Sunday, 8 April 2012

பக்தர்களே! இங்கே வாருங்கள்! - 3

எல்லைக்கு உட்பட்ட பொருள் ஒன்று, எல்லை கடந்து வியாபித்திருப்பதை அளக்கமுடியாது என்பது பரதத்துவம் ஆகும். ஞாலமெலாம் வியாபித்திருக்கும் சிவம் அயன் அரன் அரி மூவர்க்கும் முழுமுதலானவன். ஆதலால் சிவன் மூவராலும் அறியப்படாதவன் என்று சொல்லும் மாணிக்கவாசகர் பிரமாவையும் திருமாலையும் கர்வமுள்ள சிறுதெய்வங்களாகக் கூறுகிறார். அதனை அவர் திருவாசகத் தேனருவியில் அறுபத்தொன்பது இடங்களில் குறித்துள்ளார். உங்களுக்காக இரு தேன் சொட்டு.

"முழுமுதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்றனக்கும்
வழிமுதலே நின் பழவடியார் திரள் வான்குழுமிக்
கெழுமுதலே அருள் தந்திருக்க இரங்குங் கொல்லோஎன்று
அழுவதுவே அன்றிமற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே"       -(திருவாசகம்: 21: 4) 


“பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதமையாற்
பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் ஆங்கே அளவு இறந்து
பரம் ஆகிநின்றவா தோள் நோக்கம் ஆடாமோ”                - (திருவாசகம்:15:12)


என்று பிரமனும் திருமாலும் அடி முடி தேடிய கதையை இதில் குறிப்பிடுகிறார். பிரமாவும் திருமாலும் அவர்களது அறியாமையால் நானே பரம்பொருள் என்று ஒருவர் சொல்ல, மற்றவர் நானே பரம்பொருள் என்று கூ றி செருக்கோடு சண்டை இட்டனர். அவர்கள் சண்டை போட்ட இடத்தில் சிவபெருமான் நெருப்பு உருவமாய் அளவுகடந்து வியாபித்து அவர்களது செருக்கு அடங்கும்படி நின்ற மொய்ம்பினை கூத்தாக ஆடுவோம் என்கிறார். பக்தி செய்யத் தெரியாது இருந்த பிரமனும் திருமாலும் கர்வம் ஒடுங்கிய பின் ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர்பிரான் என்று ஆராய்ந்து தேர்ந்தெடுத்துச் சொல்லத்தொடங்கினரோ!
இந்த மாலயன் அறியா இறைவன் தன்னையே நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகி பக்தி பண்ணிய ஞானக்காதலிக்காக கடல் கடந்து இலங்கைக்கு சென்றதை திருவாசகத் தேன் அருவியில் 
“உந்து திரைக் கடல் கடந்து அன்று
          ஓங்குமதில் இலங்கை அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும்
           பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே”                       - (திருவாசகம்:43:5)
என்று திருவார்த்தையில் கொட்டியுள்ளார். வானோர்க்கு எட்டாத அந்த மாமருந்து எம்மால் அரக்கன் என்றும் கெட்டவனென்றும் சீதைமேல் மோகம் கொண்டவன் என்றும் தூற்றபடும் இராவணனின் மனைவிக்கு பரிசு கொடுக்கச் சென்றாராம். அதுவும் சீறிப்பாய்ந்து எழுந்து வீழூம் கடலைக் கடந்து ஓங்கி உயர்ந்த மதிலால் சூழப்பட்ட இலங்கையில் வாழ்ந்தவளுக்கு அருட்பரிசு கொடுக்கச் சென்றாராம். வண்டோதரிக்கு இறைவன் கொடுத்த அருட்பரிசு எப்படிபட்டது என்பதை அறிந்தவர்  இறைவனே என்கிறார். இறைவன் எத்தகைய அருளை ஒருவருக்குச் செய்வார் என்பதை அறித்தவர் இறைவனே என்ற உண்மையை இந்த திருவாசகம் எடுத்துச் சொல்கிறது. அத்தகைய இறைவனே தனது பிரானாய் இருக்கிறாராம்.
                                     
  [படம்: நன்றி - விக்கிபீடியா] 
வண்டோதரிக்கு அருட்பரிசளித்த இறைவனின் பெருமையை குயிலின் குரலில் கேட்க ஆசைப்பட்ட மணிவாசகர் குயிலை அழைத்து 

“ஏர்தரும் ஏழ் உலகு ஏத்த
        எவ்வுருவும் தன் உருவாய்
ஆர்கலி சூழ் தென் இலங்கை
        அழகு அமர் வண்டோதரிக்கு
பேர் அருள் இன்பம் அளித்த
        பெருந்துறை மேய பிரானை
சீரிய வாயால் குயிலே
        தென்பாண்டி நாடனைக் கூவாய்”                         - (திருவாசகம்:18:2)
என குயிலைக் கூவுமாறு குயிற்பத்தில் கெஞ்சுகிறார்.

'திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபிரான் அழகு விளங்கும் எழு உலகமும் வணங்க, எல்லா உருவமும் தானேயாய் நின்று, ஆரவாரம் செய்யும் கடல் சூழ்ந்த தென் இலங்கையில் வாழ்ந்த அழகு பொருந்திய வண்டோதரிக்கு பேரின்பம் அளித்தவன். குயிலே! சிறந்த உன் வாயால் தென்பாண்டி நாட்டைச் சேர்ந்தவனான அவனை கூவி அழைப்பாயாக' என குயிலிடம் மாணிக்கவாசகர் கெஞ்சியுள்ளார். மயனின் மகளான இராவணனின் மனைவியைப் போன்ற பக்குவத்தை தான் அடையவேண்டுமே என்ற ஞான ஏக்கமே இத்திருவாசகத்தின் வெளிப்பாடு.
சிற்றின்பத்தின் அனுபவங்களை பலமடங்காகப் பெருக்கிப் பார்த்தால் பேரின்பமாகிய இறையின்பத்தின் எல்லையற்ற தன்மையை ஊகித்து உணரமுடியும். அக்காரணத்தாலேயே கடவுளின்பத்தை வெளியிடுகின்ற ஞானானந்தக் கவிதைகளிலே காதல் இன்பத்தின் மரபுகளைக் காண்கிறோம்.

“நெக்கு நெக்கு உள் உருகி உருகி
          நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
          நானா விதத்தால் கூத்து நவிற்றிச்
செக்கர் போலும் திருமேனி
          திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்துப்
புக்கு நிற்பது என்று கொல்லோ என்
          பொல்லா மணியைப் புணர்ந்தே”                        - (திருவாசகம்:27:8)
என தலைவி ஒருத்தி தன் காதலின்ப வேட்கையை தோழியிடம் சொல்வது போல பேரின்ப வேட்கையை மணிவாசகம் வெளிப்படுத்துகிறது.
இந்த அருட்பித்து எதனால் வந்தது. பக்தியால் வந்தது. கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று ஆராய்ந்து பார்த்த பிறகு அவர்மீது நம்பிக்கை வைத்தல் என்னும் கொள்கை பக்தனுக்கு அவசியமானதல்ல. அவர் எங்கும் நிறைபொருள் என்பதை அவன் நேரே உணர்கின்றான். அதன் விளைவாக இறைவனிடமிருந்து வரும் உவப்பிலா ஆனந்தத்தை அவன் அனுபவிக்கின்றான். இத்தகைய பெருநிலையை பக்தன் ஒருவன் எட்டிவிடுவது ஏனைய நிலைகளை எல்லாம் விட உயர்ந்ததல்லவா?

இறுதியாக உள்ள அச்சோப்பத்து வாயிலாக பக்திநெறி அறிந்து பழவினைகள் பாறி சித்தமலம் அறுந்து சிவமான தம் நிலையை ஆர் பெறுவார் ஆர் பெறுவார்' என ஆரவாரத்துடன் வியப்பின் எல்லைக்கே மாணிக்கவாசகர் சென்றதை திருவாசகம் சிந்துகின்றது. இத்தகைய ஞானச்செல்வர்களின் பக்தி நிலையை  தொடர்ந்து காண்போம்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment