ஆனஞ்சு தேனஞ்சு
உலகெல்லாம் பரந்து வாழும் இன்றைய தமிழர் மூலைக்கு மூலை கோயில்கள் கட்டி குடமுழுக்கு செய்கிறோம். ஆனால் குடமுழுக்கு என்று சொன்னால் 'அது என்ன?' என்று கேட்கும் நிலையில் வாழ்கிறோம். கோயில்கள் கட்டி கும்பாபிசேகம் செய்கிறோம் எனக் கூறினால் எல்லோருக்கும் புரியும். அதனாலேயே தமிழரைப் பார்த்து பாரதியார்
"நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்"
என்று கேட்டார் போலும். அவர் அப்படிக் கேட்டு ஒரு நூற்றாண்டு ஆகியும் நாம் இன்னும் தமிழராய் மாறவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். இன்றும் பிறமொழிச் சொற்களுக்கு முன்னர் தோன்றிய பழந்தமிழ்ச் சொற்களைப் புறந்தள்ளுவது ஏனோ! தமிழர் என்று சொன்னால் மட்டும் போதாது. தமிழராய் தமிழைப் பேசவும் எழுதவும் வேண்டும்.
எத்தனை சைவ மகாநாடுகள்? எத்தனை வகை வகையான தமிழ்ச்சங்கங்கள்? உலகத் தமிழ் மகாநாடுகள்? நாடாத்தி இருக்கிறோம்? அந்தச் சைவத்தமிழ் மகாநாடுகள் எந்த அளவுக்கு தமிழையும் சைவ சமயத்தையும் வளர்த்தன என்பதை இதனை வாசித்த பின்னர் சொல்லுங்கள். அதனை நாம் அறிந்து கொள்வது நல்லதல்லவா? எல்லா மகாநாடுகளிலும் ஓர் ஒற்றுமை இழையோடுகிறது. அதுவே பொன்னாடை போர்த்தும் போர்வைப் பண்பாடு.
"கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கியஅரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்" - (சிறுபா.படை: 85 - 87)
என மயிலுக்குக் கலிங்கப்பட்டுப் போர்த்திய பேகனைப் புகழ்ந்து பாடிய இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இன்று இருந்தால் நம்நிலை கண்டு நாணுவார்.
கோயில் கும்பாபிசேகம் என்று சொல்லாமல் கோயில் குடமுழுக்கு எனச் சொன்னால் என்ன? அர்ச்சனை எனச் சொல்லத் தெரிந்த நமக்கு, பூசனை, பூசை எனக் கூற முடியாதிருப்பதேன்? அதனால் நம் பெருமை குறைந்தா போய்விடும்? கோயில்களில் தமிழ்ச்சொற்களைக் கூறாதீர்கள் என்று யாராவது தடுக்கிறார்களா? சைவசமயத்தவர் போற்றும் நாயன்மார் பாடிச் சென்ற தமிழ்ச் சொற்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது திருக்கோயில் அறக்காவலர்களதும், கோயில் ஒன்றியங்களினதும் கடைமை அல்லவா! அவர்கள் அதனைச் செய்யாதிருப்பதேன்?
நம் திருக்கோயில்களில் ஏதாவது ஒரு கோயிலில் சிறப்புப் பூசை நடைபெற இருக்கின்றது என வைத்துக் கொள்வோம். கோயில் பூசகர் 'ஆனஞ்சு, தேனஞ்சு' எடுத்து வந்தீர்களா?, என எம்மைக் கேட்கிறார். அவர் என்ன கேட்டார் என்பதை விளங்கி, எம்மில் எத்தனை பேர் உடனே பதில் கூறுவோம்?
ஆனால் அவர் அக்கேள்வியை சற்று மாற்றி பஞ்சகௌவியம், பஞ்சாமிர்தம் எடுத்து வந்தீர்களா? எனக் கேட்டிருந்தால் உடனே பதில் சொல்வோம். தமிழ்ச் சொற்களான ஆன் ஐந்தும், தேன் ஐந்தும் தெரியாத தமிழர் நாம். என்னையும் சேர்த்தே இங்கே கூறுகிறேன். நாம் இப்படி இருந்தால் எம் வருங்காலத் தலைமுறையினருக்கு எப்படி வழிகாட்டப் போகிறோம்?
ஆன் என்றால் பசு. சங்கத்தமிழர் பசுவை ஆன் என அழைத்ததை குறுந்தொகையில் வெள்ளிவீதியார்
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு”
- (குறுந்தொகை: 27: 1-2)
எனக்கூறியதால் அறியலாம்.
பக்தி இலக்கிய காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் ஆனைந்து என்றும் ஆனஞ்சு என்று பஞ்சகௌவியத்தை அழைத்ததை அவர்கள் பாடிய தேவாரப் பதிகங்கள் காட்டுகின்றன. பக்தி இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளில் உள்ள எந்த ஒரு பாடலும் பஞ்சகௌவியம் எனச் சொல்லவில்லை. அன்றைய தமிழர் பசுவில் இருந்து தாம் பெற்ற பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்ற ஐந்து பொருட்களையும் ஆனஞ்சு எனப் பொதுவாக அழைத்தனர். அவற்றைப் பூசைக்குப் பயன்படுத்தினர்.
அதனை
“ஆனஞ்சு ஆடுமுடியானும் ஐயாறுடை ஐயனே”
- ( ப.தி.முறை: 2: 6: 5)
என்று திருஞானசம்பந்தர் மட்டுமல்லாமல் அருளாளர் பலரும் சொன்னதைக் காணலாம்.
"அட்டகா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட ஆடி
சிட்டராய் அருள்கள் செய்வார்"
- (ப.திருமுறை: 4: 41: 2)
என்கிறார். அவர் ஐந்தாம் திருமுறையிலும்
"அன்பின் ஆனஞ்சு மைந்துடன் ஆடிய"
- (ப.திருமுறை: 5: 80: 3)
என்று இறைவன் அன்பால் ஆனஞ்சையும் விருப்பத்துடன் [மைந்துடன்] பூசிக் குளித்தார் என்கிறார்.
இறைவன் இருப்பதை உணராது இவ்வுலக வாழ்வில் இடிபட்டு, திகைத்து நின்ற திருநாவுக்கரசு நாயனார், தனது மனக்கலக்கத்தை
"ஆனஞ்சுமாடியை நான் அபயம் புக்கதிருமணியைத் திருமுதுகுன்றுடையான் தன்னை
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே”
- (ப.திருமுறை: 6: 68: 1)
எனக்கூறியவர்
"அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆனஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர்
செவ்வான வண்ணர் என் சிந்தையரே"
- (ப.திருமுறை: 6: 95: 2)
என்று மனம் மகிழ்ந்ததையும் ஆறாம் திருமுறை காட்டுகிறது.
ஏழாம் திருமுறையில் சுந்தர்மூர்த்தி நாயனாரும் சிவன்
“அஞ்சும் கொண்டு ஆடுவார்”
- ( ப.தி.முறை: 7: 17: 4)
எனப் புகழ்கிறார்.
சைவசமய நாயன்மார் மட்டுமல்ல ஆழ்வார்களும் ஆனஞ்சு என்றே பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். திருமழிசையாழ்வார் தமது பாசுரத்தில்
“ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ”
- (திருச்சந்த விருத்தம்: 94)
என வணங்குகிறார். தமிழராய் வாழ்ந்தவர்கள் ஆதலால் தமிழில் அழைத்தனர்.
இவர்கள் எவருமே பஞ்சகௌவியம் என்று சொல்லவில்லை. இவ்வருட்பாடல்களுக்கு கருத்து எழுதிய உரையாசிரியர்களே பஞ்சகௌவியம் என்ற சொல்லை அங்கு இழுத்து வந்துள்ளனர்.
பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்தாய் இருந்த ஆனைந்து, பஞ்சகௌவியமாக மாறிய போது பால், தயிர், நெய்யுடன் பசுஞ்சாணமும் பசுமூத்திரமும் வந்து சேர்ந்து கொண்டது. ஒரு பண்பட்ட நல்ல சமுதாயம் ஆனைந்தையா? பஞ்சகௌவியத்தையா? தொடர்ந்து பயன்படுத்தும் என்பதை நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் கொடுமுடி நடராஜன் பஞ்சகௌவியத்தை பயிர்களுக்கு ஊட்டச்சத்தாகப் பாவிக்கிறார் என அறிந்தேன்.
அன்றைய தமிழரின் தேன் ஐந்தே இன்றைய பஞ்சாமிர்தம். மாம்பழம். பலாப்பழம், வாழைப்பழம், தேன், சர்க்கரை ஐந்தையும் கலந்து செய்வதே தேனைந்து. இன்று ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக பஞ்சாமிர்தத்தைச் செய்கிறார்கள். பஞ்சாமிர்தம் என்றால் ஐந்து அமிர்தம் சேர்ந்தது என்று பொருள் தரும். பழநிப் பஞ்சாமிர்தமே உலகப் புகழ் பெற்ற பஞ்சாமிர்தமாகும். பழநிப் பஞ்சாமிர்தத்தில் முக்கியமாக மலைவாழைப்பழம், பேரீச்சம்பழம், கற்கண்டு, சர்க்கரை, தேன், நெய் என்ற ஆறும் இருக்கும். ஆனால் அதன் பெயர் பஞ்சாமிர்தம். எப்படி கோயில் அறக்காவலர்களால் இப்படி எல்லாம் சொல்ல முடிகின்றதோ!
பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்தாய் இருந்த ஆனைந்து, பஞ்சகௌவியமாக மாறிய போது பால், தயிர், நெய்யுடன் பசுஞ்சாணமும் பசுமூத்திரமும் வந்து சேர்ந்து கொண்டது. ஒரு பண்பட்ட நல்ல சமுதாயம் ஆனைந்தையா? பஞ்சகௌவியத்தையா? தொடர்ந்து பயன்படுத்தும் என்பதை நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் கொடுமுடி நடராஜன் பஞ்சகௌவியத்தை பயிர்களுக்கு ஊட்டச்சத்தாகப் பாவிக்கிறார் என அறிந்தேன்.
அன்றைய தமிழரின் தேன் ஐந்தே இன்றைய பஞ்சாமிர்தம். மாம்பழம். பலாப்பழம், வாழைப்பழம், தேன், சர்க்கரை ஐந்தையும் கலந்து செய்வதே தேனைந்து. இன்று ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக பஞ்சாமிர்தத்தைச் செய்கிறார்கள். பஞ்சாமிர்தம் என்றால் ஐந்து அமிர்தம் சேர்ந்தது என்று பொருள் தரும். பழநிப் பஞ்சாமிர்தமே உலகப் புகழ் பெற்ற பஞ்சாமிர்தமாகும். பழநிப் பஞ்சாமிர்தத்தில் முக்கியமாக மலைவாழைப்பழம், பேரீச்சம்பழம், கற்கண்டு, சர்க்கரை, தேன், நெய் என்ற ஆறும் இருக்கும். ஆனால் அதன் பெயர் பஞ்சாமிர்தம். எப்படி கோயில் அறக்காவலர்களால் இப்படி எல்லாம் சொல்ல முடிகின்றதோ!
தேனஞ்சிலும் ஆனஞ்சிலும் ஆடிய இறைவனை திருநாவுக்கரசு நாயனார் காட்டுகிறார் பாருங்கள்.
வானஞ் சாடும் மதி அரவத்தொடு
தானஞ்சாது உடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே.
- (ப.தி.முறை: 5: 44: 10)
நாம் போற்றும் நாயன்மார்களுக்கும் அருளாளர்களுக்கும் 'தேனஞ்சாகவும்' 'ஆனஞ்சாகவும்' தெரிந்தவை எமக்குமட்டும் தெரியாமல் போனதேனோ! தமிழராய் தேனஞ்சு, ஆனஞ்சு என எப்போது சொல்வோம்? கோயில்கள் கட்டினால் மட்டும் போதுமா? கோயிற் கருவறைக்குள்ளும் தமிழ் செல்ல வழிவிடுங்கள். வருங்கால இளம் தலைமுறையினராவது இதனை நடைமுறைப்படுத்துவர் என நம்புகிறேன்.இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment