Monday, 9 April 2012

விரதங்களால் வாடின் ஞானம் என்னாவது?


ஈழத்தமிழர்கள்  இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன்பு கூட தம்மை சைவசமயத்தவர்களாக நியாயப் படுத்தியவர்கள். உலகெலாம் பரந்து வாழத்தொடங்கிய பின்பு மெல்ல மெல்ல இந்துசமயக் கருத்துகளின் பல வாய்ச்சொற்களுக்குள் அகப்பட்டு நின்று தம்மை இந்துசமயத்தவராகக் காட்ட முற்படுகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை பாடசாலைகளில் சமயபாடத்தைக் கற்பிப்பதில்லை. ஆதலால் கடந்த ஐம்பது அறுபது வருடங்களுக்கு மேலாக மாணவப்பருவத்தில் சமயங்கள் என்ன சொல்கின்றன என்பதை எவரும் படித்து அறியவில்லை.
தமிழகத்தில் சுவாமிமார்களும் சஞ்சிகைகளில் எழுதுவோருமே  இந்துசமயக் கொள்கைகளை தத்தமக்குத் ஏற்றவாறு எடுத்துச் சொல்கின்றனர். அதனால் சைவசமயத்திலுள்ள பல நல்ல கொள்கைகள் ஆழக்குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. காயத்திரி மந்திரத்தை ‘ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம்....’ எனச் சொல்லத் தெரிந்த சிலருக்கு ‘சொற்றுணை வேதியன்’ என்று சொல்லத் தெரியாது. பலருக்கு 
"வண்டமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே"                         - (பன்.திருமுறை: 3: 22: 8)
எனக் கூறத்தெரியாது. 

இவர்களின் வழியைப் பின்பற்றியே இன்றைய உலகெலாம் பரந்து வாழும் தமிழராகிய நாமும் செல்கிறோம். இந்த நிலை மாறவேண்டும். நான் சமயங்களுக்கு முரணானவள் அல்ல. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவள். ஆனால் ஒரு மதமும் முழுமையானது அல்ல. ஆதலால் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவள்.
முன்பெல்லாம் அறியப்படாத வகையில் எத்தனையோ விதங்களில் விரதங்கள் பிடிக்கின்றோம். ஏன் விரதங்களைப் பிடிகிறோம், எப்படி விரதம் இருப்பது என்ற தெளிவு இல்லாமல் அந்த ஐயர் அப்படிச் சொன்னார். இந்த மாமி இப்படிச் சொன்னா என ஏதோ ஏதோ கற்பனைக் கதைகளைக் கூறி விரதம் இருக்கிறோம். நாம் போற்றி வணங்கும் சைவசமயச் சான்றோர்களாகிய மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர் மூவரும் விரதத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா?
சமயத்தின் ஒரு தொழிற்பாடாக விரதத்தை அறிமுகம் செய்து வைத்தோர் வேதியர்களே என்பதை  மாணிக்கவாசகர் 
“விரதமே பரமாக வேதியரும்
சரதமாகவே சாத்திரம் காட்டினர்”            - (திருவாசகம்: 4: 50 -51)
எனப் போற்றித்திருவகவலில் எடுத்துச்சொல்கிறார். 
மறைகளின் ஞான காண்டத்தில் நம்பிக்கை இல்லாது, கரும காண்டத்தை விரும்புபவரே வேதியர்(பிராமணர்). நாம் முற்பிறவியில் செய்த வினையே (கன்மம்) பயன் தரும் என்ற கொள்கையால் அவர்கள் விரதத்தை முதன்மை ஆக்கினர். அது சைவசமயத்தின் மெய்ஞானக் கொள்கைக்கு முரணானது. ஆதலால் சைவசமயச் சான்றோர்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கவில்லை.  அதனாலேயே மாணிக்கவாசகரும் பிராமணர்கள் தம் கொள்கை உண்மையானது என்று  விளக்க விரதத்தை மேலான பொருள் எனக்கூறி சாத்திர நூலைக் காட்டினர் எனச்சொல்வதோடு 
பாம்பின் கலாபேதத்த கடுவிடம் எய்தி”        - (திருவாசகம்: 4: 56 -57)
என்று அவற்றை பாம்பின்  கடுமையான விடம் எனவும் போற்றித்திருவகவலில் இடித்துச் சொல்கிறார்.

மெய்ஞானம் வேறு, ஞானம் வேறு. 'ஞான்' என்னும் சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்டது ஞானம். ஞான் - தொங்குதல். ஞானம் பிறக்கும் ஒவ்வொரு  உயிருடனும் தொங்கியே தொடர்ந்து வருகிறது. எடுத்துக்காட்டாக சில குழந்தைகள் மூன்று நான்கு வயதில் எவரும் கற்றுக்கொடுக்காது சுருதி சுத்தமாகப் பாடுவார்கள், நளினமாக ஆடுவார்கள், கணக்குச் செய்வார்கள், அழகழகாக ஓவியம் வரைவார்கள். அதற்குக் காரணம் அவர்களது ஞானமே. எல்லோருக்கும் ஞானம் இருக்கலாம். ஆனால் ஆளுக்காள் ஞானத்தின் தன்மை மாறுபடும்.

திருநாவுக்கரசு நாயனார் சமண சமயத்தவராக இருந்த காலத்தில் கடுமையான விரதமும் தவமும் இருந்தவர். அப்படி விதரதம் பிடித்தும் தவம் செய்தும் மனம் நிலையாக இல்லையாம். ‘எமது உடலின் தன்மை எமக்கு உரியதல்ல என்ற உண்மையை உரைத்தேன்‘ ஆதலால் விரதம் செய்வதை விட்டு இறைவனை நினைத்தால் உய்வடையலாம் என ஆறாம் திருமுறையில் கூறுகிறார். 
“உரித்தன் றுனக்கு இவ்வுடலின் தன்மை
          உண்மை உரைத்தேன் விரதமெல்லாந்
தரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே!.....
          ...... நினைந்தக்கால் உய்யலாமே”         - (பன்.திருமுறை: 6: 42: 10)
இப்படித் தனது அநுபவத்தை திருநாவுக்கரசு நாயனார் கூற திருஞானசம்பரோ ‘முத்தியும் அதனை அடைய வழிகாட்டும் மெய்ஞானமும் உங்களுக்கு வேண்டுமென்றால் விரதங்கள் இருந்து உடல் வாடுவதால் ஞானம் என்ன ஆகும்?’ எனக் கேள்வி கேட்டுள்ளார். அடிக்கடி விரதங்கள் இருப்பதால் நம் உடல் சோர்வடைய  எம்மோடு தொடர்ந்து வந்த ஞானமும் சோர்வடையும். ஞானம் சோர்வடையும் போது எப்படி முத்திக்கு வழிகாட்டும் மெய்ஞானம் நிலைபெற்றிருக்க முடியும்?  
“வீடு ஞானமும் வேண்டுதி
          ரேல் விரதங்களால்
வாடின் ஞானம் என்னாவதும்”                             - (பன்.திருமுறை: 2: 2: 11)
என இத்தேவாரத்தில் திருஞானசம்பந்தர் அறிவார்ந்த கேள்வியையே எழுப்பியுள்ளார். அவர் இப்படி கேள்விகேட்டும் நாம் எமது மூடநம்பிக்கையில் இருந்து மீளாது, மறைகள் கூறுகின்றன புராணங்கள் சொல்கின்றன  என பொய்மையில் மூழ்கிக்கிடக்கிறோம்
நம் சைவசமயச் சான்றோர் சொன்ன வழிப்படி இனியாவது நடப்போமா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment