எமக்கு மேலான சக்தியை கடவுள் எனப் போற்றியதோடு, அத்தகைய மேலாம் நிலையில் நின்று மனிதவாழ்வுக்கு வழிகாட்டிய ஒப்பற்ற மனிதரையும் கடவுள் எனப்போற்றுகிறோம். மனிதராகிய நாமே அக்கடவுள்களின் பெயரால் மதங்கள் என்றும் சமயங்கள் என்றும் கூறி பல கடவுள் கொள்கைகளைப் படைத்துக் கொண்டோம். ஒரு மதம் கடவுள் உருவம் உள்ளவர் என்கின்றது. இன்னொன்று கடவுள் உருவம் இல்லாத அருவம் என்கிறது. பிறிதொன்று அண்ட வெளியே கடவுள் என்கின்றது. மற்றொன்று ஒளிமயமே கடவுள் எனச்சொல்கிறது. வேறொன்று தீயே கடவுள் எனக்கூறுகிறது. இப்படி சமயங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன.
இவை அனைத்தையும் ஒன்றாகச் சொல்லும் சமயம் ஒன்று இருக்கின்றது. அதுவே சைவசமயம். அது தீ, ஒளி, ஆகாயம், அண்டம், உருவம், அருவம், அருவுருவம் என எல்லாமாய் நிற்பதே கடவுள் என்று கூறுகிறது. எனவே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என முடிவெடுக்க கடவுட்கொள்கையின் உட்பொருளை நாம் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
“உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பரசமய கலையார வாரமற
உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அநுபூதி ஆனதுவும்”
- (சீர்பாதவகுப்பு )
- (சீர்பாதவகுப்பு )
என அருணகிரிநாதர் பாடியுள்ளார். இப்பாடலை கொஞ்சம் பிரித்துப் படிப்போமா?
“உருவு எனவும் அருவு எனவும் உளது எனவும் இலது எனவும்
உழலுவன பரசமயகலை ஆரவாரம் அற
உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ
உளபடியை உணரும் அவர் அநுபூதி ஆனதுவும்”
இப்பாடலில் அருணகிரிநாதர் கடவுளை உருவம் என்றும், அருவம் என்றும், உள்ளது எனவும், இல்லை எனவும் தடுமாறி வருந்தும் மற்றைய சமயக் கூறுகளின் ஆரவாரங்கள் ஒழிய; நம் அநுபவ அறிவுக்கு மெய்ப்பொருள் விளங்கி, உண்மை உணர்வு வெளிப்பட்டு, உள்ளம் நெகிழ, உயிர் உருகி உள்ளதை உள்ளபடி உணரும் என்கிறார். எமது அநுபவ அறிவே எமக்குக் கடவுளை உள்ளபடி உணர்த்தும். ஆதலால் கடவுள் சமயங்களைக் கடந்தவர். அவரை எமக்குள்ளே தேடிக் கண்டுகொள்ளலாம்.
குறிப்பு:
சொல்விளக்கம்:
உழலுதல் - வருந்துதல்
பரசமயம் - பிற சமயங்கள்
பரசமய கலை - பிறசமயக் கூறுகள்
ஆரவாரமற - கூச்சல்கள் ஒழிய
அவிழ்தல் - விரிதல்/ மலர்தல்/தெரிதல்/ நெகிழ்தல் (தாமரை மொட்டவிழ)
உரையவிழ - சொல் விளங்க
உணர்வவிழ - உணர்வு வெளிப்பட
உளமவிழ - உள்ளம் நெகிழ
உயிரவிழ - உயிருருக
உளபடி - உள்ளபடி
அநுபூதி - அநுபவ அறிவு
ஆனதுவும் - வந்ததும்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
உழலுதல் - வருந்துதல்
பரசமயம் - பிற சமயங்கள்
பரசமய கலை - பிறசமயக் கூறுகள்
ஆரவாரமற - கூச்சல்கள் ஒழிய
அவிழ்தல் - விரிதல்/ மலர்தல்/தெரிதல்/ நெகிழ்தல் (தாமரை மொட்டவிழ)
உரையவிழ - சொல் விளங்க
உணர்வவிழ - உணர்வு வெளிப்பட
உளமவிழ - உள்ளம் நெகிழ
உயிரவிழ - உயிருருக
உளபடி - உள்ளபடி
அநுபூதி - அநுபவ அறிவு
ஆனதுவும் - வந்ததும்
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment