இசைக்கு மொழி இல்லை. அது மனிதர் பேசும் மொழிகளின் எல்லைக்குள் அடங்குவதில்லை. அதனாலேயே வாரணாசியில் பிறந்த பண்டிட் ரவி சங்கரால் வான்புகழ் கொள்ள முடிந்தது. அவர் இந்திய இசையின் பெருமையை உலகறியச் செய்தவர். இசை எனும் தேனமுதை எம் காதினிக்க சுவைக்கத் தந்த பெருமகன் அவர். 1980களின் தொடக்கத்தில் ஒரு நாள் வூலிச் தியேட்டரில் (woolwich theatre) பண்டிட் ரவி சங்கரின் சித்தார் இசைக்கச்சேரி நடந்தது. அதனைக் கேட்க நானும் எனது கணவருமாகச் சென்றோம். நம்மவர்கள் ஒருசிலரைத் தவிர வெள்ளையர்களால் தியேட்டர் நிறைந்திருந்தது. இன்றைய இலண்டன் போல் அந்த நாட்களில் நம்மவர்களும் இருக்கவில்லை, இசை கச்சேரிகளும் எந்நாளும் நடக்கவில்லை.
சிறுவயதில் எனது தாயினதும், தாயின் தங்கை புவனம் சித்தியினதும் வயலின் இசையில் வளர்ந்த எனக்கு, இலண்டன் வந்தபின் நேரடியாக இசையைக் கேட்டு அநுபவிக்கும் வாய்ப்புக்கள் அந்நாளில் அரிதாகவே கிடைத்தது. வாடிய பயிருக்கு வான்மழை போல பண்டிட் ரவி சங்கரின் சித்தார் இசையின் தேன்மழையில் நான் நனைந்தேன். அதன் பின்னர் பலமுறை அவரின் இசைக் கச்சேரிகளை கேட்டிருப்பினும் அந்த இசைமழையை மறக்க முடியவில்லை. அந்த விரல்கள் மீட்டிய தந்திகள் யாவும் இசையை பொழிந்தனவே! அன்று இசையால் எம்மனங்களை இசைத்தவர் இன்று இசையானார்.
எனினும் சித்தார் இசையின் மாமேதை ரவி சங்கர் 2008ம் ஆண்டு யூன் 4ம் திகதி இலண்டன் பாரதியவித்திய பவனுக்கு வந்திருந்தார். அங்கே வீணை பயின்ற என் மகள் ஆரணி வீணை வாசிப்பதை கேட்டு அவளுக்கு ஆசிகூறினார். இசைமேதையின் ஆசி இசைகூட்டட்டும்.
No comments:
Post a Comment