Wednesday, 12 October 2011

குறள் அமுது - (3)


குறள்:
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது           - 377

பொருள்:
யார் யார்க்கு எவ்வளவு என்று வகுத்தவன் பகிர்ந்து கொடுத்த வகைப்படி அல்லாமல் கோடிக் கணக்காகச் சேர்த்து வைத்திருப்பவர்க்கும் அனுபவிக்க இயலாது.

விளக்கம்:
இத்திருக்குறள் ஊழ் எனும் அதிகாரத்தில் வரும் ஏழாவது குறளாகும். செல்வத்தை வருந்தித் தேடிக் குவிப்போர் யாவரும் அவற்றைத் துய்ப்பரா? என்ற கேள்விக்கான விடையை இக்குறள் தருகிறது. ஆசை தீர ஐம்புலன்களாலும் நுகர்தலை துய்த்தல் என்பர்.

நாம் செல்வந்தர் வீட்டில் பிறக்க வேண்டுமா? வறுமை உற்றோர் வீட்டில் பிறக்க வேண்டுமா? அறிவுடையோர் வீட்டில் பிறக்க வேண்டுமா? அன்றேல் அறிவற்றோர் வீட்டில் பிறக்க வேண்டுமா? என்பதை முடிவெடுத்தது யார்? செல்வந்தர் வீட்டில் பிறந்து வறுமையில் வாடுவதும், படித்து பல பட்டங்கள் பெற்றும் அறிவிலியாய் இருப்பதும் எதனால்? கோழையாய் வீரனாய் நோயாளியாய் நொண்டியாய் பிறப்பதோ அன்றேல் ஆக்கப்படுவதோ யாரால்? 

இவ்வுலக உயிர்கள் ஒவ்வொன்றையும் தத்தமக்கென்ற தனித்துவத்துடன் இருக்கச் செய்வது எது? அந்த மாபெரும் சக்தி எதுவோ, அதுவே இன்னாருக்கு இன்னது உரியதென பிரித்துக் கொடுத்திருக்கின்றது என்ற கருத்தில், அச்சக்தியை வள்ளுவர் வகுத்தான் என்கின்றார். வகுத்தல் என்றால் பிரித்தல் என்று கணிதபாடத்தில் படித்திருப்பீர்கள். திருவள்ளுவர் வகுத்தான் என்று சொல்வோனையே நாம் இறைவன் என்கிறோம்.
உழைத்து பொருளைத் தேடுதல் அல்லது பொருள் சம்பாதித்தலை தொகுத்தல் என்பர். தமக்கெனப் பொருளை பொன்னாக வைரமாக நிலமாக வீடாக வேண்டியவாறு தேடி வைத்திருப்பவரே பொருளைத் தொகுத்தார். இன்னொரு வகையில் சொல்வதானால் ஒருவர் தன்னுடைய மனைவி, மக்கள், நண்பர், சுற்றமெனச் சேர்ந்து தன்னிடமுள்ள பொருளை மகிழ்வோடு நுகர்தலே துய்த்தலாகும்.
சிலருக்கு மூதாதையரின் சொத்தும் அழகிய அறிவுள்ள மனைவியும் குழந்தைகளும் இருக்கலாம், ஆனால் அவர்களின் அன்பில் மகிழ்ச்சியில் மூழ்கித்திளைக்க வழியின்றி பணம் பணமென இரவுபகலாக ஓய்வின்றி ஓடுவார், அன்றேல் வேறோரு நாட்டிற் சென்று உழைத்து கோடி தொகுப்பார். வேறுசிலர் வாகனம்,  நிலபுலம் என கோடி கோடியாக சேர்த்த போதும் வாய்க்கு உருசியாக உண்ணவும் உடுக்கவும் இயலாதபடி எதாவது ஒரு நோயாலோ நேரமின்மையாலோ அவதிப்படுவர். எனவே கோடான கோடி பொருள் இருப்பினும் எம்மை படைத்தவன் எமக்கென பிரித்துத் தந்ததற்கு  மேலே எவரும் ஒன்றையும் நுகரமுடியாது. 

பொருள் சேர்ப்பது வேறு, அதனை நுகர்வது வேறு. ஆதலால் செல்வத்தைத் தேடியோடி, கோடி கோடியாய் குவிப்போரும் வகுத்தவன் பிரித்துக் கொடுத்த ஊழ் எனும் சட்டத்தில் விதி இருந்தால் அல்லாமல் துய்க்க முடியாது. 

No comments:

Post a Comment