Tuesday, 6 December 2011

மாவீரம் தந்த இதயச்சுமை - பகுதி 2

சென்னை தொல்பொருட்காட்சியகம்


நம் மூதாதையர் போற்றிய மாவீரத்தின் வடிவத்தை சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வரும் ஏனாதிநாத நாயனார் புராணமும் சொல்கிறது. அதனையும் சிறிது பார்ப்போம்.
வாளொடு நீள்கை துடித்தன
          மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன
          தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார் கழல் இற்றன
          தாரொடு சூழ்சிர மற்றன
நாளொடு சீறி மலைப்பவர்
          நாடிய போர் செய் களத்தில்"               -(ஏனாதி.புரா: 18)
போர் செய்வதற்காக வாளை ஓங்கிய கைகள் வெட்டப்பட்டு வீழ்ந்த பின்னரும் வாளை விட்டுவிடாது துடித்தன. மார்போடு ஊடுருவிப்பாய்ந்த வேல்கள் குருதியிலே குளித்தன. அக்காலத்தில் வாள் வீரரின்  தோளைக் குறிவைத்தே அம்பு எய்வர். அதனால் வாள்வீரரின் அறுபட்ட தோள்களோடு அம்புகள் நிலத்தை அடைந்தன. தோல் என அழைக்கப்படும் கேடகங்களோடு தோல்கள் சேர்ந்தன. வீரக்கழல்கள் (காலணி) கால்களோடு சேர்ந்து முறிந்தன. மாலை சூழ்ந்திருக்கும் தலைகள் உடல்களில் இருந்து அற்று விழுந்தன. அவ்வாறு உடல்கள் எல்லாம் துண்டுபட்டு வீழவும் போர்செய்தவர்கள் தமக்காக அப்போரைச் செய்யவில்லை. ஏனையோர் நல்வாழ்வுக்காக தமது உயிரைக் கொட்டிக் கொடுக்க தமக்கென வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடியுமுன்னரே காலகாலனையும் எதிர்த்து களமாடினார்கள். இதைப்படிக்கும் போது உங்கள் கண்கள் பனிக்கவில்லையா? நெஞ்சம் கனக்கவில்லையா?

இத்தகைய மறமெனும் வீரம் மனிதருக்கு மட்டுமே உரியதொன்றாக பண்டைய தமிழர் நினைக்கவில்லை. தமதுயிரைக் காத்த வீரம் செறிந்த மிருகங்களையும் போற்றினர். தமிழரின் போர்ப் படைகளாகிய தானைப்படையின் வீரம் தானைமறம் எனவும், குதிரைப்படையின் குதிரைகளின் வீரம் குதிரைமறம் எனவும், யானைபடையின் யானைகளின் வலிமைமிக்க வீரம் யானைமறம் எனவும், தேர்ப்படையின் தேர்களின் உறுதியும் வலிமையும் தேர்மறம் எனவும் அழைக்கப்பட்டன. 
பொதுவாக மனிதர் இறப்பதற்கும் மற்றவர் நலனுக்காக தன் இன்னுயிரை கொடையாக மனம் துணிந்து கொடுப்பதற்கும் அதிக வேறுபாடுகள் இருக்கின்றன. கொடையாகத் தன்னுயிரை ஈந்தோரின் செயல் காலம் காலமாக நினைவுகூற வேண்டியன் உண்மையை பண்டைத்தமிழர் உணர்ந்தனர். மறப்போர் வீரர் இறந்தபோது அவரது நினைவாக பெயரும் பெருமையும் எழுதிய நடுகல்லை வழிகளில் நட்டுவைத்தனர். அவ்வழியே போய்வருவோர் யார் யார் நாட்டிற்காக என்ன என்ன செய்தார்கள் என்பதை படித்து அறிந்து கொள்வர். அதனை
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூடிய 
பிறங்கு நிலை நடுகல்”                                - (அகம்: 67)
என்கின்றது அகநானூறு. இறந்தவன் பெருமையை எடுத்துக்கூறி நடுகல்லை வணங்கிப் போகவும் பணித்தனர் என்பதை புறநானூறு காட்டுகிறது. தொல்காப்பியரும் பண்டைத் தமிழரின் நடுகல் வழிபாட்டை எடுத்துக்கூறியுள்ளார். 
பண்டைய தமிழரின் வாழ்வில் மாடுகளே அவரது செல்வம். அம்மாடுகளை கவர்ந்து (களவெடுத்து) செல்வோருடன் போரிட்டு அவற்றை மீட்டுக் கொடுப்பதும் அரசனின் கடமையாக இருந்தது. கள்வர்கள் ஒருபோதும் அறப்போர் செய்வதில்லை. வீரமும் விவேகமும் உள்ளோர் பசுக்களை மீட்டு வரச்செல்வர். அப்படிச்சென்று மறப்போர் செய்து மாண்டவர்க்கும்  கூட கல்லை நட்டு அவரின் பீடும் புகழும் எழுதி வைத்தனர். அதன் உண்மையை 

“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல் வகுத்துத் தொடுத்த செம்பூங்கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனிநட்டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே?    (புறம்: 265)
புறநானூறு சொல்கிறது. இப்பாடலில் ‘கன்றையும் பசுவையும் மீட்டுத்தந்து பகைவரை ஓடஓட விரட்டிய பெருந்தகை போரிலே மாண்டுபோனான். மலர்க்கண்ணியும், மயிற்பீலியும் சூட்டிப் பெயரும் பொறித்து அவனுக்கு கல்லும் நட்டுவிட்டனர். எனக்கூறும் உறையூர் இளம்பொன் வாணிகனார் அவன் இறந்தது அறியாது அவனைநாடி இன்றும் பாணரது சுற்றம் வருமா? எனக்கேட்கிறார்.

                                        நாய்க்கும் நடுகல் (624 A D)              

பண்டைத்தமிழரின் மாவீரத்தைக் காட்டும் பல நடுகற்கள் தமிழகத்திலும் ஈழத்திலும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மகேந்திரவர்மனின் ஆட்சியின் போது இறந்த வீரனின் நடுகல். வீரன் ஏன் இறந்தான் என்பதையும் அவனைக்காத்து நின்ற அவனது நாயின் வீரத்தையும் சொல்கிறது. பொற்றொக்கையார் என்பவளின் இளைய மகன்  எருமைகளைக் காத்து நின்றபோது கள்வர்களால் இறந்தான். இவனது நாய் இரு கள்வரைக் கடித்து அவனருகே காவல் காத்து நின்றது. அந்த நன்றியுள்ள நாயின் உருவமும் அந்நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இது நடந்து ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. நடுகல் வீரனின் தாய் பொற்றொக்கையாரின் பெயரைப் பொறித்ததால் அந்நாளில் தமிழர் பெண்களின் வாழ்வுரிமையைப் போற்றினர் என்பதையும் காட்டுகிறது.  அந்நடுகல் தரும் செய்தியையும் நம் முன்னோரின் வரையறுத்த வாழ்க்கை முறையையும் பார்த்து உவகை கொள்ளும் வேளையிலும் நெஞ்சம் கனத்து பெருமூச்சு வருகிறதே ஏன்?
நாய்க்கும் நடுகல் எடுத்த மேன்மையை, எமது முன்னோரின் வலிமையை நாம் எங்கே தொலைத்தோம் என்றா? எமது இயலாமையை எண்ணியா? எதற்கு? ஏன்? ஏன்?பண்டைத்தமிழரின் மாவீரம் தந்த இதயச் சுமையுடன்.......
இனிதே,
தமிழரசி,

1 comment: