மனிதர் யாவருமே இரண்டு கண் உடையவராகவே இருக்கின்றோம். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு குருடராய் இருந்தாலும் இரண்டு கண்ணின் பார்வையையும் இழந்தவராயோ அன்றேல் ஒற்றைக் கண்ணின் பார்வையை இழந்தவராயோ இருப்பர். எவராவது அரைக் கண்ணின் பார்வையை இழந்திருக்கிறார்களா? அப்படி அரைக் கண்ணின் பார்வையை இழக்கமுடியுமா? எவராவது தனது கண்ணின் அரைக் கண்பார்வை போய்விட்டது என்று சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? அரைக்கண் உள்ளவரையோ அன்றேல் ஒன்றரைக்கண் உள்ளவரையோ நீங்கள் என்றுமே பார்த்திருக்கமாட்டீர்கள்.
ஆனால் ஒன்றரைக் கண்ணன் ஒருவர் இருக்கிறார். நம்மில் பலரும் அவரை பார்த்திருக்கிறோம். எங்கே ஒன்றரைக் கண்ணரைப் பார்த்தோம் எனக்குழப்பமா? திருநாவுக்கரசு நாயனார் அந்த ஒன்றரைக் கண்ணரைப் பார்த்து எமக்குக் காட்டுகிறார் நீங்களும் பாருங்கள்.
"இன்றரைக் கண்ணுடையார் எங்கும்
இல்லை இமயம் என்னும்
குன்றரைக் கண்ணல் குலமகட்
பாவைக்கு கூறிட்ட நாள்
அன்றைக் கண்ணும் கொடுத்து உமை
யாளயும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர்
ஒற்றியூருறை உத்தமனே"
- (பன்னிருதிருமுறை: 4: 86: 7)
முக்கண்ணனாகிய சிவன் மலையரசன் மகளுக்கு தன்னுடலின் பாதியப் பிரித்துக் கொடுத்த அன்று தன் நெற்றிக் கண்ணின் பாதியையும் கொடுத்தே உமையாளை அவரது இடப்பாகத்தில் வைத்துக்கொண்டார். நெற்றிக் கண்ணின் அரைக் கண்ணும் வலது கண்ணும் சேர்ந்து இப்போது ஒன்றரைக் கண்ணே சிவனிடம் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரராகிய சிவனே அந்த ஒன்றரைக் கண்ணன். மேலே படத்தில் இருப்பவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஒன்றரைக் கண்ணர்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment