குறள்:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் -279
பொருள்:
கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில் உள்ள ஒன்பதாவது திருக்குறள் இது. இக்குறள் தவவேடதாரிகளை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பதை எமக்கு எடுத்துச் சொல்கிறது. அம்பு பார்ப்பதற்கு நேரானதாகத் தெரிந்தாலும் செய்யும் செயலால் கொடியது. யாழ் பார்ப்பதற்கு வளைந்திருந்தாலும் நல்ல இசையைத் தருவதால் இனிமை ஆனது. அதுபோல் தவம் மேற்கொள்ளும் சுவாமிமார் செய்கின்ற செயல்களைக் கொண்டே அவர்களில் யார் கெட்டவர்? யார் நல்லவர்? என்பதை அறிய வேண்டும்.
விளக்கம்:
திருவள்ளுவர் இக்குறளில் தவம் செய்கிறோம் என்றும் தெய்வ நற்சிந்தனை சொல்கிறோம் என்றும் கூறி எம்மிடையே வலம்வரும் தவவேடதாரிகளை, கள்ளச்சுவாமிகளை எப்படி அறிந்து கொள்வது என்பதை சொல்லிச் சென்றுள்ளார்.
கணை என்றால் அம்பு. வளைவுகள் அற்று நேராய் கூர்மையாய் இருந்தாலும் உயிர்களைக் கொல்வதே அம்பின் தொழிலாகும். இசைக்கருவியான யாழ், மருப்பும் பத்தரும் நரம்பும் மாடகமுமாகச் சேர்ந்து வளைந்து கோணி இருந்தாலும் இனிய இசையைத் தந்து உயிர்களை மகிழ்விப்பதே யாழின் தொழில். தவம் செய்யும் தவவேடம் தரித்த சுவாமிமார்களில் சிலருக்கு அழகும் கூறிய அறிவும் இருப்பினும் சித்துக்களாலும் காமலீலைகலாலும் மக்களைச் சீரழிப்பர். சிலர் அழகற்று எழும்பும் தோலுமாக பித்துப்பிடித்தோர் போல இருப்பினும் சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதற்கமைய உண்மையான ஆன்மீகக் கருத்துக்களைக் கூறி மக்களுக்கு நல்வழி காட்டுவர்.
ஆதலால் தவவேடம் போட்ட சுவாமிமாரில் எவர் தீயவொழுக்கமுள்ள கெட்டவர்? எவர் நல்லொழுக்கமுள்ள நல்லவர்? என்பதை உருவத்தைப் பார்த்து அறிந்து கொள்ளாது அவர்கள் செய்கின்ற செயல்களைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். சுவாமிமாரை மட்டுமல்ல ஏனையோரையும் அவரது உருவத்தைப் பாராது நடத்தையைப் பார்த்து அறிவதே சாலச்சிறந்தது.
நம் பார்வைக்கு நேரானதாகத் தெரியும் அம்பு, எம் உயிரையே கொன்று அழிக்கின்றது. கோணலாக வளைந்து தெரியும் யாழ், இனிய இசையால் எமக்கு இன்பம் தருகிறது. எனவே சுவாமிமார், பீடாதிபதிமார், குருமார் போன்றோர் நல்லவராய் தெரிந்தாலும் அவர் செய்யும் செயலிலிருந்து வெளிப்படும் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து அவரவரது குணத்தை பண்பை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment