Saturday, 9 March 2013

மனைவி என்னும் அருளமுதம் - 2


அயவந்திநாதர் கோயில் [Photo: source temple.com]

திருத்தொண்டர் தொகையை சுந்தரமூர்த்தி நாயனார் பாடினார். அதில் அவருக்கு முன்னர் வாழ்ந்த சைவசமய அடியார்களைப் போற்றிப்பாடியுள்ளார். அவர் போற்றிய சைவசமய அடியார்களை நாம் இப்போது நாயன்மார்கள் என்று கூறுகிறோம். அத்திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனாரால்
“ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கருக்கு அடியேன்”     
                                                                   -(ப.திருமுறை: 7: 39: 4)
எனப் போற்றப்பட்டவர் திருநீலநக்கநாயனார்.

நீர்வளமும் நிலவளமும் நிறைந்த சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஓர் அழகான ஊர் இருந்தது. இப்போது அவ்வூர் சீயாத்தமங்கை என அழைக்கப்படுகிறது. அந்த ஊரில் நீலநக்கர் எனும் பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர்
'சூடுவாள் பூங்கொன்றைசூடி உள் உருகித்
தேடுவாள் தேடிச் சிவன் கழலே சிந்திப்பாள்'
என வாழ்ந்த மங்கை ஒருத்தியை மணந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார். அவரது மனைவி அவ்வூரில் அயவந்திக் கோயிலில் இருந்த அயவந்தி நாதருக்கு கொன்றைமாலை சூட்டி தினந்தோறும் வழிபட்டு வந்தார்.

ஒரு திருவாதிரை அன்று நீலநக்கர் அயவந்தி நாதரை கும்பிடவிரும்பி தன் மனைவியுடன் கோயிலுக்குச் சென்றார். மனைவியும் பூசைக்கு வேண்டிய உதவிகளைச் அவருக்குச் செய்து தானும் வழிபட்டாள். பூசை முடிந்ததும் நீலநக்கர் தியானத்தில் அமர்ந்தார். அப்பொழுது சிவலிங்கத்தின் மேல் ஒரு சிலந்தி விழுந்தது. அதனைக்கண்ட நீலநக்கர் மனைவி மனம் பதைபதைக்க ஓடிச்சென்று அந்தச்சிலந்தியை வாயால் ஊதித்தள்ளி, சிலந்தி விழுந்த இடத்தில் தமது எச்சிலைத் துப்பினார். [குழந்தைமேல் சிலந்தி விழுந்தால், அதன் நஞ்சால் குழந்தைக்கு கொப்புளம் உண்டாகாது இருப்பதற்கு, சிலந்தியை ஊதித் தள்ளிவிட்டு அவ்விடத்தில் எச்சில் பூசுவது அன்றைய தாய்மாரின் வழக்கம்].

இதனைக் கண்ட நீலநக்கர் கோபங்கொண்டு ‘அறிவில்லாதவளே! சிவலிங்கத்தின் மேல் யாராவது எச்சில் துப்புவார்களா?’ என்று கேட்டார். ‘சிலந்தி சிவலிங்கத்தின் மேல் விழுந்தது, அதனை ஊதித் துமித்தேன்’ என அம்மையார் கூறினார். நீலநக்கர் கோபத்தினால் மனைவியின் செயலின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை. மேலும் கடுங்கோபங் கொண்டு ‘சிவலிங்கத்தின் மேல் எச்சில் உமிழ்ந்தாய். அடாத செயல் செய்த உன்னைத் துறந்தேன். இன்றுடன் நீவேறு, நான்வேறு என்னைவிட்டுப் போ” எனக்கூறி தன் பூசையை முடித்துக் கொண்டு தன் ஊர்போய்ச் சேர்ந்தார்.

அவரது மனைவி பயத்துடன் அன்றிரவு கோயிலில் தங்கினார். அன்றிரவே நீலநக்கரின் கனவில் இறைவன் தோன்றி ‘உன்மனைவி, என்னை தன் குழந்தையாக எண்ணி அன்புடன் செய்த செய்கையை நீ தண்டித்தாய். அவள் எச்சில் உமிழ்ந்த இடம் தவிர்ந்த மற்றைய இடங்கள் எல்லாம் கொப்புளங்களாய் இருக்கின்றன. வந்து பார்,’ எனக் கூறினார். அந்த நிகழ்ச்சியை திருத்தொண்டர்  திருவந்தாதியும்
“பூதிப் புயந்தார் புயத்திற் சிலந்தி புகலும் அஞ்சி
ஊதித் துமித்த மனைவியை நீப்ப அப்பாவமெல்லாம்
பேதித்தெழுந்தன காண் என்று பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித்திகழ் சாத்தை நீலநக்கனெனும் வேதியனே”            
                                                                    -(ப.திருமுறை: 11: 1138)
எனச்சொல்கிறது.

நீலநக்கரும் பொழுது விடிந்ததும் சிவலிங்கத்தைப் போய்ப்பார்த்தார். என்ன அதிசயம்! மனைவி எச்சில் உமிழ்ந்த இடம்தவிர்ந்த மற்றைய இடமெல்லாம் கொப்புளம் இருக்கக் கண்டார். மனைவியின் பக்தியின் திறத்தை வியந்தார். மனைவியை அழைத்து வந்து, நடந்ததைக் கூறி சிவலிங்கத்தைக் காட்டினார். அவர் மனைவியும் இறைவனின் கருணையை வியந்து சிவலிங்கத்தை மலரிட்டுத் தொழுதார். 

அதனைக் கேள்விப்பட்ட திருஞானசம்பந்தக் குழந்தையும், சாத்தமங்கைக்கு சென்ற போது நீலநக்கர் வீட்டில் தங்கியிருந்து அந்த அம்மையாரை மகிழ்வித்தார். நீலநக்கர் - திருநீலநக்கர் ஆனார். திருநீலநக்கரும் மனைவியெனும் அருளமுதத்தால் திருஞானசம்பந்தரால்
“மறையினார் மல்குகாழித் தமிழ்
          ஞானசம்பந்தன் மன்னும்
நிறையினார் நீலநக்கன் நெடுமா
          நகரென்று தொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை.....”                        
                                                            -(ப.திருமுறை: 3; 58: 11)
எனத்தேவாரத்தில் வைத்துப் பாடப்பெற்ற பெருமையும் பெற்று திருநீலநக்க நாயனார் ஆனார்.  அதனால் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி போன்றோரால் போற்றப்பட்டார். திருநீலநக்க நாயனார் வரலாறு மனிதருக்கு பக்தி என்றால் என்ன? என்னும் மிகச்சிறந்த அறிவுரையைச் சொல்கிறது.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment