குறள்:
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று” -11
பொருள்:
மழை பெய்வதால் உலகம் இயங்குகின்றது. ஆதலால் மழையே உலகத்தை வாழ்விக்கும் அமிழ்தம் என்று உணர்க.
விளக்கம்:
அமிழ்தம் அமிழ்தம் என்று சொல்கிறார்களே, அது என்ன? அந்த அமிழ்தத்தை உண்டு தேவர்கள் என்றும் இளமையாக முதுமை அடையாது இருக்கிறார்கள், என இதிகாசங்கள் கூறுகின்றன. அமிழ்தத்தைத் தேடி மனிதர்களாகிய நாம் தேவலோகம் போகமுடியுமா? ஆனால் அந்த அமிழ்தம் எது என்பதை மிகத்தெளிவாக இக்குறள் சொல்கிறது.
இந்த பூமியில் வாழும் உயிர்கள் யாவும் உணவுக்காக தாவரங்களிலேயே தங்கி இருக்கின்றன. ஏனெனில் தமது உணவை தாமே தயாரிக்கும் தன்மை தாவரங்களுக்கே உண்டு. அதற்கு நன்னீர் வேண்டும். உலகின் பெரும்பகுதி கடல் நீரால் சூழப்பட்டு இருப்பினும் நன்னீர் மூன்று வீதமே இருக்கிறது. அதில் இரண்டு வீதம் வட தென் துருவங்களில் குவிந்து கிடக்கும் பனிப்பாறையால் ஆனது. மீதி ஒரு வீதமே எமக்கு அருவிகளிலும், ஆறுகளிலும், குளங்களிலும் கிணறுகளிலும் இருந்து கிடைக்கிறது. இந்த ஒரு சதவீத நன்னீரைக் கொண்டே உலகத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் உயிர்வாழ்கின்றன.
வான் என்பது இங்கு மழையைக் குறிக்கின்றது. வானம் மழையைப் பொழியாவிட்டால் அந்த ஒரு சதவீத நன்னீரும் அற்று, இந்த உலகம் கட்டாந்தரையாகக் காட்சி அளிக்கும். மழை பொழிவதாலேயே இவ்வுலகம் பல கோடிக்கணக்கான உயிர்ப்பேதங்களுடனும் பசுமையுடனும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது. ஆதலால் இவ்வுலக உயிர் அனைத்தையும் வாழவைத்து இவ்வுலகை இயக்கும் மழைநீரே அமிழ்தம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்று திருவள்ளுவர் எமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
உலக இயக்கம் மழை நீரால் நடைபெறுவதால் தண்ணீரே அமிழ்தமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே அமிழ்தம் தேடி தேவலோகம் போகவேண்டிய தேவை எமக்கு இல்லை.
No comments:
Post a Comment