Sunday, 30 December 2012

குறள் அமுது - (49)


குறள்:
அற்றால் அளவுஅறிந்து உண்க அஃதுஉடம்பு 
பெற்றான் நெடிது உய்க்கும்ஆறு”                           - 943

பொருள்:
உண்ட உணவு சீரணமானால் உண்ணும் உணவை எவ்வளவு உண்ணவேண்டும் என்பதை அறிந்து உண்பதே மனிதன் நீண்ட நாள் வாழும் வழியாகும்.

விளக்கம்:
மருந்து என்னும் அதிகாரத்தில் இருக்கும் மூன்றாவது திருக்குறள் இது. உண்ட உணவு செரித்து சீரணமாகி அற்றுப்போன பின்னரே மறுபடியும் உண்ண வேண்டும். அது நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றி நீண்ட நாள் வாழ வழிவகுக்கும். அற்றால் - உண்ட உணவு அற்றுப்போனால், அதாவது உணவு சீரணமான பின் உண்ணும் போதுங்கூட 'அளவு அறிந்து உண்க!' என்று ஓர் எச்சரிக்கை  செய்கிறார்.  

நாம் உண்ண வேண்டிய உணவின் அளவை எப்படி அறிவது? அதற்கு ஏதாவது அளவை முறை இருக்கிறதா? ஆண்கள் ஓரளவு, பெண்கள் ஓரளவு உண்கிறோம். குழந்தை உண்ணும் அளவும் வயதானோர் உண்ணும் அளவும் ஒன்றா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவல்லவா உண்கிறோம்!

இந்நாளில் உடல் மெலிவதற்காக உணவைக் கலோரிக் கணக்கில் பார்த்து உண்பது போல் சங்ககாலத் தமிழரும் உணவை அளந்து உண்டிருக்கின்றனர். அவர்கள் உணவு உண்ணும் அளவை ‘நாழி’ என அழைத்தனர். அரசனானாலும் கல்லாதவனானாலும்

உண்பவை நாழி உடுப்பவை இரண்டே”
                                                        - (புறநானூறு: 189: 5)
என்கின்றது புறநானூறு. 

அதனை நல்வழியும்
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்”
என வழி மொழிகின்றது.

நாழி உணவு என்பது 'கால் படி' உணவாகும். நாளொன்றுக்கு சத்துள்ள உணவாக கால் படி உணவு உண்டால் போதுமானது என்பது பண்டைய தமிழர் கண்ட முடிவு. உணவை அளவோடு உண்ண வேண்டும் எனும் மிக உன்னத விழிப்புணர்வு அந்நாளைய தமிழரிடம் இருந்ததாலேயே திருவள்ளுவரும் அற்றால் அளவு அறிந்து உண்க! என்றார். உணவை அளவாக உண்டால் அது உடம்பைப் பெற்றவன் நெடிது உய்க்கும் ஆறு  - நீண்டநாள் உலகை நுகர்ந்து வாழ வழிவகுக்கும்.

ஒரு மனிதன் தான் இப்பிறப்பில் பெற்ற உடம்போடு நீண்ட நாள் நோய் நொடி இல்லாது சுகமாக வாழ்வதற்கு, உண்ட உணவு சீரணமான பின்னர், உண்ணவேண்டிய அளவு உணவை அறிந்து உண்பதே சிறந்தவழியாகும்.    

No comments:

Post a Comment