Friday, 16 September 2016

குறள் அமுது - (122)


குறள்:
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன்தெரி வார்”                                           - 104

பொருள்:
ஒருவர் தினையளவு நன்மை செய்திருந்தாலும் அதனால் தாம் அடைந்த பயனை நினைத்துப் பார்ப்போர், அவ்வுதவியை பனையளவு பெரிதாக எடுத்துக் கொள்வர்.

விளக்கம்:
இத்திருக்குறள் செய்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தில் இருக்கும் நான்காவது குறளாகும். தினையளவு - மிகச்சிறிய அளவு நன்மையை ஒருவர் செய்திருப்பினும் அதனை நாம் மிகப் பெரிதாகக் கருதவேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலை இத்திருக்குறள் தருகிறது.

தினை என்பது எள், வரகு, குரக்கன், நெல் போன்ற ஒரு கூலம்[தானியம்]. தானியத்தை தமிழில் கூலம் என்பர். முருகப்பெருமான் தினைப்புனம் காத்த வள்ளியைத் தேடிச் சென்றதை
“தேனும் தினைமாவும் தின்ற சுவையால்
தினைப்புனம் நாடியே சென்றான்”
என்று பாடுவார்களே அந்தத் தினை அளவு சிறிய நன்மை செய்திருந்தாலும் அதனால் தமக்குக் கிடைந்த பயன் என்ன என்பதை சிந்தித்துப் பார்ப்போரே பயன் தெரிவார். அதாவது ஒருவர் செய்த தினையளவு நன்மையால் எவ்வளவு பெரிய பனையளவு பயனை அடைந்தேன் என்று நினைத்துப் பார்த்து, உதவுவர் அதன் பயனை அறிந்தோர்.

சான்றோருக்கும் ஒருவர் செய்த நன்மையை உணராத கீழோருக்கும் [நன்றறியார் -நன்மையை அறியார்] இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றிச் சொல்லுமிடத்தில் 

“தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால்
பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு”
                                                        - (நாலடியார்: 344)
என நாலடியார் கூறுகிறது. தினையளவு நன்மை செய்தாலும் அதைப் பனையளவு செய்ததாகச் சான்றோர் நினைப்பர்[உள்ளுவர்]. ஒவ்வொரு நாளும்[என்றும்] பனையளவு நன்மை செய்தாலும் நன்மையை உணர்ந்தறிய முடியாத கீழோருக்கு அவை நன்மையாகத் தெரியாது. 

பண்டைய தமிழர் ‘நன்றி’ என்னும் சொல்லை ‘நன்மை’ என்ற கருத்தில் பயன்படுத்தி உள்ளார்கள். நாம் இந்நாளில் ‘நன்றி’ என்னும் சொல்லைப் பயன்படுத்தும் பொருளில் அவர்கள் சொல்லவில்லை. அவர்களைப் பொருத்தவரையில் நன்றி செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுவதல்ல. பாருங்கள் திருவள்ளுவரும் இக்குறளில் ‘தினைத்துணை நன்றி செயினும்’ என்றே சொல்கிறார்.

ஒருவர் செய்த தினையளவு நன்மையின் பயனை அறிந்தவர்கள் அதனை விடப் பலகோடி மடங்கு பெரிய பனைமரத்தின் அளவு நன்மை செய்ததாகக் கருதுவர்.

No comments:

Post a Comment