பெண்: செந்நெல் கதிரடித்து
சிந்திய நெல்லுக் குத்தி
தீட்டிவந்த பச்சரிசி
சிரிக்குதலோ முத்து முத்தா
தீட்டிவந்த பச்சரிசி
சிரிக்குதலோ முத்து முத்தா
ஆண்: செம்மாதுள முத்தாக
சிரிக்குமந்த முத்தோடு
சிறுபயறு வறுத்துக்குத்தி
சேர்த்துவையு(ம்) மச்சியரே!
பெண்: செங்கரும்பு சாறெடுத்து
தேனோடு கலந்தெடுத்து
கட்டிவெல்லொ(ம்) கடைந்தெடுத்து
கலந்துவையு(ம்) மச்சினரே!
- நாட்டுப்பாடல் (வவுனிக்குளம்)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
- நாட்டுப்பாடல் (வவுனிக்குளம்)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
புதிதாக விளைந்த தானியங்களை கொண்டு பொங்கி, அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பர். அந்த வழக்கத்தை பன்நெடுங்காலமாகத் தமிழர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வழக்கம் 'பொங்கிப் புதிது உண்ணல்' என்றும் 'நாள் புதிது உண்ணல்' என்றும் அழைக்கப்படும். வவுனிக்குளத்து நாட்டுப்பாடல் பொங்கிப் புதிது உண்ணலுக்காக செய்த ஏற்பாட்டைச் சொல்கிறது. வவுனிக்குளத்தில் உள்ள சிவாலயம் இரண்டாயிர வருடப்பழைமையானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே தமிழரும் தமிழர் பண்பாடும் அங்கு இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக நிலைபெற்றிருக்கிறது.
இதுபோல இன்றும் குதிரைமலைப் பகுதி இலங்கையின் மேற்குக் கடற்கரையில் தன் சங்ககாலப் பழமையைப் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது. குதிரை மலைக் குறவர் நாள் புதிது உண்ணப் பொங்கியதை புறநானூறுப் பாடல் ஒன்று
"அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்”
- (புறம்: 168: 1 - 13)
எனப் படம்பிடித்து வைத்திருக்கிறது.
- (புறம்: 168: 1 - 13)
எனப் படம்பிடித்து வைத்திருக்கிறது.
'மலையில் இருந்து அருவி ஆர்பரித்து[அருவி ஆர்க்கும்] வீழ்ந்து ஓட, மூங்கில்[கழை] மரம் செறிந்த மிளகு வளரும்[கறிவளர்] அகன்ற மலைச்சாரல். அங்கே அச்சமில்லாத பன்றி[கேழல்] ஒன்று தன் கூட்டத்தோடு [கிளையொடு] கார்த்திகைச்செடியின் [காந்தள்] கிழங்கு வெளியேதெரியும்[மிளிர] படி கிண்டி உழுதது. அப்படிப் பன்றி உழுத புழுதியில்[பூழி] குறவர் விதைத்த தினை[சிறுதினை] விளைந்து கதிரும் முற்ற [முந்துவிளை யாணர்], அத்தினையை நல்ல நாளில் புதிதாக உண்பதற்காக [நாள்புதிது உண்மார்] காட்டுப்பசுவின் [மரையான்] நுரையோடு கூடிய இனிமையானபாலை [திம்பால்] மானிறைச்சி[மான்தடி] நாறும் பானையில்[குழிசி] உலையாகவிட்டு, சந்தன விறகால் [சாந்தவிறகு] எரித்து பாற்சோறாகச்[புன்கம்] சமைப்பர். கூதாளி மலர்ச்செடி சூழ்ந்த காட்டுமல்லிகை[குளவி] முற்றத்திலே செவ்வாழை[செங்கோள்வாழை] இலையில் பகிர்ந்து உண்பர்'.
சங்ககாலத் தமிழரின் 'நாள் புதிது உண்ணும்' வழக்கமே தற்போது 'தைப்பொங்கலாக' வடிவெடுத்திருக்கிறது என்பதற்கு இப்புறநானூற்றுப்பாடல் சான்றாகும். அன்றைய குறவர் புதுநாளில் புத்தரிசி, புதுப்பால் விட்டுப் பொங்கி, செவ்வாழை இலையில் மல்லிகை மணக்கும் முற்றத்தில் இருந்து பகிர்ந்து உண்டதையே இன்றைய தமிழராகிய நாமும் தைப்பொங்கல் நாளில் நம்மூரில் செய்தோம். இரண்டாயிர வருடங்களுக்கு மேல் ஆனபோதும் தமிழரின் தனித்துவம் மாறவில்லை என்பதற்கு இப்பாடலும் பொங்கலுமே சாட்சி.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment