திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-
தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே
இத்தேவாரம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டதாகும். இதன் பொழிப்புரை பலவிதமாக எழுதப்பட்டுள்ளது. கற்றவர்கள் தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள்” எனக்கேட்டிருந்தார்.
இத்தேவாரத்தில் உள்ள “அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுளமே” என்ற பகுதியின் பொழிப்புரையை பலரும் பலவிதமாக எழுதியிருப்பதை நானும் அறிவேன். அதனால் அதற்கான விளக்கத்தை எழுதினேன். நான் வெளிநாடு சென்றதால் அதனைப் பதிவிட மறந்து போனேன். அது எனது கணணியில் தூங்கி, இன்று எழுந்துள்ளது. அதை எடுத்து எனது ‘இதழ்’ வலைத்தளத்தில் பதிவிட்டேன். இவ்வாக்கத்தை எழுத மு. தயாளன் காரணமானதால் அவருக்கு எனது மகிழ்ச்சி உரியதாகட்டும்.
இன்றைய உலகில் பண்டைய தமிழ் இலக்கியங்களை தமிழர்களாகிய நாம் கருத்தூன்றிப் படிப்பதில்லை. அதிலும் பண்டைத் தமிழர் எமக்காக வடித்து வைத்துச் சென்ற சிறுவர் இலக்கியங்களை சிறுவயதில் படித்ததால் மறந்து போனோம். எம் குழந்தைகளுக்கோ அன்றேல் பேரக்குழந்தைகளுக்கோ கற்றுக்கொடுக்க நினைப்பதில்லை. பண்டைத் தமிழ்ப்புலவோர் எழுதிய ‘சிறுவர் இலக்கியங்களே செல்வங்களில் மாபெரும் செல்வம்’ என்பேன். எத்தனை பெரிய அரிய கருத்துக்களை அவை உள்வாங்கி வைத்துள்ளன தெரியுமா?
கற்பு என்றால் என்ன? என்பதை எடுத்துக்காட்ட சிறுவர்களுக்காக ஔவையார் எழுதிய ‘கொன்றை வேந்தனை’ எடுத்துப்பார்ப்போமா? அதில் ககர வரிசையில் முதலாவதாக இருப்பது
“கற்பெனப்படுவது சொற்திறம்பாமை” - (கொன்றை வேந்தன்: 14)
கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை - “சொன்ன சொல்லில் இருந்து மாறாத தன்மையே கற்பாகும்” என்பது ஔவையார் வாக்கு.
ஒருவர் சொல்லும் சொல்லுக்கும் இன்றைய தமிழர் கருதும் கற்புக்கும் அல்லது கற்பழிப்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
ஒரு பெண் ஒருவனைப் பார்த்து சிரித்தாலே அவள் கற்பழிந்து போகும். பேசினால் அவள் ‘கற்பழிந்த பெண்’ என்ற பழிச்சொல் வேறு. அன்றைய கருத்தரங்கங்களின் தலைப்பு “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?” ‘கற்பு என்பது தமிழர் பண்பாடு’ என்று கருத்தரங்கங்களில் முழங்கியோர் பலராவர். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த நம்மவர் நிலைப்பாடு இது. நான் சிறுமியாக இருந்த பொழுது ‘கற்புக்கரசியர் எழுவர்’ என்னும் சிறு புத்தகம் படித்தது ஞாபகம் இருக்கிறது.
சிந்தித்துப் பாருங்கள் ஒருவர் சொன்ன உறுதிமொழி எப்படி பெண்ணின் கன்னித்தன்மையை - ஒழுக்கத்தை சிதைக்கும். இந்த ஒரு சொல்லால் எத்தனை ஆயிரமாயிரம் பெண்கள் அழிந்து ஒழிந்தனர். இன்றும் தொடர் கதையாய் அது வளர்கிறது.
தமிழராகிய நாம் சிறுவயதில் படித்ததை - அதன் சரியான கருத்தை அறிந்து கொள்ளாது வாழ்கிறோம் என்பதே மிகமிகக் கசப்பான உண்மை. பண்டைய தமிழர் மிகத்தெளிவாய் ‘கற்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ஆனால் நாமோ அன்றைய தமிழை அறிய விரும்பாது தமிழ்ச்சொற்களின் ஆழமான கருத்தை புரிந்து கொள்ளாமலும் சொற்களின் வேர்ச்சொற்களைக் கண்டறியாமலும் தடுமாறுகிறோம்.
கற்பு என்றால் என்ன?
கல் - கற்றல், கற்கை, கற்பு ஒத்தகருத்துச் சொற்கள்.
“இளமையில் கல்” - கற்றல்
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
’கல்’ என்னும் அடிச்சொல்லால் பிறந்த சொல் ‘கற்பு’.
கல் + பு = கற்பு
இங்கே ‘பு’ என்பது சொல்லின் விகுதி ஆகும்.
6ம் 7ம் வகுப்புகளில் ‘தமிழ் இலக்கணம்’ படித்த பொழுது தமிழின் விகுதிச் சொற்கள் பற்றிப் படித்திருபீர்கள். அதில் “பண்புப் பெயர் விகுதி” “தொழிற்பெயர் விகுதி” படித்தது பலருக்கு ஞாபகம் இருக்கும்.
தொழிற்பெயர் விகுதிகள் பத்தொன்பது:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து
பண்புப் பெயர் விகுதிகள் பத்து:
மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர்
இவற்றுள் சில தொழிற்பெயர் விகுதியாகவும் பண்புப்பெயர் விகுதியாகவும் வரும். அவற்றில் ‘பு’ என்னும் எழுத்தும் ஒன்று.
அது தொழிற்பெயர் விகுதியாக வரும் பொழுது நடத்தல் எனும் தொழில் நடப்பு ஆவது போல் கற்றல் -> கற்பு ஆகும்
அதுவே பண்புப் பெயர் விகுதியாக வரும் பொழுது சிறத்தல் எனும் பண்பு சிறப்பு ஆவது போல கற்றல் -> கற்பு ஆகும்.
ஆதலால் கற்பு என்பது கல்வியை படிப்பைக் குறிக்கின்றதே அல்லாமல் ஆணிற்கோ பெண்ணிற்கோ உரிய கன்னித் தன்மையைக் குறிக்கவில்லை என்பதை தமிழர்களாகிய நாம் உளங்கொளால் நன்று.
சங்க இலக்கிய நூலான குறுந்தொகை 156வது பாடலில் “எழுதாக் கற்பைக்” காட்ட, பதிற்றுப்பத்து 59வது பாடலில் “உலகம் தாங்கிய மேம்படு கற்பைக்” காட்டுவதோடு 80வது பாடலில் “தொலையாக் கற்பையும்” காட்டுகிறது. இம்மூன்று சங்க இலக்கியப் பாடல்களும் கற்பு பற்றி ஆண்களுக்கே சொல்கின்றன. இவை என்ன சொல்கின்றன?
1.
“பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே” - (குறுந்தொகை: 156)
இப்பாடலை எழுதியவர் ‘பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்’ என்னும் பெயருடைய பாண்டிய அரசனாவான். தலைவன் ஒருவன் ஒருத்தியை விரும்பி, பெருள் தேடப்பிரியும் நேரத்தில் அவனது நண்பனான பார்ப்பனன் மகன் அறிவுரை சொல்கிறான். அதற்குத் தலைவன் ‘சிவந்த பூவுள்ளமுள்முருக்குப் பட்டையை நீக்கி அதன் தண்டில் கமண்டலமும் விரத உணவும் வைத்திருக்கும் பார்ப்பனன் மகனே! எழுதாத வேதத்தைக் கற்ற உன் அறிவுரையுள் பிரிந்தோரைச் சேர்க்கும் மருந்தும் உண்டோ? நீ மயக்கத்தில் சொல்கிறாய்’ என்கின்றான்.
சங்க காலத்தில் இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்கள் நான்கையும் காதால் கேட்டுக் கேட்டுக் கற்றார்கள். எழுதிய ஏடுகளாகவோ புத்தகமாகவோ இருக்கவில்லை. அதனால் அவற்றுக்கு ‘எழுதாக் கிழவி’ என்ற பெயரும் தமிழில் உண்டு. பார்பனன் மகன் எழுதாமல் கற்றவன் என்பதை இந்த “எழுதாக் கற்பு” என்னும் சொல் மிகவும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்கிறது. எழுதாமல் கற்பதற்கும் கன்னித் தன்மைக்கும் என்ன தொடர்பு உண்டு?
2.
சங்க காலத்தில் வாழ்ந்த பெண்புலவரான நச்செள்ளையார்
“உலகந் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்மறை வீற்றிருங் கொற்றத்து
செல்வர் செல்வ….” - (பதிற்றுப்பத்து: 59: 8-10)
‘உலகத்தைக் தாங்கிக் காத்து மேம்பட்ட கல்வியால் வில்வீரத்திற்கு கவசம் போன்றவனாய் நீ ஆட்சிசெய்யும் கொற்றத்து செல்வர்க்கு எல்லாம் பெருஞ் செல்வன்…’ என்று ஆடுகோட் பாட்டுச் சேரலாதனுக்குச் சொன்னார். நச்செள்ளையாரின் கூற்றுப்படி சேர அரசனின் மேம்பட்ட கல்விக்கும் கன்னித் தன்மைக்கும் எப்படி முடிச்சுப் போடலாம்?
3.
சங்ககாலப் புலவரான அரிசிற்கிழார்
“புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்ப நின்தெம்முனை யானே” - (பதிற்றுப்பத்து: 80: 15-17)
‘சினத்துடன் செய்யும் போரையும் நிலவெல்லையில் நிலைநிறுத்திய நல்ல புகழையும் அழிவில்லாத கல்வியையும் [தொலையாக் கற்பு] உடையவனே!’ என சேர அரசனான பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கூறியுள்ளார். அழிவில்லாக் கல்வியும் கன்னித் தன்மையும் ஒன்றா?
4.
பண்டைத்தமிழர் ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் பழகுவதை களவு என்றும் திருமணத்திற்கு பின்பு வாழ்வதை கற்பு எனவும் கொண்டனர். தொல்காப்பியர் கற்பியல் என்று ஒரு பகுதியை எழுதி இருக்கிறார். அதில் திருமணவாழ்வில் இணையும் இருவரும் பழகும் தன்மை இருவரிடையேயும் பழகுவோர் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறியுள்ளார். அவர்
“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கொள்வது”
‘கற்பென்பது சடங்கோடு சேர, பெண்ணைக் கொடுப்பதற்கு உரியோர் கொடுக்க, பெறக்கூடிய தகுதியுடைய தலைவன் பெற்றுக்கொள்வது’ என்றார். இதில் கற்பு என்பதை திருமண நிகழ்வாகக் காட்டுகிறார்.
இன்றும் உலகெங்கும் நடக்கும் எத்தகைய திருமணத்திலும் ஆணும் பெண்ணும் ஒருவர்க்கு ஒருவர் வாக்குறுதி அளிப்பதை எல்லோரும் அறிவோம். ஔவை சொன்ன “கற்பெனப்படுவது சொற்திறம்பாமை” திருமண நிகழ்வில் கொடுக்கும் வாக்குறுதிக்கும் பொருந்தும். திருமணத்தின் போது சொன்ன சொல் கன்னித்தன்மையைப் போக்குமா?
5
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்” - 54
கற்றகல்வியால்[கற்பு] வந்த உறுதி[திண்மை] அல்லது சொல்திறம்பாமையால் வந்த உறுதி எதுவாக இருந்தாலும் அப்படி உறுதியுள்ள பெண்ணிலும் பெருமை உடையவை உலகில் உள்ளனவா? என்னும் திருவள்ளுவரின் இத்திருக்குறள் கற்பு என்று கன்னித் தன்மையையா சொல்கிறது? எண்ணிப்பாருங்கள்.
திரு நற்குணதயாளன் கேட்ட கேள்வியில் உள்ள திருஞானசம்பந்தர் தேவாரத்தைப் பார்ப்போம்.
“மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-
தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே”
‘மண்ணிலும் விண்ணிலும் எல்லா இடத்திலும் உறுதியாய் உள்ள ஆலவாயா! பெண்ணின் வயிற்றில்[அகத்து] பிறந்த அழகிய பௌத்தரும்[சாக்கியர்] சமணரும்[அமண்] ஆகிய தெளிந்த அறிவற்றோரின்[தெண்ணர்] கல்வி[கற்பு] அறிவை அழிக்க நினைக்கிறேன் [திருவுள்ளம்] அருள்புரிவாய்’ என்றே திருஞானசம்பந்தர் இத்தேவாரத்தில் கேட்டுள்ளார்?
வாதுக்கு வந்தவரின் அறியாமையைப் போக்க நினைப்பது தவறா? இதில் கன்னித்தன்மைக்கு எங்கே இடமுண்டு.
கற்பு என்ற சொல்லை, அதன் உண்மையான கருத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பு நம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இருக்கிறது என்பதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.
கற்றவளே கற்புள்ளவள்! கற்றவனே கற்புள்ளவன்! என்பதை அறிவோம். 'கல்வியே கருந்தனம் [பெருஞ்செல்வம்]' எனவே கற்பு கசக்குமா??
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment