Tuesday, 20 December 2011

துணைதேடிப் பறந்திடிச்சே!


தினைக்கதிர்(படம்: தமிழ் விக்கிபீடியா)
முற்றிய தினையை ஒடிக்கும் காலமது. தமது தினைப்புனத்தில் இருந்து வந்த பெற்றோர் வீட்டிலிருந்த தமது மகளைக் காணாது தேடினர். அவள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள் என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

காலையில் தினை ஒடிக்கப் போனபோது பொன்மணிகள் தொங்கும் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த மகள், இப்படிச் செய்து விட்டாளே என்ற ஆதங்கம் தாய்க்கு. மகள்  யாருடன் சென்றாள் என்பதை அறிந்ததும் தாய் தனது புலம்பலை நாட்டுப்பாடலாக வடிக்கிறாள்.

தாய்:  கனகமணிக் கட்டிலில
                    கண்ணயர்ந்த செல்லக்கிளி
          தினயொடிக்கு நேரத்தில
                    துணைதேடி பறந்திடிச்சி.

தாய்:  ஓடித்திரிந்தால் உள்ளங்கால்
                    நோகும் என்னு
          கூடிச்சுமந்த குஞ்சு
                    கூடுவிட்டு தாவிடிச்சி.

தாய்:  பாடித்திரியும் என்னு  
                     பாலூட்டிவளத்த குஞ்சு
          தேடிப் பறந்திடிச்சே!
                     திக்கத்த பையனோட.
                                                    -  நாட்டுப்பாடல் (முல்லைத்தீவு)
                                               -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இந்த முல்லைத்தீவுத் தாயைப் போலவே சங்ககாலத் தாயொருத்தியும் மகள் காதலனுடன் சென்றதை அறிந்து புலம்புகிறாள். அந்த சங்கத்தாயின் புலம்பலைப் படிப்போரது நெஞ்சமும் அவள் சொல்வது போலவே வேகும்.
 
நொச்சிப்பூ
"ஒருமகள் உடையேன் மன்னே! அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்!
'இனியே தாங்குநின் அவலம்' என்றிர்; அதுமற்று
யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையீரே!
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடை கற்றன்னவென்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே."        (நற்றிணை: 184)

'எனக்கு இருப்பதோ ஒருமகள். அவளும் போர் செய்வதில் மிகவலிமையும் கூரியவேலையுமுடைய இளைஞனுடன், நேற்று பெரியமலையிலுள்ள கொடியவழியால் சென்றுவிட்டாள். என்னைப் போன்ற அழகான சாயலையுடைய இளமகள், மைதீட்டிய கண்ணின் கண்மணியுள் இருக்கும் பாவை வெளியே வந்து நடந்து பழகியது போல அவள் விளையாடித்திரிந்த நீலமணிபோலும் பூவுடைய நொச்சியையும்  திண்ணையையும் காணூம் போது, அவளை நினைக்க என் உள்ளம் வேகின்றதே! நீங்களோ எனது துன்பத்தை தாங்கிக்கொள் என்கிறீர். அறிவுடையீரே! அது எப்படி முடியும்?' எனக்கேட்கிறாள் அந்த சங்ககாலத்தாய்.

குறிப்பு:
                                   சொல்விளக்கம்
1.  தினை  -  ஒருவகைத் தானியம்           2.  செரு  - போர்
3.  மிகுமொய்ம்பின் - மிக்கவலிமை          4.  காளை  - இளைஞன்
5.  அருஞ்சுரம்  -  கொடியவழி                6.  நெருநல்  -  நேற்று
7.  அவலம்  -  துன்பம்                              8.  யாங்கனம்  -  எப்படி
9.  ஒல்லும்  -  முடியும்                             10.  உள்ளின்  -   நினைத்தால் 
11. உள்ளம்  -  நெஞ்சம்                         12.  உண்கண்  -  மையிட்டகண்
13. என்அணியியல் - என்போன்ற அழகு
14.  குறுமகள்  -  இளையமகள்              15.  மணியேர்  -  நீலமணிபோலும்
16.  தெற்றி  -  திண்ணை

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment