Friday 14 October 2011

புன்னை மரந்தரும் பொருளாதாரம்

                 புன்னைக்காய்                                     






















   
அன்றைய தமிழர்கள் நாடுவிட்டு நாடும், கண்டம் விட்டு கண்டமும் நாவாயில் பயணம் செய்ய புன்னை எண்ணெய்யை பயன்படுத்தினர். அதனால் உலகெங்கும் பண்டைத் தமிழரின் அடிச்சுவடுகளைக் இன்றும் காணுகிறோம்.

இன்றைய தமிழர்களாகிய எமக்கு புன்னை மரம் எப்படி இருக்கும் என்பதே தெரியாது. ஆதலால் அன்று சங்கச் சான்றோர்களின் மனங்களைக் கவர்ந்த புன்னைமரம் [Calophyllum inophyllum] எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போமா? புன்னை எண்ணெய் பழந்தமிழ் மக்களின் வாழ்வை வழப்படுத்தி பொருளாதாரத்திற்கு கைகொடுத்தது. இன்று தாவரங்களும் பறவைகளும் விலங்குகளும் எப்படி வாழ்கின்றன என்பதை படமெடுத்து தொலைக் காட்சிகளில் காட்டுவதை பார்க்கிறோம் அல்லவா.  அவற்றைப் போலவே சங்ககாலப் புலவர் பலரும் உயிரினங்கள் பற்றிய மிக நுட்பமான தரவுகளை படம்பிடித்து வைத்துள்ளனர். புன்னை மரத்தையும் புங்கை மரத்தையும் நாகமரத்தையும் ஒன்றெனக் கருதுவோரும் உளர். அவை வெவ்வேறானவை என்பதை சங்கச்சான்றோர் காட்டுகின்றனர். 

எனவே சங்கப்புலவோர் காட்டும் புன்னை மரத்தைப் பார்ப்போம். புன்னை மரத்தில் இரும்பு போன்ற கருமை நிறமான கிளைகளும், நீலமணி ஒத்த இலைகளும் அவற்றின் இடையே வெள்ளிபோல் ஒளிரும் பூக்களும் பொன்போல் மிளிரும் மகரந்தமும் இருப்பதை 
இரும்பின் அன்ன அருங்கோட்டுப் புன்னை
நீலத் தன்ன பாசிலை அகந்தொறும்
வெள்ளி யன்ன விளங்கிணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிர”

                                                                                           - (நற்: 249)
என உலோச்சனார் காட்ட,  இளநாகனார் கரிய கிளைகளையுடைய புன்னைமரத்தின் பூ, மலர்ந்து மகரந்தத்துடன் இருப்பது, உள்ளூர்க் குருவியின் உடைந்த முட்டை, மஞ்சள் கருவுடன் தெரிவதுபோல் இருக்கும் என்பதை
“உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னை”

என்கிறார். இளநாகனார் கூறியதன் உண்மையை புன்னைபூவைப் பார்த்தவர்கள் அறிவர். நீங்களும் கீழேயுள்ள படத்தைப் பார்த்து அதன் உண்மையை அறிந்து கொள்ளுங்கள். சிட்டுக்குருவியே உள்ளூர்குருவி.
புன்னைப்பூ

வெளிநாடுகளில் இருந்து பாய்மரக்கலங்களை காற்று தர[கால்தர] வந்த பலவகையான[பலவுறு] பண்டங்களை[பண்ணியம்] இறக்கும் [இழிதரு] கடற்கரையின் நிலவுபோன்ற வெண்மணலில்[நிலவுமணல்] நின்ற நீண்ட கிளைகளை[நெடுஞ்சினை] உடைய புன்னை மரங்களை நக்கீரர்
“வேறுபல் நாட்டில் கால் தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ்சினைப் புன்னை” 

                                                -(நற்: 31)
என ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சங்க நூல்கள் புன்னைமரத்தை நெய்தல் நிலத்தாவரமாகவே காட்டுகின்றன. நெய்தல் என்பது கடலும் கடல் சேர்ந்த நிலமுமாகும். சங்க இலக்கியத்திலே நெய்தல் நிலத்தைப் பற்றிய பாடல்களை அதிகம் பாடியவர் ஈழத்தைச் சேர்ந்த அம்மூவனார் என்ற புலவரே. 

அவர் கடற்கரையில் நின்ற புன்னைமரத்தின் அடிமரம் முழவு போல் இருந்தது என்றும் அதில் வள்ளங்களை கட்டி வைத்திருப்பர் என்பதை நற்றிணையில் காட்டுவதோடு குறுந்தொகையில் சுறாமீன்கள் சத்தமிட்டு பாய்ந்து திரியும் கடல் நீரினுள் நின்ற புன்னைமரச் சோலையை எமக்காக
“எறிசுறா கலித்த இலங்குநீர்ப் பரப்பின்
நறுவீ ஞாழலொடு புன்னை”
                                                 -(குறுந்: 318)
எனப் படமெடுத்து காட்டியுள்ளார். 

புறநானூறும் தூவற் கலித்த தேம்பாய் புன்னைஎன கடலலையின் திவலையில் செழித்து வளர்ந்து தேனொழுகும் புன்னையைக் கூறும்.
நாம் எப்போ விடுமுறை கிடைக்குமென காத்திருந்து கடற்கரை நகரங்களை நோக்கி புறப்படுகிறோம். சில கடற்கரை நகரங்களில் ஒரு மரநிழல் கூடக்கிடைக்காது. கடற்கரை மணலின் வெப்பம் காலை தகிக்கும். கடற்காற்றை மட்டுமே நாம் அனுபவிக்க முடியும். 
புங்குடுதீவு கள்ளிக்காட்டுக் கள்ளியாற்றுப் பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வந்து செல்வது எத்தனை பேருக்குத் தெரியும்? கள்ளிக்காடு, கேரதீவு, பாலைதீவு, ஊரதீவுப் பக்கம் நின்று கள்ளியாற்றுக் கழிமுகப் பக்கக் கடற்கரையோரம் அப்பறவைகளைப் பார்த்து மகிழலாம். எழுபதுகளின் தொடக்கத்தில் அங்கு பறவைகள் அதிகம் இருந்தன. இப்போது மிகமிகக் குறைவாகவே வருகின்றன. அவவை முன்போல் மீண்டும் அங்கு வர வேண்டும் என்றால் நாம் புன்னை மரங்களை  புங்குடுதீவின் வடக்கு, வடகிழக்குக் கடலினுள் கழிமுக ஓரம் நடுவது நல்ல பயனைத் தரும்.

அறிஞர் சிலரால் ஈழத்து பூனகரியைச் சேர்ந்தவராகக் கருதப்படும் நரிவெரூத் தலையனார்
“வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை” 
                                                 - (குறுந்: 5)

எனக்காட்டும் புன்னைமரத்தின் இனிய நிழலில் இருந்து சுகம் பெற வேண்டுமா! தமிழ் நாட்டிலுள்ள  சிதம்பரத்துக்கு அருகே இருக்கும் பிச்சாவரம் பகுதிக்குப் போங்கள். ஆழிப்பேரலை தாக்கியும் அசையாது நின்ற புன்னைவனம் அங்குள்ளது. அப்புன்னை மரங்களே பிச்சாவரம் மக்களை சுனாமியில் இருந்து காத்தன. 

சுனாமிப் பேரலையை பிச்சாவரத்திற்குள் வராமல் காத்த புன்னைமரக்காடு
புன்னை மரங்கள் ஆழவேரூன்றி வளர்வன. சங்ககாலத் தமிழர் கடற்கரையின் மண்ணரிப்பை தடுப்பதற்கு புன்னை மரங்களை கடற்கரைகளில் நட்டனர். அவை கடற்கரைக்கு இன்னிழலைக் கொடுத்ததோடு எழுந்து வரும் கடற்பேரலையின் வேகத்தைக் குறைத்தன. அதனால் கடற்கரை ஊர்கள் பேரழிவுகளில் இருந்து தப்பின. 500 வருடங்களுக்கு மேலாக அந்நியர் ஆட்சியில் நாம் முடங்கியதால் நம் முன்னோர்கள் இயற்கையைப் படித்து அறிந்திருந்த பல நல்ல விடயங்களை புறக்கணித்து விட்டோம். 
நம் மண்ணில் நடந்த போர் காடுகளையும் வீடுகளையும் கட்டாந்தரை ஆக்கியுள்ளது. இதனால் காற்றுமண்டலம் வெப்பமாகி மழைவளம் குறையும். அது வெப்பத்தால் வரக்கூடிய நோய்களை உண்டாக்கும். மீள்குடியேற்றப்படும்  எம்மவர்க்கு வீடும் உணவும் மட்டும் இருந்தால் போதுமா? 

அவர்கள் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கும்  தன்மானம் உள்ளவர்களாக பிறர்கையை எதிர்பார்க்காதவர்களாக வாழ்வதற்கும் வேண்டிய வழிவகையை செய்யவேண்டியது எமது கடமையாகும். அப்போது தான் சிந்தனைத் தெளிவுள்ள இளம் சமுதாயத்தை நாம் தோற்றுவிக்கமுடியும். நாம் செய்யும் உதவிகள் பொருளாதார மேம்பாட்டைச் செய்வதாய் இருக்க வேண்டும். முதியோர்களாலும் விதவைப் பெண்களாலும் முன்னெடுத்துச் செய்யக்கூடிய தொழில்களை ஏற்படுத்திக் கொடுப்பது நல்லது. அவை அடுத்தவரால் உடனடியாகச் சூரையாட முடியாததாகவும் தொலைநோக்கு உடையதாகவும் அமைய வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து செல்வோர் கொடுக்கும் பணம், பொருள் யாவும் தற்காலிகத் தேவைக்கே போதுமானதாக இருக்கும். வருங்கால எம்சந்ததியினர் பிறர்கையை நம்பி வாழ்ந்தார்கள் என்ற இழி சொல்லில் இருந்து காப்பதும் நமது கடமையாகும். எனவே இங்கிருந்து சென்று அவர்களுக்கு காசைக் கொடுத்து படம் எடுத்து முகநூலில் போட்டு எமது பெருமை பேசுவதால் அவர்கள் இல்லாமை இல்லாது போய்விடுமா? வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது வாழ்ந்த தமிழ்ச்சாதி இன்று பிறருக்குக் கொடுப்பதை படம் எடுத்துக் காட்டி மகிழ்வது சரியா? கொடுக்கும் நாமோ அன்றேல் எம் குழந்தைகளோ வாங்கும் நிலையில் இருந்தால் எங்கள் மனம் அப்படங்களைப் பார்த்து வேதனைப்படாதா? எப்போ அதனை நாம் சிந்திப்பது. அங்கு இருப்போர் இழந்தது போதும். இருக்கும் தன்மானத்தையும் இழக்க வைக்காதிருப்போம். வருங்கலத் தமிழ்ச்சாதி தன்மானத்துடன் வாழவழி செய்வோம். 
இன்றைய உலகப்பொருளராதத்தில் அதிகம் பேசப்படுவது எரிபொருளகிய எண்ணையே. எரிவாயு[gas], மின்சாரம், பெட்றோல், டீசல் போன்றவற்றின் விலை அதிகரித்துச் செல்வதால் மாற்று எரிபொருளாக தாவர எண்ணையை பாவிக்க வேண்டிய நிலைக்கு உலகம் வருகிறது. சங்கத்தமிழர் பாவித்த புன்னைஎண்ணெய் மாற்று எரிபொருளகப் பாவிக்கச் சிறந்ததாகும்.  நீரிரைக்கும் இயந்திரத்திற்கு டீசலுக்கு பதிலாக புன்னை எண்ணையைப் பாவிக்கிறார்கள்.  புன்னை விதையின் பருப்பிலிருந்தே புன்னை எண்ணெய் எடுக்கப்படுகிறது. 

புன்னை எண்ணெய்  [Tamanu seed Organic Oil] 1லீற்றர் விலை இந்தியக் காசுக்கு £650.00 ரூபா. பெரியவாளால் வெட்டிய காயத்தைக்கூட தழும்பில்லாது புன்னை எண்ணெய் ஆற்றும் என்றும் தோல்வியாதிகளை போக்கும் என்றும் சங்கத்தமிழ்ப் புலவர்களும், பண்டைய மருத்துவ வாகடங்களும் சொன்னாலும்  நம்பமாட்டோம். தமிழர் சொன்னால் நம்பலாமா? Tamanu oil பற்றிய மருத்துவக் குணத்தைப் படித்துப்பாருங்கள் தெரியும்.

புன்னை மரத்தை வளர்ப்பது இலகுவானது. நாற்றுப் பருவத்தில் தண்ணீர் தேவை. புன்னைக்கன்றை நட்டபின்னர் ஒன்றைவிட்டு ஒருநாள் இரண்டு மாதத்திற்கு நீர்விட வேண்டும். அதன் பின் பெரும்பாலும் இயற்கை தன் வேலையைப் பார்த்துக்கொள்ளும். பூச்சிகளும் தாக்குவதில்லை. ஆடு மாடுகளும் உண்ணாது.

புன்னைமரம் பங்குனி மாதம் தொடக்கம் ஐப்பசி மாதம் வரை பூத்துக்குலுங்கும். புன்னையின் மலர்களோ தேன்சிந்தும் மலர்கள். அம்மலர்களை நாடி தேனீக்கள் வரும். தேனும் கிடைக்கும். தேன்மெழுகும் அழகுசாதனப் பொருட்களில் பாவிக்கப்படுகின்றது. தேனீப்பண்ணை வைத்திருப்போரும் புன்னைமரப் பெட்டிகளில் தேனிக்களை வளர்க்க விரும்புகின்றனர். சங்கத்தமிழரும் சுற்றத்தாரோடு புன்னை மரநிழலில் இருந்து தேன் குடித்ததை 
“ஓங்கு இரும்புன்னை வரிநிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி”

என நற்றிணை சொல்கிறது.

"புன்னைமரம் 5 ஆண்டில் பூத்துக் காய்க்கத் தொடங்கும். தொடக்கத்தில் 4 கிலோ முதல் 20 கிலோ வரையிலான எண்ணைக்கான பருப்பைத்தரும் ஒரு புன்னைமரம், 10 வருடத்தின் பின் 50, 60 கிலோவாகி படிப்படியாகக் கூடி 20 வருடத்தின் பின் 300 கிலோ வரை பருப்பைத்தரும். ஒரு வீட்டிற்கு 4, 5 மரமிருந்தாலே போதுமானது. 1000 கிலோ புன்னைப் பருப்பிலிருந்து 800 லீற்றர் புன்னை எண்ணெயும் 300 கிலோ புன்னைப் பிண்ணாக்கும் கிடைக்கும். பிண்ணாக்கு வயலுக்கு நல்ல உரமாகும்[Organic fertiliser].  ஒரு மணி நேரம் நீரிறைக்க 900 மில்லிலீற்றர் டீசல் தேவைப்படும் இயந்திரத்தை இயக்க 600 மில்லிலீற்றர் புன்னை எண்ணெய் போதும். புன்னை எண்ணெயில் டீசலிலிருந்து வரும் கரும் புகையும் மூக்கை அரிக்கும் மணமும் வருவதில்லை. சுற்றுப்புறச் சூழலையும்  கெடுக்காது. புன்னைப்பருப்பு சோப்பு தயாரிப்பிலும் பயன்படுகின்றது". இப்பந்தியிலுள்ள தரவுக்ளை பல வருடங்களாக புன்னை எண்ணையை பாவித்துவரும் கண்டியூரைச் ராஜசேகர் என்பவர் கூறியிருந்தார்.
புன்னைப்பழத்தை பறவைகள் தின்று விதைகளை நிலத்தில் போட்டுவிடும். எமக்குப் பழம் பறிக்கும்  வேலையும் இராது.  நிலத்தில் விழுந்து கிடக்கும் விதைகளை வாரியெடுத்து காயவிட்டு தோலுரித்து பருப்பை எடுத்து மீண்டும் காயவிடும் வேலை மட்டுமே இருக்கும். காய்ந்த புன்னைப் பருப்பை எண்ணெய் ஆலைகளில் கொடுத்து புன்னை எண்ணெயை பெற்றுக் கொள்ளாம். எண்ணெய் அரைப்பதற்குக் கொடுக்கும் பணமும் தொடக்கத்தில் செடி வாங்கிய பணமுமே செலவாகும். வீட்டிலிருக்கும் வயதானவர்கள் கூட இதனைச் செய்யலாம். இன்று முப்பது வயதில் இருக்கும் குழந்தைகள் உள்ள விதவைகள் பொழுது போக்காக புன்னை மரங்களை நட்டுவளர்ப்பினும் பணம் காய்க்கும் மரமாக அவர்களின்  முதுமைக் காலத்திற்கு முன்பே 50 - 55 வயதில் ஓய்வூதியத்தைக் கொடுக்கும். 

புன்னை மரத்தல் வரும் நன்மையும் பொருளாதாரமும்:
1. புன்னைமரங்களை கடற்கரை ஓரங்களில் நடுவதால் கடலரிப்பைத் தடுப்பதோடு சுனாமி போன்ற இயற்கை அழிவிலிருந்தும் ஊர்களையும் உயிர்களையும் காக்கலாம். 
2. புன்னைமர வேர்களில் நைட்ரஜன் [nitrogen] முடிச்சுக்கள் இருப்பதால் காற்றிலுள்ள நைட்ரஜனை எடுத்து மண்ணை வளமாக்கும். 
3. புன்னைமரம் குளிர் நிழலைத்தந்து நிலத்தடி நீரைப் பாதுகாக்கும்.  
4.  மழை வளம் பெருகும். நன்னீர் கிடைக்கும்.
5. புன்னைப்பூவில் அதிக தேனிருப்பதால் தேனும் தேன் மெழுகும் கிடைக்கும். தேன் மெழுகு அழகு சாதனப் பொருட்கள் செய்ய உதவும்.
6. தேனீக்களை வளர்க்க புன்னை மரப்பெட்டிகள் செய்யலாம். புன்னைமரத்தால் ஆன பெட்டிகளை நாடி தேனிக்கள் வரும். கப்பல் கட்ட மிகவும் சிறந்த மரம் புன்னையே.
7. புன்னை விதையின் பருப்பில் இருந்து எண்ணெயும், பிண்ணாக்கும் எடுக்கலாம். புன்னை எண்ணெயை நீர் இறைக்கும் இயந்திரம், autos, motorbike போன்றவற்றை இயக்க Diesel, Petrolலுக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
8. புன்னைஎண்ணெயில் இருந்து மின்சாரத்தைப்பெற்று  காற்று ஆலைகளால் வரும் வரட்சியற்று இயற்கையுடன் இயைந்து வாழலாம்.
9. புன்னைப் பருப்புச் சேர்த்து சவர்க்காரம்[soap] செய்யலாம். அது தோலை மென்மையாக்கும்.
10. புன்னை எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும் பிண்ணாக்கு இயற்கை உரமாக[Organic fertiliser] இருப்பதுடன் செயற்கை உரமிட்டு விளைச்சல் குறைந்திருக்கும் நிலத்தையும் மீண்டும் மிகுந்த வளமுடையதாக மாற்றும்.
11. நன்னீர் கடலோடு கலக்கும் கழிமுகங்கலில் மட்டுமல்ல வன்னி நிலத்திலும் புன்னை மரத்தை வளர்க்கலாம். எனது காணியில் புன்னை மரம் வளர்த்துள்ளேன். கடலினுள் வளர்ப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பெருகும். அதனாலும் பொருளாதாரத்தைக் கூட்டலாம்.
12. புன்னை மரம் சுற்றுப்புறச் சூழலில் உள்ள காபனின் அளவைக் குறைத்து  தூய்மையாக வைத்திருக்கும். காலநிலை மாற்றத்தை தடுக்கும். அதனால் carbon creditஐ வருவாயாகப் பெறலாம்.
 
இன்றைய நிலையில் 5, 6 புன்னை மரக் கன்றுகள் வைத்திருப்பவர்கள் எதுவித முதலும் போடாமல் 15 வருடங்களின் பின் எண்ணெய், பிண்ணாக்கு, தேன், தேன் மெழுகு, மின்சாரம் மூலம் வருடத்திற்கு குறைந்தது 10 இருந்து 12 லட்சரூபாய் வருமானத்தைப் பெறலாம். நம் கையே நமக்குதவி என தலை நிமிர்ந்து வாழலாம்.

எனவே நம் நாட்டில் புன்னை மரங்களை வளர்க்க பலரும் முன்வரவேண்டும்.  வீட்டிற்கு ஐந்து புன்னைமரக் கன்றுகளை கொடுத்து வளர்க்கச் செய்யலாம். 5 வருடத்தின் பின் 2 ஊர்களுக்கு ஓர் எண்ணெயாலை கட்டலாம். ஆலை கட்டுவோர் தாம் போட்டமுதலை புன்னை எண்ணெயால் பெறலாம்.  நிதி மிகுந்தவர்கள் இந்த உதவியைச்செய்தால் விவசாயிகள் பெரும் பயன் அடைவர். வன்னிப்பகுதியில் தோட்டம் செய்வோருக்கு புன்னை எண்ணெய் ஓர் அமுதசுரபியாகும். நீரிறைக்க மின்சாரத்திற்கும் எண்ணெய்க்கும் அரசங்கத்தை நம்பியிருக்கத் தேவையில்லை. புன்னைமரத்தை நம்பினால் போதுமானது. 

இவை மட்டுமல்ல கடலுக்குள் வளரும் புன்னைமரங்களால் இறால், கணவாய், நண்டு என்பன மிகவும் கூடுதலாகக் கிடைக்கும். பண்டை நாள் போல் முத்து பவளம் என்பனவும் பெறலாம். நான் இங்கிருந்து 1985 ஆவணி மாதம் புங்குடுதீவு சென்ற போது, தெற்குக் கடற்கரையில் ஒரு முத்துச் சிப்பி எடுத்தேன். 1988ல் அந்த முத்தைப் பதித்து ஒரு மூக்குத்தி செய்து போட்டிருந்தேன். ஆதலால் இன்றும் நம் கடலில் முத்துச் சிப்பிகள் வாழ்கின்றன. முத்துச்சிப்பி வளர்க்க வேண்டிய நாம் கடல் அட்டை வளர்க்கிறோம். என்னே எமது தொலை நோக்கு! 

அத்துடன் புன்னை மரங்களுக்கு ஊடாக கோடைகால விடுமுறையில் வள்ளங்களில் சென்று இயற்கையின் எழிலை இரசித்து நல்ல காற்றையும் நுகரலாம்.

பிச்சாவரம் புன்னைக்காட்டினூடாக வள்ளத்தில் செல்லும் காட்சி.

இரண்டாம் உலகப்போருக்கு முன் நம்மவர்கள் புன்னை எண்ணையைப் பயன்படுத்தி வீட்டு விளக்குகள் மட்டும் அல்ல கோயில் விளக்குகளும் எரித்தனர். நம்மூர் கோயில்களில் திருவிளக்கேற்ற புன்னை எண்ணெய் உதவும். புன்னை எண்ணெய்யின் மதிப்பும் விலையும் கூடும். 

பண்டைக்கால தமிழர் கட்டுமரம் கட்டி நாடுவிட்டு நாடு சென்ற போதும் இரவில் மீன்பிடிக்கச் சென்ற போதும் இருளைப் போக்க புன்னை, புங்கை மரங்கள் கொடுத்த விதைகளின் எண்ணைகளை பயன்படுத்தினர். இந்த எண்ணைகளுக்காக தமிழ் அரசர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மாண்டதை சங்க இலக்கியம் பதிவு செய்து வைத்திருக்கிறது. நாமும் இவற்றை வளர்த்து பொருளாரத்தை வளமாக்கலாமே.

சங்கத் தமிழர் புன்னைமரத்தை நம்பியதால் புன்னைமரத்தை தமது உறவாகப் போற்றினர். சங்ககாலக் காதலன் ஒருவன்  காதலியின் வரவு பார்த்து அவள் வீட்டருகே இருந்த புன்னைமர நிழலில் காத்திருந்தான். அவன் காதலி வரவில்லை. அவள் தோழி வந்தாள்.  

'இந்தப் புன்னைமர நிழலில் இருந்து உன்னுடன் உறவாடி மகிழ உன் காதலி நாணுகிறாள். அவள் சிறுவயதில் விளையாட்டாக புதைத்த புன்னைவிதை முளைத்தது. அதற்கு நெய்யும் பாலும்விட்டு வளர்த்தாள். அதைப் பார்த்த அன்னை இது உன் தங்கை எனக்கூறி, புன்னையின் சிறப்பையும் சொன்னார். புன்னை அவளது தங்கையாகும். தங்கை அருகே காதல் செய்யலாமா? அதற்கு ஏற்ற நிழல்மரங்கள் வேறு பார்க்கலாமே' என்கிறாள் (நற்றிணை - 172). 

புன்னை மரத்தை தங்கையாய் உறவாடியதால் காதலில் திளைக்க வேறு இடம் நாடிய சங்ககால இளைஞனின் நளினத்தைப் பாருங்கள். மரங்களோடு உறவாடிய அவர்கள் மரநேயம் எங்கே?  சுற்றுச்சூழலை அழித்து நகரமயமாக்கிக் கொண்டிருக்கும் எமது மரநேயம் எங்கே? நாம் சங்கத்தமிழரிடம் இருந்து கற்கவேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. சங்கத் தமிழர் போல் நாமும் புன்னை மரம் தரும் பயனையும் பொருளாராதத்தையும் பெற்று நிறைவாக வாழ்வோம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment