பெரியது கேட்கின் எரிதவழ் வேளோய்! எனச் செந்தமிழால் தமிழ்க்குமரனான முருகணை விழிக்கும் ஔவை, இறைவறோ தொண்டர் தம் உள்ளத்து அடக்கம் என தொண்டர்களின் பெருமையைப் பெருமைப் படுத்துகிறார். இத்தகைய தொண்டர்களின் தலைவனாகும் பெருமை பெற்று, பெருமைக்கு பெருமை சேர்க்கிறான் விசாரசருமர் என்னும் சிறுவன். இவன் சோழநாட்டின் மண்ணியாற்றங் கரையிலுள்ள சேய்ஞலூரில் எச்சத்தன் பவித்திரை என்போருக்கு மகனாக அவதரித்தான்.
இவன் மண்ணீயாற்றங்கரை மணலால் சிவலிங்கம் அமைத்து, தான் மேய்க்கும் பசுக்களின் பாலால் சிவலிங்கத்திற்கு திருமுழுக்காட்டி வணங்கி வந்தான். இதனை அறியாத விசாரசருமரின் தந்தை அவ்விடம் வந்தார். மகன் பசும்பாலை மணலில் ஊற்றுவதைக் கண்டு கோபங் கொண்டு மகனை அடித்து பாற்குடத்தைக் காலால் உதைத்தார். தன் சிவபூசைக்கு இடையூறு விளைவித்த தந்தையின் காலை விசாரசருமர் மழுவால் வெட்டினார். அப்போது சிவலிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்டு
“ தொடுத்த இதழி சூழ்சடையார்
துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தரை
எடுத்து நோக்கி ‘நம் பொருட்டால்
ஈண்ற தாதை வீழ எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நான்’ என்று
அருள் செய்தணைத் தருளி
மடுத்த கருணையாற் றடவி உச்சி
மோந்து மகிழ்ந்தருள”
என விசாரசருமரை தன் மகனாக ஏற்று, அவருக்கு சண்டிகேசுவர பதவி அளித்ததை சண்டேசுவர நாயனார் வரலாறு கூறுகின்றது. ‘நாம் உண்டகலமும் உடுப்பனஞ் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந்தந்தோம்’ என்று சிவன் தன் சொத்துக்கள் யாவற்றையும் விசாரசருமருக்குக் கொடுத்தார் என்கின்றது பெரியபுராணம். இதனை
“மாணி பால்கறந்து ஆட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ” - (திருமுறை: 5:2:4)
என்று திருநாவுக்கரசு நாயனாரும் தமது தேவாரத்தில் குறிப்பிடுட்டுள்ளார்.
அதனாலேயே கோயில் சொத்துக்கள் சண்டீகேசுவரர் பெயரில் வாங்கி விற்கப்பட்டு வந்தன. அதற்கு கல்வெட்டு சான்றுகள் கூட இருக்கின்றன. அது சண்டீசப் பெருவிலை என அழக்கப்பட்டது. அதனாலேயே எல்லாச் சிவாலயங்களிலும் சண்டிகேசுவரருக்கு என தனித் திருமுன் அமைக்கப்படுகின்றன. அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவராக கருதப்படும் இவரது பெருமையை சமயகுரவர் நால்வரும் போற்றிப் பாடியுள்ளனர். மேலே கூறிய வரலாற்றை மிக எளிதாக நான்கு வரிகளில் சம்பந்தர் படம் பிடித்துக் காட்டுகிறார்.
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பாலாட்டும்
சிந்த செய்வேன் தன்கருமம் தேர்ந்து சிதைப்பான் வருமத்
தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே”
- (திருமுறை: 1: 62: 4)
- (திருமுறை: 1: 62: 4)
சண்டீச பதவி கொடுத்து தன் தலைக் கண்ணியான கொன்றை மலர்மாலையயும் இறைவன் சூடினான் என்னும் ஞான சம்பந்தரின் கூற்றை நாம் நேரில் பார்ப்பதற்கு கங்கைகொண்ட சோழ புரத்திலுள்ள சோழீசுவரர் கோயிலுக்குச் செல்லவேண்டும். இந்த ஞானக் கவிதைக்கு ஏற்ற மோனச்சிலை அங்கு இருக்கின்றது. உண்மையான பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதனை சண்டேசுவரர் முகத்தில் காணப்படும் அமைதியும் பக்தி கலந்த அடக்கமும், இருகரம் கூப்பி இருக்கும் நிலையும் எடுத்துக் காட்டுகின்றன. சிவன் கருணை வழிந்தொழுக சண்டேசுவரருக்கு மாலை அணிவித்து அருள்பாலிக்கின்றார். மலர் மாலையில் உள்ள ஒவ்வொரு மலரின் இதழும் புதுமலர் போல் பொலிய சிற்பி தன் கைவண்ணத்தைக் காட்டி இருக்கின்றான். பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இந்த மோனச் சிலையை சிற்பி, சம்பந்தரின் தேவாரத்தை பாடி இரசித்தே படைத்திருப்பான் போல் இருக்கின்றது.
ஞானசம்பந்தர் மட்டுமல்ல சுந்தரரும் “சண்டிக்கு உன்சடைமிசை மலர் அருள் செயக்கண்டு” தான் சிவனை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
“தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்”
- (திருமுறை: 8: 15: 7)
- (திருமுறை: 8: 15: 7)
என மணிவாசகரும் சண்டேசுவரருக்கு சிவன் அருள் புரிந்ததை திருவாசகத்தில் பாடிப் பரவசப்பட்டுள்ளார்.
இனிதே,தமிழரசி.
குறிப்பு:
சாலினி என்ற பெயரில் 'கலசம்' இதழில் எழுதியது.
No comments:
Post a Comment