காதலன் ஒருவன் திருக்கேதீச்சரதத்து பாலாவிக்கரையில் பறந்து திரிந்த சில்வண்டைக் காண்டான். அந்த சில்வண்டின் ரீங்காரம் அவனின் காதலியை நினைவூட்டியது. அவனைக் கண்டதும் அவனது காதலியின் கண்ணிமைகள் படபடப்பதை அவன் பார்த்திருக்கிறான். அவளது கண்ணிமைகளின் படபடப்பு அவனுக்கு பாட்டிசையாக சில்வண்டின் ரீங்காரம் போல இருந்திருக்கிறது. சில்வண்டுகள் பலவகை. இக்காதலன் கூறும் சில்வண்டு பூக்களில் பூந்தாதை அருந்தி படபடனத் தத்தித் திரியும் வகையைச் சேர்ந்தது.
பூவரசமரத்தடியில் காதலியுடன் அவன் மகிழ்ந்திருந்த போது அவளின் கூந்தலின் மணத்தை அவன் நுகர்ந்திருக்கிறான். அவனுக்கு அவளின் கூந்தல் மணம்மிக்க பூவாய் மணத்திருக்கிறது. சில்வண்டைப் பார்த்து காதலியிடம் தான் முகர்ந்ததை, தான் அனுபவித்தை, தான் கண்டதைச் சொல்கிறான். அத்துடன் நிற்காது அவளைச் சென்று பார்த்து அவளின் கூந்தல் மணத்தை நுகர்ந்து, தனக்கும் அவளுக்கும் இடையே இருக்கும் உறவை அவளுக்குக் கூறி, அவளது கண்கள் சில்வண்டாய் படபடப்பதையும் பார்த்து வரும்படி தூது அனுப்புகின்றான். இதையே திருவள்ளுவர்
"கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள" - 1101
எனக்கூறினாரோ!
காதலன்: பாலாவிக் கரையோரம்
பாட்டிசைக்கும் சில்வண்டே
பாவையவள் கூந்தலிடை
பூமுகந்து வருவாயோ
காதலன்: பூமுகந்த காரணத்தை
பூவையவள் கேட்டாளேல்
பூவரச மரத்தடியின்
போகமதைச் சொல்வாயே
காதலன்: போகமதைச் சொல்வாயேல்
பூமுகத்தின் இருவண்டும்
படபடத்து சில்வண்டாய்
பாட்டிசைக்கப் பார்ப்பாயே
- நாட்டுப்பாடல் (வரிக்கூத்தூர்)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
குறுந்தொகையில் இறையனார், 'நீ அறிந்த பூக்களில் தன் காதலியின் கூந்தலை விட மணமுள்ள பூக்கள் இருக்கின்றதா?' என தும்பியிடம் கேட்பதும், இக்காதலன் சில்வண்டிடம் சொல்வதும் காதலர் மனநிலையைக் காட்டுகிறது. இறையனாரின் சங்கப் பாடலை திருவிளையாடல் படம் பார்த்தவர்கள் அறிந்திருப்பீர்கள்.
" கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெலிஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே" - (குறுந்தொகை: 2)
மேலேயுள்ள நாட்டுப்பாடல் முற்றிலும் கிராமிய மணம் வீசாமல் பண்பட்டதாக இருக்கிறது. இப்பாடலில் மாந்தையின் பாலாவி சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்நாட்டுப்பாடலை என் தந்தையார் வரிகூத்தூரில் (வவுனியா) பதிவு செய்ததாகக் குறித்திருந்தார். சிலப்பதிகாரம் வரிக்கூத்து பற்றிச் சொல்கிறது. இரண்டாயிர வருடப்பழைமை உடைய வரிக்கூத்து ஈழத்திலும் ஆடப்பட்டது என்பதை இந்த இடத்தின் பெயர் சொல்கிறது. ஆனால் அந்த நாளில் வரிக்கூத்தூர் என அழைக்கப்பட்ட இடம் இப்போது வரிக்குத்தூராக மாறியிருக்கிறது. நாம் எம் பண்டைய வரலாறுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம்.
சொல்விளக்கம்
1. உயிர்த்து - முகர்ந்து (மணந்து)
2. உற்று - தொட்டு
3. ஒண்தொடி - ஒளிவீசும் வளையல் அணிந்த பெண்
4. கொங்கு - பூந்தாது
5. அஞ்சிறை - அழகிய சிறை
6. காமம் செப்பாது - விருப்பத்திற்காக சொல்லாது
7. மொழிமோ - சொல்வாய்
8. பயிலியது - பழகியது
9. கெழீஇய நட்பு - ஆழ்ந்த நட்பு
10. மயிலியல் - மயில் போன்ற சாயல்
11. செறிஎயிற்று - நெருங்கிய பற்கள்
12. அரிவை - பெண்
13. நறியவும் - நறுமணமுள்ளதும்
14. உளவோ - உள்ளனவோ
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment