Monday, 9 January 2012

குறள் அமுது - (17)


குறள்: ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
           எழுமையும் ஏமாப்பு உடைத்து                   - 398

பொருள்:  ஒருவர் ஒருமனதாகக் கற்ற கல்வி அவருக்கு வரும் துன்பங்களைக் காக்கும் அரணாக நிற்கும்.

விளக்கம்: 
இத்திருக்குறள் ‘கல்வி’ என்னும் என்னும் அதிகாரத்தில் உள்ளது. இந்தக் குறளுக்கு விளக்கம் தந்த பலரும் ‘ஒருமைக்கண் தான் கற்ற’ என்பதற்கு ஒரு தலைமுறையில் தான் கற்றதென்றும், ஒரு பிறவியில் தான் கற்றதென்றும் சொன்னதுடன் ‘எழுமையும்’ என்பதை ஏழு தலைமுறை என்றும், ஏழு பிறப்பிற்கும் எனவும் கூறியுள்ளனர். அவர்கள் தந்த விளக்கம் பிழையானது என்பது எனது கருத்தாகும்.

கற்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் வேறு எண்ணங்கள் அற்று ஒருமனதோடு கற்றலே ஒருமைக்கண் கற்றலாகும். மை என்பது  துன்பம் என்ற கருத்தையும் தரும். எழுமை என்பதை எழு + மை எனப்பிரிக்கலாம். ஆதலால் எழுமை என்பது எமக்கு எழுகின்ற துன்பங்களை குறிக்கும். அரண் என்பதை ஏமாப்பு என்றும் சொல்வர்.

திருவள்ளுவர் 'அறிவுடமை' என்னும் அதிகாரத்தில் ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்ற குறளில், "அழிவுகளில் இருந்து எம்மைக் காப்பதும் பகைவர்களும் எம்முள் புகுந்து அழிக்க முடியாத அரணாக இதுப்பதும் அறிவே" என்கிறார். கல்வியால் பெறும் அறிவு எம்மைக்காக்கும் அரண் என்பதால் கல்வியே எம் அறிவுக்கு ஆதாரமாகும். எமக்கு வரும் துன்பங்களை அரணாக கல்வியே நின்று காக்கின்றது என்பதையே, திருவள்ளுவர் ‘கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ எனக்கூறியுள்ளார்.

அதிவீரராமபாண்டியன் எழுதிய நறுந்தொகை (வெற்றி வேற்கை)
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”    - (நறுந்தொகை: 35)
எனச்சொல்லும். 'கற்பது நல்லது, பிச்சை எடுக்க நேர்ந்தாலும் கற்பது நல்லது' என ஏன் சொல்கிறது? 

மனித வாழ்க்கையின் இலட்சியமே இன்பமாக வாழ்தல். அந்த இன்பவாழ்க்கைக்கு தடையாக வருவன துன்பங்கள். மனிதனுக்கு இயற்கையிலே அறிவு இருக்கிறது. அதை வளர்ப்பது கல்வி. அக்கல்வி எம் வாழ்வில் வரும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வுக்கு வழி செய்கின்றது. இந்த மருந்து இந்த நோயை நீக்கும் என்பதைக் கற்பதால் அந்நோயிலிருந்து நீங்கி மகிழ்வோடு வாழ முடிகிறது. எனவே நாம் கல்வியை மனமொன்றி [ஒருமனதோடு] ஆராய்ந்து கற்க வேண்டும். அப்படி ஒருமனதோடு ஆராய்ந்து கற்கும் கல்வி எமக்கு வரும் துன்பங்களை நீக்கும் அரணாக எம்முடன் என்றும் நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment