் உதட்டுடன் உதடு ஒட்டுகின்றதா? உதட்டோடு உதடு ஒட்டினால், எங்கே உதடு நோவால் துன்பப்படுமோ என மிக நுணுக்கமாகப் பார்த்தே இக்குறளை இயற்றி இருக்கிறார்.
துறவறம் மேற்கொள்பவர்கள் உதட்டுடன் உதடு ஒட்டி உறவாடாதது போல உலக வாழ்வில் ஒட்டாது அவர்களுக்குரிய தவத்தைச் செய்யவேண்டும். அப்படி ஒட்டாது வாழ்வதால் உலக இன்பங்களால் வரும் துன்பங்கள் அவர்களை அணுகாது. ஆனால் நாம் பாதம் கழுவுகிறோம் என்றும் பல்லக்கு தூக்குகிறோம் என்றும் தவம் செய்வோரின் கால்களில் வீழ்ந்து வணங்கி பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கி உலக இன்பங்களுக்குள் இழுத்து வருகிறோம். பின்னர் அவர்கள் நிலைதடுமாறும் போது புழுதிவாரித் தூற்றுகிறோம். அதனால் நாமே துன்பம் அடைகிறோம். எவை எவை எமக்கு துன்பம் தருகின்றனவோ அவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும். அப்படித் துன்பங்களுக்கு காரணமானவற்றை புறம் தள்ளி துன்பமற்று வாழ்வதால் இன்பமாக வாழமுடியும்.
No comments:
Post a Comment