Thursday, 29 September 2016

குறள் அமுது - (123)


குறள்:
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது”                        - 16

பொருள்:
வானத்தில் இருந்து மழைத்துளி விழுந்தாலன்றி நிலத்தில் பசுமையைக் காணமுடியாது.

விளக்கம்:
வான்சிறப்பு எனும் அதிகாரத்தில் ஆறாவது குறளாக இத்திருக்குறள் இருக்கிறது. இக்குறளில் மழைத்துளி நிலத்தில் விழாது போனால் நிலம் எப்படி இருக்கும் என்பதை திருவள்ளுவர் எம் கண்முன்னே நிறுத்துகிறார்.

நம் எல்லோருக்கும் தெரிந்த சொல்லே விசும்பு. யாராவது விக்கி விக்கி அழுதால் ஏன் இப்படி விசும்பி விசும்பி அழுகிறாய் என்று கோட்போம் அல்லவா. அதே விசும்பல் தான். இடி இடித்து விசும்புகின்ற மழைமேகம் வானத்தில் இருப்பதால் வானை விசும்பு என்றும் அழைகிறோம். விசும்பி விசும்பி அழும்பொழுது மேகம் கறுத்தது போல் முகம் கறுத்து, மழையின் விண்ணீர் பொழிவது போல் கண்ணீரும் பொழியும்.

துளி, துளியாக நிலத்தை முத்தம் இடுவது எது? மழைத்துளி. அதனால் மழையை விசும்பின் துளி என்றார். உப்புக் கரிக்கின்ற கடல் நீரையும் மொண்டு மழைமேகமாய் காட்சிதருவது வானம். மழை பெய்வதாலேயே உலக உயிர்கள் யாவும் உயிர்வாழ்கின்றன. மழைத்துளியை வானம் பொழியவில்லை என்றால் உலகமே நீரற்று வறண்டு பாலைவனமாகும். பாலைவனத்தில் பசும்புல்லை பசுமையைப் பார்கக் முடியுமா? அப்படி மாறும் நிலை வரும் பொழுது உலகில் வாழும் உயிர்களின் நிலை என்னாகும்? உணவும் நீரும் இன்றி உயிர்கள் வாழ முடியுமா? அப்படி ஒரு நிலை வந்தால் யார் மகிழ்வோடு இருப்பார்? அதனை நான்மணிக்கடிகையில்

“கோல்நோக்கி வாழும் குடிஎல்லாம் தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉம் கூற்று”
                                                       -  (நான்மணிக்கடிகை: 27)
என்று விளம்பி நாகனார் கூறுகிறார். உலகத்தில் வாழும் எல்லாக் குடிமக்களும் நல்லாட்சியை[செங்கோல்] விரும்பி வாழ்வார்கள். குழந்தைகள்[குழவிகள்] தாயின் முலைப்பாலில் தங்கி வாழும். உலக உயிர் யாவும்[உலகம்] மழையை[வானத்தின் துளியாகிய]  எதிர்பார்த்து வாழும். நல்லாட்சி இல்லாமல் போனாலும், தாயின் முலைப்பால் வற்றினாலும் மழை பெய்யாது ஒழிந்தாலும் உயிர்களின் அழுகுரல் கேட்கும். உலகத்தின் ஒப்பாரியை - அழைப்பைக் கேட்டு[விளி நோக்கி] மகிழ்வானாம்[இன்புறூம்] கூற்றுவன்[கூற்று].

இப்போ தெரிகிறதா மழையின் அருமை. புல்லின் விதைகள் ஈரநிலத்தில் ஒரே நாளில் முளைத்து பச்சைப் பசேல் எனக் காட்சிதரும். மழை பெய்வதற்கு அந்தப் பசுமையும் தேவை. பசுமை அற்ற நிலத்தில் மழைபொழியுமா? பசும் புல்லை செடி, கொடி மரங்களை வளர்த்து விசும்பின் துளி வீழ வழி செய்வோம். அப்போது வானில் இருந்து மழை பொழியும் பசும் புல்லும் தலைகாட்டும். உலக உயிர்கள் யாவும்  மகிழ்ந்து வாழும்.

No comments:

Post a Comment