Tuesday, 27 December 2011

ஆதிரையானும் ஆதிசிதம்பரமும் - பகுதி 1

               Image courtesy of Wikipedia

பண்டைய தமிழர்களால் மிக விரைவான பெரிய ஆடல் என்ற பொருளில்  மூதிரை என்றும் யாதிரை என்றும் அழைக்கப்பட நட்சத்திரமே ஆதிரை. இந்த நட்சத்திரம் யாழ் போன்று தெரிந்ததால் யாழ் எனவும், செந்நிறமாக ஒளிர்வதால் செங்கை எனவும் அழைத்தனர்.

பிற்காலத் தமிழர்களால் திரிசங்குமகாராசாவின் திரிசங்கு சுவர்க்கமாகக் கூறப்படும் நட்சத்திரத் தொகுதியில் ஆதிரை நட்சத்திரம் இருக்கிறது. உங்களில் பலரும் சிறுவயதில் வடதிசையில் இருக்கும் இந்நட்சத்திரத் தொகுதியை திரிசங்கு சுவர்க்கமாகப் பார்த்திருப்பீர்கள். அவரின் ஒரு காலாய் செந்நிறத்தில் சுடர்விட்டு ஒளிர்வதே ஆதிரையாகும் (Betelgeuse). இந்த நட்சத்திரத் தொகுதி பார்ப்பதற்கு ஒருவர் ஆடுவது போலவும் தோன்றும்.

மிக வேகமாக மின்னி மின்னி செந்நிறமாய் ஒளிர்வதாலும் மிகத்தொலைவில் இருப்பதாலும் ஆதிரையை சிவனின் நட்சத்திரமாகக் கொண்டனர். முத்தொள்ளாயிரத்தின் கடவுள் வாழ்த்து
"மன்னிய நாள்மீன்மதிகனலி என்றிவற்றை

முன்னம் படைத்த முதல்வனை - பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் 
ஊர்திரைநீர் வேலி உலகு"
எனக்கூறுவதைப் பாருங்கள்.

இன்றைய அறிவியல் கணக்கின்படி 625  ஒளியாண்டுகளுக்கு அப்பால் இந்த நட்சத்திரம் இருக்கிறது. 2012ல் இரண்டு சூரியன் தெரியும் என்று சொல்கிறார்களே அந்த இரண்டாவது சூரியனாய் சில காலம் இரவை பகலாக்கப் போவதாகக் கூறப்படுவதும் ஆதிரை நட்சத்திரமே. நம்மவர்கள் ஏன் சிவனுக்கும் ஆதிரை நட்சத்திரத்திற்கும் முடிச்சுப்போட்டு சிவனை ஆடல் நாயகனாக உயர்த்தினார்கள் என்பது புரிகிறதா? ஆதிரையனாகிய சிவனாடிய திருநடனத்தை திருஞானசம்பந்தர் 


“ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆர் அழகன்      
                                                                           - (ப. திருமுறை: 3: 61:1)
என மூன்றாம் திருமுறையிலும்

".................... கூரெரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே"              
                                                                            - (ப. திருமுறை: 1:105:1) 
என முதலாம் திருமுறையிலும் போற்றியுள்ளார். எல்லி என்பது இரவு. ஆதிரையன் இரவிலே எரியாக ஆடல்புரிபவன் என்கிறார்.  இவரைப் போலவே சுந்தரமூர்த்தி நாயனாரும்

ஆதியன் ஆதிரையன் அயன்மால் அரிதற்கு அரிய சோதியன் 
                                                                            - (ப. திருமுறை: 7: 97:1) 
என்று தமது தேவாரத்தில் ஆதிரையனாய் சோதிப்பிழம்பாகவே சிவனைப் பாடியுள்ளார். இவ்வாறு தீப்பிழம்பாக எரிகின்ற ஆதிரையை ஆதிரையனாக ஆடல் நாயகனாக வழிபட்ட எம் தமிழ்மூதாதையர் ஆதிரை நாளை பெரு விழாவாகக் கொண்டாடினர். இந்த வழக்கம் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே வருகின்றது. சங்கத்தமிழர்ஆதிரைநாளைக் கொண்டாடியதை சங்கஇலக்கியங்கள் காட்டுகின்றன. 
பரிபாடல்             
“ஆதிரை முதல்வனிற் கிளந்த நாதர் பன்னொருவர்”     
                                                                               - (பரிபாடல்: 8: 6 - 7)
எனக்கூறுமிடத்தில் சிவனை ஆதிரை முதல்வன் எனக்குறிபிடுகின்றது. இன்றைய இந்துமதச் சடங்குகளில் தாழம்பூவைப்போல் பூசைக்குரிய மலராகக் கருதப்படாத சண்பகப்பூவை சிவனுக்கு சங்கத்தமிழர் சூடி வழிபட்டதை கலித்தொகை கூறும். 
அறும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெருந்தண் சண்பகம் போல"                                        
                                                                              - (கலி: 150: 20 - 21)
சண்பகமலர்

இச்சங்கப் பாடல் சங்ககாலத் தமிழர் சிவனை ஆதிரையான் என அழைத்ததையும் சிவனை சண்பகமலரால் அலங்கரித்ததையும் காட்டுகிறது. ஆனால் நாமோ மூடநம்பிகையுள் கட்டுண்டு நாரதர் சாபமிட்டார், அதனால் சண்பகமலர் பூசைக்குரிய மலரில்லை என்று நல்ல வாசனையும், நோய்தீர்க்கும் மருந்தாகப் பாவிக்கப்படும் ஓர் அருமையான பூவைப் புறக்கணிக்கிறோம். பூசைக்குரிய எட்டுவகைப் பூக்களான புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, தாமரை, நந்தியாவட்டை, அலரி, நீலோற்பலம் என்பவற்றுள் ஒன்றாக இருந்தும் இந்நாளில் சண்பகமலர் புறக்கணிக்கப்படுவது ஏன்? இது கோயில்களின் அறக்காவலர்கள் என தம்மை நிலைநிறுத்துவோர் காதுகளில் சென்று சேர்வது எக்காலமோ!
சங்ககாலத்தமிழர் மார்கழி ஆதிரை நாளை எப்படிக் கொண்டாடினர் என்பதை

கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்

பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பாதாக வியன் நிலவரையென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்”
                                                                              - (பரிபாடல்: 11: 74 - 81)
எனப் பரிபாடல் அழகாகச் சொல்கிறது. 

திருவள்ளுவர் சுட்டிக் காட்டிய  
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்"
                                                                                - (குறள்: 30)
என்னும் அந்தணர் எவரோ அத்தகைய அந்தணரே இப்பாடல் கூறும் 'அந்தணர்'  என்பதை நாம் நன்கு உணரவேண்டும்.    

இடிமுழக்கம் செய்கின்ற கார் மேகங்கள் விலகிச் செல்ல, பனிபொழியும் பின்பனிக்காலத்தில் வெப்பம் தகிக்காது மழையும் பெய்யும். மார்கழியின் (குளத்து - பூராடம்) முழுமதி நாளான ஆதிரை நாளில் நூல்களை விரிவாய்க் கற்ற செந்தண்மையுடையோர் விழாவைத் தொடங்க, பூனூல் அணிந்த அந்தணர் அழகிய கலங்களை ஏந்தி நிற்க, ‘இந்த உலகம் குளிச்சியோடு இருக்கவேண்டுமென’ என வளையல் அணிந்த சங்காலக் கன்னியர் நீராடி ஆதிரை நாளைக் கொண்டாடியதை பரிபாடல் காட்டுகிறது.
பரிபாடல் காட்டும் இந்த ஆதிரை விழாவும் பெண்களால் உலக நன்மைக்காக செய்யப்பட்ட விழாவேயாகும். புரட்சிக்கவிஞன் பாரதி சுட்டெரிக்க முனைந்த பெண் அடிமைத்தனம் தமிழரிடையே வேரூன்றத் தொடங்கிய போது பெண்களால் கொண்டாடப்பட்டு வந்த விழாக்கள் கைமாறிப்போயின. மாணிக்கவாசகர் முதற்கொண்டு பன்னிருதிருமுறைபாடிய சான்றோர்கள் பலர் ஆதிரை விழாவில் பெண்களின் பங்களிப்பை பதிவு செய்துள்ளனர். அவற்றை தொடர்ந்து பார்க்கும் வரை...
இனிதே,
தமிழரசி.

9 comments:

  1. ஆதிரையானும் ஆதிசிதம்பரமும் matra pakuthikal vendum. this is good article. i need this in full.can you write. thanks.

    ReplyDelete
    Replies
    1. ஆனந்,

      ஆதிரையானும் ஆதிசிதம்பரமும் - பகுதி 2, Monday, 2 January 2012 அன்று பதிவிலிட்டுள்ளேன். பாருங்கள். இதழில் இணைந்தமைக்கு வாழ்த்துக்கள்.
      இனிதே,
      தமிழரசி.

      Delete
  2. அய்யா தாங்கள் இந்த பதிவில் குறிப்பிடும் 2012ம் ஆண்டில் இரண்டாவது சூரியோன்று இந்த ஆரை நட்சத்திரம் பிரகாசிக்க ோவதாக ொல்வது நடந்ததா

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு...ஆதிரை சிவப்பான நட்சத்திரம் என்பதற்கு சான்றுகள் உள்ளனவா ??

    ReplyDelete
    Replies
    1. மேலே படத்தில் உள்ள நட்சத்திரத் தொகுதியை இரவில் வானம் தெளிவாக இருக்கும் நேரம் வடதிசையில் பார்க்க முடியும். வடதிசையில் இருக்கும் துருவ நட்சத்திரத்தை சுற்றியே இவை வருவதால் எமது வெற்றுக் கண்களால் துருவ நட்சத்திரத்திற்கு சற்று மேலே அண்ணந்து பார்க்கத் தெரியும். இத்தொகுதியில் ஆதிரை சற்று பெரிதாகவும் சிவப்பாகவும் தெரியும். உலகில் எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து எப்போ தெரியும் என்பதைப் பார்க்கவேண்டும். என் தந்தை காட்ட சிறுவயதிலேயே நான் பார்த்து மகிழ்ந்தேன். சப்தரிஷி மண்டல நட்சத்திரத் தொகுதியை பார்ப்பது போல் இதனையும் பார்க்கலாம்.

      Delete
    2. நான் இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ளேன் ... 5 மணியிலிருந்தே இதை காண முடியும் ... கிழக்கு பகுதியில் காண்போம்.

      எங்களுடைய ஆராய்ச்சி இதை பற்றியதே ...

      இது சம்பந்தமாக உங்களை தொடர்பு கொள்ள முடியுமா ?

      Delete
    3. மகிழ்ச்சி. emailல் தொடர்பு கொள்ளவும்

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete