Tuesday, 29 November 2011

கள்ளவிழிச் சிரிப்பழகு



வவுனியாவில் உள்ள பாவற்குளத்தில் எண்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த காதலன் ஒருவன் அவனது காதலியின் தோழிக்குத் தன் நிலையைக் கூறுகிறான்.

ஆண்:  கள்ளவிழி சிரிப்பழகும்                      
                        கதைகூறும் சொல்லழகும்
            துள்ளுமிடை நடையழகும்
                        துணைக்கு வரசொல்லுதடி

ஆண்:  கருவண்டுக் கண்ணழகும்
                        கார்கூந்தல் பின்னழகும்
            குருவண்டாய் குடையிதடி
                        கிறுகிறுக்கும் என்மனச
                                   - நாட்டுப்பாடல் (பாவற்குளம்)
                                           (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

சங்ககாலக் காதலன் ஒருவன் உழைப்பதற்காக தன் காதலியைப் பிரிந்து  வெளிநாட்டிற்குச் சென்றான். அவனது நெஞ்சம் காதலியை நினைத்துப் பார்கிறது. வெளிநாட்டிற்கு சென்று பொருள் தேடவேண்டுமென அவனது நெஞ்சம் தானே (மனஎண்ணம்) அடம்பிடித்து அவனை அங்கு அழைத்து வந்தது. அதனால் அவன் தனது நெஞ்சுக்குக் கூறுகிறான்.
"உள்ளினை வாழிஎன் நெஞ்சே! கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையின் பிரிந்த நீயே!"              
                                                            -(அகநானூறு: 343: 16 -19)
என் நெஞ்சே! கள்ளுக் குடித்துக்கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெருமகிழ்ச்சியைத் தந்தவள். அகன்ற குளிர்ந்த கண்களும் அறிவுள்ளவற்றைப் பேசும் அழகிய பவளம் போன்ற வாயும் எனப் பல சிறப்புக்களைக் கொண்ட காதலியை அறிவில்லாமல் பிரிந்துவந்த நீயே, நினைத்துப் பார்க்கிறாய்! ஆதலால் வாழ்வாயாக!

சங்ககாலக் காதலனும் பாவற்குளத்து நாட்டுப்புறக் காதலனும் தம் காதற் கன்னிகையரின் கண்ணழகையும் சொல்லழகையும் தமது நெஞ்சிற்கு முதலில் சொல்வதை இந்த ஆசைக்கவிதைகள் காட்டுகின்றன.

இவைமட்டுமல்ல புதியமுகம் படத்தில் வரும்

"கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார்கூந்தல் பெண்ணழகு"

பாடல் வரிகளும் அதே கருத்தையே சொல்கின்றன.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
1.  உள்ளினை - நினைத்தனை
2.  மகிழின் - மகிழ்வைவிட
3.  சின் - அறிவு
4.  சின்மொழி - அறிவுள்ள சொற்கள்
5.  துவர்வாய் - பவளம் போன்ற வாய்
6.  பன்மாண் - பல சிறப்புக்கள்

7.  பேதையின் - அறியாமையால் 

No comments:

Post a Comment