இயற்கை கொஞ்சிவிளையாடும் காடு சூழ்ந்த பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்று மன்னார். மன்னாரில் உள்ள விளாங்குழிக் காட்டில் தேன்மொழியாள் ஒருத்தி தேன் எடுக்கச் சென்றாள். பாதங்கள் நோவ நடந்து திரிந்து, ஒரு பொட்டல் வெளிக்கு அருகே இருந்த மரத்தில் பெரிய தேன்கூடு தூங்குவதைக் கண்டாள். அதிலிருந்து தேன் சிந்தியது. அங்கே மயில் தன் தோகையை விரித்து ஆட, குட்டிமான் புல் மேய்வதைக் கண்டு பரவசமாய் நின்றாள். அப்போது அங்கே வந்த இளைஞனைப் பார்த்து கேட்கிறாள்.
பெண்: மானிருக்கும் கட்டைக்காடு
மயிலிருக்கும் விளாங்குழி
தேனிருந்து சிந்த! சிந்த!
தேடிவந்த மாயமென்ன!
ஆண்: மானுக்கு குண்டுவெடி
மயிலுக்கு சன்னவெடி
தேனுக்கு கோடாலி
தேடிவந்தேன் பொன்மயிலே!
பெண்: மானுக்கு கொம்பழகு
மயிலுக்கு கண்ணழகு
தேனுக்கு சுவையழகு
தேடலுக்கு யாரழகு?
ஆண்: மானுக்கு தோலழகு
மயிலுக்கு வாலழகு
தேனுக்கு ஈயழகு
தேன்மொழிக்கு நானழகு.
- நாட்டுப்பாடல் (மன்னார்)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
தேனின் சுவையில் மயங்கிய பெண்கள் தம் காதலரும் தேனாக இனிக்க வேண்டுமென விரும்பினர். இந்தத் தேன்மொழி போல் தேனில் மயங்கிய சங்ககால கன்னிப் பெண்ணுக்கும் தேனைப் போன்ற காதலன் கிடைத்தான். அதனை நற்றிணையில் கபிலர்
“நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை…..”
- (நற்றிணை: 1)
'உறுதியாய் நிற்கும் சொற்களை சொல்பவன். நீண்டகாலமாக இனிமையாய் இருப்பவன். என் தோளைப் பிரிந்து அறியாதவன். தாமரை மலரில் இருக்கும் மகரந்தங்களை ஊதி, உயரத்தில் உள்ள சந்தனமரத்தில் சேர்த்துவைக்கும் இனிய தேனைப்போல உயர்ந்தது பெருமைமிக்க அவனது நட்பு' என்கிறாளாம் எனக் கூறியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.
இனிதே,
தமிழரசி.
அருமை.
ReplyDeleteமகிழ்ச்சி.
Delete